Tuesday, April 5, 2011

முருகனின் 4ம் படை வீடு சுவாமி மலை





முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுள் நான்காவது படை வீடாக பக்தர்களால் போற்றப்படுவத திருவேரகம் எனப்படும் சுவாமிமலை. இங்கு கதிர்வேலனாக முருகப்பெருமான் எழுந்தருளியிருக்கிறார்


தல வரலாறு

பிரணவ மந்திரத்தின் பொருள் தெரியாத காரணத்தினால் பிரம்மாவை சிறையில் அடைத்தான் முருகப்பெருமான்.

ஈசனே நேரில் வந்து கேட்டுக்கொண்டதால், பிரம்மாவை அவர் விடுதலை செய்தார். பிறகு சிவபெருமானே, சிஷ்யனாக அமர்ந்து பிரணவத்தின் பொருளை முருகனிடம் கேட்டுத் தெரிந்து கொண்டார் என்கின்றன புராணங்கள். இவ்வாறு இறைவனான சிவபெருமானுக்கே முருகன் குருநாதனாக ஆனதால், அவரை சுவாமிநாதன் என்றும், பரமகுரு என்றும், தகப்பன்சாமி என்றும் போற்றுகிறோம். அதனாலேயே இந்த தலமும் சுவாமிமலைஎன்று பெயர் பெற்றுள்ளது.

கோயில் அமைப்பு

சுவாமிமலை இயற்கையான மலை அல்ல. ஏராளமான கருங்கற்களைக் கொண்டு கட்டப்பட்ட ஒரு மாடக்கோவில்தான் இது. இங்கு மூன்றாவது பிரகாரம் மலையடிவாரத்தில் உள்ளது. இரண்டாம் பிரகாரம் கட்டுமலையின் நடுப்பாகத்திலும் முதலாம் பிரகாரம் கட்டுமலையின் உச்சியில் சுவாமிநாதப் பெருமானைச் சுற்றியும் அமைந்துள்ளது.

தெற்கு நோக்கிய ராஜகோபுரம் ஐந்து நிலைகள் உடையது. பெரும்பாலும் பக்தர்கள் கிழக்குப்புற மொட்டைக் கோபுரத்தின் வழியாகவே கோவிலுக்குள் நுழைகின்றனர். அவ்வாறு நுழைந்தவுடன் வல்லப கணபதியை தரிசிக்க முடிகிறது.

மலைக்கோயிலின் கீழ்த்தளத்தில் மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர், விநாயகர், சோமாஸ்கந்தர், விசுவநாதர், விசாலாட்சி, தட்சிணாமூர்த்தி ஆகியோரின் சன்னதிகள் அமைந்துள்ளன. சுவாமிநாதனை தரிசிக்க நாம் 60 படிகள் மேலே ஏறிச் செல்ல வேண்டும். 60 தமிழ் வருடங்களின் பெயர்களைத் தாங்கி நிற்கும் இந்த 60 படிகளும் இரண்டு பகுதிகளாக அமைந்துள்ளன.

மேல்தளத்தில் முதலில் நமக்குக் காட்சி தருபவர் கண்கொடுத்த கணபதி என்ற விநாயகர் ஆவார். இவர் செட்டி நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்மணிக்குக் கண்பார்வையை அருளியதால் "கண் கொடுத்த கணபதி" என்று பெயர் பெற்றதாக செவிவழிச் செய்திகள் கூறுகின்றன. இன்றும், இவரை வணங்கும் பக்தர்களுக்கு நல்ல கண் பார்வையை கிடைக்கிறது என்பது பலர் அனுபவ ரீதியாக உணர்ந்த உண்மை.

மூலவர்

இத்தலத்தில் சுவாமிநாதன் நான்கரை அடி உயர நின்ற கோலத்தில் காட்சி கம்பீரமாக காட்சித் தருகிறார். வலது கரத்தில் தண்டாயுதம் தரித்து, இடது கரத்தை இடுப்பில் வைத்து, சிரசில் ஊர்த்துவ சிகாமுடியும், மார்பில் பூணூலும் ருத்திராட்சமும் விளங்க... கருணாமூர்த்தியாக காட்சித் தருகிறார். முகத்தில் ஞானமும் சாந்தமும் தவழ்வதை கண்குளிர பார்க்க முடிகிறது.

மகாமண்டபத்தில் மயிலுக்குப் பதிலாக முருகனுக்கு இந்திரனால் வழங்கப்பட்ட ஐராவதம் என்ற யானை நிற்கிறது. கிழக்கு நோக்கி நின்று திருவருள் பாலிக்கும் சுவாமிநாதனுக்கு, தங்கக் கவசம், வைரவேல், தங்க சகஸ்ர நாம மாலை, ரத்தின கிரீடம் போன்ற பல்வேறு அணிகலன்களும் பூட்டி பக்தர்கள் அழகு பார்க்கின்றனர். சுவாமிநாதன் தங்கத் தேரிலும் அவ்வப்போது பவனி வருவது வழக்கம்.

தல விருட்சம்

நெல்லி மரம் சுவாமிமலையின் தல விருட்சமாகும். நெல்லி மரத்தை வடமொழியில் "தாத்ரி" என்பர். அதனால் சுவாமிமலையை "தாத்ரிகிரி" என்றும் குறிப்பிடுகின்றனர். மேலும் சிவகிரி, குருவெற்பு, குருமலை, சுவாமி சைலம் போன்ற பெயர்களும் உண்டு. வடமொழியில் சுவாமிநாதனை "ஞானஸ்கந்தன்" என்று போற்றுகின்றனர்.

விழாக்கள்

- இங்கு முக்கிய திருவிழாவாக திருக்கார்த்திகை திருவிழா 10 நாட்கள் நடைபெறுகிறது.

- வைகாசி விசாகப் பெருவிழா கொண்டாடப்படுகிறது.

- ஆவணி மாதத்தில் 10 நாட்கள் நடைபெறும் பவித்ரோற்சவம் இங்கு நடைபெறுகிறது.

