Showing posts with label திருப்பாவை 20. Show all posts
Showing posts with label திருப்பாவை 20. Show all posts

Thursday, January 5, 2012

திருப்பாவை 20 – பகைவர்க்கும் அருளும் பெருமான்

Radha Krishna


திருப்பாவை 20 – பகைவர்க்கும் அருளும் பெருமான்

முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே, துயில்எழாய்
செப்பம் உடையாய் திறல் உடையாய் செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா துயில் எழாய்
செப்பன்ன மெனமுலை செவ்வாய் சிறுமருங்குல்
நப்பின்னை நங்காய் திருவே துயில் எழாய்
உககமும் தட்டொளியும் தந்துன் மணாளனை
இப்போதே எம்மைநீர் ஆட்டேல் ஓர் எம்பாவாய்

பொருள்: முப்பத்து முக்கோடி தேவர்களின் நடுக்கத்தையும் கலக்கத்தையும் தீர்ப்பவனே எழுந்திராய். நேர்மையானவனே, அன்பர்க்கும் அருளும் வல்லமை உன்னிடத்தில் மட்டும்தான் உள்ளது. பகைவர்களுக்கும் அன்பையும், தன்மையையும் தரும் விமலனே, தூயவனே எழுந்திராய்.

குவிந்த மார்பகங்களும், சிவந்த வாயும், குறுத்த இடையும், கொண்ட நப்பின்னைப் பிராட்டியே, எங்கள் செல்வமே, தூக்கம் கலைந்து எழுந்திராய். விசிறி, கண்ணாடி உள்ளிட்டவற்றை எங்களுக்குத் தந்து, அத்தோடு உன் மணாளனையும், எங்களையும் மார்கழி நீர் ஆட்ட வருவாய்.


திருவெம்பாவை 20 – பக்தர்களை காக்கும் பாதமலர்கள்

போற்றி அருளுகநின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுகநின் அந்தமாம் செந்தளிர்கள்
போற்றிஎல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்
போற்றிஎல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றிஎல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றிமால் நான்முகனும் காணாத புண்டரிகம்
போற்றியாம் உய்யஆட் கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றியா மார்கழிநீராடேல் ஓர் எம்பாவாய்

பொருள்: எம்மைக் காக்கும் பெருமானே, உன் காலடி மலர்களை அருள்வாயாக. உன் சிவந்த திருவடிகளை அருள்வாயாக. எல்லா உயிர்களும் தோன்றக் காரணமாக இருக்கும் உனது பொற்பாதங்கள் எங்களைக் காக்கட்டும். சகல உயிர்களும் ஒடுங்குவதற்குக் காரணமாக உள்ள உனது திருவடிகள் எங்களைக் காக்கட்டும்.

திருமாலும், நான்முகனாலும் கூட காண முடியாத உன் திருவடிகள் எங்களைக் காக்கட்டும். நாங்கள் எல்லாம் வாழ, இன்பம் அருளும் உன் பொன் திருவடிகள் எங்ளைக் காத்தருளட்டும்.