Friday, December 28, 2012

திருப்பாவை - திருவெம்பாவை - 7,8,9,10

7. கீசு கீசென்று எங்கும் ஆணை சாத்தன் கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப் பெண்ணே? காசும் பிறப்பும் கலகலப்ப கைப்பேர்த்து வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால் ஓசைப்படுத்த தயிரரவம் கேட்டிலையோ? நாயகப் பெண் பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ? தேசமுடையாய்! திற ஏல் ஓர் எம்பாவாய்! 
 
பொருள்: புத்தியில்லாத பெண்ணே, அதிகாலை புலர்ந்து விட்டது. ஆணை சாத்தன் பறவைகள் கீச்சு கீச்சு என்று குரல் எழுப்பி தங்களுக்குள் பேசத் தொடங்கி விட்டன. அது உனக்கு கேட்கவில்லையா? நெய் மணம் வீசும் கூந்தலையுடைய ஆயர் குலப் பெண்கள், தங்கள் மார்பில் அணிந்துள்ள ஆமைத் தாலியும், அச்சுத் தாலியும் கலகல என்று ஒலி எழுப்ப தங்கள் கைகளை அசைத்து மத்தினால் தயிரைக் கடையும் சல சல என்னும் ஒலியும் கூடவா கேட்கவில்லை? தலைமைத்துவம் பெற்ற பெண்ணே! அந்த பரந்தாமனை, நாராயண மூர்த்தியை, கேடில் விழுப் புகழ் கேசவனை, அண்ணலை, அச்சுதனை, அனந்தனை நாங்கள் அனைவரும் பாடுகின்றோம்! நீ அதைக் கேட்டுக் கொண்டே கேட்காதது போல் படுக்கை சுகத்தில் அமிழ்ந்து கிடக்கின்றாயே, ஒளி பொருந்திய உடலை உடைய கண்ணே! ஓடி வந்து கதவைத் திறடி என் கண்மணி.
 
 -- 8. கீழ்வானம் வெள்ளன் எருமை சிறுவீடு மேய்வான் பரந்தன காண்! மிக்குள்ள பிள்ளைகளும் போவான் போகின்றாரை போகாமல் காத்து உன்னைக் கூவுவான் வந்து நின்றோம் கோதுகலமுடைய பாவாய்! எழுந்திராய்; பாடிப் பறை கொண்டு மாவாய்ப் பிளந்தானை மல்லரை மாட்டிய தேவாதி தேவனை சென்று நாம் சேவித்தால் ஆவாவென்று ஆராய்ந்து அருள் ஏல் ஓர் எம்பாவாய்! 
 
பொருள்: மன மகிழ்ச்சியுடைய பாவையே! கிழக்கே வானம் வெளுத்து விட்டது. எருமைகள் எல்லாம் சிறிது நேரத்திற்கு முன்பே மேய்ச்சலுக்குப் போய் விட்டன. பாவை நோன்பு இருக்கும் இடத்திற்கு நமது தோழியர்கள் போய் விட்டனர். மீதமுள்ளவர்களும் அங்கு செல்ல ஆரம்பித்துள்ளனர். ஆனாலும் உன்னையும் அழைத்துப் போக வேண்டும் என்பதற்காக அவர்களையும் போக விடாமல் காத்திருக்க வைத்து உன்னை அழைக்க வந்து நிற்கிறோம். காரிகையே! காலம் தாழ்த்தாமல் எழுந்து வா! நம் பெருமான் குதிரை வடிவம் எடுத்து வந்த மாய அசுரனை வாயைப் பிளந்து மாய்த்தவர். மதுராபுரியிலே கொடிய கஞ்சன் அனுப்பிய மல்லர்களை வீழ்த்தியவர். தேவர்களுக்கெல்லாம் பெரிய தேவனை, கச்சிப் பதி மேவிய களிற்றை நாம் சென்று அடைந்து பாடி, வேண்டிக் கொண்டு வணங்கினால் நம்மீது இரக்கம் காட்டி வா! வா! என்று அழைத்து நாம் வேண்டும் வரத்தை அருளும் வரதராஜன் அவர். எனவே விரைவில் எழுந்து வா பெண்ணே! -- 
 
 
9. தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரிய தூபம் கமழ துயில் அணை மேல் கண் வளரும் மாமான் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய் மாமீர்! அவளை யெழுப்பீரோ? உம் மகள்தான் ஊமையோ? அன்றி செவிடோ அனந்தலோ ஏமப் பெருந்துயில் மந்திரப்பட்டாளோ? மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று நாமம் பலவும் நவின்று ஏல் ஓர் எம்பாவாய்! 
 