- புரட்டாசி மாதத்தில் 10 நாட்கள் நடைபெறும் நவராத்திரி பெருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

- மேலும் முருகனுக்குரிய விழாக்களான, ஐப்பசி மாதத்தில் கந்த சஷ்டி விழா, மார்கழியில் திருவாதிரைத் திருநாள், தை மாதத்தில் தைப்பூசப் பெருவிழா, பங்குனியில் வள்ளி திருக்கல்யாணம் ஆகிய விழாக்களும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.
சிறப்புக்கள்

- அருணகிரிநாதர் 38 திருப்புகழ்ப் பாடல்களை இந்த சுவாமிநாதனுக்கு பாமாலையாகச் சூட்டியுள்ளார்.

- சுவாமிமலையைச் சேர்ந்த கடுக்கண் தியாகராஜ தேசிகர் என்பவர் சுவாமிமலை நவரத்தின மாலை என்ற நூலை இயற்றியுள்ளார். "ஒருதரம் சரவணபவா..." என்று தொடங்கும் நவரத்தின மாலையின் மூன்றாவது பாடல் மிகவும் பிரபலமானது.

- சங்கீத மூர்த்தி ஸ்ரீமுத்துசுவாமி தீட்சிதர் இயற்றிய, "சுவாமிநாத பரிபாலயாதுமாம்" என்ற நாட்டை ராகக் கிருதியும் மிகவும் பிரபலமானது.

எப்படி செல்வது

தஞ்சாவூரில் இருந்து 32 கிலோமீட்டர் தொலைவிலும், கும்பகோணத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவிலும் இக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலுக்கு இந்த இரு ஊர்களிலிருந்தும் நகரப்பேருந்து வசதி உள்ளது.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகள்-மூன்றாவது படை வீடு பழனி


பழனி


முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுள் மூன்றாவது படை வீடாகத் திகழ்வது பழனி. இந்த தலத்தில் முருகப்பெருமான் ஆண்டி கோலத்தில் தண்டாயுதபாணியாக காட்சியளிக்கிறார். இவரை பழனியாண்டவர் என்றும் அழைக்கிறார்கள்.

பெயர்க்காரணம்

பழனி என்பது இங்குள்ள மலையின் பெயராகும். இந்தப் பழனி மலையையும், மலையடிவாரத்தில் உள்ள திருவாவினன்குடி தலத்தையும் உள்ளடக்கிய நகரமே பழனி என்று அழைக்கப்படுகிறது. இந்தத் தலம் பழனி என அழைக்கப்படுவதற்கு காரணம், சிவனும், பார்வதியும் தங்கள் மகன் முருகப் பெருமானை "ஞானப் பழம் நீ" என அழைத்ததால், "பழம் நீ" என வழங்கப்பெற்று, பின்னர் அதுவே "பழனி" ஆகிவிட்டது.

ஞானப்பழத்துக்காக பெற்றோரிடம் கோபித்துக் கொண்டு வந்த முருகப் பெருமான் பழனி மலையில்தான் தங்கினார். அங்கு, எந்த பற்றும் அற்ற ஆண்டிக் கோலத்தில் காணப்பட்டார். மகன் கோபித்துக் கொண்டு சென்றதால் மனம் வருந்திய சிவனும், பார்வதியும் இந்தப் பழனி மலைக்கு வந்தனர். முருகப் பெருமானை சமரசம் செய்தவர்கள், அவருக்கு "பழம் நீ" என்று சூட்டிய பெயரே நாளடைவில் மருவி "பழனி" என்று ஆகிவிட்டது என்று இக் கோவில் தல புராணம் கூறுகிறது.

மலையின் தோற்றம்

பொதிகை மலையில் வந்து தங்கிய அகத்திய முனிவர், தனது சீடனான இடும்பாசுரனை கயிலை சென்று, அங்கு முருகப் பெருமானுக்குரிய கந்த மலையில் காணப்படும் சிவசக்தி சொரூபமான சிவகிரி, சக்திகிரி எனப்படும் இரு சிகரங்களை தனது வழிபாட்டிற்காக கொண்டு வரும்படி பணித்தார்.

சிறந்த பக்திமானான இடும்பாசுரன், அகத்தியரின் கட்டளைப்படி, தனது மனைவியாகிய இடும்பியுடன் கயிலைக்குச் சென்று சிவகிரி, சக்திகிரி என்ற இரண்டு மலைக் குன்றுகளையும், ஒரு பெரிய பிரம்ம தண்டத்தின் இருபுறங்களிலும் காவடி போன்று கட்டித் தொங்கவிட்டு, தோள் மீது சுமந்து கொண்டு வந்தான்.

அப்போது முருகப் பெருமான் ஒரு திருவிளையாடல் புரிய எண்ணினார். மலைகளை சுமந்து வந்த இடும்பாசுரன் ஓரிடத்தில் களைப்பு ஏற்பட்டதால் மலைகளை இறக்கி வைத்துவிட்டு ஓய்வெடுத்தான். ஓய்வெடுத்த பின்னர் மீண்டும் மலைகளை தூக்க முயன்றான். ஆனால், முடியவில்லை.

இடும்பனுக்கு ஒன்றும் ஓடவில்லை. சிறிது யோசித்தவன், யதார்த்தமாக மேலே பார்த்தான். மலைக்குன்றின் உச்சியில் ஓரிடத்தில் கோவணம் மட்டுமே அணிந்த ஒரு சிறுவன் நின்று கொண்டிருந்தான். அந்த சிறுவன் இருப்பதால்தான் மலையை தூக்க முடியவில்லையோ என்று யோசித்தவன், அந்த சிறுவனைக் கீழே இறங்குமாறு கூறினான்.

ஆனால் அந்தச் சிறுவனோ, இடும்பாசுரன் தூக்கி வரும் மலைக்குன்று தனக்கே உரியது என்று உரிமை கொண்டாட... கோபம் கொண்டான் இடும்பன். சிறுவனைத் தாக்க முயன்று, பிறகு முடியாமல் வீழ்ந்தான்.

பின்னர், இடும்பன் மனைவியான இடும்பியும், அகத்திய முனிவரும் அங்கு விரைந்து வந்து வேண்டிக் கொள்ள, அவர்களுக்காக சிறுவனாக வந்த முருகப் பெருமான் மனமிறங்கி வீழ்ந்த இடும்பனை உயிர்ப்பித்தார்.

