Wednesday, January 4, 2012

திருப்பாவை - 18

உந்து மத களிற்றன் ஓடாத தோள் வலியன்
நந்தகோபாலன் மருமகளே நப்பின்னாய்
கந்தம் கமழும் குழலீ, கடை திறவாய்
வந்தெங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்
பந்தல்மேல் பல்கால் குயில் இனங்கள் கூவின காண்
பந்தார் விரலி உன் மைத்துனன் பேர் பாட
செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்து ஏல் ஓர் எம்பாவாய்

பொருள்: மத யானையைப் போன்றவனும், புறமுதுகே காட்டாத தோள் வலிமை உடையனுமான நந்தகோபாலனின் மருமகளே, நப்பின்னையே. நறுமணம் வீசும் கூந்தலை உடைய குழலியே தாழ் திறவாய்.

கோழிகள் எல்லாம் கூவத் தொடங்கி விட்ன. குயில் இனங்கள் கூவத் தொடங்கி விட்டன. அதை வந்து பார்.

உனது செந்தாமரைக் கையில் குலுங்கும் வளையல்கள் ஒலியெழுப்ப வெளியே வந்து உன் கணவனாகிய கண்ணனின் புகழ் பாட மகிழ்ச்சியோடு கதவைத் திறந்து வெளியே வருவாயாக.

திருவெம்பாவை - 18

அண்ணா மலையான் அடிக்கமலம் சென்று இறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகை வீறு அற்றாற்போல்
கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்ப
தண்ணார் ஒளிமழுங்கி தாரகைகள் தாம் அகலப்
பெண்ணாகி ஆணாகி அலியாய் பிறங்கு ஒளிசேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறு ஆகி
கண்ணார் அமுதமுமாய் நின்றான் கழல் பாடிப்
பெண்ணேஇப் பூம்புனல்பாய்ந்து ஆடேல் ஓர் எம்பாவாய்!

பொருள்: பெண்ணே! திருவண்ணாமலையில் எம்பெருமான் மாலும் அயனும் அரிய ஒண்ணா அருள் மலையாய், அருட்சோதிப்பிழம்பாய், எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். அவர் திருவடியில் விழுந்து வணங்கும் தேவர்களின் மகுடங்களில் உள்ள பல்வேறு இரத்தினங்களின் ஒளியானது எம்பெருமானின் திருவடி பேரொளியின் முன் வீறற்று விடுகின்றன, அவை போல கதிரவன் எழுந்ததும் விண் மீன்கள் தங்கள் ஒளி இழந்து மறைந்து விட்டன, பொழுதும் விடிந்து விட்டது.

எம்பெருமான், பெண்ணானவன், ஆணானவன், அலி என மூன்றும் ஆனவன். ஒளிதரும் கதிரவனும், மதியும் சுடருமான முக்கண்ணனானவன். விண்ணாகவும், மண்ணாகவும், மற்றுமுள்ள வேறாக உள்ள அனைத்துமானவன். அவன் நம் கண் முன்னே அருட்காட்சி தரும் நிறைந்த அமுதமுமாகி நிற்கின்றான். அந்த பெருமானுடைய பொற்திருவடிகளைப் பாடிப்பரவி, நாம் உய்ய மலர்கள் நிறைந்த இந்த நீரிலே பாய்ந்து நீராடுவோமாக.

Monday, January 2, 2012

திருப்பாவை 17

Lord Kanna

அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும்
எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய்
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குல விளக்கே
எம்பெருமாட்டி யசோதா அறிவுறாய்
அம்பரம் ஊடு அறுத்து ஓங்கி உலகளந்த
உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய்
செம்பொற் கழலடிச் செல்வா பலதேவா
உம்பியும் நீயும் உறங்கேல் ஓர் எம்பாவாய்

பொருள்: ஆடைகளையும், அன்னத்தையும், குளிர் நீரையும் தானமாக தரும் நந்தகோபனே, எழுந்திராய். கொடியிடை கொண்ட பெண்களுக்கெல்லாம் முதன்மையானவளே, ஆயர் குல விளக்கே, எம்பெருமாட்டி யசோதையே, நீயும் கூட எழுவாயாக.

