Wednesday, September 5, 2012

சென்னை தங்க சாலை (MINT STREET).பற்றிய வரலாற்று தகவல் !!!

Photo: சென்னை தங்க சாலை (MINT STREET).பற்றிய வரலாற்று தகவல் !!!

மெட்ராஸ் மாநகரின் மிக நீண்ட தெரு என்ற பெருமைக்கு உரியது தங்க சாலை (MINT STREET). அரசின் நாணயங்களை அச்சடிக்கும் தொழிற்சாலை இங்கு இருந்ததால், இந்த சாலைக்கு இப்பெயர் வந்தது. நாணய சாலை இங்கு எப்படி வந்தது என்பதை தெரிந்துகொள்ள நாம் மெட்ராஸ் நகரம் உருவான காலத்திற்கு செல்ல வேண்டும்.

ஆம், 1639ஆம் ஆண்டு விஜயநகர அரசரின் பிரதிநிதியான வெங்கடாத்ரி நாயக்கரிடம் இருந்து மெட்ராஸின் நிலப்பகுதியை வாங்கிய கிழக்கிந்திய கம்பெனியார், இங்கு நாணயங்களை அச்சிட்டு புழக்கத்தில் விடும் உரிமையையும் பெற்றனர். எனவே புனித ஜார்ஜ் கோட்டைக்குள்ளேயே ஒரு நாணய தொழிற்சாலை தொடங்கப்பட்டது. இங்கிருந்த சில செட்டியார்கள் ஒப்பந்த அடிப்படையில் இதனை இயக்கி வந்தனர். நாணயத்தை அச்சடிக்கத் தேவையான தங்கத்தை கிழக்கிந்திய கம்பெனி இறக்குமதி செய்து தரும். பின்னர் 1650களில் இந்த நாணயக் கூடத்தை கிழக்கிந்திய கம்பெனி தானே இயக்குவது என முடிவு செய்தது.

கிழக்கிந்திய கம்பெனியின் வருகையின்போது, விஜயநகர அரசின் நாணயங்கள்தான் இப்பகுதியில் புழக்கத்தில் இருந்தன. விஷ்ணுவின் வராக அவதாரத்தை தாங்கி வெளியான இந்த நாணயங்கள் விஜயநகர தங்க வராகன்கள் என அழைக்கப்பட்டன. இதனிடையே கிழக்கிந்திய கம்பெனியும் தங்க நாணயங்களை வெளியிட்டதால் அவை மெட்ராஸ் வராகன்கள் எனப் பெயர் பெற்றன. இவை விஜயநகர நாணயங்களை விட எடை குறைவாக இருக்கும், அதேபோல இதன் மதிப்பும் குறைவுதான்.

இதனைத் தொடர்ந்து ஜார்ஜ் கோட்டையில் இருந்த நாணயக் கூடம், தங்க மற்றும் வெள்ளிப் பணங்களை வெளியிடத் தொடங்கியது. பின்னர் செப்புக் காசு, துட்டு ஆகியவை அச்சிடப்பட்டன. 1692 முதல் முகலாயர்களின் வெள்ளி ரூபாய்களையும் அச்சடித்துக் கொள்ளும் உரிமை இந்த நாணயக் கூடத்திற்கு அளிக்கப்பட்டது. பொதுமக்களும் தங்களிடம் இருக்கும் தங்கத்தை கொடுத்து, மெட்ராஸ் அல்லது முகலாய ரூபாயாக மாற்றிக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. ரூபாயை அச்சடித்துக் கொடுப்பதற்கு ஒரு குறிப்பிட்ட தொகை வசூலிக்கப்பட்டது.

இந்நிலையில் 1695ஆம் ஆண்டு கோட்டைக்குள் ஒரு புதிய நாணயத் தொழிற்சாலை கட்டப்பட்டு சில ஆண்டுகள் கழித்து கோட்டைக்குள்ளேயே வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது. 1742ஆம் ஆண்டு கோட்டைக்கு வெளியே ஒரு நாணயத் தொழிற்சாலை கட்டப்பட்டது. இதற்காக தேர்வு செய்யப்பட்ட இடம் சிந்தாதிரிப்பேட்டை. 50 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த இரண்டாவது தொழிற்சாலை கோட்டைக்கே திரும்பிவிட்டது. இப்போது கோட்டைக்குள் இரண்டு நாணயத் தொழிற்சாலைகள் இயங்கத் தொடங்கின.
1815ஆம் ஆண்டு ரூபாய், அணா, பைசா என நாணயத் தொழிற்சாலையின் பணி பல மடங்கு அதிகரித்தது. எனவே கோட்டைக்கு வெளியே ஒரு பெரிய நாணய தொழிற்சாலை அமைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. ஜார்ஜ் டவுனின் வடக்கு பகுதியில் பயன்பாடற்று கிடந்த வெடிமருந்து தொழிற்சாலையை நாணயத் தொழிற்சாலையாக மாற்றலாம் என டாக்டர் பானிஸ்டர் என்பவர் யோசனை தெரிவித்தார். அப்படித்தான் தங்க சாலைக்கு வந்து சேர்ந்தது நாணயத் தொழிற்சாலை.
அதற்கு முன்பெல்லாம் இந்த சாலையை வண்ணார் சாலை என்றுதான் அழைப்பார்கள். கிழக்கிந்திய கம்பெனியின் துணி வியாபாரத்திற்காக நியமிக்கப்பட்ட சலவைத் தொழிலாளர்கள் இந்தப் பகுதியில்தான் தங்கி இருந்தனர். இந்நிலையில்தான் இங்கு அமைக்கப்பட்ட நாணயத் தொழிற்சாலை, 1842ஆம் ஆண்டு தனது பணியைத் தொடங்கியது. இதனிடையே பம்பாய் மற்றும் கல்கத்தா ஆகிய இடங்களில் இரண்டு பெரிய நாணயத் தொழிற்சாலைகளை கிழக்கிந்திய கம்பெனி தொடங்கியது. மெட்ராஸ் நாணயச் சாலை இவற்றிற்கு வழிகாட்டியாக இருந்தது.

குருவை மிஞ்சிய சிஷ்யர்களாக இந்த இரண்டு தொழிற்சாலைகளும் உருவெடுத்ததை அடுத்து, மெட்ராஸ் நாணயச் சாலைக்கு தேவை இல்லாமல் போய்விட்டது. எனவே 1869ஆம் ஆண்டு இது மூடப்பட்டு, இந்த இடத்தில் அரசு அச்சகம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த அச்சகம் இன்றும் செயல்பட்டு வருகிறது. பட்ஜெட் முதல் சலான்கள் வரை தமிழக அரசின் அனைத்து அச்சுத் தேவைகளையும் இதுதான் நிறைவு செய்து வருகிறது.

நாணயங்களோடு நெருங்கிய நட்பு பாராட்டிக் கொண்டிருந்த தங்க சாலை, பின்னர் அச்சகங்களின் முகவரியாக மாறியது. ஆறுமுக நாவலரின் நாவல வித்யானுபால அச்சகம் இந்த தெருவில் தான் இருந்தது. ஆனந்த விகடன் தனது ஆரம்ப நாட்களில் இங்கிருந்துதான் வெளியானது. 1880களில் தி ஹிந்து பத்திரிகை வாரத்திற்கு மூன்று முறை வந்துகொண்டிருந்தபோது, தங்கசாலையில்தான் அச்சடிக்கப்பட்டது.