இடும்பனது குரு பக்தியை மெச்சிய முருகப் பெருமான் அன்று முதல் இடும்பனுக்கு, தனது காவல் தெய்வமாக விளங்கும் பேற்றை அளித்ததோடு, இடும்பனைப் போன்று சந்தனம், பால், புஷ்பம், பன்னீர் போன்ற பொருட்களை எல்லாம் காவடி எடுத்துத் தன் சன்னதிக்கு வருவோருக்கு அருள் பாலிப்பதாக அப்போது அருளினார்.

அன்றுமுதல் முருகன் கோவில்களில் காவடி செலுத்தும் வழக்கம் ஏற்பட்டது. இடும்பாசுரன் கொண்டு வந்த மலை அங்கேயே நிரந்தரமாக வைக்கப்பட்டது. அந்த மலைதான் இன்றைய பழனி மலை என்கிறார்கள். இதனால்தான், பழனி மலைமீது முருகனை வழிபடச் செல்பவர்கள் முதலில் மலைப்பாதையில் உள்ள இடும்பன் சன்னதியில் வணங்கிச் செல்கிறார்கள்.

திருவாவினன்குடி சிறப்பு

திருவாவினன்குடி கோவில் பழனிமலை அடிவாரத்தில் வையாபுரி ஏரிக்கரையில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலின் வடகிழக்கில் சிறிது தூரத்தில் சரவணப் பொய்கை காணப்படுகிறது. பழனி முருகனை தரிசனம் செய்ய வருபவர்கள் இந்தப் பொய்கையில் நீராடிச் செல்கிறார்கள்.

திருவாவினன்குடி கோவிலில் முருகப் பெருமான் மயில் மீது அமர்ந்து குழந்தை வேலாயுத சுவாமியாக காட்சி தருகின்றார். இங்குள்ள முருகப் பெருமானை தரிசிக்க மகாவிஷ்ணு, சிவபெருமான், இந்திரன் போன்றோர் வந்ததாக கூறுகிறார் நக்கீரர்.

குழந்தை வேலாயுத சுவாமியை வழிபட்ட பின்னர்தான் மலைக் கோவிலில் எழுந்தருளியுள்ள பழனியாண்டவரைத் தரிசிக்கச் செல்கிறார்கள் பக்தர்கள். இந்த திருவாவினன்குடி திருத்தலம் அமைந்துள்ள பகுதி முன்பு நெல்லி வனக் காடாக இருந்துள்ளது. இதற்கு ஆதாரம் இந்தக் கோவிலின் தலவிருட்சம்தான்.

ஆண்டிக் கோலத்தில் முருகன்

இங்கு முருகப் பெருமான் தனது ஆண்டிக் கோலத்தின் மூலமும் குன்றின் உச்சியில் கோவில் கொண்டிருப்பதன் மூலம் ஒரு உண்மையைப் போதிக்கிறார். "ஆனந்தமயமான ஆண்டவனை அடைய வேண்டுமானால், ஆன்மாக்கள் முதலில் பற்றை (ஆசையை) ஒழிக்க வேண்டும். பற்றை ஒழித்த நிலை நீடிக்க வேண்டுமானால் மனதை இறைவனிடம் செலுத்தினால்தான் முடியும்" என்பதுதான் அந்த தத்துவம்.

மலைப் பாதையின் முன்பக்கம், மலையின் அடிவாரத்தில் பாத விநாயகர் ஆலயமும், அதற்கு எதிரில் மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயமும் அமைந்துள்ளன. அருகிலுள்ள மயில் மண்டபத்தில் இருந்து 695 படிக்கட்டுகள் நம்மை மலைக் கோவிலுக்கு அழைத்துச் செல்கின்றன.

திருவிழாக்களைப் பொறுத்தவரையில் பழனியில் தைப்பூசம் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அதற்கு அடுத்தப்படியாக பங்குனி உத்திரம், கந்த சஷ்டி சூரசம்ஹாரம் ஆகிய விழாக்களும், மற்றும் முருகனுக்கு உரிய அனைத்து விசேஷ நாட்களும் இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.

சிறப்புக்கள்

- முருகப் பெருமானின் இந்தபடை வீட்டில் அவர் அபிஷேகப் பிரியராக, சிவனின் அம்சமாக விளங்குகிறார். மற்ற திருத்தலங்களைப் போல் அல்லாமல் இங்கு இரவு பூஜை முடியும் வரை சன்னதி சாற்றப்படுவதில்லை. அதிகாலை முதல் இரவுப் பூஜை முடியும்வரை பன்னீர், சந்தனம், பால், பஞ்சாமிர்தம், திருநீறு ஆகியவற்றால் அபிஷேகங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. அபிஷேகம் செய்யப்பட்ட அந்த பொருட்கள் எல்லா நோய்களையும் குணப்படுத்த சக்தி கொண்டவை என்று கருதப்படுகின்றன.

- பழனி என்று சொன்னதும், அந்த பழனியாண்டவருக்கு அடுத்தபடியாக நம் நினைவுக்கு வருவது சுவை மிகுந்த பிரசாதமான பஞ்சாமிர்தமாகும். பழனிக்கு வருபவர்கள் அதை தவறாமல் வாங்கிச் செல்கிறார்கள்.

- மூலஸ்தானத்தில் உள்ள பழனியாண்டவர் திருமேனி, அகத்தியரின் தலையாய சித்தரான போகரால், நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டதாகும். இதனால், மூலவர் மீது அபிஷேகம் செய்யப்பட்ட பொருட்களுக்கு எல்லா நோய்களையும் குணப்படுத்தும் சக்தி கிடைக்கிறது.

- ஆதியில் போகர் சித்தராலும், அவரது சீடராகிய புலிப்பாணி முனிவராலும் வழிபடப்பட்டு வந்த இந்த கோவிலில், சேர மன்னர்கள் முதன் முதலில் திருப்பணிகள் செய்துள்ளனர் என்று கூறுகிறார்கள்.

- சபரிமலை அய்யப்பனை தரிசித்து விட்டு வருபவர்களும், குருவாயூர் குருவாயூரப்பனை தரிசித்து விட்டு வருபவர்களும், பழனிக்குச் சென்று பழனி ஆண்டவரையும் வழிபட்டே தங்களது ஸ்தல தரிசனத்தைப் பூரணமாக நிறைவேற்றிக் கொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- தண்டாயுதபாணி சுவாமியை மொட்டை ஆண்டிக் கோலத்தில் படங்களில் சித்தரித்திருந்தாலும், இவர் சடாமுடியுடன் விளங்குகிறார் என்பதை அபிஷேகக் காலத்தில் நன்கு அறியலாம்.