வானத்தை ஊடுருவி, தனது ஈரடியால் உலகை அளந்த உத்தமனே எழுந்திராய். செம்மையான உனது பாதத்தில் பொற் கழலை அணிந்த செல்வனே, பலராமா, நீயும் உன் தம்பி கண்ணனும் இனியும் உறங்க வேண்டாம், எழுதிருப்பீர்களாக.

திருவெம்பாவை - 17

செங்க ணவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்
எங்கும் இலாததோர் இன்பம்நம் பாலாதா
கொங்குஉண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி
இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளி
செங்கமல பொற்பாதம் தந்தருளும் சேவகனை
அங்கண் அரசை அடியோங்கட்கு ஆரமுதை
நங்கள் பெருமானைப் பாடிநலம் திகழ
பங்கயப் பூம்புனல்பாய்ந்து ஆடேல் ஓர் எம்பாவாய்!

பொருள்: நங்கள் சிவபெருமான் பரம கருணாமூர்த்தி! அவர் சிவந்த கண்களைக் கொண்ட திருமால், நான்முகன், மற்றுமுள்ள மற்ற தேவர்கள் ஆகியவர்களிடத்திலும், வேறு எங்கும் இல்லாத இன்பம் தனது அடியவர்களாகிய நம்மிடம் உள்ளதாக அருள் புரிந்தவர்.

நம்முடைய குற்றங்களையெல்லாம் நீக்கி குணம் மட்டும் கொண்டு கோதாட்டும் உத்தமர். எளி வந்த கருணையினால் நமக்காக இரங்கி இம்மண்ணுலகில் தேன் சிந்தும் மலர் சூடிய கருங்கூந்தலையுடைய உமையம்மையுடன் ரிஷபத்தில் இறங்கி நம்முடைய வீடுகளில் வந்து எழுந்தருளி தன் பொற்பாத தரிசனம் தந்தருளிய வள்ளல்.

பெண்ணே! அந்த அருள்கனிந்த திருக்கண்களையுடைய அரசனை, அடிமைகளாகிய நமக்கு தெவிட்டாத தெளிந்த அமுதமானவனை, நம்முடைய சிவபெருமானைப் பாடி மங்களம் பெருகி விளங்க தாமரை மலர்கள் நிறைந்த இந்த நீரில் பாய்ந்து நீராடுவோமாக!

திருப்பாவை - 16

நாயகனாய் நின்ற நந்தகோபன் உடைய
கோயில் காப்பானே! கொடித்தோன்றும் தோரண
வாயில் காப் பானே! மணிக்கதவம் தாள்திறவாய்!
ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்,
தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்;
வாயால் முன்னமுன்னம் மாற்றாதே, அம்மா! நீ
நேய நிலைக்கதவம் நீக்கேலோர் எம்பாவாய்.

பொருள்: உலகுக்கெல்லாம் தலைவனாய் நிலைத்திருக்கின்றவனாகிய நந்த கோபனுடைய திருக்கோவிலைக் காப்பவனே! கொடிகள் மற்றும் தோரணங்கள் மேவும் வாயிலைக் காப்பவனே! மணிக் கதவின் தாளைத் திறப்பாய்!

கோகுலத்தின் சிறுமியர்களாகிய எங்களுக்கு நோன்பு நிறைவதற்கான பலனை தருவதாக, மாயவன், கருநீல வண்ணன், கண்ணன், நேற்றே வாக்களித்தான்; அந்த எம்பெருமானை துயில் எழுப்ப பாடுவதற்கு, உள்ளும் புறமும் தூயவர்களாக நாங்கள் வந்தோம்.

உன் வாயாலே, முதன் முதலிலேயே மறுத்து சொல்லிவிடாதே அப்பனே! வாயில் நிலையோடு நேசமாகப் பொருந்தியிருக்கும் கதவை நீ, நீக்கி திறந்து விடு.