இசைக்குகூட இந்த தெருவுடன் நிறைய தொடர்பு இருக்கிறது. டிக்கெட் வாங்கி கச்சேரி பார்க்கும் பழக்கத்திற்கு பிள்ளையார் சுழி போட்டதே இங்கிருந்த தொண்டைமண்டல சபாதான். திருவையாற்றில் ஆண்டுதோறும் தியாகராஜ ஆராதனையை சிறப்பாக நடத்த வேண்டும் என்ற முடிவு இந்த தெருவில்தான் எடுக்கப்பட்டது. இங்கிருக்கும் தொண்டை மண்டல துருவ வேளாளர் பள்ளியில் 1908ஆம் ஆண்டு கூடிய இசைக் கலைஞர்கள் தான் இந்த முடிவை எடுத்து செயல்படுத்தியவர்கள். கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஹரிகதா காலட்சேபத்தை முதல்முறையாக சரஸ்வதி பாய் என்ற ஒரு பெண் அரங்கேற்றியதும் இதே தங்கசாலையில்தான்.

இப்படி நிறைய சிறப்புகளைப் பெற்ற தங்க சாலையில் தமிழர்கள் மட்டுமின்றி தெலுங்கர்கள், மார்வாடிகள், குஜராத்திகள் என பல்வேறு தரப்பினரும் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். சென்னையில் வேறு எங்கும் காண முடியாத ஒரு அற்புதமான கலாச்சாரக் கலவையைக் கொண்டிருக்கும் இந்த நீண்ட தெரு, உண்மையில் 'தங்க' சாலைதான்.

* வடலூர் வள்ளலார் வாழ்ந்த வீராச்சாமி தெரு வீடும் இந்த பகுதியில்தான் இருக்கிறது.

* பேரறிஞர் அண்ணா பச்சையப்பன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் தனது தொத்தாவுடன் இந்த தெருவில்தான் வசித்து வந்தார்.

* கெயிட்டி திரையரங்கு மூலமாக, தென் இந்தியாவில் முதல் தியேட்டர் கட்டிய இந்தியர் என்ற பெருமையைப் பெற்ற ரகுபதி வெங்கய்யா, தங்கச்சாலையில் கட்டியதுதான் கிரவுன் தியேட்டர்.

உலகின் முதல் ஆம்புலன்ஸ் உருவான வரலாறு !!!

Photo: உலகின் முதல் ஆம்புலன்ஸ் உருவான வரலாறு !!!

நெப்போலியன் படைப்பிரிவில் பணியாற்றிய தலைமை டாக்டர் டொமினிக் ஜின்லாரேதான் ஆம்புலன்ஸ் என்ற வார்த்தையைக் கண்டுபிடித்தார். (பயன்படுத்தினார்) இது பிரெஞ்சு வார்த்தை, ‘ஹோபிடல் ஆம்புலன்ட்’ என்னும் வார்த்தைக்கு ‘நகரும் மருத்துவமனை’ என்பது பொருள். முதல் ஆம்புலன்ஸ் வண்டி 200 வருடங்களுக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டு விட்டது.

முதலில் குதிரை பூட்டிய வண்டியில் இருந்த ஆம்புலனஸ் இரயில்கள், கப்பல்கள், விமானங்கள் ஆம்புலன்ஸில் நோயாளியை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது, பலர் இறக்க நேரிட்டதால் ஆம்புலன்ஸிலேயே ஆக்சிஜன், ஸ்ட்ரெச்சர், மருந்துகள் முக்கியமானதை கொண்ட குட்டி மருத்துவமனை போல் ஆக்கப்பட்டது. மோட்டார் வாகனங்களில் அமைக்கப்பட்ட உலகின் முதல் ஆம்புலன்ஸ் நியுயார்க் நகரில் உள்ள பெவில்யூ மருத்துவமனையில் 1869 ஆம் ஆண்டில் போது மக்களுக்காக பயன்படுத்தப்பட்டது. உலகின் முதல் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் இரண்டாம் உலகப் போரில் செயல்பட்டன.

1970க்குப் பிறகு ஆம்புலன்ஸிற்காகவே பயிற்சி அளிக்கப்பட்ட டாக்டர்கள், நர்சுகள், உதவியாளர்கள் அமர்த்தப்பட்டனர். ஆபத்தில் உள்ள நோயாளிகளுக்கு உடனடி சிகிச்சை ஆம்புலன்ஸிலேயே அளிக்கப்பட்டது. உலகின் மிகப்பெரிய ஆம்புலன்ஸ் வேன் பிரிட்டனில் உள்ளது. 59அடி நீளமுள்ள 44 படுக்கை வசதி கொண்ட ஆம்புலன்ஸ் அமெரிக்காவில் உள்ளது.

நர்சுகள் அறிமுகமான விதம்

நியூடிரிலியா என்னும் லத்தீன் சொல்லிருந்து நர்ஸிங் என்னும் வார்த்தை பிறந்தது. மருந்து, உண்வு, முதலியவற்றை அன்புடன் ஊட்டி நம்மை உற்சாகப் படுத்துவர் என்று பொருள். கிரேக்க, ரோமானியர்கள் காயங்களுக்குக் கட்டுவதற்காக மட்டும் இத்தகைய பெண்கள் இருந்தனர். ரோமானியர்கள் ஆண் நர்சுகளை தங்கள் இராணுவத்தில் சேர்த்தனர். அவர்கள் அடிபட்ட வீரர்களுக்கு மருந்து வைத்து தானே கட்டிவிட்டனர்.

டாக்டருக்கு தண்டனை...!

பழங்காலத்தில் பாபிலோனியாவில் அறுவைச் சிகிச்சையின் போது ஒரு நோயாளி இறந்துவிட்டால் அறுவை சிகிச்சை செய்த டாக்டரின் வலது கையை துண்டித்துவிடுவார்கள். பாரசீகத்தில் அறுவை சிகிச்சையில் மும்முறை தொடர்ந்து தோல்வி கண்டால் அந்த மருத்துவர் அந்த நாட்டில் வைத்தியமே செய்யக்கூடாது என்ற சட்டம் இருந்தது.

முதல் மருத்துவ உடை...

அறுவை சிகிச்சை செய்யும்போது கையுறைகள், முக உறைகள், கெளன்கள் போன்றவற்றை அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர்கள் அணியும் முறை 1875 ஆம் ஆண்டு அறிமுகமானது.

ஆராய்ச்சிக்கு உதவியவர்...

ஜான் ஹன்டர் என்பவர் புகழ்பெற்ற ஆங்கிலேயே அறுவை சிகிச்சை நிபுணர். அந்த உடலியல் நிபுணர், ஈ முதல் திமிங்கலம் வரை சுமார் 14 ஆயிரம் பிராணிகளின் சடலங்களை சேமித்து வைத்தார். அவற்றுள் அபூர்வ உருவமுள்ள மனிதர்கள், மிருகங்களும் இறந்தன. மருத்துவத்துறை முன்னேற்றத்திற்கு அந்த 14,000 பிராணிகளின் உருவ உள்ளமைப்புகளும் மிகவும் பயன்பட்டன.

முதல் மருத்துவ பத்திரிகை...

அறிவுத் தாகமும், விஞ்ஞான ஆராய்ச்சிகளும் வளர்ந்ததால் இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் நாட்டு விஞ்ஞானிகள் தங்கள் கண்டுபிடிப்புகளின் விவரங்களை பரிமாறிக்கொள்ள விஞ்ஞான பத்திரிகைகளையும், மருத்துவ இதழ்களையும் தொடங்கினர். பிரெஞ்சு, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மருத்துவ இதழ்கள் வெளிவர ஆரம்பித்தன. முதல் மருத்துவப் பத்திரிகை ‘மெடிசினா குரிஸோ’ என்பதாகும். இது ஆங்கிலப் பத்திரிகை. இதன் பிறகே பல மொழிகளிலும் மருத்துவப் பத்திரிகை வெளிவர ஆரம்பித்தது.