சர்ச்சைக்குரிய விவாதம்

பழனி மலை உச்சியில் உள்ள தண்டாயுதபாணி சுவாமி கோவிலையே நாம் முருகப் பெருமானின் அறுபடை வீடுகளுள் மூன்றாவது வீடாக கருதுகிறோம். ஆனால், பழனி மலையடிவாரத்தில் உள்ள திருவாவினன்குடி குழந்தை வேலாயுத சுவாமி கோவிலே முருகனின் மூன்றாவது படை வீடு என்று கூறுவோரும் உண்டு.

எப்படி போவது?

தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களிலிருந்து பேருந்து மற்றும் இரயில் பயண வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மதுரை , கோயம்புத்தூர், திண்டுக்கல் ஆகிய நகரங்களிலிருந்து அதிக அளவில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மலையில் வழி நெடுக இளைப்பாறுவதற்கு ஏற்றவாறு ஏராளமான மண்டபங்களும், இடையிடையே பல ஆலயங்களும் இருக்கின்றன.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளின் சிறப்புகள்-திருச்செந்தூர்


திருச்செந்தூர் : முருகப்பெருமானின் அறுபடை வீடகளில் இரண்டாம் படை வீடாகக் போற்றப்படுவது திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில். மற்ற ஐந்து படை வீடுகளை விட இந்த ஆலயம் முற்றிலும் மாறுபட்டது. குன்றின் மீது அமர்ந்த தலங்கள் மற்றவை. ஆனால் செந்துரிலோ முருகன் கடற்கரையில் அலைகள் தாலாட்ட அருள் பாலிக்கின்றான்.


சீரலை வாயில் என்று அழைக்கப்பட்ட இந்த ஆலயம் மிகவும் பழமையான திருத்தலமாகும். புறநானூற்றில் இது வெண்டலைப்புனரி அலைக்குடம் செந்தில் நெடுவேள் துறை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சூரனை சம்ஹரித்த பின்பு முருகன் இத்தலத்தில் வந்து சிவபெருமானை வழிபட்டார் என்று கந்த புராணம் தெரிவிக்கிறது.

தல வரலாறு

வீரமஹேந்திரபூரி என்ற நகரத்தை சூரபத்மன் என்ற அரக்கனுக்கு பெருமாள் திவ்ய சக்தியை வரமாக கொடுத்து அருள் புரிந்தார். இந்த சக்தியின் உதவியால் சூரபத்மன் மூன்று லோகத்தையும் ஆண்டு வந்தான். இதனால் அவனுடைய ஆணவம் அதிகரித்து மக்களை துன்புறுத்தத் தொடங்கினான். இந்த அழிவுச்செயல்களை அழித்திட சுப்ரமணியர் தனது படை பரிவாரங்களுடன் சூரபத்மனுடன் போருக்குச் சென்றார்.

முதலில், சுப்ரமணியர் சூரபத்மனின் இளைய சகோதரனையும், மற்ற அரக்கர்களையும் அழித்தார். கடைசியில் சூரபத்மனுடன் போர் செய்தார். அவன் , பல வேடங்களில் தோன்றி சுப்ரமணியருக்கு விளையாட்டு காட்டினான். அந்த சூரனை வதம் செய்து இறைவன் ஜெயந்திநாதராக நின்ற இடமே திருச்செந்தூர் என்று புராணங்கள் தெரிவிக்கின்றது.

கோவில் அமைப்பு

இந்தக் கோவிலின் அமைப்பு ஓங்கார வடிவமுடையது. பிள்ளையார் சன்னதி, வள்ளிதேவசேனா சன்னதி, திருமால் சன்னதி, கம்பத்தடி இவைகளை எல்லாம் சேர்த்து ஒரு கோடு வரைந்தால் ஓம் என்கிற எழுத்து வரும் என்கிற பெரும் சிறப்புடையது இக்கோவில்.

இங்கு கோயிலுக்கு வரும் பக்தர்கள் முதலில் கடலில் நீராடிவிட்டு வருவது வழக்கமாகும். அதன் பிறகு பக்தர்கள் அருகிலுள்ள நாழிக்கிணற்றுத் தண்ணீரிலும் நீராடுகிறார்கள். கடலோரத்தில் இருக்கும் இந்தக் கிணற்றுத் தண்ணீர் மட்டும் உப்பு சுவையில்லாமல் குடிப்பதற்கேற்ற சுவையான நீராக இருப்பது இங்குள்ள அதிசயமாகும். கடலில் குளித்து விட்டு இந்த நாழிக்கிணற்றில்குளித்தால் தீராத வியாதியும் குணமடையும் என்று இங்கு வரும் பக்தர்கள் நம்புகிறார்கள். பக்தர்கள் இந்தக் கிணற்றை " ஸ்கந்த புஷ்கரணி" என்று அழைக்கிறார்கள்.

கோயிலின் பிரதான சன்னதியில் சுப்ரமணியர், பிரம்மச்சாரியாக நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். நான்கு புஜங்களுடன் நின்ற கோலத்தில் காட்சி கொடுக்கும் சுப்ரமணியரின் அழகை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. இடப்புறத்திலுள்ள ஒருகை இடுப்பிலும், மற்றொரு கையில் ஜபமாலையும், வலப்புறத்திலுள்ள ஒருகையில் வேலும், இன்னொரு கையில் புஷ்பமும் கொண்டு சுப்ரமணியர் காட்சி தருகிறார்.

இந்த சன்னதிக்கு அடுத்து இடது புறத்தில் சின்ன வாசலைக் கொண்ட துவாரபாலகா வீரமஹேந்திர சன்னதி இருக்கிறது. இந்தச் சன்னதியில் சற்று குனிந்து பார்த்தால் ஐந்து லிங்கங்களைக் காணலாம். இங்கு வரும் பக்தர்கள் தங்களுடைய பாவங்களை அழிக்கும் சக்தியைக் கொண்ட இந்த ஐந்து லிங்கங்களை வணங்கிச் செல்கிறார்கள்.