திருவெம்பாவை - 16

முன்இக் கடலைச் சுருக்கியெழுந்து உடையாள்
என்னத் திகழ்ந்து எம்மை ஆளுடையாள் இட்டிடையின்
முன்னிப் பொலிந்து எம்பிராட்டி திருவடிமேல்
பொன்னஞ் சிலம்பின் சிலம்பித் திருப்புருவம்
என்னச் சிலைகுலவி நம்தெம்மை ஆளுடையாள்
தன்னிற் பிரிவிரா எம்கோமான் அன்பர்க்கு
முன்னி அவள்நமக்கு முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழை ஏலோர் எம்பாவாய்!

பொருள்: மேகமே! நீ கடலினை நெருங்கி அதன் நீரை முகந்து அக் கடலைக் குறைத்து, எங்களை ஆளாக உடைய அம்மை உமா தேவியின் சிற்றிடையைப் போல மின்னிப் பொலிவுற்று, எம்பெருமாட்டியின் திருவடிகளில் அணியப் பெற்ற பொற்சிலம்பைப் போல சிலம்பி, அம்மையின் வில்லைப்போன்ற திருப்புருவம் எனும்படி வானில் குலவி , நம்மையெல்லாம் அடிமையாக உடைய எம்பெருமாட்டியை விட்டுப் பிரியாத எம்பெருமான் தன் அன்பர்களுக்கு பொழியும் இனிய அருளைப் போல நீ மழையைப் பொழிவாயாக!

திருப்பாவை 15

எல்லே! இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ?
சில் என்று அழையேன்மின்! நங்கைமீர்! போதர்கின்றேன்
வல்லை உன் கட்டுரைகள் பண்டேஉன் வாய்அறிதும்
வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக
ஒல்லைநீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்து எண்ணிக்கொள்
வல்ஆனைக் கொன்றானை மாற்றாரை மாற்று அழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்.

பொருள்:

எழுப்புவோர்: ஏண்டி! இளங்கிளி போல் மிழற்றும் குமரிப் பெண்ணே, இன்னமும் உறங்குகின்றாயே!

தூங்குபவள்: பெண்களே! 'சில்' என்று கத்தி கூப்பிடாதீர்கள்! இதோ வந்து விடுகின்றேன்.

எழுப்புவோர்: நீ மிகவும் கெட்டிக்காரி! பசப்பு வார்த்தைக்காரி! உன்னுடைய பேச்சுவன்மையை நாங்கள் முன்பே அறிவோம்! உன் வாயையும் நாங்கள் அறிவோம்!

தூங்குபவள்: கெட்டிக்காரிகள் நீங்களா? நானா? நானே ஆனாலும் சரி.

எழுப்புவோர்: சீக்கிரம் எழுந்து வா! இந்த கெட்டிக்காரத்தனத்தைத் தவிர வேறு என்ன வைத்திருக்கின்றாய்!

தூங்குபவள்: நம் தோழியர்கள் அனைவரும் வந்து விட்டனரா?

எழுப்புவோர்: வந்து விட்டார்கள்! சந்தேகம் இருந்தால் நீயே வந்து எண்ணிப் பார்த்துக் கொள். குவாலயாபீடம் என்ற யானையை கொன்ற கண்ணனை, பகைவரின் செருக்கை அழிக்க வல்லவனை(வல்லானை) மாயக்கண்ணனின் புகழைப் பாடலாம் சீக்கிரம் வாடி.

திருவெம்பாவை - 15

ஓரொருகால் எம்பெருமான் என்று என்றே நம்பெருமான்
சீர்ஒருகால் வாய் ஓவாள் சித்தங் களிகூர
நீர் ஒருகால் ஓவா நெடுந்தாரை கண்பனிப்பப்
பாரொருகால் வந்தணையாள் விண்ணோரைத் தான்பணியாள்
பேரரையற்கு இங்ஙனே பித்து ஒருவர் ஆமாறும்
ஆர் ஒருவர் இவ்வண்ணம் அட்கொள்ளும் வித்தகர்தாள்
வார் உருவர் பூண்முலையீர் வாயார நாம்பாடி
ஏர் உருவப் பூம்புனல் பாய்ந்து ஆடு ஏலோ எம்பாவாய்!

