Showing posts with label உடல் நலம். Show all posts
Showing posts with label உடல் நலம். Show all posts

Friday, January 27, 2012

உணவு உண்ணும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரியுமா?

அளவிற்கு அதிகமாக உண்டால் நோய்வரும் ஆயுள் குறையும். எனவே வயிறு புடைக்க மூச்சு முட்ட உண்ணக் கூடாது. பசிக்கும் போது தான் சாப்பிட வேண்டும். மிளகு சேர்ப்பதால் உணவில் உள்ள விஷம் நீங்குகிறது. உடலில் உள்ள விஷமும் முறிகிறது. உணவில் சீரகம் சேர்ப்பதால் உடம்பை சீராக வைப்பது மட்டும் அல்லாமல் குளிர்ச்சியை தருகிறது. வெந்தயம் உஷ்ணத்தைக் குறைக்கிறது. வெந்தயத்தை இரவே தண்ணீரில் ஊற வைத்து காலை எழுந்தவுடன் தண்ணீருடன் பருகி வந்தால் உடம்பில் உள்ள உஷ்ணத்தை குறைக்கிறது. கடுகு, உடலில் உள்ள உஷ்ணத்தை ஒரே அளவாக வைக்கிறது. இஞ்சியை உணவில் சேர்ப்பதால் பித்தம், தலை சுற்றல், வாந்தி போன்ற கோளாறுகள் வருவதில்லை. உணவு உண்பதற்கு முன்பு கை, கால், வாய், போன்றவற்றை நீரால் கழுவ வேண்டும். காலில் ஈரம் உலர்வதற்கு முன்பே உணவு உண்ணத் தொடங்க வேண்டும். உணவு உண்ணும் போது பேசக் கூடாது, படிக்கக் கூடாது, இடதுகையை கீழே ஊண்டக் கூடாது. டி.வி பார்க்கக்கூடாது.

வீட்டில் கதவை திறந்து வைத்துக் கொண்டு வாசலுக்கு எதிரே அமர்ந்து உண்ணக் கூடாது. காலணி அணிந்து கொண்டு உண்ணக் கூடாது. சூரிய உதயத்திலும், மறையும் பொழுதும் உண்ணக் கூடாது. உணவு உண்ணும் போது உண்பதில் கவனமாக இருக்க வேண்டும். இருட்டிலோ, நிழல்படும் இடங்களிலோ உண்ணக் கூடாது. சாப்பிடும் பொழுது நடுவில் எழுந்து சென்று மீண்டும் வந்து சாப்பிடக் கூடாது. நின்று கொண்டு சாப்பிக் கூடாது. அதிக கோபத்துடன் உணவு உண்ணக் கூடாது. சாப்பிடும்போது தட்டினைக் கையில் எடுத்துக் கொண்டு உண்ணக் கூடாது. தட்டை மடியில் வைத்துக் கொண்டும், படுத்துக் கொண்டும் உண்ணக் கூடாது. இலையைத் துடைத்து வலித்துச் சாப்பிடுவதும், விரலில் ஒட்டிக் உள்ளதை சப்பிச் சாப்பிடுவதும் தரித்திரத்தை வளர்க்கும். ஒரே நேரத்தில் பல வித பழங்களைச் சாப்பிடக் கூடாது.

எள்ளில் தயாரித்த உணவை இரவில் உண்ணக் கூடாது. வெங்கலம், அலுமினியம் மற்றும் செம்பு பாத்திரங்களில் சமையல் செய்யக் கூடாது. புரச இலையில் சாப்பிட்டால் புத்தி வளரும். வெள்ளித் தட்டில் சாப்பிட்டால் நல்ல அழகு, அறிவு, மன ஒருமைப்பாடு, குடும்ப ஒற்றுமை கிடைக்கும். நாம் சாப்பிட்ட தட்டுக்களை வைத்து சாப்பாட்டையோ அல்லது மற்ற உணவு பதார்த்தங்களையோ மூடி வைக்கக் கூடாது. இரவில் இஞ்சி, கீரை, பாகற்காய், கஞ்சி, தயிர், நெல்லிக்காய் ஆகியவற்றை சேர்க்கக் கூடாது. உண்ணும் தட்டில் அல்லது இலையில் முதலில் காய்கறிகளோ, அப்பளமோ உப்போ பரிமாறாமல் சாதத்தை பரிமாறக் கூடாது. அதே போல முதலில் கீரையோ, வத்தலோ இலையில் வைக்கக் கூடாது. அசுப காரியத்தில் மட்டுமே பயன்படுத்துவர். உண்ணும் உணவில் இறைவன் வாசம் செய்வதால் மேற்கண்ட நடைமுறைகளை கடைப்பிடிப்பது சிறப்பைத்தரும்.

Thursday, January 19, 2012

உங்களுக்காக சில மணித்துளிகள் ...!

அதிகாலையில் எழுந்து பரபரப்பாக அலுவலகம் செல்லும் நகர வாழ்க்கையில் தினம் தினம் ஒரே மாதிரி செய்வது போராடித்து விடும். இதனால் உடலும், மனமும், சோம்பிவிடும். மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் புத்துணர்ச்சி பெற அன்றாடம் செய்யும் அலுவல்களை சற்றே மாற்றி செய்ய வேண்டும் என்கின்றனர் உளவியல் வல்லுநர்கள். இது நமது வாழ்க்கையையே மாற்றும் வல்லமை படைத்தது என்கின்றனர்.