இந்த ஐந்து லிங்கங்களும் ஆகாயம், பூமி, தண்ணீர், காற்று, அக்னி ஆகிய ஐந்து சக்திகளைக் குறிக்கிறது. ஆறு முகங்கள், பன்னிரெண்டு கரங்களோடு இருபுறங்களிலும் ஸ்ரீவள்ளி, ஸ்ரீதேவயானையுடன் காட்சி தரும் ஷண்முகநாதரின் சன்னதியும் இத்திருத்தலத்தில் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

சண்முகநாதரின் பின்புறத்தில் இடம் பெற்றுள்ள ஜகன்நாதர் லிங்கம் சூரியனையும், இடப்புறத்திலுள்ள ஜயந்திநாதர் லிங்கம் சந்திரனையும், வலப்புறத்தில்இடம்பெற்றுள்ள லிங்கம் ஆத்மாவைக் குறிப்பது இந்தக் கோயிலின் சிறப்பு அம்சமாகும். இந்த எட்டு லிங்கங்களை தரிசனம் செய்தவர்கள் எட்டு திக்குகளின் அபூர்வ சக்திகளைக் கொண்ட சிவபெருமானை தரிசனம் செய்ததற்கு சமமாகக் கருதப்படுகிறது.

சிறப்புப் பூசைகள்

கந்த சஷ்டி விழா ஆறுநாட்கள் கொண்டாடப்படுகிறது. ஐப்பசி மாதத்தில் வரும் வளர்பிறை சஷ்டி அன்றுதான் சுப்ரமணியர் சூரபத்மனை அழித்த நாள். எனவே ஐப்பசி மாதம் வளர்பிறைச் சஷ்டியைக் கடைசி நாளாகக் கொண்டு விழா நடைபெறுகிறது. மேலும் ஆவணி, மற்றும் மாசி மாதங்களில் நடைபெறும் திருவிழாக்கள் பிரசித்தி பெற்றது.

சிறப்புக்கள்

இக்கோவிலில் பன்னீர் இலையில்தான் விபூதி வழங்கப்படுகிறது. இதற்கு, சூரபத்மனை வதம் செய்த பின்பு தம்மை சூழ்ந்து நின்ற பரிவாரங்களுக்கு சுப்ரமணிய சுவாமி தன் பன்னிரு கைகளாலேயே விபூதி பிரசாதம் வழங்கினார். இந்தப் பன்னிரு கைகளின் நிலைதான் பன்னீர் இலைகள். இந்த இலை விபூதிகளின் மகத்துவம் குறித்து ஆதிசங்கரரின் புஜங்க ஸ்தோத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

நவகிரஹ தலங்களில் திருச்செந்தூரும் ஒரு தலமாக கருதப்படுகிறது. இங்கு சூரபத்மனைக் கொன்றதால் தேவர்கள் பிரஸ்பதி (குரு பகவான்) சுப்ரமணியரின் திறமையை பாராட்டி மகிழ்ந்தார்கள். எனவே இந்தத் திருத்தலத்திற்கு வரும் பக்தர்கள் குரு பகவானின் அருளையும் கூடுதலாகப் பெற்றுச் செல்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

இந்தத் திருச்செந்தூர் சுப்ரமணியரிடம் பக்தி கொண்டவர்களில் ஆதிசங்கரர், நக்கீரர், கச்சியப்ப சிவாச்சாரியார், அருணகிரிநாதர், குமரகுருபரர், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள், பகழிக்கூத்தர், வென்றிமாலைக் கவிராயர், கந்தசாமிப் புலவர், பாம்பன் சுவாமிகள், சேரந்தையப் புலவர் போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.

வீரபாண்டிய கட்டபொம்மன் திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமியின் தீவிரமான பக்தர்களில் ஒருவர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

இக்கோவில் சுவரில் அமைக்கப்பட்டுள்ள ஒரு துவாரத்தில் காது வைத்துக் கேட்டால் கடல் அலைகளின் சப்தம் ஓம் என்பது போல் கேட்கிறது.

கோவிலின் அருகே கடற்பாறைகளைக் குடைந்து உருவாக்கப்பட்டுள்ள வள்ளி குகையில் வள்ளியை வழிபட நல்ல வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

இந்தப்பகுதியில் அதிகமாகக் காணப்படும் பனைமரங்களின் பதநீரில் தயாரிக்கப்படும் சுக்குக் கருப்பட்டி (சில்லுக் கருப்பட்டி) சிறப்புப் பொருளாக இங்குள்ள கடைகளில் கிடைக்கிறது.

பயண வசதி

தூத்துக்குடி மாவட்டத்திலிருக்கும் இந்த திருச்செந்தூர் சுப்ரமணியர் கோவிலுக்கு மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி , நாகர்கோவில் போன்ற ஊர்களிலிருந்து அதிகமான பேருந்து வசதிகளும், தென் மாவட்டத்திலிருக்கும் முக்கிய ஊர்களிலிருந்து குறிப்பிட்ட நேரங்களிலும் பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது. சென்னை மற்றும் திருநெல்வேலியிலிருந்து தருச்செந்தூருக்கு ரயில் வசதியும் உண்டு.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளின் சிறப்புகள்







சூரனை வதம் செய்வதற்காக சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து உதித்தவர் முருகப் பெருமான் என்கின்றன புராணங்கள்.


அக்னி ரூபமாய் தோன்றியவனை குளிர்விக்க சரவணப்பொய்கைக்கு கொண்டு சென்று விடவும் ஆறு குழந்தைகளாய் உருமாறினான் முருகன். அழகிய முதல்வனை கார்த்திகை பெண்கள் வளர்த்து கார்த்திக்கேயனாய் சிவன் பார்வதியிடம் ஒப்படைத்தனர்.

முருகப்பெருமான் தமிழ்கடவுள் என்று ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு உதாரணங்கள் பல உள்ளன. உயிரெழுத்துக்கள் பன்னிரெண்டும் தோள்களாய், மெய்யெழுத்து பதிணெட்டும் கண்களாய், இன எழுத்து ஆறும் முகங்களாய் ஆய்த எழுத்து ஒன்று இறைவனின் வேலாய் காணப்படுகிறது.