பொருள்: கச்சை உருவி விடுமாறு கூடிய அழகிய அணிகலன்களைப் பூண்ட மார்புகளை உடைய பெண்களே! இவள் ஒவ்வொரு சமயம் "எம்பெருமானே! எம்பெருமானே! என்று வாய் ஓயாது அரற்றுகின்றாள்; மற்றொரு சமயம் நமது மஹாதேவன் புகழைப் வாய் ஓயாமல் பேசுகின்றாள்;

அதனால் ஏற்பட்ட மன மகிழ்ச்சியால் இவள் கண்கள் அருவியைப் போல் கண்ணீரை சுரக்கின்றன. நிலத்தில் விழுந்து எம்பெருமானை வணங்கியவள் அப்படியே தனனை மறந்து அப்படியே கிடக்கின்றாள், சிவபெருமானைத் தவிர மற்ற எந்த தெய்வத்தையும் இவள் வனங்க மாட்டாள்; அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகனாம் பேரரசனாகிய சிவபெருமானுக்கு பித்தானவர்கள் தன்மை இப்படித்தான் போலும்!

இவ்வண்ணம் நம்மை ஆட்கொள்ளும் அந்த ஒருவர் யார்? அவர் ஞானமே வடிவான இறைவனே ஆவான்! அவரது திருவடிகளை வாயாரப்பாடி அழகிய மலர்கள் நிறைந்துள்ள இந்த குளத்து நீரில் பாய்ந்து மார்கழி நீராடுவோமாக.

திருப்பாவை - 14

உங்கள் புழைக்கடை தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்
செங்கற் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போகின்றார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய்! எழுந்திராய்! நாணாதாய் நா வுடையாய்1
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேல் ஓர் எம்பாவாய்!

பொருள்: உங்கள் வீட்டு புழக்கடை தோட்டத்திலுள்ள குளத்தில் செங்கழுநீர் மலர்கள் எல்லாம் பூத்து விட்டன. ஆம்பல் மலர்களின் இதழ்கள் குவிந்து வாய் மூடி விட்டன. பொழுது விடிந்து விட்டதே. அது உனக்கு இன்னும் புரியவில்லையா?

தாம்பூலம் தரியாததால் வெண் பற்களைக் கொண்ட தவசீலர்கள் தாங்கள் பொறுப்பேற்றுள்ள திருக்கோவில்களை திறக்க சென்று விட்டனர்.

உங்களுக்கு முன்பு நான் வந்து உங்களை எழுப்புவேன் என்று வாய் சவடால் பேசிய நங்கையே! எழுந்திரு! வெட்கமில்லாதவளே! நீண்ட நாவுடையவளே! சங்கு, சக்கரம் ஏந்திய நீண்டக் திருக்கைகளையும், தாமரைக் கண்களையும் உடைய அந்த எம்பெருமானை பாடுவோம், வா!

திருவெம்பாவை - 14

காதார் குழையாடப் பைம்பூண் கலனாட
கோதை குழலாட வண்டின் குழாமாட
சீதப் புனலாடிச் சிற்றம் பலம்பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடி
சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதித் திறம்பாடி அந்தமா மாபாடிப்
பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன்
பாதத் திறம் பாடி ஆடேல் ஓர் எம்பாவாய்!

பொருள்: பெண்களே! நம் செவிகளில் அணிந்துள்ள தோடுகள் ஆட, உடலில் அணிந்துள்ள பசும் பொற்கலன்கள் ஆட, கருங் கூந்தலாட, அக்கூந்தலில் சூடியுள்ள மலர் மாலைகள் ஆட, அந்த மாலைகளில் மொய்க்கின்ற வண்டின் கூட்டங்கள் எழுந்து ஆடக் இக்குளத்தின் குளிர்ந்த நீரில் மூழ்குவோம்!