சுத்தமான தண்ணீரை அருந்தச் சொன்ன முதல் மனிதர்கள்...

நோய் ஏற்படாமல் இருக்க வேண்டுமானால் சுத்தமான குடிநீரை மட்டுமே பயன்படுத்த வேண்டுமென பாபிலோனியர்கள் சொன்னார்கள். இவர்கள் நெருப்பைப் போல் நீரையும் இறைவன் என போற்றி வணங்கினார்கள். இவர்கள் தண்ணீர்க் கடவுளுக்கு EA என்னும் பெயர் சூட்டி வணங்கினார்கள். அத்துடன், மருத்துவக் கடவுளாகப் பாம்பையும் வணங்கினார்கள்.

கடல் மட்டி அதிக சுவை உடைய உயிரினம் !!

Photo: கடல் மட்டி அதிக சுவை உடைய உயிரினம் !!

கடலில் வாழும் சிப்பி வகைகளில் அதிக அழகும், அதிக சுவையும் உடைய உயிரினமே கடல் மட்டி. இவற்றின் தோற்றம், பயன்பாடுகள் ஆகியன குறித்து ராமநாதபுரத்தை சேர்ந்த கடல் உயிரியலாளர் ர.செந்தில்குமார் கூறியது..

""கடலில் வெப்ப மண்டலப் பகுதிகளில் பரவி வாழும் கடல் மட்டிகளுக்குப் பெர்னாவிடிஸ் என்பது விலங்கியல் பெயர். மைடிலிடே என்ற சிப்பி வகையைச் சேர்ந்த இவை பல நாடுகளுக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள கடல் பகுதிகளிலும் அறிமுகமாகி வளர்ந்து வருகின்றன. இவற்றின் ஓடுகளுக்கு உள்ளே உள்ள சதை மிகவும் சுவையானதாக இருப்பதால் பலரும் இதை விரும்பிச் சாப்பிடுகின்றனர். ஆஸ்திரேலியா, ஜப்பான், வட, தென் அமெரிக்கா ஆகிய நாடுகளில் இவற்றின் சுவை மிகுந்த சதைக்காக இதனை விரும்பி வளர்த்தும் வருகின்றார்கள். கடற்கரைகளிலும் கடலுக்குள் பண்ணைகள் அமைத்தும் இவை வளர்க்கப்படுகின்றன. சில நாடுகளில் இதனை கூடைகள், கயிறுகள் போன்றவற்றில் ஒட்டியும் இவற்றை வளர்க்கிறார்கள்.

மேலும், கீழும் ஒரே மாதிரியான ஓடுகளைப் பெற்றிருந்தாலும் 80 முதல் 100 மி.மீ நீளமும் சில மட்டும் 165 மி.மீ. நீளம் வரையும் வளரக்கூடியது. கீழ்ப்பக்கம் கூர்மையாகவும் மேற்புறம் பழுப்பு நிறத்திலும் காணப்படுகின்றன. இளமையான கடல் மட்டிகள் வெளிறிய பச்சை நிறத்தில் இருந்தாலும் வயதாக ஆக கரும்பச்சையாக மாறி விடுகின்றன. இவற்றின் உடலில் உள்ள பைசஸ் என்னும் நூலிழை கடினமான இடத்திலும் உறுதியாக ஒட்டிக் கொள்ளும் சக்தி படைத்தது.

வேகமான கடல் அலையிலும்கூட இவை ஒட்டிய இடத்திலிருந்து கீழே விழுந்துவிடாத வகையில் உறுதியாக பற்றிக் கொள்ளும்.

கப்பல்களின் அடிப்புறத்தில் இவை ஒட்டிக் கொண்டு பல நாடுகளுக்கும் பயணம் செய்து அங்கெல்லாம் தன் இனத்தை பெருக்கி விடுகின்றன. இப்படியாக உலகம் முழுவதும் உள்ள கடல் பகுதிகளில் இவை பரவி விட்டன. தொழிற்சாலைகள்,மின் நிலையங்கள் ஆகியனவற்றில் உள்ள பெரிய குழாய்களில் இவை ஒட்டிக் கொண்டு அதிகமாக வளர்ந்து அவற்றை அடைத்தும் விடுகின்றன. கப்பல்களிலும் கடலினுள் போடப்படும் மிதவைகளிலும் ஒட்டிக் கொண்டு வளர்ந்து அவற்றையை அரித்து சேதமடையச் செய்தும் விடுகின்றன.

இவை ஒரு குறிப்பிட்ட வெப்பமும், உப்புத்தன்மையும் உள்ள கடல் பகுதிகளில் தான் உயிர் வாழக் கூடியவை. இவையிரண்டும் தேவைக்குத் தவிர கூடினாலோ அல்லது குறைந்தாலோ இறந்து போய் விடுகின்றன. பெண் இனம் முட்டைகளை மழைக்காலங்களின் இறுதியிலும்,வசந்த காலங்களிலும் இடுகின்றன. முட்டையிலிருந்து வெளிவரும் லார்வாக்கள் சுமார் 12 நாட்கள் வரை நீந்தித் திரிந்து விட்டு வளர்சிதை மாற்றமடைந்து ஒரே இடத்தில் ஒட்டி வாழத் தொடங்கிவிடும்.

மட்டிகளின் சதை சுவையாக இருப்பதால் ஆக்டோபஸ், சிங்கி இறால்கள், நட்சத்திர மீன்கள் மற்றும் பெரிய மீன்கள் போன்றவற்றுக்கு இரையாகியும்விடுகின்றன.

கடல் நீரை வடிகட்டி அதிலுள்ள தாவர மிதவை நுண்ணுயிரிகளை உண்டு வாழும் இந்த உயிரினம் ஒரு சதுர மீட்டரில் மட்டும் சுமார் 35,000 வரை எண்ணிக்கையில் அதிகமாக பெருகி கூட்டம், கூட்டமாக கடலுக்குள் ஒரு தனி சாம்ராஜ்யத்தையே நடத்துகின்றன'' என்றார்.

- சி.வ.சு.ஜெகஜோதி

வரலாற்றில் நாம் நினைத்து பார்க்க பட வேண்டிய மனிதர் கக்கன் அவர்கள் !!!

Photo: வரலாற்றில் நாம் நினைத்து பார்க்க பட வேண்டிய மனிதர் கக்கன் அவர்கள்   !!!

பொதுவாழ்வில் தூய்மையானவர்களைக் காண்பது அரிதாக உள்ள இன்றைய நிலையில், தூய்மைக்கு எடுத்துக்காட்டாக விளங்கிய அப்பழுக்கற்ற தலைவர்கள் பலர் நம் முந்தைய தலைமுறையில் இருந்திருக்கிறார்கள் என்பதை இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டியது இன்றியமையாததாகும்.

காந்தியடிகள் வழிநடந்த தொண்டர்களாக இருந்த பலர், நாடு விடுதலை பெற்றபின் ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்து மக்கள் பணி செய்த போதும் தங்கள் செயல்களில் நேர்மை தவறாமல் நடந்தனர். அத்தகைய தூயவர்களில் ஒருவராக, நாடு போற்றும் நல்லவராக விளங்கிய ஒருவர்தான் எளிமையின் இலக்கணம், தூய்மையின் இருப்பிடம் என்று போற்றப்பட்ட திரு. கக்கன் அவர்களாவார்.

