Wednesday, December 28, 2011

100 ஆண்டுகள் கடந்தும் இளமையாய் இருக்கும் ‘தேசிய கீதம்’!

நம் நாட்டின் பெருமைமிக்க தேசிய கீதம் ஜனகணமன இசைக்கப்பட்டு இன்றோடு நூறு ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. மகாகவி ரவீந்திரநாத் தாகூர் எழுதிய கவிதையானது இந்தியர்களின் உணர்வோடும், உயிரோடும் கலந்து தேசிய கீதமாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. நாடு சுதந்திரமடைந்து 64 ஆண்டுகள் ஆன போதும் இந்தியரை ஒற்றுமைப்படுத்த நாட்டின் தேசிய கீதம் முக்கியத்துவம் பெறுகிறது.

இந்தியத் தாயே ! மக்களின் இன்ப துன்பங்களைக் கணிக்கின்ற நீயே எல்லோருடைய மனத்திலும் ஆட்சி செய்கின்றாய் என்ற பொருளோடு தொடங்கும், ‘ஜன கண மன அதி நாயக ஜய ஹே பாரத பாக்ய விதாதா’ நமது தேசிய கீதம், இந்தியர்கள் ஒவ்வொருவரின் சுவாசத் தோடு கலந்தது.

இந்தியத் தாய்க்கு என்றுமே வெற்றிதான் என்ற நேர்மறை எண்ணத்தை விதைக்கின்ற இந்த பாடலை தீர்க்க தரிசனத்தோடு இயற்றிய மகாகவி ரவீந்திரநாத் தாகூர். அவர் எழுதிய இக்கவிதை ரவீந்திரநாத் பொறுப்பு வகித்த “தத்வ போத பிரகாசிக’ என்ற நாளிதழில் பிரசுரப்படுத்தப்பட்டிருந்தது. ஐந்து பகுதிகளில் பங்காளி மொழியில் எழுதப்பட்ட கவிதையில் இருந்த முதற்பகுதி தான் தேசிய கீதமாக தேர்வு செய்யப்பட்டது.

முதன் முதலாக பாடப்பட்டது

1911 டிசம்பர் 27ம் தேதி கொல்கத்தாவில் நடந்த இந்தியன் தேசிய காங்கிரஸ் மாநாட்டில் முதலாவதாக ஜனகணமன பாடப்பட்டது. முதலாவதாக காங்., மாநாட்டில் பாடும் போது பாரதவிதாத் என பெயரிடப்பட்டிருந்தது. சுதந்திரப்போராட்ட கால கட்டங்களில் இந்தியர்களின் தேசபக்தி பாடலாக இசைக்கப்பட்டிருந்த இப்பாடல், 1950 ஜனவரி 24ம் தேதி நமது தேசிய கீதமாக அங்கிகரிக்கப்பட்டது.

சங்கராபரணம் ராகத்தில் 52 நொடிகளில் பாட வேண்டிய தேசிய கீதத்தை ரவீந்திரநாத் தாகூர் தான் இசை அமைத்தார் என பொதுவாக கூறப்படுகிறது. எனினும் சுபாஷ் சந்திரபோஸின் சீடரும், ஐ.என்.ஏ., படையாளியுமான கேப்டன் ராம்சிங் தாகூர் தேசிய கீதத்திற்கு இசை அமைத்தார் எனவும் ஒருதரப்பினர் கூறுகின்றனர். ரவீந்திரநாத் தாகூர் தான் இசை அமைத்தார் என்பதே இந்திய அரசின் நிலைபாடு.

வந்தே மாதரம்

ஜனகணமனவிற்கு முன்பாகவே பக்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய வந்தேமாதரம் 1886ல் கொல்கத்தாவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் முதலாவதாக பாடப்பட்டிருந்தது. ஆங்கிலேய ஆட்சியில் பிரிட்டனின் தேசிய கீதமான “கோட் சேவ் த கியூன்’ இந்தியாவிலும் கட்டாயமாக்க முயன்ற போது வந்தேமாதரமும், ஜனகணமனவும் இம்முயற்சிகளை தடை செய்தது.

1950 ஜனவரி 24ம் தேதி நடந்த கூட்டத்தில் தேசிய கீதம் தேர்வு செய்யப்படும் போது ஜனகணமனவுடன் வந்தே மாதரம் பாடலும் பரிந்துரைக்கப்பட்டது. பல விவாதங்களுக்கு பின் ஜனகணமன தேர்வு செய்யப்பட்டது. டாக்டர் ராஜேந்திரபிரசாத் தேசிய கீதமாக ஜனகணமன தேர்வு செய்யப்பட்டதாக அறிவித்தார். பின் வந்தேமாதரத்திற்கும் இணையான முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றார்.

நூற்றாண்டை கடந்தும் இளமை

ஆந்திராவில் உள்ள சிற்றூரில் பசன்ட் தியோசபிக்கல் கல்லூரி முதல்வராக ஐரிஷ் கவிஞர் ஜெயிம்ஸ் கஸின்ஸின் வேண்டுகோள் படி 1919ல் அங்கு சென்று தாகூர் ஜனகணமன பாடினார். இப்பாடலின் உட்கருத்துக்களை புரிந்து கொண்டவர்கள் கல்லூரியின் பிரார்த்தனை பாடலாக தேர்வு செய்தனர். அவர்களின் வேண்டுகோள் படி தாகூர் ஆங்கில மொழியில் மொழி பெயர்த்தார்.

கல்லூரி முதல்வர் கஸின்சின் மனைவியும், இசைமேதையுமான மார்கரட் இதற்கு இசை அமைத்து “த மோர்னிங் சாங் ஆப் இந்தியா’ என்று பெயர் சூட்டினார். தேசிய கீதம் பாடப்பட்டு இன்றோடு நூறு ஆண்டு நிறைவடைந்து விட்டது. இந்தியர்களின் தேசப்பற்றினை பறைசாற்றும்‌ தேசிய கீதம் நூற்றாண்டைக் கடந்தும் இன்றைக்கும் இளமையாக ஒவ்வொரு குடிமகனின் இதயத்திலும் ஒலித்துக்கொண்டிருக்கிறது என்பதே உண்மை.

No comments:

Post a Comment