எம்பெருமான் ஆனந்த கூத்தாடும் திருச்சிற்றம்பலத்தைப் பாடி, மறைப்பொருளைப் பாடி, முச்சுடர்க்கும் ஒளி வழங்கும் ஒளியாகிய இறைவன் திறங்களைப் பாடி, அவன் திருமுடியில் விளங்கும் பொன் கொன்றை மாலையைப் பாடி, அவன் எல்லா பொருளுக்கும் இறைமையாய் விளங்கும் முதன்மையும் பாடி, முடிவில்லா முடிவையும் பாடி ஏனைய உயிர்களினும் நம்மை வேறுபடுத்திச் சிறப்புற வைத்து மேல் நிலையில் எடுத்து அருள்கின்ற ஆனந்த நடராஜர், சிறந்த வளையல்களை அணிந்த தளிரன்ன கரங்களையுடைய சிவகாமி அம்மையின் திருவடிச் சிறப்பையும் பாடிக் கொண்டே நீராடுவோமாக!

2011ல் உலகம்

ஜனவரி

1 - நைஜீரியாவின் அபுஜா நகரில் நடந்த குண்டுவெடிப்பில் 30 பேர் கொல்லப்பட்டனர்.

3- ஆஸ்திரேலிய கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக முஸ்லீம் சமுதாயத்தைச் சேர்ந்த உஸ்மான் காஜா என்ற இளம் வீர்ர் ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இடம் பிடித்தார். இவர் பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்தவர்.

- ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸில் ஒரு தியேட்டரின் மேற்கூரை புயலில் சிக்கி சேதமடைந்து இடிந்து விழுந்தது. அதில் சிக்கிக் கொண்ட 36 பேர் மீட்கப்பட்டனர்.

- அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாண ஆளுநர் பதவியிலிருந்து முன்னாள் நடிகர் அர்னால்ட் ஸ்வார்ஸனீகர் விலகினார்.

- சிலி கடல் பகுதியில் 7.2 ரிக்டர் அளவிலான பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இருப்பினும் இதனால் சுனாமி அபாய எச்சரிக்கை விடப்படவில்லை.

10 - ஈரான் நாட்டில் 105 பயணிகளுடன் கிளம்பிய விமானம் மோசமான வானிலை காரணமாக விபத்தில் சிக்கியதில் 77 பேர் கொல்லப்பட்டனர்.

25 - இஸ்ரோ மாற்றும் டிஆர்டிஓ ஆகியவற்றுக்கு விதித்திருந்த பொருளாதார தடையை அமெரிக்க அரசு விலக்கிக் கொண்டது.

பிப்ரவரி

1 - c தலைநகர் கெய்ரோவில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் 10 லட்சம் பேர் திரண்டு முபாரக்குக்கு எதிராக மாபெரும் போராட்டத்தை நடத்தினர்.

5 - பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சல்மான் பட்டுக்கு,கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதற்காக ஐசிசி 10 ஆண்டு தடை விதித்தது. முகம்மது ஆசிபுக்கு 7 ஆண்டு மற்றும் முகம்மது ஆமிருக்கு 5 ஆண்டு தடையும் விதிக்கப்பட்டது.

7 - முன்னாள் பாகிஸ்தான் சர்வாதிகாரி முஷாரப், பெனாசிர் புட்டோ கொலை வழக்கில் சேர்க்கப்பட்டு அவர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

11 - 18நாள் தொடர் மக்கள் போராட்டத்தைத் தொடர்ந்து எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக் தனது குடும்பத்துடன் தப்பி ஓடினார். ஆட்சியை ராணுவம் கைப்பற்றியது.

14 - சென்னை காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ள கொலை வழக்கில் முன்ஜாமீன் வழங்கக் கோரி இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார்.

17 - வங்கதேச தலைநகர் டாக்காவில் 10வது உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியின் தொடக்க விழா கோலாகலமாக நடைபெற்றது.

18 -இலங்கை கடற்படையினரால் கடத்தப்பட்ட 136 தமிழக மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டனர்.

20 - விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் மரணமடைந்தார்.

