Tuesday, June 7, 2011





பிறப்பு :கோயம்புத்தூர், தமிழ்நாடு
தொழில் :கவிஞர், பாடலாசிரியர், எழுத்தாளர், ஊடகவியலாளர்
எழுதிய காலம்:1999—இன்று

தாமரையின் Website: http://kavithayani.blogspot.com/

கவிதாயினி தாமரை ஒரு குறிப்பிடத்தக்க தமிழ் பெண் கவிஞர் மற்றும் திரைப்பட பாடலாசிரியர்.

கோவையில் பிறந்த தாமரை, எந்திரப் பொறியியல் பட்டதாரி. இவரின் தந்தை, கவிஞராகவும் நாடகாசிரியராகவும் விளங்கியுள்ளார். "ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்" என்ற கவிதைத் தொகுப்பை அளித்துள்ள தாமரை, சிறுகதைகளும் எழுதக் கூடியவர். "சந்திரக் கற்கள்", "என் நாட்குறிப்பின் நடுவிலிருந்து சில பக்கங்கள்" ஆகிய சிறுகதைத் தொகுப்புகளைப் படைத்துள்ளார். இலக்கியப் படைப்புகளுக்காகத் திருப்பூர் தமிழ்ச்சங்க விருது, சிற்பி விருது ஆகியவற்றையும் பல்வேறு பரிசுகளையும் பெற்றுள்ளார்.


இயக்குனர் சீமானின் "இனியவளே" திரைப்படத்திற்காக தென்றல் எந்தன் நடையைக் கேட்டது என்ற பாடல் மூலம் தமிழ்த் திரையுலகில் முதல் பெண் பாடலாசிரியராக தாமரை அறிமுகமானார். "வசீகரா, அழகிய அசுரா, தவமின்றிக் கிடைத்த வரமே, இஞ்சேருங்கோ... எனப் புகழ்மிக்க பாடல்கள் உள்பட நூற்றுக்கும் மேலான பாடல்களை இயற்றியுள்ளார். இலங்கை, சிங்கப்பூர் நாடுகளுக்குப் பயணித்துள்ளார். தனக்கென ஒரு கொள்கை, வழிமுறை, இலக்கு ஆகியவற்றைக் கொண்ட இவர், ஆங்கிலச் சொற்களைக் கலந்து பாடல்கள் எழுதுவதில்லை என உறுதி கொண்டுள்ளார். திரையிசைத்துறையில் இசையமைப்பாளர் ஹரிஸ் ஜெயராஜ், இயக்குநர் கௌதம் மேனன் ஆகியோர் படங்களில் தாமரை அதிக பாடல்களை எழுதியுள்ளார். இம்மூவர் கூட்டணி மிகச்சிறந்த வெற்றிப் பாடல்களை தந்துள்ளது.
ஈழநேசன் இணையதளத்திற்காக தனிப்பட்ட முறையில் தாமரை அளித்த பேட்டியைக் கீழே காணலாம்.

கேள்விகள்..
இரட்டை அர்த்தக்கலப்பற்ற.. மெல்லிய உணர்வுகளைக் காட்டக்கூடிய நல்ல தமிழ் வார்த்தைகளால் ஆன பாடல்களைத் தருவதற்கு நீங்கள் தனியாக முயற்சி எடுக்க வேண்டி இருக்கிறதா?

