Tuesday, April 5, 2011

இனி ஏடிஎம்மில் வருமான வரி செலுத்தலாம்!!

சென்னை: வருமான வரி செலுத்துவோர் கடைசி நேரத்தில், வங்கிகளில் போய் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டியதில்லை இனி. ஏடிஎம்களிலேயே வருமான வரியைச் செலுத்தும் வசதி அறிமுகமாகியுள்ளது.


தற்போது வருமான வரி செலுத்தும் தனி நபர்கள் வங்கிகளுக்கு சென்று அதற்குரிய படிவத்தை நிரப்பி வரி செலுத்த வேண்டியதுள்ளது. பிறகு அதற்கான ஸ்லிப்பை பெற்று கணக்கு தாக்கல் செய்ய வேண்டிய நிலை உள்ளது.

இந்த நடவடிக்கைகளால் வங்கிகளில் மார்ச் மாதம் கட்டுக் கடங்காத கூட்டம் திரண்டு வருகிறது. இதை தவிர்க்க இனி ஏ.டி.எம். மூலமாகவும் வரி செலுத்தலாம் என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு நேற்று முதன் முதலாக அறிமுகம் செய்துள்ளது.

முதல் கட்டமாக யூனியன் பேங்க் ஆப் இந்தியா ஏ.டி.எம்.களில் இந்த நவீன வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. இனி படிப்படியாக மற்ற வங்கி ஏ.டி.எம்.களிலும் இந்த வசதி அறிமுகம் செய்யப்படும்.

ஏ.டி.எம். மூலம் வருமான வரி செலுத்த விரும்புபவர்கள் வங்கி இணையத் தளத்தில் தங்கள் TAN மற்றும் PAN எண்கள் மூலம் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

அப்போது ஒரு எண் கொடுக்கப்படும். அதை வைத்து ஏ.டி.எம். எந்திரத்தில் உள்ள குறியீடுகளை தட்டி பான் நம்பர் உள்பட கேட்கும் தகவல்களை பதிவு செய்ய வேண்டும். எவ்வளவு ரூபாய் வருமான வரியாக பிடித்தம் செய்து கொள்ள வேண்டும் என்றும் பதிவு செய்ய வேண்டும்.

இதையடுத்து குறிப்பிட்ட தொகையை வருமான வரியாக பிடித்தம் செய்து கொள்ளும் ஏ.டி.எம். சிறப்பு எண் ஒன்றை கொடுக்கும். அந்த எண் உதவி கொண்டு வங்கி இணையத் தளத்தில் பதிவு செய்து வருமான வரி கட்டியதற்கான சான்றிதழை பெறலாம்.

இதன் மூலம் வங்கிகளில் போய் மணிக்கணக்கில் காத்து நிற்பதை வருமான வரி செலுத்துபவர்கள் தவிர்க்க முடியும்.

No comments:

Post a Comment