27 - பெங்களூரில் நடந்த, இந்தியா-இங்கிலாந்துக்கு இடையிலான உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி டையில் முடிந்தது. உலகக் கோப்பைப் போட்டிகளில் 5வது சதத்தை அடித்து சச்சின் புதிய சாதனை படைத்தார்.

மார்ச்

1 - லிபியாவில் மக்கள் போராட்டம் வலுத்தது. போராட்டக்காரர்கள் மீது லிபிய ராணுவம் குண்டுவீசித் தாக்கியது. இதைத் தடுக்க அமெரிக்க போர்க் கப்பல்கள், விமானங்கள் லிபியாவை நோக்கி விரைந்தன.

2 - பாகிஸ்தான் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த ஒரே கிறிஸ்தவ அமைச்சரான ஷபாஸ் பட்டி சுட்டுக் கொல்லப்பட்டார்.

11 - ஜப்பானில் 8.9 ரிக்டர் அளவிலான பயங்கர நிலநடுக்கமும், தொடர்ந்து பயங்கர சுனாமியும் தாக்கின. இதில் லட்சக்கணக்கான வீடுகள், கார்கள், கட்டடங்கள் அடித்துச் செல்லப்பட்டன. ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். புகுஷிமா அணு மின் நிலையம் பெரும் சேதத்தை சந்தித்தது.

12 - புகுஷிமாவில் மேலும் ஒரு அணு உலை வெடித்தது.

13 - ஜப்பானில் சுனாமி மற்றும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர்ப்பலி 10 ஆயிரத்தைத் தாண்டியது.

16 - நேட்டோ படையினர் லிபியா மீது தாக்குதல் நடத்தினால் தான் அல் கொய்தா அமைப்பில் சேர்ந்து விடுவதாக மும்மர் கடாபி மிரட்டல் விடுத்தார்.

17 - ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக சோயப் அக்தர் அறிவித்தார்.

20 - லிபியா மீது அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் நடத்திய தாக்குதலில் 64 பேர் கொல்லப்பட்டனர்.

21 - நேட்டோ படையினர் நடத்திய அதிரடித் தாக்குதலில் கடாபியின் மாளிகை தகர்க்கப்பட்டது.

ஏப்ரல்

3 - பாகிஸ்தானின் பஞ்சாபில் நடந்த பயங்கர குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 41 பேர் கொல்லப்பட்டனர்.

13 - 2010ம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரராக சச்சின் டெண்டுல்கரை விஸ்டன் தேர்வு செய்தது.

14 - லிபியா மீது தரை வழிப் போர் நடத்த அமெரிக்கா மற்றும் கூட்டுப் படையினர் முடிவு செய்ததற்கு இந்தியா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

16 - கஜகஸ்தான் சென்றார் பிரதமர் மன்மோகன் சிங். இரு நாடுகளுக்கும் இடையே அணு சக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது.

- இலங்கைப் போரின் இறுதிக் கட்டத்தில் நடந்த போர்க்குற்றம் குறித்த புகார்களை சர்வதேச அமைப்புகள் மூலம் விசாரிக்க ஐ.நா. சபை அமைத்த நிபுணர் குழு பரிந்துரைத்தது.

21 - இலங்கை மீதான போர்க்குற்றச்சாட்டு தொடர்பான ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை எந்தவித திருத்தமும் இன்றி அப்படியே வெளியிடப்படும் என்று ஐ.நா. தெளிவுபடுத்தியது.

22 - இலங்கை வேகப் பந்து வீச்சாளர் லசித் மலிங்கா சர்வதேச டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

26 - இலங்கையில் நட்நத உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தில் மட்டும் 5 மாதங்களில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

27 - இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய தலைவர் நவி பிள்ளை கோரிக்கை விடுத்தார்.

- விடுதலைப்புலிகளின் தளபதி ரமேஷ் கொடிய சித்திரவதைக்குப் பிறகு சீருடை அணிவித்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் என்று ஐ.நா. போர்க்குற்ற அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

29 - இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸ் - கேட் மிடில்டன் ஆகியோர் திருமணம் லண்டனில் படு கோலாகலமாக நடந்தது. லட்சக்கணக்கான மக்கள் திரண்டு வந்திருந்தனர்.