எதிர்க்கட்சியினராலும் போற்றப்பட்டவரான திரு. கக்கன் 1957&இல் பெருந்தலைவர் காமராஜர் தலைமையிலான அமைச்சரவையில் வேளாண்மை, கால்நடை, தாழ்த்தப் பட்டோர் நலம், பொதுப்பணி ஆகிய துறைகளின் அமைச்சராகப் பணியாற்றினார்
.
1962&இல் மீண்டும் அமைந்த காமராஜர் அமைச்சரவையில் வேளாண்மை, உணவு, சிறுபாசனம், மதுவிலக்கு, கால்நடை, தாழ்த்தப்பட்டோர் நலன் ஆகிய துறைகளின் அமைச்சராகப் பணியாற்றினார்.
காமராஜர் பதவி விலகியபின் திரு. பக்தவத்சலம் தலைமையிலான அமைச்சரவையில் உள்துறை, காவல்துறை, நீதித்துறை, சிறைத்துறை, தொழிலாளர் நலத்துறை, அறநிலையத்துறை, தாழ்த்தப்பட்டோர் நலத்துறை எனப் பெரும் பொறுப்புகள் கொண்ட பல துறைகளின் அமைச்சராகத் திறம்படப் பணியாற்றினார்.
பத்தாண்டுக் காலம் மாநில அமைச்சராகவும், ஒருமுறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் விளங்கியவராயினும் கறைபடியாத கைகளுக்குச் சொந்தக் காரராகவே செயல்பட்டதால், இறுதிவரை எளிய வாழ்க்கையே வாழ்ந்த சிறப்புக்குரியவர் கக்கன் அவர்கள்.

இவரது வாழ்க்கை பொது வாழ்வில் ஈடுபட்டுள்ளோருக்கும், ஈடுபட விரும்புவோருக்கும் ஒரு வழிகாட்டி என்றால் அது மிகையாகாது.
மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் உள்ள தும்பைப்பட்டி என்ற சிற்றூரில் 18.6.1909&இல் பிறந்தவர் திரு. கக்கன். இவரது தந்தையார் பூசாரிக்கக்கன். தாயார் குப்பி அம்மையார்.

இளமையிலேயே தன் தாயை இழந்தார் கக்கன். தனக்குச் சிற்றன்னையாக வந்த பிரம்பியம்மாள் என்னும் அம்மையாரால் வளர்க்கப் பட்டார்.

தீண்டாமைக் கொடுமை தலைவிரித்தாடிய காலம் அது. தாழ்த்தப்பட்டவர்கள் என்று ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த துயரமான சூழ்நிலையில் ஏழ்மை, தீண்டாமைக் கொடுமை ஆகிய இடர்ப்பாடுகளுக்கிடையே எதிர்நீச்சல் போட்டுத் தொடக்கக் கல்வியைப் பயின்றார்.
உயர்நிலைப் பள்ளிப் படிப்பை மதுரை திருமங்கலத்திலும், மேலூரிலும், பசுமலையிலும் படித்தார்.  பள்ளி இறுதித் தேர்வில் (எஸ்.எஸ்.எல்.சி) ஆங்கிலப் பாடத்தில் வெறும் ஒரு மதிப்பெண் குறைவாகப் பெற்றதால் தோல்வியடைந்தார். மீண்டும் படித்தும் அவரால் வெற்றிபெற முடியவில்லை.
கல்வி பயின்ற காலத்திலேயே நாட்டு விடுதலைப் போராட்ட வீரர்களின் தொடர்பு ஏற்பட்டிருந்ததால், அவருக்குக் கல்வியில் தொடர்ந்து ஈடுபாடு ஏற்படவில்லை.
  .
1934-இல் மதுரைக்கு வந்த காந்தியடிகள் கக்கனின் பொதுத் தொண்டுகளை அறிந்தார். அந்தச் சந்திப்பின்போது, காந்தியடிகளுடன் சுற்றுப்பயணம் செய்த கக்கன் காந்தியக் கொள்கைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டார்.

இதன் காரணமாக, 1939&ஆம் ஆண்டு வைத்தியநாத ஐயர் மூலம் காங்கிரசில் இணைந்து பொதுத்தொண்டுகளுடன் விடுதலைப் போராட்டத்திலும் ஈடுபட்டார்.

அவர் போகுமிடமெல்லாம் வந்தே மாதரம் முழக்கமிட்டதற்காக 1940&இல் ஆங்கில அரசால் 15 நாள்கள் சிறைத்தண்டனைக்கு உட்படுத்தப்பட்டார். அந்த 1940-இல்தான் அவர் மேலூர் வட்டக் காங்கிரஸ் தலைவராகவும் பொறுப்பேற்றார்.
காந்தியடிகள் அறிவித்த தனிநபர் சத்தியாக்கிரகப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல காந்தியடிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட தென்னிந்தியாவைச் சேர்ந்த தலைவர் கக்கன்தான் என்பது பெருமைக்குரிய ஒன்று. இந்தப் போராட்டத்திற்காகவும் ஒரு மாதச் சிறைத்தண்டனை பெற்றார்.

1942&இல் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கைது செய்யப்பட்ட கக்கன், வெள்ளையக் காவல் துறையினரால் கொடூரமாகத் தாக்கப் பட்டார். செய்யாத குற்றங்களையெல்லாம் அவர்மீது சுமத்தி விசாரணை ஏதுமின்றிக் கடுங்காவல் தண்டனை வழங்கியது ஆங்கில அரசு. ஒன்றரை ஆண்டுக் கடுங்காவல் தண்டனையை ஆந்திர மாநிலத்திலுள்ள அலிப்பூர் சிறையில் அனுபவித்தார்.

அவரது அரசியல் வாழ்வில் பல பதவிகள் அவரைத் தேடி வந்தன. முதலில் 1941-&42-இல் நடைபெற்ற மாவட்டக் கழக உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். 1946-இல் அரசியலமைப்புச் சட்டசபை உறுப்பினராகப் பொறுப்பேற்றார்.
நாட்டு விடுதலைக்குப்பின் 1952-இல் நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். 1957 மற்றும் 1962 ஆகிய தேர்தல்களில் தமிழக சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அமைச்சர் பொறுப்பேற்றுப் பல நற்பணிகளைச் செய்தார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராகவும் பணியாற்றினார். இவர் தலைவராக இருந்த போதுதான் 1955-இல் காங்கிரஸ் கட்சியின் அனைத்திந்திய மாநாட்டைச் சென்னையில் சிறப்புற நடத்தினார்.
1963&இல் காமராஜர் கட்சிப்பணிக்காக முதல்வர் பதவியிலிருந்து விலகியபோது, அடுத்த முதல்வராகக் கக்கனையே கொண்டுவர விரும்பினார் என்று கூறப்படுகிறது. ஆனால், திரு. பக்தவத்சலம் அவர்கள் முதல்வரானார். அவரது அமைச்சரவையில் நிதி, உள்துறை, கல்வி, சிறை, அறநிலையத்துறை, தொழிலாளர் நலம், தாழ்த்தப்பட்டோர் நலம் முதலிய பல பெரும் பொறுப்புகள் கொண்ட அமைச்சராகத் திறம்படப் பணியாற்றினார் கக்கன்.
1967-இல் தி.மு.க. ஆட்சியமைத்த போது கக்கன் அவர்கள் சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியைத் தழுவினார். அத்துடன் அவரது அரசுப் பணிகள் முடிவுக்கு வந்தன. ஆனால், கட்சிப் பணியில் தொடர்ந்து ஈடுபட்டார்.