முருகப்பெருமானின் பல்வேறு பெயர்கள் :

ஆறுமுகன்,குகன்,குமரன், முருகன், குருபரன், காங்கேயன், கார்த்திக்கேயன், கந்தன், கடம்பன், சரவணபவன், ஸ்வாமி, சுரேசன், செவ்வேள், சேந்தன், சேயோன், விசாகன், வேலவன், வேலன்,முத்தையன், சோமஸ்கந்தன், சுப்ரமணியன், வள்ளற்பெருமான், ஆறுபடைவீடுடையோன், மயில்வாகனன், தமிழ்தெய்வம்.

அறுபடை வீடுகள் :

குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடமென்றாலும், அறுபடைவீடுகள் சிறப்பு வாய்ந்தவை.

திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகிய ஆறும் அறுபடைவீடுகளாக போற்றபடுவதாக தமிழ் புலவர் நக்கீரர் எழுதிய திருமுருகாற்றுப்படை நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம்

தமிழ்நாட்டிலுள்ள அறுபடை வீடுகளில் முதலாவது படை வீடாக முருகப்பெருமானின் பக்தர்கள் போற்றுவது திருப்பரங்குன்றம்தான். மதுரை மாநகருக்கு மிக அருகில் அமைந்திருக்கும் இந்தத் திருப்பரங்குன்றத்தில்தான் முருகப் பெருமான் தெய்வாணையை திருமணம் செய்து கொண்ட நிகழ்வு நடைபெற்றது என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.

பெயர்க் காரணம்

திரு + பரம் + குன்றம் எனப் பிரிக்கப்படுகிறது. பரம் என்றால் பரம் பொருளான சிவபெருமான் குன்றம் என்றால் குன்று (மலை). திரு என்பது அதன் சிறப்பை உணர்த்தும் அடைமொழியாகச் சேர்த்து திருப்பரங்குன்றம் என ஆயிற்று. இத்திருத்தலத்திற்கு இலக்கியங்களில் தண்பரங்குன்று, தென்பரங்குன்று, பரங்குன்று, பரங்கிரி, திருப்பரங்கிரி பரமசினம், சத்தியகிரி, கந்தமாதனம், கந்த மலை என வேறு சில பெயர்களும் உள்ளன.

கோயில் வரலாறு

முருகப்பெருமான் அவதாரத்தின் நோக்கமே சூரபத்மனையும், அவனது சேனைகளையும் அழித்து தேவர்களைக் காப்பதேயாகும். அதன்படி முருகப்பெருமான் சூரபத்மனை அழித்து, அவனை மயிலும் சேவலுமாக்கி, மயிலை வாகனமாகவும், சேவலைக் கொடியாகவும் ஏற்றுக் கொண்டருளினார்.

இதனால் மகிழ்ச்சியடைந்த தேவர்கள் துன்பத்திலிருந்து விடுபட்டார்கள். இதனால் தனது நன்றியைச் செலுத்தும் விதமாக இந்திரன் தன் மகளாகிய தெய்வயானையை திருமணம் செய்து கொடுக்க விரும்பினான். இதன்படி முருகன் - தெய்வானை திருமணம் திருப்பரங்குன்றத்தில் நடந்தது.

கோயில் அமைப்பு

இக்கோவில் கருவறை மற்ற கோவில்களைப் போன்று அல்லாமல் பெரிய அளவில் ஐந்து தெய்வத் திருவுருவங்களின் இருப்பிடமாக காணப்படுகிறது. மூலவரான முருகப்பெருமானுக்கு என தனியாக கருவறை இல்லை. பாறையில் இடது புறம் முருகப்பெருமான் தெய்வானையுடன் திருமணக் கோலத்தில் காட்சி அளிக்கிறார். பக்கத்தில் முருகப் பெருமானின் திருமணக் கோலத்தை அனைத்து தெய்வங்களும் காணுவது போல் இங்கு கருவறை அமைந்துள்ளது.

கருவறையின் இடது புறத்தில் கிழக்கு நோக்கியவாறு மலையைக் குடைந்து சத்தியகிரீசுவரர் என்னும் பெயர் கொண்டவராக சிவபெருமான் லிங்கத் திருமேனியுடன் அருள் பாலிக்கிறார்.

முருகப் பெருமான் காலடியில் யானை ஒன்று காணப்படுகிறது. இந்திரனுடைய மகளான தேவயானையை வளர்த்த ஐராவதம் அவளைப் பிரிய மனமில்லாமல், அப்படியே தன் வளர்ப்பு மகளான தேவயானைக்கும், முருகனுக்கும் தொண்டாற்ற அங்கேயே இருந்து விட்டதாக பெரியவர்கள் சொல்கின்றனர்.

முருகப் பெருமானை வழிபட்டுவிட்டு, இடது புறம் உள்ள வாயில் வழியாக கீழே இறங்கினால் கீழ்ப் பகுதியில் குகைக்கோவில் ஒன்று அமைந்துள்ளது. அங்கே அன்னபூரணி, உலக உயிர்களை உணவு அளித்துக் காக்கும் தெய்வமாக காட்சித் தருகிறாள்.

தற்போதுள்ள கோயிலுக்கு நேராக மலையில் மற்றொரு சிறிய கோயில் ஒன்று உள்ளது. இதுதான் மூலக் கோயில் என்றும் சொல்கிறார்கள்.

சரவணப் பொய்கை

திருப்பரங்குன்றம் மலையடிவாரத்தில் கிழக்குப் பக்கம் சரவணப் பொய்கை அமைந்துள்ளது. இந்த தீர்த்தம் முருகனின் கையிலுள்ள வேலினால் உண்டாக்கப்பட்டது என்றும் இந்த தீர்த்தத்தைக் கண்டாலும், அதில் நீராடினாலும் பாவங்கள் நீங்கிவிடும் என்பதுடன் அவர்களது வேண்டுதலும் உடனடியாக நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

நக்கீரர் கோயில்

நக்கீரர் சிவபூசையின் போது வழுவியதால் பூதம் ஒன்று அவரைக் குகையில் கொண்டு போய் அடைத்து விட்டது. இதனால் அவர் அங்கிருந்தபடி திருமுருகாற்றுப்படையைப் பாட, முருகன் தோன்றி மலையைப் பிளந்து அவரை விடுவித்து அருளினார். நக்கீரர் அமர்ந்து பூசை செய்த இடத்தைப் பஞ்சாட்சரப் பாறை உள்ளது. சரவணப் பொய்கைக்கரையில் பஞ்சாட்சரப் பாறை எனுமிடத்தில் நக்கீரருக்குக் கோயில் இருக்கிறது.

