Wednesday, December 28, 2011

திருப்பாவை 11. முகில்வண்ணனின் பெருமையை கூறல்

கற்றுக் கறவை கணங்கள் பல கறந்து
செற்றார் திறல் அழியச் சென்று செருச்செய்யும்
குற்றம் ஒன்று இல்லாத கோவலர்தம் பொற்கொடியே!
புற்று அரவு அல்குல் புனமயிலே! போதராய்,
சுற்றத்து தோழிமார் எல்லாம் வந்து நின்
முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட
சிற்றாதே பேசாதே செல்வப் பெண் டாட்டிநீ
எற்றுக்கு உறங்கும் பொருள் ஏல் ஓர் எம்பாவாய்!

பொருள்: கோபாலர்கள், கன்றுகளையுடைய கறவைப் பசுக்களை வைத்துப் பராமரித்து பால் கறப்பர்; பகைவர்களின் வலிமை அழியும்படி போர் புரிவர்; அவர்கள் குற்றமற்றவர்கள். அவர்களது பொற் கொடி போன்ற பாவையே! புற்றில் இருக்கும் பாம்பு போன்ற மெல்லிய வயிற்றை உடையவளே! காட்டில் திரியும் மயில் போன்ற பெண்ணே! எழுந்து வாடி கண்ணே!

நம் உறவினராகிய பெண்கள் எல்லாரும் வந்து உன் வீட்டு வாசலிலே கூடி நின்று முகில் வண்ணன் கண்ணனின் திருநாமத்தைப் பாடுகின்றோம், செல்வப் பெண்ணே! கொஞ்சம் கூட அசையாமல், வாய் பேசாமல் எதற்காக இப்படி உறங்குகின்றாய், இந்த தூக்கத்திற்கு பொருள் தான் என்ன?

திருவெம்பாவை 11. நல்வழி காட்டும் பெருமான்

மொய்யார் தடம் பொய்கை புக்கு முகேரென்ன
கையார் குடைந்து குடைந்து உன் கழல் பாடி
ஐயா! வழி அடியோம் வாழ்ந்தோம் காண்! ஆரழல் போல்
செய்யாவெண் நீறாடி! செல்வா! சிறுமருங்குல்
மைஆர் தடங்கண் மடந்தை மணவாளா!
ஐயாநீ ஆட்கொண்டு அருளும் விளையாட்டின்
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம்
எய்யாமல் காப்பாய் எமைஏலோர் எம்பாவாய்!

பொருள்: பவளம் போல் மேனியில் பால் வெண்ணீறு அணிந்த பரமனே! சிவ பெருமானே! எல்லா செல்வங்களையும் உடையவனே! உடுக்கை போன்ற சிறிய இடையினையும், மை தீட்டிய அகன்ற கண்களையும் உடைய உமையம்மையின் மணவாளனே!

ஐயனே! வழி வழி அடிமைகளாகிய நாங்கள் வண்டுகள் மொய்க்கின்ற அகன்ற பொய்கையில், குளிர் நீரில் மூழ்கி, கைகளால் நீரைக் குடைந்து குடைந்து, வீரக் கழலணிந்த உன் பொற் திருவடிகளைப் புகழ்ந்து பாடி வருகின்றோம்.

எங்கள் தலைவனே! நீ ஆட்கொண்டு அருளும் விளையாடலின் வழிப்பட்ட அடியார்கள் செல்லும் நெறியெல்லாம் நாங்களும் செல்கின்றோம். எங்களையும் நல்வழி காட்டி காப்பாற்ற வேண்டும் பெருமானே!

No comments:

Post a Comment