பத்தாண்டுக்காலம் அமைச்சர் பதவியில் இருந்தபோதும், அவருக்கென்று சொந்த வீடோ, வேறு சொத்துக்களோ வைத்திருக்கவில்லை. விடுதலைப் போரில் ஈடுபட்டமைக்காகத் தமக்குக் கிடைத்த சிறு நிலத்தையும் வினோபாவின் பூதான இயக்கத்திற்குக் கொடுத்து விட்டார்.

அமைச்சர் பதவியிலிருந்து விலகிய பின் சொந்தமாக ஊர்தி ஏதுமில்லாததால், ஒரு முன்னாள் அமைச்சர் பேருந்துக்காகக் கால் கடுக்கக் காத்திருந்ததையும், வாடகை வீடு தேடி அலைந்ததையும், இறுதிக்காலத்தில் நோய்வாய்ப்பட்டிருந்த போது மதுரை அரசு மருத்துவமனையில் படுக்கை வசதிகூட இல்லாமல் தரையில் படுத்துக் கிடந்ததையும், அதையறிந்த அன்றைய முதல்வர் திரு. எம்.ஜி.ஆர். அவர்கள் நல்ல சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தததையும் தமிழக மக்களில் பெரும்பாலோர் அறிவர். அதனால்தான் கக்கன் என்றாலே அவர் தூய்மையின் அடையாளமாக மதிக்கப் படுகிறார்.

அவர் அமைச்சர் பொறுப்பிலிருந்த போதும் அவரது துணைவியார் ஆசிரியைப் பணி செய்தே குடும்பத்தைக் கவனித்தார். அவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்திலும் அவரது தந்தையார், தான் செய்து வந்த வருவாய்த்துறை ஊர்ப்புற உதவியாளர் பணியைச் செய்தே வாழ்க்கை நடத்தினார்.

இவர் அமைச்சராக இருந்தபோது பல்வேறு பொதுநலத் திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார். அவற்றில் குறிப்பிடத் தக்கவை மதுரை வேளாண்மைக் கல்லூரியைக் கொண்டு வந்தது, வைகை, பாலாறு உள்ளிட்ட பல அணைக்கட்டுத் திட்டங்களை நிறைவேற்றியது,

விவசாயிகளுக்குத் தேவைக்கேற்ப உரம் கிடைக்க வழிவகை செய்தது, கூட்டுறவு விற்பனைக் கூடங்களைத் தொடங்கி வைத்தது, தாழ்த்தப் பட்டோர் நலத்துறையின் கீழ் ஆயிரக்கணக்கான பள்ளிகளைத் திறந்தது, தாழ்த்தப் பட்டோருக்கென வீட்டு வசதி வாரியம் அமைத்துச் செயல்படுத்தியது, காவல்துறையில் காவலர்கள் எண்ணிக்கையை அதிகப் படுத்தியது, லஞ்ச ஒழிப்புத் துறையைத் தொடங்கியது என ஏராளமான பணிகளைக் கூறலாம்.
அவர் நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் பணியாற்றிய போது அவை நடவடிக்கைகளில் தவறாது பங்கேற்பது இவருடைய சிறந்த பழக்கமாக இருந்தது. நேரம் தாழ்த்தாமல் அலுவலகத்திற்கு வருவதும், மக்கள் குறைகளைக் கேட்டு ஆவன செய்வதும் இவருடைய பண்பு நலன்களில் குறிப்பிடத்தக்கவை.
தீண்டாமை ஒழிப்பில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த கக்கன் அதற்காகப் பல்வேறு செயல்களைச் செய்துள்ளார். அவரது ஊரான தும்பைப் பட்டியில் தாழ்த்தப்பட்ட மக்கள் நீரெடுக்க ஒரு குளமும், பிற வகுப்பார் நீரெடுக்க ஒரு குளமும் இருந்தன. தாழ்த்தப்பட்ட வகுப்பார் நீரெடுக்கும் குளம் மக்கள் அசுத்தங்களைக் கழுவவும், ஆடு மாடுகளைக் குளிப்பாட்டவும் பயன்படுத்தப்பட்ட குளமாகும்.
இந்த இழிநிலையை எதிர்த்து ஒத்த கருத்துடைய பிற வகுப்பாருடன் இணைந்து போராடி, அனைவரும் ஒரே குளத்தில் குடி நீரெடுக்கும் உரிமையைப் பெற்றுத் தந்தார்.

தாழ்த்தப்பட்ட மக்களின் கோவில் நுழைவுப் போராட்டத்தை வைத்தியநாத ஐயருடன் சேர்ந்து மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் 1939&இல் நடத்தித் தாழ்த்தப்பட்ட மக்கள் கோவிலில் நுழைந்து வழிபாடு செய்யும் உரிமையைப் பெற்றுத்தந்தார்.
கக்கன் இந்துவாக இருந்தாலும் கிறித்தவ சமயத்தைச் சேர்ந்த சொர்ணம் பார்வதி என்ற அம்மையாரைத் திருமணம் செய்து கொண்டார். அதுவும் 1932&இலேயே சீர்திருத்தத் திருமணம் செய்தார். இந்தத் திருமணத்திற்குத் தலைமை தாங்கியவர் பொதுவுடைமை இயக்கத்தைச் சேர்ந்த தோழர் பா. ஜீவானந்தம் என்பது குறிப்பிடத் தக்கது.
இறுதிவரை ஏழ்மையிலேயே வாடிய கக்கன் நோய்வாய்ப்பட்ட போது, உயர் ரக சிகிச்சைகள் எடுத்துக்கொள்ள வசதியின்றி சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார். நினைவிழந்த நிலையில் இரு மாதங்கள் இருந்த அவர், 1981 டிசம்பர் 23-ஆம் நாள் உலக வாழ்வை நீத்தார்.

அமைச்சர் பதவியிலிருந்த காலத்தில் தனது பதவியை அவர் ஒருமுறைகூட முறைகேடாகப் பயன்படுத்தியதில்லை. அரசு தனக்கு ஒதுக்கியிருந்த வீட்டில் தமது நெருங்கிய உறவினர்களைக்கூடத் தங்குவதற்கு அனுமதித்ததில்லை. அதே போல, அரசு தனக்குத் தந்த ஊர்தியில் தன் குடும்பத்தார் பயணம் செய்யவும் அனுமதித்ததில்லை.

இப்படிப்பட்டவர் வாழ்ந்த நாட்டில் நாம் வாழ்கிறோம் என்பது நமக்குப் பெருமை. எதிர்காலத் தமிழகத்தை ஏற்றமுறச் செய்யவுள்ள இளைய தலைமுறைக்குக் கக்கனின் தூய பொதுவாழ்வு ஓர் எடுத்துக்காட்டு.

Tuesday, September 4, 2012

தீரன் சின்னமலை !!

Photo: தீரன் சின்னமலை !!

ஈரோடு மாவட்டத்தில் காங்கயம் வட்டம் மேலப்பாளையம் என்னும் ஊரில் 17.4.1756 அன்று பிறந்தவர் சின்னமலை. பெற்றோர் இரத்தினச் சர்க்கரை பெரியாத்தா தம்பதியினர். அவர்களின் ஐந்து ஆண்மக்களில் இரண்டாவது குழந்தை சின்னமலை.

