Tuesday, March 8, 2011

இந்தியாவில் எலக்ட்ரிக் பைக்கை அறிமுகப்படுத்த யமஹா திட்டம்


டெல்லி: இந்தியாவில் எலக்ட்ரிக் பைக்கை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக யமஹா நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜப்பானை சேர்ந்த யமஹா நிறுவனம் மோட்டார்சைக்கி்ள் தயாரிப்பி்ல் புகழ்பெற்று விளங்குகிறது. இந்திய சந்தையிலும் யமஹா நீண்ட காலமாக முக்கிய இடத்தை வகித்து வருகிறது. காலமாற்றத்திற்கு தக்கவாறு இந்தியாவில் பல புதிய மாடல்களை யமஹா அறிமுகப்படுத்தி வருகிறது.

இந்தியாவில் பவர் ஸ்கூட்டர்களுக்கு அதிக மவுசு இருப்பதால், இந்தியாவுக்கென புதிய ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தப் போவதாக யமஹா ஏற்கனவே அறிவித்துள்ளது. இந்நிலையில், சந்தையில் குறிப்பிடத்தக்க இடத்தை பெறும் வகையில் எலக்ட்ரிக் பைக்குகளையும் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக யமஹா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து யமஹா மோட்டார் இந்தியா நிறுவனத்தின் விற்பனைப் பிரிவு இயக்குனர் கூறியதாவது:

"ஜப்பான் மற்றும் ஐரோப்பிய சந்தையில் எலக்ட்ரிக் பைக்குகள் விற்பனை செய்து வருகிறோம். இதைத்தொடர்ந்து, இந்தியாவில் எலக்ட்ரிக் பைக்குகளை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளோம். அதிகரித்து வரும் எரிபொருள் விலை உயர்வு மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு எலக்ட்ரிக் பைக் நல்ல தீர்வாக இருக்கும்.

மேலும், ஸ்கூட்டரை விரைவில் அறிமுகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஸ்கூட்டர் தயாரிப்பு பணிகள் ஜப்பான் தொழிற்சாலையில் மும்முரமாக நடந்து வருகின்றன. இந்த ஸ்கூட்டர் இந்திய சாலை மற்றும் தட்பவெப்ப நிலைகளுக்கு ஒத்துப்போகும் வகையில் இருக்கும்.

புதிய மாடல்கள் அறிமுகப்படுத்துவதன் மூலம், அடுத்த நான்காண்டுகளில் இந்திய சந்தையில் 10 சதவீத இடத்தை பிடிக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். இதற்கு தக்கவாறு முதலீட்டை அதிரிக்கவும் திட்டமிட்டுள்ளோம்," என்று கூறினார்.

No comments:

Post a Comment