Friday, December 16, 2011

தேவ தூதனை வரவேற்கும் கிருஸ்துமஸ் அலங்காரங்கள்

குளிர்காலத்தில் வீட்டிற்குள் முடங்கி போய்விடாமல் உற்றார் உறவினர்களிடம் கலந்து இன்புற்று மகிழவேண்டும் என்பதற்காகவே பனி பொழியும் மாதங்களில் உற்சவங்களும், பண்டிகைகளும் கொண்டாடப்பட்டன. டிசம்பர் மாதத்தில் இந்து, கிருஸ்துவர், இஸ்லாமியர் என அனைத்து மதத்தவரும் கொண்டாடும் பண்டிகைகள் உற்சாகத்தை ஏற்படுத்து வதாக அமைந்துள்ளன.

அலங்காரத்தில் உற்சாகம்

ஒவ்வொரு பண்டிகையும் ஒரு விதமான தனித்துவத்துடன் கொண்டாடப்படுகின்றன. அதிலும் கிருஸ்து பிறப்பை கொண்டாடும் கிருஸ்துவ மக்கள் தேவதூதன் இந்த மண்ணில் பிறந்த மகத்துவத்தை ஆண்டுதோறும் உற்சாகத்துடன் கொண்டாடுகின்றனர். டிசம்பர் 25ம் தேதிதான் கிருஸ்துமஸ் என்றாலும் டிசம்பர் மாதம் பிறந்த உடனேயே அதற்கான ஆயத்த பணிகளை ஆரம்பித்துவிடுகின்றனர்.

ஒவ்வொரு கிருஸ்துவரும் டிசம்பர் மாதத்தின் துவக்கத்திலேயே தங்களின் வீடுகளின் முன் நட்சத்திரத்தை கட்டி தொங்கவிட்டு அதில் வண்ண மின்விளக்கினால் அலங்காரம் செய்திருப்பர். இது தேவதூதனின் அவதாரத்தை உலகிற்கு பறைசாற்றும் விதமாக அமைந்திருக்கிறது.

அலங்கார குடில்

தேவதூதனின் பிறப்பை சித்தரிக்கும் வகையில் வண்ண வண்ண தோரணங்களினால் வீடுகளை அலங்கரித்து, வீட்டுக்குள் குடில் அமைக்கின்றனர். மாட்டுத்தொழுவம், சின்னச்சின்ன மாடுகள், வைக்கோல் வைத்து அந்த வைக்கோல் போரின் மீது குழந்தை யேசுவை படுக்கவைத்து அதன் அருகில் அன்னை மரியாளையும், தந்தை ஜோசப்பையும் நிற்க வைத்திருப்பர். அந்த குடிலின் முன் வானத்தில் இருந்து வந்த தேவதைகள் கைகளில் நட்சத்திரம் ஏந்தியபடி மண்ணுலகை ரட்சிக்க வந்த இறை தூதன் அவதரித்தை பறைசாற்றிக் கொண்டிருப்பர். இந்த அலங்காரக்காட்சி காண்பவர்களை கொள்ளை கொள்ளும்.

கிருஸ்துமஸ் மரம்

இந்துக்களின் பண்டிகையில் வாழைமரம் எவ்வாறு முக்கியத்துவம் பெற்றுள்ளதோ அதோபோல கிருஸ்துவமக்களின் பண்டிகையில் கிருஸ்துமஸ் மரம் முக்கிய இடம் பெற்றுள்ளது. கிருஸ்துவ பெருமக்கள் ஒவ்வொருவரும் அவரவர் வசதிக்கேற்ப தங்களின் வீடுகளில் கிருஸ்துமஸ் மரத்தை அலங்கரிக்கின்றனர். செயற்கையான கிருஸ்துமஸ் மரம் தற்போது விற்பனை செய்யப்படுகிறது. அந்த மரத்தில் வண்ண வண்ண பந்துகளை கட்டிவிட்டு பலூன்களால் அலங்கரித்திருப்பர்.

கிருஸ்துமஸ் மணிகளும், நட்சத்திரங்களும் ஆங்காங்கே அலங்காரமாய் தொங்கவிடப்பட்டிருக்கும். மேலும் ஆப்பிள், சாக்லேட் போன்றவைகளையும் மரத்தின் கிளைகளில் ஆங்காங்கே கட்டி தொங்கவிட்டிருப்பர்.

