Monday, October 24, 2011

chennai-bangalore-expressway-gets-clearance-centre

சென்னை- பெங்களூர் இடையே புதிய 6 வழிச் சாலை: தூரம் 258 கி.மீ. ஆகக் குறையும்!

சென்னை: சென்னை-பெங்களூர் இடையே புதிதாக 6 வழி அதிவேக 'எக்ஸ்பிரஸ் வே' சாலை அமைக்கப்படவுள்ளது.

இப்போது சென்னை-பெங்களூர் இடையே ஒசூர், கிருஷ்ணகிரி வழியாக 4 வழிச் சாலை உள்ளது. இந் நிலையில் புதிதாக இன்னொரு 6 வழிச் சாலை அமைக்கப்படவுள்ளது. இந்தச் சாலை பெங்களூரின் ஹோஸ்கோட் பகுதியில் ஆரம்பிக்கும் (மாரதஹள்ளியை ஒட்டிச் செல்லும் அவுட்டர் ரிங் ரோடு வழியாக சென்று ஹோஸ்கோட் பகுதியை அடையலாம்)

இந்த 6 வழிச் சாலை சென்னை-பெங்களூர் இடையிலான தூரத்தை 344 கி.மீயிலிருந்து 258 கி.மீ ஆகக் குறைக்கும். தூரம் 86 கி.மீ. குறைவதால், பயண நேரமும் வெகுவாகக் குறையவுள்ளது.

பெங்களூரில் ஹோஸ்கோட் அருகே துவங்கும் இந்தச் சாலை தேசிய நெடுஞ்சாலை 4க்கு இணையாகச் செல்லும். கோலார், பாலமநேரு, சித்தூர், ராணிப்பேட்டை வழியாக சென்னையை சென்றடையும். (ஏற்கனவே சித்தூர் வழியாக சென்னைக்கு சிங்கிள் லேன் பாதை உள்ளதும் குறிப்பிடத்தக்கது)

மொத்தமுள்ள 258 கி.மீ. தூரத்தில் 74 கி.மீ. கர்நாடகத்துக்குள்ளும், 90 கி.மீ. ஆந்திராவிலும், 94 கி.மீ. தூரம் தமிழகத்துக்குள்ளும் இந்த சாலை அமையும்.

இந்த சாலையை அமைக்க ஒரு கி.மீக்கு ரூ. 18 முதல் ரூ. 20 கோடி வரை செலவிடப்படவுள்ளது. இதனால் இந்தச் சாலையை அமைக்க ரூ. 5,000 கோடி வரை செலவாகும் என்று தெரிகிறது.

இந்த சாலை அமைக்கத் தேவையான நிலங்களை தமிழகம், கர்நாடகம், ஆந்திர பிரதேச மாநில அரசுகளின் உதவியுடன் மத்திய அரசு கையகப்படுத்தும்.

இந்த சாலையை தனியார் நிறுவனங்கள் அமைக்கவுள்ளன. சாலையை உருவாக்கி, நிர்வகித்து (கட்டணம் வசூலித்து) பின்னர் அரசிடம் ஒப்படைக்கும் build-operate- transfer (BOT) திட்டத்தின் கீழ் இந்த சாலை அமைக்கப்படும்.

பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் கூடிய பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர்கள் குழு இத் திட்டத்துக்கு சமீபத்தில் தனது அனுமதியை அளித்தது.

இந்த சாலை அமைக்கும் பணியை துரிதமாக்க expressway authority என்ற அமைப்பை உருவாக்கவும் மத்திய வர்த்தகத்துறை திட்டமிட்டுள்ளது.

சென்னை-பெங்களூர் சாலை தவிர, வதோதரா-மும்பை இடையே 400 கி.மீ. தூரத்துக்கும், டெல்லி-மீரட் இடையே 66 கி.மீ தூரத்துக்கும், கொல்கத்தா-தன்பாத் இடையே 277 கி.மீ. தூரத்துக்கும் புதிய 6 வழிச் சாலைகள் அமைக்கப்படவுள்ளன.

இந்த அனைத்துத் திட்டங்களுக்கும் மத்திய அரசு ரூ. 16,680 கோடியை ஒதுக்கவுள்ளது.

இப்போது சென்னை-பெங்களூர் இடையிலான பயண தூரம் கார்களில் 3.30 மணி நேரமாகவும், ஆம்னி பஸ்களில் 5.30 மணி நேரமாகவும் உள்ளது. அதிவேகமாக இயக்கப்படும் கார்கள் 3 மணி நேரத்திலும், ஆம்னி பஸ்கள் 4 மணி நேரத்திலும் சென்னையை அடைவதுண்டு.

இந்த புதிய, தூரம் குறைக்கப்பட்ட சாலை மூலம் பயண நேரம் இரண்டரை மணி நேரமாகக் குறைய வாய்ப்புள்ளது.

இதன்மூலம் ஐடிபிஎல் பகுதியில் உள்ள சாப்ட்வேர் நிறுவனங்களில் பணியாற்றும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு பெரும் பயன் ஏற்படும். இவர்கள் எலெக்ட்ரானிக் சிட்டி வரை வந்து சென்னை சாலையை பிடிக்க வேண்டிய அவசியம் இருக்காது.

No comments:

Post a Comment