ஆமாம், நான் திரைப்படங்களில் பாடல் எழுத வந்து 12 வருடங்களாகின்றன. அப்பொழுது ஆங்கில வார்த்தைகளும் இரட்டை அர்த்தங்களுமான பாடல்கள் வெற்றிப்பெற்றுக் கொண்டிருந்த காலம் தான். வரும்போதே அப்படியான பாடல்களை எழுதமாட்டேன் என்று ஒரு முடிவெடுத்துத்தான் எழுத வந்தேன்... வாய்ப்புக் கிடைப்பதே அபூர்வமாக இருக்கும்; அல்லது வாய்ப்பே கிடைக்காது. நான் நிபந்தனை போடக்கூடிய நிலையும் இல்லை. ஆனாலும் நான் உறுதியாக இருந்தேன். நான் நினைப்பது போல எழுத வாய்ப்புக் கிடைத்தால் எழுதுவது, இல்லை என்றால் அந்த வாய்ப்பே வேண்டாமென்று இருந்தேன். அப்படி எத்தனையோ பாடல்களை நிராகரித்திருக்கிறேன். காலப்போக்கில் கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி நல்ல அழகான பாடல்களாக எழுதும்போது அதுவே ஒரு அடையாளமாகி வெற்றிகளைப் பெற்று தந்திருகிறது.

முன்பெல்லாம் வானொலியில் கவிஞர்களைப் பற்றியும் பாடல்களை எழுதியபோதான சுவாரசியங்களையும் தொகுத்துப் பேசி பாடல்களை அளிப்பார்கள்.. இப்போது தொலைக்காட்சி, வானொலி ஏன் இணையம் என்பது ஒரு வரலாற்றுக் குறிப்பாக மாறிவருகிற காலகட்டத்தில் இணையத்திலும் கூட கவிஞர்களைப் பற்றிய அதிக குறிப்புகள் இருப்பதில்லை. இது பற்றி உங்கள் கருத்து?

இது ஒரு வருத்தமான விசயம்..கவிஞர்களுக்கான மரியாதை தரப்படவேண்டும்.. .குறுந்தகடுகள் ஒலிநாடாக்கள் வருகிறது இல்லையா? பலசமயங்களில் குறுந்தகடு வெளிவந்தபின் தான் எங்களுக்குத் தெரியவரும். அவர்கள் கவிஞர்களின் பெயரைக் குறிப்பிடத்தவறி இருக்கலாம், அல்லது ஒருபடத்துல நிறைய கவிஞர்கள் எழுதறாங்க .. அப்போழுது குறுந்தகட்டில் ஒன்றாகச் சேர்த்துப் போட்டு இருப்பாங்க.. எந்தப் பாட்டு யாரு எழுதினார்கள் என்று தெரியாது. . தற்பொழுது வெளிவந்த ஒரு திரைப்படக் குறுந்தகட்டில் கவிஞர்கள் பெயரே இல்லை..என்ன செய்வது நாம ? கண்டிக்கப்படவேண்டிய விசயம்தான் இது.

தாய்த் தமிழ்ப் பள்ளிக்கான உங்கள் (ஆர்வம்) ஆதரவு ,விரிவாக்கம் பற்றிச் சொல்லுங்களேன்?

ஆதரவுன்னு சொல்வதை விட அந்த முறையை சென்னையில் , அம்பத்தூர்ல ஆரம்பித்தது என் கணவர் தியாகு. இதே போன்ற பள்ளிகள் இன்று தமிழ்நாட்டில் 20 , 25 பள்ளிகள் இருக்குன்னு சொல்றாங்க.. அவற்றுக்கு முன்னோட்டம் எங்கள் பள்ளி. தமிழ்க் குழந்தைகள், தமிழ்வழியில் , தாய்மொழியில் படிக்கணும்னு முயற்சி எடுத்து தொடர்ந்து செய்து வருகிறார்.

இப்ப 5 ஆம் வகுப்பிலிருந்து 6 ஆம் வகுப்பு வரை என்றாகி இருக்கிறது. பள்ளியின் முதல்மாணவி இன்று பொறியியற் கல்லூரியில் சேர்ந்து பட்டமே வாங்கிட்டாங்க.. .இடம் வசதியும் போதவில்லை..உயர்நிலைப் பள்ளியாக்க உதவி தேவைப்படுகிறது. உதவி கிடைத்தால் கல்லூரிவரை கூடச் செய்யலாம்..

விருதுகள் பெறுவது பற்றி உங்கள் மனநிலை என்னவாக இருக்கிறது?