மரத்தின் வரலாறு

ஜெர்மானியர்கள்தான் முதல் முறையாக இறந்த வாத்தின் இறகை கொண்டு கிருஸ்துமஸ் மரத்தை செய்தனர் என்று கூறப்படுகிறது. ஜெர்மானிய கத்தோலிக்க கிறிஸ்தவ போதகரான புனிதபோனி பேஸ் (St.Boniface) என்பவர்தான் மர வழிபாட்டை துவக்கிவைத்தவர் என வரலாற்று செய்திகள் தெரிவிக்கின்றன. ஓக் மற்றும் பிர் மரங்கள் அழிவதை தடுப்பதற்காக ஒவ்வொரு மரத்தை வெட்டும்போதும், புதிய மரத்தை நடவேண்டும் என்று கட்டளையிட்டார். இதன்படி ஜெர்மானியர்கள் ஒரு 'ஓக்' மரம் வெட்டினால் ஒரு 'ஓக்' மரம் அல்லது ஒரு '·பிர்' மரத்தை நட்டு உயிர்ப்பித்தனர். கிறிஸ்துவின் நினைவாக இதனைச் செய்யத் தலைப்பட்ட ஜெர்மானிய பாகான் இனத்தவர்கள், கிறிஸ்து பிறக்கிற மாதங்களில் தங்கள் இல்லங்களில் 'ஓக்' மரங்களையோ '·பிர்' மரங்களையோ அலங்கரித்து வைப்பதை வழக்கமாகக் கொள்ளத் துவங்கினர்.

உலகம் முழுவதும் பரவியது

கிழக்கு பிரான்சு நாட்டில் மேற்கு ஜெர்மனியின் எல்லைக்கோட்டை ஒட்டி அமைந்துள்ள அல்சாஸில் (Alsace ) முதல் "கிறிஸ்மஸ் மரம்" வீட்டில் வைக்கப்பட்டிருக்கிறது. அதன்பின் பிரான்சு தேசம் முழுவதும் வீடுகளில் வைக்கும் பழக்கம் ஏற்பட தொடர்ந்து ஜெர்மனி, ரோம், நார்வே, உள்ளிட்ட பல நாடுகளுக்கும் பரவியிருக்கிறது.

பிரிட்டிஷ் இளவரசர் ஆல்பர்ட், விண்ட்ஸர் கோட்டையில் 1841ம் ஆண்டு டிசம்பர் மாதம் கிறிஸ்மஸ் மரத்தை வைத்து நாட்டு மக்களுக்கு கிறிஸ்மஸ் செய்தி விடுத்தார். அந்தக் கிறிஸ்மஸ் மரம் நார்வே நாட்டு மக்களின் அன்புப் பரிசாக அளிக்கப்பட்டது. இதனையடுத்து இங்கிலாந்து முழுவதும் வீடுகளில் கிறிஸ்மஸுக்கு கிறிஸ்மஸ் மரங்களை வீட்டில் வைப்பதை வழக்கமாகக் கொள்ளத் துவங்கினர். இந்தப் பழக்கம் மெல்லமெல்ல ஐரோப்பா நாடுகளில் பரவியதோடு ஜெர்மானியர்கள் அமெரிக்காவில் குடியேறியபோதுஅமெரிக்காவிலும் பரவி, அன்றும், இன்றும், என்றும் என கிறிஸ்மஸ் பண்டிகையும் கிறிஸ்மஸ் மரமும் பிரிக்க இயலாத அளவுக்கு ஆகிவிட்டது. வழக்கமாக 15 ஆண்டுகள் வளர்க்கப்பட்ட கிருஸ்துமஸ் மரங்களே விற்கப்படுகின்றன. ஆண்டுதோறும் அமெரிக்காவில் மட்டும் 30 முதல் 35 மில்லியன் இயற்கை கிருஸ்துமஸ் மரங்கள் விற்கப்படுகின்றன.

பாரம்பரியமான மரம்

கிருஸ்துமஸ் மரமானது பச்சை,சிவப்பு, தங்க நிறம் என மூன்று பாரம்பரிய வண்ணங்கள் கொண்டிருக்கும். பச்சை நிறம் நீண்ட ஆயுளையும் மறு பிறவியையும் குறிக்கின்றது. சிவப்பு நிறம் இயேசுவின் ரத்தத்தை குறிக்கின்றது. தங்க நிறம் செல்வத்தை குறிக்கின்றது. எனவே கிருஸ்துமஸ் பண்டிகையில் மர அலங்காரம் பாரம்பரியமானதாக கருதப்படுகிறது.

No comments:

Post a Comment