சிறப்புக்கள்

இக்கோவில் மூலவரை, பாறையினை குடைந்து உருவாக்கி உள்ளதால், அதாவது தனியாக சிலை வடித்து வைக்காத காரணத்தால், இந்த மூலவருக்கு அபிஷேகம் செய்வது கிடையாது. எண்ணெய், புனுகு மட்டுமே சாத்தப்படுகிறது. அதேநேரம், இந்த வேலவனின் கையில் உள்ள வேலுக்கு மட்டுமே அபிஷேகம் உள்ளிட்ட மற்ற எல்லாவற்றையும் செய்கிறார்கள்.

இக்கோவிலில் மற்ற கோவில்களைப் போன்று சுற்றுப் பிரகாரங்கள் கிடையாது. மூலவரை தரிசிக்க வேண்டும் என்றால் படிக்கட்டுகள் வழியாகவே மேலே செல்ல வேண்டும். அத்துடன், கருவறை, மூலவர், உற்சவர் ஆகியோரை வலம் வருவதும் இங்கு இயலாது.

நக்கீரர் முருகன் மீது திருமுருகாற்றுப்படையைப் பாடியது இத்தலத்தில்தான்.

முருகப் பெருமானின் அறுபடை வீட்டு கோயில்களில் முதல்படைக் கோயில் என்பதுடன் இக்கோயில் அளவிலும் பெரியது என்பது குறிப்பிடத்தக்கது.

எப்படி செல்வது?

தமிழ்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான மதுரையின் அருகில் இருக்கும் திருப்பரங்குன்றத்திற்கு மதுரை ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், ஆரப்பாளையம் பேருந்து நிலையம் மற்றும் பெரியார் பேருந்து நிலையங்களில் இருந்து திருப்பரங்குன்றத்திற்கு நேரடியாக நகரப் பேருந்து வசதி உள்ளது. இந்தப் பேருந்து நிலையங்களிலிலிருந்து திருமங்கலம், திருநகர் செல்லும் அனைத்து நகரப் பேருந்துகளும் திருப்பரங்குன்றம் வழியாகத்தான் செல்கின்றன.

மதுரையிலிருந்து தூத்துக்குடி, திருநெல்வேலி, செங்கோட்டை செல்லும் ரயில் பாதையில் திருப்பரங்குன்றத்தில் ரயில் நிலையம் ஒன்றும் உள்ளது.

அறுபடைவீடுகளின் சிறப்புகளை இனிவரும் கட்டுரைகளில் தொடர்ந்து காண்போம்

Monday, April 4, 2011

28 வருடங்களின் பின் இந்தியா வசமானது உலக கோப்பை!


உலக கோப்பை இறுதிப்போட்டியில் 6 விக்கெட்களால் இலங்கையை வென்ற இந்திய அணி

28 வருடங்களின் பின்னர் உலக கோப்பையை மீண்டும் தனது வசமாக்கியது.

டாஸ் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 275 ரன்கள் வெற்றி இலக்கை நிர்ணயிக்க இந்திய அணி 48.2 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழந்து 277 ரன்கள் அடித்து 6 விக்கெட்களால் இலங்கையை வென்றது.

இதன் மூலம் 3வது முயற்சியில் 2 வது தடவையாக உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் 28 வருடங்களின் பின்னர் பெற்று சாதனை படைத்தது இந்திய அணி.

இந்தியா மும்பையில் வைத்து உலக சாம்பியனானதும் ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் ஆரவாரம் செய்தனர். ஆட்ட நாயகன் கேப்டன் தோனியும் தொடர் நாயகனாக யுவராஜ் சிங்கும் தெரிவாகினர்.

ஆரம்பத்தில் இலங்கை அணியை இந்திய பந்து வீச்சாளர்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த போதும் இறுதி 5 ஓவர்களில் அதிரடியாக ஆடிய இலங்கை துடுப்பாட்ட வீரர்கள் ஸ்கோரை உயர்த்தவே இலங்கையின் பந்து வீச்சு பலத்தில் இந்திய அணி சேஸ் செய்வதற்கு பெரிய ஸ்கோர் எண்ணிக்கையான 275 என்ற ரன் நிர்ணயிக்கப்பட்டது.

அதற்கேற்றால் போல் 10 ஓவர்களுக்கள் சச்சின் சேவாக் ஆகியோரை இழந்த இந்திய அணி தடுமாறியது. எனினும் அதிரடியாக காம்பீர் 97 ரன்கள் எடுத்து ஓரளவு நம்பிக்கை ஏற்படுத்தினார். இந்நிலையில் 3 வது 4 வது விக்கெட்களையும் பறிகொடுத்த இந்தியா மீது மீண்டும் அழுத்தத்தை கொடுத்தனர் இலங்கை பந்து வீச்சாளர்கள். ஆனால் அதிரடியாக களமிறங்கிய கேப்டன் தோனி சிறப்பாக ஆடி விக்கெட் சரிவை நிலைநிறுத்தியதுடன் ஓட்ட எண்ணிக்கையையும் உயர்த்திக் கொண்டே வந்தார்.

எவ்வளவு முயன்றும் தோனியை ஆட்டமிளக்க செய்ய முடியவில்லை இலங்கை பந்து வீச்சாளர்களால் மோசமாக களத்தடுப்பையும் செய்துவந்தனர். இறுதியில் 11 பந்துகளில் 4 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற நிலையில் அபாரமான சிக்ஸ் ஒன்றை விளாசி வெற்றியை உறுதிப்படுத்தினார் கேப்டன் தோனி.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணியின் உலக கோப்பை கனவு நிறைவேறியதுடன் சச்சினும் தான் விளையாடும் காலத்தில் பெற்ற சாதனை இதுவென்ற பெருமையையும் அடைந்தார்.

Friday, April 1, 2011

இந்திய மக்கள் தொகை 121.2 கோடி!-கல்வியறிவு பெற்றோர் 74%

டெல்லி: இந்தியாவின் மக்கள் தொகை கடந்த 10 ஆண்டுகளில் 18.1 கோடி அதிகரித்துள்ளது.


ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் ஒருமுறை நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. 2001ம் ஆண்டுக்குப் பின் 2011ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

இதன் தோராயமான விவரங்களை இன்று மத்திய அரசு வெளியிட்டது. அதன்படி,

இப்போது நாட்டின் மக்கள் தொகை 121.2 கோடியாகும். இதில் ஆண்கள் 62.37 கோடி, பெண்கள் 58.65 கோடியாகும்.

2001ம் ஆண்டில் இந்திய மக்கள் தொகை வளர்ச்சி 21.15 சதவீதமாக இருந்தது. இப்போது இது 17.64 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது மாபெரும் சாதனையாகும். கடந்த 10 ஆண்டுகளில் மக்கள் தொகை வளர்ச்சி 3.90 சதவீகம் குறைந்துள்ளது. நாட்டின் மக்கள் தொகை வளர்ச்சி இதுவரை இவ்வளவு வேகமாகக் குறைவாக இருந்ததில்லை.

2001ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் கடந்த 10 ஆண்டுகளில் இந்திய மக்கள் தொகை 18.1 கோடி அதிகரித்துள்ளது.

இப்போதைய இந்திய மக்கள் தொகை அமெரிக்கா, இந்தோனேஷியா, பிரேசில், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளின் மொத்த மக்கள் தொகைகளைக் கூட்டினால் வரும் எண்ணிக்கையை விட அதிகமாகும்.

இந்தியாவிலேயே உத்தரப் பிரதேசத்தில் தான் மிக அதிகமான அளவில் மக்கள் வசிக்கின்றனர். அடுத்த நிலையில் மகாராஷ்டிரம் (11.23 கோடி), பிகார் (10.38 கோடி), மேற்கு வங்கம் (9.13 கோடி), ஆந்திரப் பிரதேசம் (8.46 கோடி) ஆகியவை உள்ளன.

உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிர மக்கள் தொகையைக் கூட்டினால் அது அமெரிக்காவின் மக்கள் தொகையை விட அதிகமாகும்.

நாட்டில் 1000 ஆண் குழந்தைகளுக்கு 914 பெண் குழந்தைகளே உள்ளனர். சுதந்திரத்துக்குப் பின்னர் இந்த விகிதாச்சாரம் இவ்வளவு மிக மிகக் குறைவான அளவைத் தொட்டது இதுவே முதல் முறை. இது பெரும் கவலை தரும் விஷயமாகும்.

கேரளத்தில் மட்டுமே 1,000 ஆண் குழந்தைகளுக்கு 1084 பெண் குழந்தைகள் என்ற நிலைமை உள்ளது. அதே போல புதுச்சேரியிலும் 1038 பெண் குழந்தைகள் என்ற நல்ல சூழல் நிலவுகிறது.

ஆனால் டைமன் டையு யூனியன் பிரதேசத்தில் 1000 ஆண் குழந்தைகளுக்கு வெறும் 618 பெண் குழந்தைகளே உள்ளனர். அதே நேரத்தல் தமிழகம், பஞ்சாப், ஹரியாணா, ஹிமாச்சலப் பிரதேசம், மிசோரம், அந்தமான், குஜராத் ஆகிய மாநிலங்களில் இந்த ஆண்-பெண் குழந்தைகள் விகிதாச்சாரம் நல்ல நிலையை எட்டி வருகிறது. மற்ற 27 மாநிலங்களிலும் பெண் குழந்தைகள் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

நாட்டிலேயே மிக அதிகமான மக்கள் தொகை நெருக்கம் டெல்லியின் வட கிழக்குக் பகுதியில் தான் பதிவாகியுள்ளது. இங்கு ஒரு சதுர கிலோ மீட்டருக்கு சராசரியாக 37,346 பேர் வசிக்கின்றனர்.

அருணாசலப் பிரதேசத்தின் திபாங் பள்ளத்தாக்கில் ஒரு சதுர கிலோ மீட்டருக்கு சராசரியாக ஒரே ஒருவர் தான் வசிக்கிறார். நாட்டிலேயே மிக மிகக் குறைவான மக்கள் நெருக்கம் உள்ள பகுதி இது தான். டெல்லிக்கு அடுத்தபடியாக சண்டீகரில் மக்கள் நெருக்கம் மிக அதிகமாக உள்ளது.

தாதர், நகர் ஹவேலி, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் தான் மக்கள் தொகை கடந்த 10 ஆண்டுகளில் மிக அதிக அளவாக 55 சதவீதம் அதிகரித்துள்ளது. நாகாலாந்தில் மிக மிகக் குறைவான அளவிலேயே மக்கள் தொகை பெருக்கம் ஏற்பட்டுள்ளது.

கல்வியறியைப் பொறுத்தவரை இந்தியாவில் கல்வியறிவு பெற்றோர் எண்ணிக்கை 74.04 சதவீதம் அதிகரித்துள்ளது. 2001ம் ஆண்டில் இது 64.83 சதவீதமாகவே இருந்தது. பத்தாண்டுகளில் கல்வியறிவு பெற்றோர் எண்ணிக்கை 9.21 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதில் ஆண்களிடையே கல்வியறிவு 82.14 சதவீதமாகவும், பெண்களிடையே கல்வியறிவு 65.46 சதவீதமாகவும் உள்ளது.

இன்றைய நிலையில் உலக மக்கள் தொகையில் 19.4 சதவீதம் பேர் சீனாவிலும் 17.5 சதவீதம் பேர் இந்தியாவிலும் வசிக்கின்றனர்.

1872ம் ஆண்டில் தான் நாட்டில் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பான சென்ஸஸ் நடத்தப்பட்டது. இப்போது நடத்தப்பட்டுள்ளது 15வது கணக்கெடுப்பாகும்.

9 facts still hidden from us-

1) 90% of people in Australia
don't drink milk.

...2) Snake's vision
is up to 5 km....

3) A man can touch
sun if his body is completely surrounded by mercury.

4) No twins have been born up till now
in Greenland.

5) Zebra doesn’t
have a liver.

6) All the above
details are false.

7) Thanks for
believing for a while.

8) Today is April 1st.

9)But a fool is a fool on any day.