Tuesday, February 8, 2011

இஸ்ரோ செயற்கைக்கோள் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ரூ. 2 லட்சம் கோடி ஊழல்!!


பெங்களூர்: திவாஸ் மல்டிமீடியா என்ற தனியார் நிறுவனத்துக்கு இந்திய செயற்கைக்கோள்களின் எஸ்-பேண்ட் அலைவரிசையை (S-band spectrum) ஒதுக்கீடு செய்ததில் நாட்டுக்கு ரூ. 2 லட்சம் கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டது தெரியவந்துள்ளது.

இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவின் வர்த்தகப் பிரிவான ஆண்ட்ரிக்ஸ் நிறுவனம் (Antrix Corporation) தான் இந்த அலைவரிசையை திவாஸ் நிறுவனத்துக்கு ஒதுக்கியது.

இதில் பெரும் முறைகேடும் ஊழலும் நடந்துள்ளதாக மத்திய அரசின் தலைமை தணிக்கைத் துறை அதிகாரி தெரிவித்துள்ளார். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நாட்டுக்கு ரூ. 1.7 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டதாக அறிக்கை தந்ததும் இதே துறை தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது அதைவிடப் பெரிய முறைகேடு இஸ்ரோவில் நடந்துள்ளதாக தணிக்கைத் துறை கூறியுள்ளது.

ஆண்ட்ரிக்ஸ் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் பெங்களூரில் உள்ளது.இந்த நிறுவனம் இஸ்ரோ அனுப்பும் செயற்கை கோள்களில் உள்ள அலைவரிசைகளை தனியார் நிறுவனங்களுக்கு விற்கிறது. ரேடியோ, டி.வி, செல்போன் சேவைகளில் இந்த அலைவரிசைகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த நிறுவனம் 2005ம் ஆண்டில் ஜி-சாட் ரக செயற்கைக் கோள்களின் எஸ்-பேண்ட் அலைவரிசையை ஒதுக்கீடு செய்ததி்ல் பெரும் முறைகேடு நடந்துள்ளது.

2005ம் ஆண்டு திவாஸ் மல்டி மீடியா நிறுவனம் ஆன்ட்ரிக்ஸ் நிறுவனத்திடம் இருந்து, 2 செயற்கைக் கோள்களில் உள்ள, 70 மெகாஹெட்ஸ் எஸ்-பேண்ட் அலைவரிசையை வாங்க ஒப்பந்தம் செய்தது. 20 ஆண்டுகளுக்கு இந்த அலைவரிசையை பயன்படுத்திக் கொள்ள ஒப்பந்தம் செய்யப்பட்டது.

ஆனால், இதற்கு மிகக் குறைவான கட்டணமே நிர்ணயிக்கப்பட்டது. அதாவது ரூ. 1,000 கோடி மட்டுமே இதற்கு கட்டணமாகப் பெறப்பட்டது. திவாஸ் நிறுவனம் மூலம் ஆன்ட்ரிக்ஸ் நிறுவனத்துக்கு ஆண்டுக்கு ரூ. 500 கோடி மட்டுமே வருமானம் கிடைத்து வருகிறது. இதன்மூலம் நாட்டுக்கு ரூ. 2 லட்சம் கோடி வரை நஷ்டம் ஏற்பட்டிருக்கலாம் என தணிக்கை அதிகாரி கூறி்யுள்ளார்.

திவாசுக்கு ஒதுக்கப்பட்ட இந்த ஸ்பெக்ட்ரம் அதிமுக்கியத்துவம் வாய்ந்தது. இந்த அலைவரிசையைத் தான் ஒரு காலத்தில் தூர்தர்சன் நிறுவனம் தனது தொலைக்காட்சி ஒளிபரப்புக்காக பயன்படுத்தி வந்தது.

இதே போன்ற அலைவரிசை கொண்ட 3ஜி மொபைல் ஸ்பெக்ட்ரம் ரூ. 67,719 கோடிக்கு விற்கப்பட்ட நிலையில், இதை வெறும் ரூ. 1,000 கோடிக்கு திவாஸ் நிறுவனத்துக்கு இஸ்ரோ ஒதுக்கியது ஏன் என்ற கேள்வி எழுகிறது.

இந்த திவாஸ் நிறுவனத்தின் தலைவராக இருப்பவர் டாக்டர் எம்.ஜி.சந்திரசேகர். இவர் இஸ்ரோவின் முன்னாள் அறிவியல் பிரிவு செயலாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிறுவனத்துக்கு ஸ்பெக்ட்ரம் வழங்க கடந்த ஆண்டு இஸ்ரோ எதிர்ப்புத் தெரிவித்தாலும் அதன் துணை நிறுவனமான ஆண்ட்ரிக்ஸ் இதை ஒதுக்கியுள்ளது.