இளம்பருவத்தில் தம்பாக்கவுண்டர் என்று அழைக்கப்பட்டார். பள்ளிப் பருவத்தில் தீர்த்தகிரிச் சர்க்கரை எனப் பெயர் பெற்றார். பழைய கோட்டைப் பட்டக்காரர் மரபு. அவர்கள் பரம்பரையில் அனைவருக்கும் ‘சர்க்கரை’ என்பது பொதுப்பெயர். ‘புவிக்கும் செவிக்கும் புலவோர்கள் சொல்லும் கவிக்கும்’ இனிமை செய்ததால் அப்பெயர் பெற்றார்களாம்.

இளவயதிலேயே தம்பியர் பெரியதம்பி, கிலேதார் ஆகியவர்களோடு மல்யுத்தம், தடிவரிசை, வில்பயிற்சி, வாள்பயிற்சி, சிலம்பாட்டம் போன்ற போர்ப் பயிற்சியை சிவந்தாரையர் என்பார் வழிவந்தவரிடம் சின்னமலை கற்றுத் தேர்ந்தார்.

மதுரை நாயக்கர் வசமிருந்த கொங்கு நாட்டுப் பகுதியை மைசூரார் கைப்பற்றியதால் கொங்கு நாட்டு வரிப்பணம் சங்ககிரி வழியாக மைசூர் அரசுக்குச் சென்றது.

ஒருநாள் வேட்டைக்குச் சென்ற தீர்த்தகிரி மைசூர் செல்லும் வரிப்பணத்தைப் பிடுங்கி ஏழைகட்கு வினியோகித்தார். வரி தண்டல்காரரிடம் ‘சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை பறித்ததாகச் சொல்’ என்று சொல்லி அனுப்பினார். அதுமுதல் தீர்த்தகிரிக்குச் ‘சின்னமலை’ என்ற பெயர் வழங்கலாயிற்று.

கிழக்கிந்தியக் கம்பெனியினர் கொஞ்சம் கொஞ்சமாக நாட்டில் ஆதிக்கம் செலுத்துவதைத் தடுக்க வேண்டும் என்று சின்னமலை விரும்பினார். மலையாளத்திலும் சேலம் பகுதியிலும் காலூன்றிய கம்பெனிப்படை ஒன்றுசேராவண்ணம் இடையில் பெரும் தடையாகச் சின்னமலை விளங்கினார்.

7.12.1782 இல் ஐதர்அலி மறைவிற்குப் பின் திப்புசுல்தான் மைசூர் சீரங்கப் பட்டணத்தில் ஆட்சிக்கு வந்து ‘வெள்ளைத்தொப்பியரை’ எதிர்த்துக் கடும் போர் செய்து வந்தார். சின்னமலை ஆயிரக்கணக்கான கொங்கு இளைஞர்களைத் திரட்டி மைசூர் சென்றார். சின்னமலையின் ‘கொங்குப்படை’ சித்தேசுவரம், மழவல்லி, சீரங்கப்பட்டணம் போர்களில் திப்புவின் வெற்றிக்குப் பெரிதும் உதவியது. குறிப்பாக 40,000 வீரர்களோடு மழவல்லியில் போரிட்ட வெள்ளையர் படைகட்குக் கொங்குப்படை பெரும் சேதத்தை உண்டாக்கியது.

நெப்போலியனிடம் படை உதவி கேட்டுத் திப்பு சுல்தான் அனுப்பிய தூதுக்குழுவில் சின்னமலையின் மெய்க்காப்பாளன் கருப்பசேர்வையும் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நான்காம் மைசூர்ப் போரில் 4.5.1799-இல் கன்னட நாட்டின் போர்வாள் ஆன திப்புசுல்தான் போர்க்களத்தில் வீரமரணம் எய்திய பின் சின்னமலை கொங்குநாடு வந்து ஓடாநிலை என்னும் ஊரில் கோட்டை கட்டிப் போருக்குத் தயார் ஆனார்.

ஏற்கெனவே 18.4.1792-இல் தான் வாங்கிய சிவன்மலை - பட்டாலிக் காட்டில் வீரர்கட்குப் பயிற்சி அளித்தார். ஆயுதங்கள் தயாரித்தார். ஓடாநிலையில் பிரெஞ்சுக்காரர் துணையோடு பீரங்கிகளும் தயாரிக்கப்பட்டன.

தீர்த்தகிரிச் சர்க்கரை உத்தமக் காமிண்ட மன்றாடியார் என்று சின்னமலை தன்னைப் பாளையக்காரராக அறிவித்துக் கொண்டு கொங்குநாட்டுப் பாளையக்காரர்களை ஓரணியில் சேர்க்க முற்பட்டார்.

போராளிகளின் கூட்டமைப்பை ஏற்படுத்தி விருப்பாட்சி கோபால நாயக்கர், திப்புவிடம் பணியாற்றிய மராட்டிய மாவீரர் தூண்டாஜிவாக், பரமத்தி அப்பாச்சி ஆகியவர்களோடு இணைந்து 3.6.1800 அன்று கோவைக் கோட்டையைத் தகர்த்து அங்கிருந்து லெப்டினன்ட் கர்னல் கே. மக்ஸிஸ்டரின் கம்பெனியின் 5 ஆம் பட்டாளத்தை அழிக்க கோவைப்புரட்சிக்குச் சின்னமலை திட்டமிட்டார். முந்தியநாளே போராளிகள் அணியில் சிலர் அறிவிப்பின்றிச் சண்டையைத் தொடங்கியதால் கோவைப்புரட்சி தோல்வியுற்றது.

இடையறாத போர் வாழ்விலும் பல கோயில்களுக்குத் திருப்பணிகள் செய்தார். புலவர் பெருமக்களை ஆதரித்தார். சின்னமலை கோயில் கொடை பற்றிய கல்வெட்டுகள் சிவன்மலை, பட்டாலி, கவுண்டம்பாளையம் ஆகிய ஊர்களில் உள்ளன.

சமூக ஒற்றுமை சின்னமலையிடம் மிகச் சிறப்பாக விளங்கியது. அவர் கூட்டமைப்பில் வேளாளர், நாயக்கர், வேட்டுவர் பாளையக்காரர்கள் பலர் இருந்தனர். ஓமலூர் சேமலைப் படையாச்சி, கருப்பசேர்வை, ஃபத்தே முகம்மது உசேன், முட்டுக்கட்டைப் பெருமாத்தேவன் சென்னிமலை நாடார் ஆகியோர் பலர் சின்னமலை படையில் முக்கியம் பெற்றிருந்தனர்.

சில பாளையக்காரர்களும், சிற்றரசர்களும் ஆங்கில ஆட்சி வேரூன்றுவதை எதிர்த்ததற்குத் தங்கள் ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ளவே என்ற கருத்தும் சிலரிடம் உண்டு. ஆனால் சின்னமலை தன் ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள அல்ல, உண்மையான நாட்டுப்பற்றுடன் போரிட்டார்.

எப்படியாவது சின்னமலையை ஒழிக்க வேண்டும் என்று ஆங்கிலேயர் முடிவு செய்தனர். 1801-இல் ஈரோடு காவிரிக்கரையிலும், 1802-இல் ஓடாநிலையிலும், 1804-இல் அறச்சலூரிலும் நடைபெற்ற போர்களில் சின்னமலையே பெரும் வெற்றி பெற்றார். ஓடாநிலைப் போரில் ஆங்கிலத் தளபதி கர்னல் மேக்ஸ்வெல் தலையைக் கொய்து மொட்டையடித்துச் செம்புள்ளி கரும்புள்ளி குத்தி ஊர்வலம் விட்டது குறிப்பிடத்தக்கது. சின்னமலையின் ஓடாநிலைக் கோட்டையைத் தகர்க்கக் கள்ளிக்கோட்டையிலிருந்து மிகப்பெரும் அளவில் பீரங்கிப்படை வந்தது. சுபேதார் வேலப்பன் அறிவுரைப்படி சின்னமலை ஓடாநிலையிலிருந்து தப்பிப் பழனிமலைத் தொடரில் உள்ள கருமலை சென்றார்.