பொருள்: தூய மாணிக்கக் கற்களால் அலங்கரிக்கப்பட்ட அழகிய மாடம். அதிலே சுற்றிலும் விளக்குகள் ஒளிர, அழகிய தூபம் மணக்க, அங்கு போடப்பட்டுள்ள சப்பர மஞ்சத்தில் ஒய்யாரமாக தூங்கும் மாமன் மகளே, எழுந்து வந்து கதவைத் திறக்க மாட்டோயோ! மாமியே! உங்கள் மகள் எங்களுக்கு பதில் ஏதும் சொல்லாமல் நித்திரையில் இருக்கிறாள். அவள் என்ன ஊமையா, செவிடா, ஓயாத தூக்கத்தில் இருக்கிறாளா? அல்லது மந்திரத்தினால் கட்டுண்டு? மாமாயனே! மதுசூதனே! மாதவனே! வைகுந்தனே என்று எம்பெருமானுடைய திருநாமங்கள் பலவற்றையும் கூறினோம், அந்தப் பெருமானைப் பார்க்கப் போகலாம் என்று சொல்லி எழுப்புங்களேன். --
 
 10 நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்! மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார் நாற்றத் துழாய் முடி நாராயணன் நம்மால் பேற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டு ஒரு நாள் கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பகருணனும் தோற்று முனக்கே பெருந்துயில்தான் தந்தானோ? ஆற்ற அனந்தலுடையாய்! அருங்கலமே! தேற்றமாய் வந்து திற ஏல் ஓர் எம்பாவாய்!
 
 பொருள்: விரதமிருந்து சொர்க்கத்திற்கு போகும் அம்மையே, நாங்கள் பலமுறை கூப்பிட்டும் கதவைத்தான் திறக்க மறுக்கிறாய், பதில் மொழி கூடவா கூறக் கூடாது..? புண்ணிய மூர்த்தியாகிய ராமபிரானால் முன்னொரு காலத்தில் எமன் வாயில் வீழ்ந்த கும்பகர்ணன், உறங்கும் போட்டியில் உன்னிடம் தோற்று அவனுடைய பேருறக்கத்தை உனக்கு கொடுத்து விட்டானோ? ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பவளே! பெறர்கரிய ஆபரணம் போன்றவளே! வாசம் மிகுந்த துளசி மாலையை திருமுடியில் அணிந்துள்ள நாராயண மூர்த்தி நம் நோன்புக்கு பரிசாக பேரின்பத்தை நல்குவான். எனவே உறக்கம் தெளிந்து வந்து கதவைத் திறடி.



 
திருவெம்பாவை 
 
7. அன்னே! இவையுஞ் சிலவோ? பல அமரர் உன்னற் கரியான் ஒருவன் இருஞ்சீரான் சின்னங்கள் கேட்பச் சிவன் என்றே வாய் திறப்பாய் தென்னானென் நம்முன்னம் தீ சேர் மெழுகொப்பாய் என்னானை என் அரையன் இன்னமுதென் றெல்லோமும் சொன்னோங் கேள் வெவ்வேறாய் இன்னந் துயிலுதியோ வன்னெஞ்சப் பேதையர் போல் வாளா கிடத்தியால் என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய்
 
 
 பொருள்: பெண்ணே! நாங்கள் உனக்கு இதுவரை சொன்னது என்ன கொஞ்சமா? இறைவன் தேவர்கள் பலராலும் நினைத்து பார்க்கவும் அறியன், ஒப்பற்றவன்! பெரும் புகழையுடையவன். விடியற்காலையில் அந்த பெருமானுடைய இசைக் கருவிகளின் ஒலி கேட்டால் உடனே சிவ, சிவா என்று வாய் திறப்பாயே. தென்னா என்று அவர் பெயரை கூறும் முன்னாலேயே நெருப்பிலிட்ட மெழுகு போல் உள்ளம் உருகிப் போவாயே! அத்தகைய உனக்கு இன்று என்ன நேர்ந்தது? இன்னும் உனக்கு விளையாட்டுதானா? நாங்கள் எல்லோரும் சேர்ந்தும், தனித் தனியாகவும், "என் தலைவனே!, என் அரசனே! இனிய அமுதனே" என்று பலவாறாகவும் பாடும் பொழுதும் கொடிய மனமுடையவள் போல பேசாமல் கிடக்கின்றாயே! உன் உறக்கத்தின் தன்மைதான் என்னே! -- 
 
8. கோழி சிலம்ப சிலம்புங் குருகெங்கும் ஏழில் இயம்ப இயம்பும் வெண் சங்கெங்கும் கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை கேழில் விழுப் பொருளை பாடினோம் கேட்டிலையோ? வாழியீதெனன உறக்கமோ? வாய் திறவாய் ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ? ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை ஏழைப் பங்காளனையே பாடேல் ஓர் எம்பாவாய்! 
 
