Thursday, May 5, 2011

நாளை செல்வம் பெருக வைக்கும் அட்சய திருதியை

படைப்புக் கடவுளான பிரம்மன் சித்திரை மாதத்தின் வளர்பிறை திருதியை நாளன்றுதான் உயிர்களை உருவாக்கும் தொழிலை தொடங்கினார் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாகவே அட்சய திருதியை நாளில் தொடங்கும் செயல் வளர்ச்சியடையும் என்பது அனைவரின் நம்பிக்கை.

நாளை அட்சய திருதியை தினமாகும் . இந்த நாளில் ஏழை, எளியோருக்கு தானம் செய்தால் அதற்கான புண்ணியம் பன்மடங்காக பெருகி நமக்கு திரும்ப கிடைக்கும் என்பது ஐதீகம்.

“அட்சய” என்ற சொல்லுக்கு அழிவின்றி வளர்வது என்று பொருள். ஒவ்வோர் ஆண்டும் சித்திரை மாதம் அமாவாசைக்கு பின்வரும் மூன்றாம் பிறை நாள் (திருதியை) அட்சய திருதியை நாளாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளில் தான, தர்மங்கள் செய்தால் குறைவின்றி வாழலாம் என்பது முன்னோர் வாக்கு.

அட்சய திருதியை நாளினைப் பற்றி மகாபாரதத்தில் பல கதைகள் உண்டு.

பாண்டவர் வனவாசம் சென்ற போது, பசியால் அவதிப்பட்டனர். அதிலிருந்து விடுபட மகாவிஷ்ணுவை வழிபட்டனர். அப்போது அவர், சூரியபகவானை வழிபட அறிவுறுத்தினார். அதன்படி வழிபாடு செய்தவுடன் சூரிய பகவான் அட்சய பாத்திரம் வழங்கினார். சித்திரை மாதத்தில் பாண்டவர்களுக்கு கிடைத்த அட்சய பாத்திரம் கேட்டதையெல்லாம் வழங்கியது என்கிறது மகாபாரதம்.

இதுபோல் மற்றொரு மகாபாரதக் கதை அட்சய திருதியை நாளின் சிறப்பை விளக்குகிறது.

கண்ணனின் நண்பரான குசேலரின் வாழ்க்கையில் வறுமை சூழ்ந்திருந்தது. தன் வறுமையை போக்க, ஒரு பிடி அவலோடு கண்ணனை காணச்சென்றார் குசேலர்.

அவலை எப்படி கொடுப்பது என்று குசேலர் யோசித்த போது, கண்ணன், “அக்ஷய” என்று சொல்லி அந்த அவலை எடுத்து உண்டார்.

வீடு திரும்பிய குசேலர் தன் வீட்டையும், மனைவியையும் அடையாளம் காண முடியாத அளவிற்கு செல்வம் குவிந்திருந்து என்கிறது இதிகாச கதை.

அட்சய திருதியை நாளில் அம்பிகையே அன்று தன் கையால் இறைவனுக்கு உணவளிக்கிறாள் என்றும், ஆகவே நாமும் சாப்பிடும் உணவை இறைவனுக்கு நிவேதனம் செய்து மாலையில் பசுமாட்டிற்கு உணவளித்துவிட்டு உணவுண்பது நல்லது என்று பெரியவர்கள் கூறுகிறார்கள்.

அக்ஷய திருதியைக்கு தங்கம்தான் வாங்க வேண்டும் என்பதில்லை. உப்பு, மஞ்சள், அரிசி, நவதானியம் உள்ளிட்ட பொருட்களை வாங்கி ஏழைகளுக்கு தானம் அளிக்கலாம். நமக்காக தங்கம் வாங்கி சேமிப்பதில் உள்ள மகிழ்ச்சியை விட ஏழைகளுக்கு நம்மால் முடிந்த பொருளுதவி செய்து இறைவனை நினைத்து பஜனை, ஹோமம் செய்து, அதன் மூலம் புண்ணியம் பெறுவோம்.

No comments:

Post a Comment