போரில் சின்னமலையை வெல்ல முடியாது என்று கண்ட ஆங்கிலேயர் சூழ்ச்சி மூலம் (??!), சின்னமலையைக் கைது செய்து சங்ககிரிக் கோட்டைக்குக் கொண்டு சென்று போலி விசாரணை நடத்தி 31.7.1805 அன்று தூக்கிலிட்டனர். தம்பியரும், கருப்ப சேர்வையும் உடன் வீரமரணம் எய்தினர்.

சின்னமலை நினைத்திருந்தால் கொங்குநாட்டு நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு வரிவசூலில் பத்தில் மூன்று பங்கு பெற்றுத் தொடர்ந்து ஆட்சி செலுத்தி சுதேச சமஸ்தானம்போல 1947 வரை விளங்கியிருக்கலாம். ஆங்கிலேயரும் அவ்வாறே வேண்டிக்கொண்டனர். ஆனால் சின்னமலை அதை மறுத்து வீரமரணம் அடைந்தார்.

சின்னமலை ஆங்கில வெள்ளத்தைத் தடுக்கும் பெருமலையாக விளங்கினார். முன்பு அவர் நினைவாகப் போக்குவரத்துக் கழகமும், தனி மாவட்டமும் இருந்தது. தீரன் சின்னமலைக்குத் தமிழக அரசு சென்னையில் உருவச்சிலை ஒன்றை அமைத்தது. தமிழக அரசின் சார்பில் ஓடாநிலையில் சின்னமலை நினைவு மணிமண்டபம் உருவாகி வருகிறது. ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குத் தீரன் சின்னமலை மாளிகை என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஏப்ரல் 17 அன்று அவர் பிறந்த நாளிலும், அவர் மறைந்த ஆடிப் பதினெட்டு நாளிலும் அவருக்கு அஞ்சலி செலுத்திக் கொங்கு மக்கள் தங்கள் நன்றியைச் செலுத்துகின்றனர்.

இந்திய அரசின் தபால்தந்தி தகவல் தொடர்புத்துறை 31.7.2005 அன்று தீரன் சின்னமலை நினைவு அஞ்சல் தலை வெளியிடுகிறது.

கறிவேப்பிலை:ஆச்சரியமூட்டும் தகவல்கள் !!

Photo: கறிவேப்பிலை:ஆச்சரியமூட்டும் தகவல்கள் !!

கறிவேப்பிலை இருவகைப்படும். “நாட்டுக் கறிவேப்பிலை மற்றும் காட்டுக் கறிவேப்பிலை. நாட்டுக் கறிவேப்பிலை உணவிற்கும் காட்டுக் கறிவேப்பிலை மருந்துக்கும் பயன்படுகின்றன. நாட்டுக் கறிவேப்பிலையில் இனிப்பும், துவர்ப்பும், நறுமணமும் ஒருங்கே அமைந்திருக்கும். காட்டுக் கறிவேப்பிலை கசக்கும்.

கறிவேப்பிலையில் சுண்ணாம்பு, பாஸ்பரஸ், கார்போஹைட்ரேட், புரதம், இரும்பு, தாது சத்துக்கள் உள்ளன. மேலும் வைட்டமின் ஏ, பி, சி உயிர்ச்சத்துக்கள் நிறைய இருக்க¢ன்றன. சுண்ணாம்புச் சத்தும் நிறைய இருக்கிறது. இந்தச் சத்துக்கள் உடல் பலத்தை அளிக்கவும் எலும்புகளுக்கு சக்தியூட்டவும் பயன்படுகிறது.

வாயினருசி வயிற்றுளைச்ச னீடு சுரம்
பாயுகின்ற பித்தமுமென் பண்ணுங்காண் - தூய
மருவேறு காந்தளங்கை மாதே உலகிற்
கருவேப்பிலை யருந்திக் காண்.

என்ற பாடலால் கறிவேப்பிலையை உண்டு வர வாயில் சுவையின்மை, பழஞ்சுரம், சீதக்கழிச்சலால் வரும் வயிற்றுளைச்சல், பித்தம், பைத்தியம் ஆகியவை குணமாகும் என்பது தெரிய வருகிறது.

கறிவேப்பிலை மருந்துக்கும் பயன்படுகிறது. ஔடத குணமுள்ள இந்தக் கறிவேப்பிலை பல வியாதிகளையும் தீர்க்கிறது. கறிவேப்பிலை உடலுக்கு பலம் உண்டாக்கக்கூடியது. பசியைத் தூண்டும் சக்தி வாய்ந்தது. 

பித்தத்தைத் தணித்து உடல் சூட்டை ஆற்றும். அதோடு கறிவேப்பிலைக் கீரை மனதுக்கு உற்சாகத்தையும் கொடுக்க வல்லது. குமட்டல், சீதபேதியால் உண்டான வயிற்று உளைச்சல், நாட்பட்ட காய்ச்சல் ஆகியவற்றைக் கறிவேப்பிலை குணப்படுத்தும். பித்த மிகுதியால் உண்டாகும் பைத்தியத்தைக் குணப்படுத்த கறிவேப்பிலை உதவுகின்றது.

வாந்தி, நாக்கு ருசியற்றுப் போதல், வயிற்றோட்டம், சாப்பிட்டவுடன் மலங்கழிக்கும் உணர்வு, பசியற்ற நிலை, சளி ஆகியவற்றைக் கறிவேப்பிலை குணப்படுத்தும். கண்கள் ஒளி பெறவும், முடி நரைக்காமலிருக்கவும், மேனி எழில் பெறவும் கறிவேப்பிலை உதவுகின்றது.

கறிவேப்பிலைச் சாறு இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களைப் பலப்படுத்துகிறது. பத்திய உணவு சாப்பிடுபவர்கள் கறிவேப்பிலைத் துவையலை சேர்த்துக்கொள்வது நல்லது.

கண் ஒளி குன்றாமல், நரை திரை இல்லாமல் என்றும் இளமைப் பொலிவுடன் வாழ கறிவேப்பிலை அருமருந்தாக உதவுகிறது.

அரோசிகம் எடுபட

எந்த பதார்த்தத்தைச் சாப்பிட்டாலும் அது மண் போல ருசியறிய முடியாமலிருப்பதையே அரோசிகம் என்பர். அதாவது நாவில் ருசியறியும் உணர்ச்சி இழைகள் மறத்துப்போவதே இதற்குக் காரணம். இதைப் போக்க கறிவேப்பிலைத் துவையல் நன்கு பயன்படும்.

கறிவேப்பிலையை நன்கு அரைத்து அதனுடன் முட்டையின் வெள்ளைக் கருவைச் சேர்த்து தலைக்குத் தேய்த்து குளித்தால் முடி நன்றாக வளரும்.

இதற்குத் தேவையான அளவு கறிவேப்பிலையை எடுத்து, அதைச் சுத்தம் பார்த்து, அம்மியில் வைத்து தேவையான அளவு இஞ்சி, சீரகம், புளி, பச்சை மிளகாய், உப்பு இவைகளை வைத்து மை போல துவையல் அரைத்து, சாப்பாட்டுடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் நாவில் ருசியறியும் தன்மை ஏற்படும்.

அடிக்கடி இந்த துவையலை சாதத்துடன் ருசித்துச் சாப்பிட்டு வந்தால் எந்த நோயும் வராது. உடல் உறுதி பெறும்.

