Wednesday, June 15, 2011

பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க

தமிழர்களின் திருமணச்சடங்கில், ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி, மூங்கில் போல் சுற்றம் முழுமையாய் சூழப் பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க என்று புதுமணத்தம்பதியரை வாழ்த்தும் வழக்கம் உள்ளது. இந்த பதினாறு பேறுகளும் மக்கட் பேறல்ல. பதினாறு செல்வங்களையே நம் முன்னோர்கள் தெரிவித்துள்ளனர்.


பதினாறு பேறுகள்

கலையாத கல்வி, கபடமற்ற நட்பு, குறையாத வயது, குன்றாத வளமை, போகாத இளமை, பரவசமான பக்தி, பிணியற்ற உடல், சலியாத மனம், அன்பான துணை, தவறாத சந்தானம், தாழாத கீர்த்தி, மாறாத வார்த்தை, தடையற்ற கொடை, தொலையாத நிதி, கோணாத செயல், துன்பமில்லா வாழ்வு.

இந்த பேறுகள் கிடைக்கப் பெற்றவர்கள் எவராயினும் பெருமை மிகு வாழ்க்கை வாழ்வது உறுதி.

அபிராமி பட்டர் கேட்கும் வரங்கள்

அபிராம பட்டர் இந்த பதினாறு பேறுகள் கிடைக்க அன்னை அபிராமியிடம் வேண்டிக்கொள்கிறார்.

அந்த பதிகம்:

கலையாத கல்வியும் குறையாத வயதுமோர்
கபடு வாராத நட்பும்
கன்றாத வளமையுங் குன்றாத இளமையும்

கழுபிணி யிலாத உடலும்
சலியாத மனமும் அன்பகலாத மனைவியும்
தவறாத சந்தானமும்
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்

தடைகள் வாராத கொடையும்
தொலையாத நிதியமும் கோணாத கோலுமொரு

துன்பமில் லாத வாழ்வும்
துய்யநின் பாதத்தில் அன்பும் உதவிப்பெரிய

தொண்டரொடு கூட்டு கண்டாய்
அலையாழி அறிதுயிலு மாயனது தங்கையே!

ஆதிகட வூரின் வாழ்வே!
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி!

அருள்வாமி! அபிராமியே!

இந்தப் பதிகத்தில் ஒரு மனிதனுக்கு வேண்டியது அனைத்தையும் வரமாக அன்னையிடம் கேட்கின்றார்.

தனிப்பட்ட முறையில் மட்டுமில்லாது அவன் எதிர்பார்க்கும் நன்மைகளை குடும்பத்திலிருந்தும், சமுதாயத்திலிருந்தும், அவனை ஆளும் அரசனிடமிருந்தும் எதிர் பார்க்கின்றார். கல்வி, நோயற்ற வாழ்வு முதலியன அவனை தனிப் பட்ட முறையில் ஏற்றமுறச் செய்பவை.

தவறாத சந்தானம், அன்பகலாத மனைவி, குடும்பத்திலிருந்து எதிர்பார்ப்பது. கபடு வாராத நட்பு, தடைகள் வராத கொடை முதலியன அவன் சமூகத்திலிருந்து கேட்பது.

தொலையாத நிதி, கோணாத கோல்

அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்ப்பது. பாடுபட்டு சேர்த்த நிதி கொடைக்கு உதவவேண்டுமென்றால் தடைகள் வராமலும், தொலையாமலும், திருடர் பயம் இல்லாமலும் இருக்க வேண்டும். அதற்கு அரசனின் செங்கோலாட்சி நன்கு நடைபெற வேண்டும்.

இவையெல்லாம் ஒட்டுமொத்தமாக் கிடைப்பதற்கு, தான் மட்டுமின்றி சமூகத்தில் உள்ள அனைவரும் தொண்டர்களாக, அடியார்களாக, நல்லவர்களாக இருக்க வேண்டும், அதன்படி அவர்களுடன் ஒன்று சேர்ந்து வாழ அருளியதற்கு அம்பிகையை போற்றுகிறார்.

No comments:

Post a Comment