பொருள்: நற்காலை பொழுது விடிந்து விட்டது, கோழிகள் எல்லாம் கூவத் தொடங்கி விட்டன. சிறு பறவைகள் ஒலியெழுப்ப ஆரம்பித்து விட்டன. நாதசுரம் ஒலிக்கின்றது, எங்கும் வெண் சங்குகள் முழங்குகின்றன. நாங்கள் அனைவரும் தனக்குவமையில்லாத பேரொளியை, ஒப்பற்ற பேரருளை, மேலொன்றுமில்லாத மெய்ப் பொருளை, பரஞ்சோதியை பாடினோமே அது உனது காதுகளை எட்டவில்லையா? உன் உறக்கம் தான் எப்படிப்பட்டதோ! வாயைத் திறந்து ஒரு வார்த்தையாவது சொல்லேன். அருட்பெருங் கடலாகிய எம்பெருமானுக்கு நீ அன்பு செய்யும் முறை இதுதானா? ஊழிக் காலத்தில் அனைத்து ஜீவ ராசிகளும் அந்த எம்பெருமானது திருவடிகளிலே அடங்க தனி முதல்வனாய் விளங்கும் ஒப்பற்ற தலைவனை, உமையொரு பாகனை, ஏழைப் பங்காளனை பாட வேண்டாமா? எழுந்திரு கண்ணே!
 
 
9. முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம் பொருளே! பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப் பெற்றியனே! உன்னைப் பிரானாகப் பெற்ற உன் சீரடியோம் உன்னடியார் தாள் பணிவோம் ஆங்கு அவர்க்கே பாங்காவோம்; அன்னவரே எம் கணவர் ஆவார் அவர் உகந்து சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணி செய்வோம்; இன்ன வகையே எமக்கு எம்கோன் நல்குதியேல் என்ன குறையும் இலோம் ஏலோர் எம்பாவாய்!
 
 பொருள்: இந்த பிரபஞ்சம் முழுவதையும் படைத்தும், காத்தும், கரந்தும் விளையாடும் எம்பெருமானே, நீவிர் முன்னரே தோன்றிய பழமையான எல்லா பொருட்களுக்கும் முற்பட்ட பழம் பொருள். அவ்வாறே பின்னே தோன்றிய புதுமைப் பொருட்களுக்கெல்லாம் புதுமையாக தோன்றும் தன்மையன். உன்னை இறைவனாக பெற்ற நாங்கள்; உன் சிறந்த அடியார்களாவோம். ஆதலால் உன்னுடைய அடியார்களது திருவடிகளை வணங்குவோம். அங்ஙனமே அவர்களுக்கே உரிமையுடையவர்களாவோம், அந்த சிவனடியார்களே எங்களது கணவர்கள் ஆவார்கள். அவர்கள் விரும்பி கூறும் முறையிலே அடிமைப் பணி செய்வோம். எங்கள் அரசே! இந்த வகையான வாழ்க்கையை எங்களுக்கு நீங்கள் அருளுவீர்களானால் எந்த குறையும் இல்லாதவர்களாவோம்! --
 
10. பாதாளம் ஏழினும் கீழ் சொல்கழிவு பாதமலர் போது ஆர் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே! பேதை ஒருபால் திருமேனி ஒன்று அல்லன் வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும் ஓதஉலவா ஒரு தோழ்ன் தொண்டர் உளன் கோதுஇல் குலத்துஅரன் கோயில் பிணாப்பிள்ளைகாள்! ஏதுஅவன் ஊர் ஏதுஅவன் பேர் ஆர் உற்றார் ஆர் அயலார் ஏதுஅவனைப் பாடும் பரிசு ஏலோர் எம்பாவாய்!
 
 பொருள்: சிவபெருமானின் திருக்கோவிலை சார்ந்து வாழும் குற்றமற்ற குலத்தில் தோன்றிய கோயிற்ப் பணிப் பெண்களே! அரியும் அயனும் அடி முடி காண முடியா அனற்பிழம்பாக, திருவண்ணாமலையாக, லிங்கோத்பவராக நின்ற எம்பெருமானின் வீரக் கழலணிந்த திருவடி மலர்ப் பாதங்கள் பாதாளம் ஏழுக்கும் கீழே சொற்களைக் கடந்த எல்லையில் உள்ளன. கொன்றை, ஊமத்தை, சந்திரன், கங்கை அணிந்த அவரது திருமுடி மேலோர்க்கும் மேலாக, எல்லாவற்றிக்கும் மேலாக அண்டங் கடந்து விளங்குகின்றது. அவன் மாதொரு பாகன், மங்கை கூறன், மாவகிடண்ண கண்ணி பங்கன், ஆதலால் திருமேனி ஒன்று உடையவனல்லன். எல்லாப் பொருள்களிலும் பரவி உள்ளவன். அவன் மறைக்கும் முதல்வன். விண்ணகத்தாரும், மண்ணகத்தாரும், அளவிறந்த காலமாக எந்தெந்த முறையில் பரவிப் புகழ்ந்தாலும் வரையறுத்து புகழ முடியாத உயிர்த்துணைவன். அந்தப் பெருமானின் ஊர் யாது? பேர் யாது? அவருக்கு உறவினர் யார்? அயலார் யார்? அவரைப் பாடும் தன்மை எப்படி? அன்புடன் கூறுவீர்களா?



No comments:

Post a Comment