பைத்தியம் தெளிய

புத்திசுவாதீனமில்லாமல் இருப்பவர்களின் புத்தியை ஸ்திரப்படுத்தி ஒரு நிலையில் நிறுத்தி, அறிவில் தெளிவை உண்டாக்க கறிவேப்பிலை நன்கு பயன்படும்.

சுத்தமாக ஆய்ந்து எடுத்த கறிவேப்பிலையை அம்மியில் மை போல அரைத்து, அதை ஒரு பாத்திரத்தில் பாட்டு, அதில் ஒரு எலுமிச்சம்பழத்தின் சாற்றையும் விட்டுக் கலக்கி, தினசரி காலையிலும் மாலையிலும் சாதத்தில் போட்டுக் கலந்து சாப்பிடக் கொடுத்து விட வேண்டும். இந்த விதமாக புத்தி சுவாதீனம் அடையும் வரை கொடுத்து வர வேண்டும்.

கறிவேப்பிலையில் நிறைய உயிர்ச்சத்தும் சுண்ணாம்புச் சத்தும் இருப்பதால், பதார்த்தங்களில் மிதக்கும் கறிவேப்பிலையைத் தூக்கி எறிந்துவிடக்கூடாது. ஆகாரத்துடன் அதையும் சேர்த்து மென்று விழுங்கிவிட வேண்டும்.

இரண்டு தினங்களுக்கு ஒரு முறையாவது கறிவேப்பிலைத் துவையலை சாப்பாட்டுடன் சேர்த்து வந்தால் உடல் நலம் பெறும்.

Saturday, September 1, 2012

வேளாங்கண்ணி ஆலய விழாவின் நோக்கம் என்ன? பங்குத்தந்தை விளக்கம்!

பெசன்ட் நகர்: மக்களின் தேவைகளை இறைவன் பூர்த்தி செய்ததற்காகவும், எதிர்காலத்தில் சிறந்த வாழ்க்கை அமைத்துக் கொடுக்கவுள்ளதற்காகவும், நன்றி சொல்லும் விதமாகவே, விழாக்களை கொண்டாடுகிறோம், என்று, பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி ஆலய பங்குத்தந்தை பிரான்சிஸ் மைக்கேல் தெரிவித்தார். பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தின், 40ம் ஆண்டு திருவிழா கோலாகலமாக நடந்து வருகிறது. நடக்கவுள்ள விழாக்கள் மற்றும் திருவிழாக்கள் நடத்துவதன் முக்கியத்துவம் குறித்து, ஆலயத்தின் பங்குத்தந்தை பிரான்சிஸ் மைக்கேல் கூறியதாவது: திருவிழா என்பது அனைத்து மதத்தினராலும் கொண்டாடப்படுகிறது. மக்களின் தேவைகளை இறைவன் பூர்த்தி செய்ததற்காகவும், எதிர்காலத்தில் சிறந்த வாழ்க்கை அமைத்து கொடுக்கவுள்ளதற்காகவும் நன்றி கூறும் விதமாக, திருவிழாக்களை கொண்டாடுகிறோம். வேளாங்கண்ணி கோவிலில், திருவிழா, ஒன்பது நாட்கள் நடக்கிறது. முதல் நாள், கொடியேற்றுவதையே விழாவாக கொண்டாடுகிறோம். இரண்டாம் நாள் துறவற விழா நடக்கிறது. மூன்றாம் நாள் குடும்ப மக்கள் துறவறத்தில் உள்ளவர்களை போல சேவை செய்பவர்களை வாழ்த்தும் தினமாகும். நான்காம் நாள் முதல் தேதி சனிக்கிழமை நோயுற்றோருக்காக ஜெபிக்கப்படும் விழாவாகும். இதில் பங்கேற்கும் சுகவீனமுற்றோர் நலம் பெருவதாக நம்பிக்கை உண்டு. ஒவ்வொரு மாதமும் முதல் சனிக்கிழமை நோயுற்றோருக்கு இங்கு ஜெபிக்கப்படுகிறது. அன்று மாலை அனைவருக்கும், இறைவனின் அருள் பெற்ற எண்ணெய் தடவி ஜெபிக்கப்படுகிறது.
ஐந்தாம் நாள் ஏசு கிறிஸ்துவின் தேவ கருணையை விளக்குவதாக அமைகிறது. அன்று, ஏசு ரத்தம் சிந்தி காத்தார் என்பதற்காக, ரத்த தான முகாம் நடத்தப்படுகிறது. இந்தாண்டு நூற்றுக்கணக்கானோர் ரத்த தானம் செய்வார்கள் என எதிர்பார்க்கிறோம். ஆறாம் நாள் விழா உழைப்பாளர்கள் விழா. அவர்களை பாராட்டும் விழாவாகவே நடத்தப்படுகிறது. திருவிழாவின் ஏழாம் நாள் இளைஞர்கள் விழாவாக நடத்தப்படுகிறது. எட்டாம் நாள் ஆசிரியர் தின விழா நடத்தப்படுகிறது. ஆசிரியர்களின் சேவையை பாராட்டி, கவுரவித்து மேலும், அவர்கள் சிறந்த சேவையாற்ற வேண்டும் என, இறைவனிடம் ஜெபிக்கப்படுகிறது. ஒன்பதாம் நாள் குடும்ப விழா நடத்தப்படுகிறது. இந்தாண்டு திருமணமாகி வெள்ளி விழா மற்றும் பொன் விழா கண்டவர்களை மேடைக்கு அழைத்து, பல்லாண்டு நோய் நொடியின்றி வாழ்வதற்காக இறைவனிடம் ஜெபிக்கப்படுகிறது. விழாவின் இறுதி நாள் மக்களுக்கு உதவி செய்யும் மாதாவை வணங்குவதோடு, அவருக்கு விசவாத்தை காட்டுவதற்காக சிறப்பு தேரில் மாதாவின் பவனி வரச்செய்து, வழிபாடு நடத்தப்படுகிறது. அடுத்த நாள் ஆரோக்கிய அன்னையில் பிறப்பு விழா. இதை ஒட்டியே இந்த ஓன்பது நாள் விழா நடத்தப்படுகிறது. இவ்வாறு, பங்குத்தந்தை பிரான்சிஸ் மைக்கேல் தெரிவித்தார்.
மாதா சபை விழா: பெசன்ட்நகர் அன்னை வேளாங்கண்ணி ஆலய விழாவின் மூன்றாம் நாளான நேற்று மரியாயின் சேனை, மாதா சபை விழாவில் நேற்று காலை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் திருப்பலிகள் அரங்கேறின. மாலை வெள்ளி விழா அருட்பணியாளர்கள் பீட்டர் தும்மா, தனிஸ்லாஸ், ஜோசப் மாணிக்கம் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். விழாவை மறைமாவட்ட மரியாயின் சேனை, மாதா சபை, பிரன்சிஸ்கன் பொது நிலையினர் சிறப்பித்தனர். விழாவில் விசுவாசம் என்ற தலைப்பில் ஆயர் பேசியதாவது:பல புதுமைகளை ஆண்டவர் இயேசு செய்தார். அவர் பிசாசை ஓட்ட சென்றபோது, அவைகள், "நீர் வல்லமை மிக்க மகன் என்பது எங்களுக்கு தெரியும், என்றன. அவைகள் செயலற்ற விசுவாசம் கொண்டவை. யாருடைய வாழ்க்கையில் நல்ல செயல் வரவில்லையோ அது இறந்து போன விசுவாசமாக கருதப்படும். இவ்வாறு அவர் கூறினார்.