இதற்காக திவாசும் இஸ்ரோவும் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, திவாசுக்காக இஸ்ரோ ஜிசாட்-6, ஜிசாட்-6ஏ ஆகிய இரு செயற்கைக் கோள்களை உருவாக்கி விண்ணில் செலுத்த வேண்டும். இதற்கு தலா ரூ. 2,000 கோடி செலவாகும். இந்த செயற்கைக் கோள்களில் உள்ள எஸ்-பேண்ட் அலைவரிசையில் 70 மெகாஹெர்ட்ஸ் அலைவரிசையை 20 ஆண்டுகளுக்கு திவாசுக்கு ஒதுக்க வேண்டும்.

முறையாக ஏலம் விடாமல் இந்த அலைவரிசையை திவாஸ் நிறுவனத்துக்கு இஸ்ரோ ஒதுக்கியது ஏன் என்று தணிக்கைத்துறை கேள்வி எழுப்பியுள்ளது.

மேலும் அதிமுக்கியத்துவம் வாய்ந்த இந்த 2,500 மெகா ஹெர்ட்ஸ் முதல் 2,690 மெகா ஹெர்ட்ஸ் வரையிலான ஸ்பெக்ட்ரம் இப்போது தான் முதன்முறையாக தனியார் நிறுவனத்துக்கு ஒதுக்கப்படடுள்ளது. இதுவரை இந்த அலைவரிசை அரசிடமே இருந்து வந்தது. இதை ஏன் ஏலமே விடாமல் மிக ரகசியமாக விற்றனர் என்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

பிரதரின் நேரடி மேற்பார்வையில் உள்ள விண்வெளி கமிஷனின் கட்டுப்பாட்டில் உள்ள இஸ்ரோ, இந்த ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்து பிரதமர் அலுவலகத்துக்கோ, கமிஷனுக்கோ அல்லது மத்திய அமைச்சரவைக்கோ தெரிவிக்கவே இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் மக்களின் பணத்தைக் கொண்டு தனியார் நிறுவனத்துக்கு 2 செயற்கைக்கோள்கள் உருவாக்கித் தர முடிவு செய்யப்பட்டது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதில் ஜிசாட்-6 செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டுவிட்டது. ஆனால், இன்னும் ஏவப்படவில்லை. இதை ஏவ ராக்கெட் தயாராக இல்லாததால், இதை ஐரோப்பாவின் ஏரியன் ஸ்பேஸ் நிறுவன ராக்கெட் மூலம் செலுத்த இஸ்ரோ தயாராகி வருகிறது.

இந்த செயற்கைக்கோள் ஏவப்பட்டவுடன் திவாஸ் நிறுவனம் இதிலுள்ள எஸ்-பேண்ட் டிரான்ஸ்பாண்டரின் லைவரிசையை பயன்படுத்தி நாடு முழுவதும் பிராண்ட்பேண்ட் சேவையைத் தொடங்க திட்டமிட்டிருந்தது.
Read: In English
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரத்தைப் போலவே இஸ்ரோ அலைவரிசை பிரச்சினையும் பெரிய அளவில் வெடிக்கும் என்று தெரிகிறது.

இந் நிலையில் தொலைத்தொடர்புத்துறை அதிகாரிகள் கூறுகையில், இதுவரை திவாஸ் நிறுவனத்துக்கு உண்மையான ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. அவர்களுக்கு சோதனை அளவுக்கான ஸ்பெக்ட்ரம் தான் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதுவும் விரைவில் திரும்பப் பெறப்படும் என்று கூறியுள்ளனர்.

English summary
The Comptroller and Auditor General (CAG) has started inquiries into a 2005 agreement between the Indian Space Research Organisation's commercial arm Antrix Corporation Ltd. and Devas Multimedia Private Ltd. The agreement relates to ISRO's launching of two satellites for Devas but automatically bestows on the latter a large hidden benefit: unbridled use of 70 MHz of the scarce S-band spectrum over a 20-year period. Preliminary estimates point to loss of more than Rs. 2,00,000 crore. According to the contract, Devas Multimedia is entitled to get a total of 70 Mhz of the S-band spectrum on lease for 20 years. The contract requires ISRO to build and launch two communications satellites — GSAT-6 and GSAT-6A — at a further cost of Rs 2,000 crore. Devas Multimedia will get to use 10 transponders on each of the satellites.

No comments:

Post a Comment