ஜூஸ்க்கு வெல்கம், காபிக்கு பை

நகர்புறங்களில் மட்டுமல்லாது கிராமங்களிலும் அதிகாலையில் எழுந்து காபி குடிப்பது தினசரி பழக்கமாகிவிட்டது. தினம் தினம் காலையில் எழுந்து காபி குடிப்பது போரடிப்பதோடு உடல் நலத்திற்கும் உகந்ததல்ல எனவே காபிக்கு பதிலாக ஜூஸ் குடிப்பது நல்லது என்கின்றனர். இதனால் உற்சாகத்தோடு உடலும் நலமாகும் என்கின்றனர் உளவியலாளர்கள்.

எழுதுங்கள் நல்லது

கணினி மயமாகிவிட்ட இன்றைய வாழ்க்கையில் பேனா பிடித்து எழுதுவது என்பதே மறக்கடிக்கப்பட்டுவிட்டது. வீட்டிலும், அலுவகத்திலும் எழுதுவது என்பது மாறி, டைப் செய்வதே அவசியம் என்றாகிவிட்டது. எனவே ஒரு மாற்றத்திற்கு பேனா பிடித்து நோட்டு புத்தகங்களில் எழுதி பார்ப்பது நல்லது. ஒவியராக இருந்தால் அழகான ஓவியம் ஒன்றை வரைவது மனதிற்கு மாற்றத்தை தரும். தினசரி போரான வாழ்க்கையில் இருந்து ஒரு மாற்றத்தை உண்டாக்கும்.

பிறந்தநாளுக்கு ஒரு மரம்

ஒவ்வொரு பிறந்தநாளின் போது ஒரு மரம் நடுவதை திட்டமாக வைத்துக்கொள்ளவேண்டும். இது நமது வாழ்க்கைமுறையையில் நல்ல தொரு மாற்றத்தை ஏற்படுத்தும். இது சுற்றுச்சூழலுக்கு நன்மை தருவதோடு மனதிற்கும் மகிழ்ச்சியை அளிக்கும். மரம் வளர்ப்பது ஆத்ம திருப்தியை ஏற்படுத்தும்.

மனதிற்கு இதமான பயணம்

வாரம் ஒருமுறையாவது காரை விடுத்து பேருந்தில் பயணம் செய்யலாம். தனியாக சென்று பழகிய நமக்கு சக அலுவலக நண்பர்களுடன் சேர்ந்து பேருந்தில் பயணிப்பது மகிழ்ச்சியான மாற்றத்தை தரும். இதனால் பெட்ரோல் மிச்சப்படுவதோடு சுற்றுச்சுசூழலுக்கும் நன்மை செய்தது போலாகும்.

நமக்காக ஒருநாள்

தினம் 24 மணி நேரத்தையும், அலுவலகம், வாழ்க்கைத்துணை, கேர்ள்பிரண்ட், குடும்பம், செல்லப்பிராணிகள் என அனைவருக்காகவும் நேரத்தை செலவழிக்கிறோம். நமக்காக என்று சிலமணித் துளிகள் கூட செலவழிப்பது கிடையாது. எனவே நம்முடைய மனதை புத்துணர்ச்சியாக்க நமக்காக சில நிமிடங்களை தினசரி செலவழிக்க வேண்டும் என்கின்றனர் உளவியலாளர்கள்.

ஞாயிறை வீணாக்க வேண்டாம்

விடுமுறை நாளான ஞாயிறு என்பது வீணாக்க அல்ல. எந்த ஒரு இடையூறும் இன்றி அந்த நாளை கழிக்க வேண்டும். அப்பொழுதுதான் அடுத்த வாரத்திற்கான தினங்களை புத்துணர்ச்சியோடு கழிக்க முடியும்.

சிரிப்பு மருந்து

சிரிப்பு என்பது மிகச்சிறந்த மருந்து. தினமும் இறுக்கமாக இருப்பதை கலைக்கவும், மனஅழுத்தம், வலிகளை மறக்கவும், சிரிப்பு உதவுகிறது. மனது விட்டு சிரித்தால் கவலைகள் மறக்கப்படும். எனவேதான் வாய்விட்டு சிரிக்க உளவியல் வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர்.

புத்துணர்ச்சி தரும் இசை

இதமான இசையை கேட்பது மனதிற்கு புத்துணர்ச்சி தரும். அமைதியான முறையில் இசையை கேட்பது மன அழுத்தம் தரும் ஹார்மோன் சுரப்பை கட்டுப்படுத்தும், எனவேதான் அன்றாட அலுவல்களினால் ஏற்பட்ட சிக்கல்களை களைய இசையை கேட்க வலியுறுத்துகின்றனர் உளவியலாளர்கள்.

நடத்தல் அவசியம்

வாக்கிங் என்பது உடலுக்கு புத்துணர்ச்சி தரும். இது நோய் ஏற்படுவதில் இருந்து பாதுகாக்கும் என்பது மருத்துவர்களின் அறிவுரை. அதனால்தான் மருத்துவர்கள் நடப்பதின் அவசியம் குறித்து வலியுறுத்துகின்றனர். வீட்டிற்குள்ளேயே டிரட்மில் வைத்து வீட்டிற்குள் நடப்பதை விட திறந்த வெளியில் நடக்க வலியுறுத்துகின்றனர்.

தினம் ஒரு நற்செயல்

இன்று புதிதாய் பிறந்தோம் என்பதைப்போல தினம் ஏதாவது ஒரு நன்மை, யாருக்காவது ஒரு உதவி செய்யவேண்டும். அது மனதிற்கு புத்துணர்ச்சி தருவதோடு வாழும் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தை தரும்.