விருதுகளை நான் முக்கியமாக நினைப்பதில்லை . கவிஞர்கள் விருதைத் தாண்டி இருக்கவேண்டும் என்றும் நினைக்கிறேன். ஆரம்பக்கட்டங்களில் விருதுகள் ஊக்கமளிக்கலாம்.. எழுத்துக்கு அங்கீகாரமாகவும் , பரவலாகப் பலருக்கும் சென்று சேர்வதற்கும் அவை பயன்படலாம். ஒருகட்டத்தில் விருதுகளைத் தாண்டி நாம வளர்ந்துரனும். தகுதியான விருதுகளைப் பெற்றுக்கொள்வதில் தவறு இல்லை. தகுதியற்ற விருதுகளை மறுக்கவும் செய்யவேண்டும் . தமிழகஅரசு விருது, மக்களோட வரிப் பணத்துல இருந்து கிடைப்பது அந்த ஒரு காரணத்துக்காக அதை வாங்கலாம்ன்னு எனக்குத் தோணும்.. ஆனா எந்த விருதுகளா இருந்தாலும் அரசியல் இல்லாமல் உண்மையான நடுவர்குழு அமைத்துத் தேர்ந்தெடுக்கப்படனும்.

மற்றபடி விருதே வேணாம்ன்னு ஒரு நிலை எனக்கு வரனும்ன்னு நினைக்கிறேன்.. மக்கள் நினைக்கனும், இவர்களுக்கு விருதுகொடுக்கலையே, கொடுத்திருக்கலாமேன்னு நினைக்கனும்..இவங்களுக்குக் குடுத்துட்டாங்களேன்னு நினைக்கக்கூடாது..(சிரிக்கிறார்)

தாமரையின் புகழை மேலும் ஒங்கச்செய்த பாடல்களில் இதுவும் ஒன்று!

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை,
நீருக்குள் மூழ்கிடும் தாமரை
சற்றென்று மாறுது வானிலை,
பெண்ணே உன் மேல் பிழை…

நில்லாமல் வீசிடும் பேரலை,
நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை
பொன்வண்ணம் சூடிய காரிகை,
பெண்ணே நீ காஞ்சனை…

ஒ ஷாந்தி ஷாந்தி ஒ ஷாந்தி…
என் உயிரை உயிரை நீ ஏந்தி…
ஏன் சென்றாய் சென்றாய் என்னை தாண்டி…
இனி நீ தான் எந்தன் அந்தாதி… (நெஞ்சுக்குள்)

ஏதோ ஒன்று என்னை ஈர்க்க
மூக்கின் நுனி மர்மம் சேர்க்க
கள்ளத்தனம் ஏதும் இல்லா
புன்னகையோ போகன்வில்லா

நீ நின்ற இடமென்றால்
விலை ஏறிப் போகாதோ
நீ செல்லும் வழியெல்லாம்
பனிக்கட்டி ஆகாதோ

என்னோடு வா வீடு வரைக்கும்
என் வீட்டைப் பார் என்னைப் பிடிக்கும்

இவள் யாரோ யாரோ தெரியாதே
இவள் பின்னால் நெஞ்சே போகாதே
இது பொய்யோ மெய்யோ தெரியாதே
இவள் பின்னால் நெஞ்சே போகாதே… போகாதே…

தூக்கங்களை தூக்கிச் சென்றாய்
ஏக்கங்களை தூவிச் சென்றாய்
உன்னைத் தாண்டிப் போகும்போது
வீசும் காற்றின் வீச்சு வேறு

நில்லென்று நீ சொன்னால்
என் காலம் நகராதே
நீ சூடும் பூவெல்லாம்
ஒரு போதும் உதிராதே

காதல் எனைக் கேட்கவில்லை
கேட்டால் அது காதல் இல்லை

என் ஜீவன் ஜீவன் நீதானே
எனத் தோன்றும் நேரம் இதுதானே
நீ இல்லை இல்லை என்றாலே
என் நெஞ்சம் நெஞ்சம் தாங்காதே...

No comments:

Post a Comment