31 - பாகிஸ்தான் கிரிக்கெட் கேப்டன் ஷாஹித் அப்ரிதி கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

மே

2 - உலகையே உலுக்கிய அல் கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன், பாகிஸ்தானில், அபோதாபாத் என்ற இடத்தில் அமெரிக்க சீல் கடற்படையினரால் அதிரடியாக கொல்லப்பட்டார்.

11 - நிதி மோசடி வழக்கில் சிக்கிய இலங்கைத் தமிழர் ராஜரத்தினம் குற்றவாளி என்று அமெரிக்க கோர்ட் அறிவித்தது.

15 - ஹோட்டலில் பணிப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக சர்வதேச நிதியத்தின் தலைவர் ஸ்டிராஸ் கான் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

ஜூன்

2 - பெல்ஜியத்தில் நடந்த ஈழத் தமிழர்களின் தேசியப் பிரச்சினை குறித்த மாநாட்டில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசினார்.

- இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா முதல்முறையாக பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் இரட்டையர் பிரிவு இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றார்.

4 - பாகிஸ்தானில் நடந்த அமெரிக்கப் படையினரின் தாக்குதலில் தீவிரவாத தலைவரான இலியாஸ் காஷ்மீரி கொல்லப்பட்டார்.

9 - பிரபல ஓவியர் எம்.எப். ஹூசேன் லண்டனில் மரணமடைந்தார். அவருக்கு வயது 95.

10 - மும்பை தீவிரவாததாக்குதல் வழக்கில் தொடர்புடைய தஹவூர் ராணாவை விடுவித்து அமெரிக்க கோர்ட் தீர்ப்பளித்தது.

16 - இந்த நூற்றாண்டின் மிக நீளமான சந்திரகிரகணம் அதிகாலையில் ஏற்பட்டு ஐந்தரை மணி நேரம் நீடித்தது.

- இலங்கையின் போர்க்குற்றச் செயல்கள் குறித்து ஐ.நா. விசாரணை நடத்த வேண்டும் என்று இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் கோரிக்கை விடுத்தார்.

20 - ஈழத் தமிழர் படுகொலை தொடர்பாக அமெரிக்க கோர்ட் அனுப்பிய சம்மனைப் பெற முடியாது என நிராகரித்தார் ராஜபக்சே.

21 - மாஸ்கோவிலிருந்து புறப்பட்ட பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில் 44 பேர் இறந்தார்கள்.

22 - ஐ.நா பொதுச் செயலாளராக பான் கி மூன் மீண்டும் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஜூலை

3 - தாய்லாந்து நாட்டின் முதல் பெண் பிரதமராக இன்லாக் ஷினவாத்ரா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

7 - ஈழத் தமிழறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பி மரணமடைந்தார்.

8 - டொமினிக்காவில் நடந்த மேற்கு இந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின்போது தனது 400வது விக்கெட்டை வீழ்த்தினார் ஹர்பஜன் சிங். இந்தியாவிலேயே அதிக டெஸ்ட் விக்கெட்களை வீழ்த்திய 3வது வீரர் ஹர்பஜன் சிங்.

9 - சூடானை விட்டுப் பிரிந்து தெற்கு சூடான் இன்று தனி சுதந்திர நாடாக உதயமானது. உலகின் 193வது நாடாகும் இது.

11 - ரஷ்யாவில் ஓல்கா நதியில் படகு மூழ்கியதில் 30சிறார்கள் உள்பட 110 பேர் பலியானார்கள்.

12 - ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் கர்சாயின் தம்பி வாலி கர்சாய் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஆகஸ்ட்

1- இங்கிலாந்தில், தொடர்ந்து 12 மணிநேரம் வீடியோ கேம் விளையாடிய கிரிஷ் ஸ்டோனிபோர்த் என்ற வாலிபர் ரத்தம் உறைந்து மரணமடைந்தார்.

- சீனாவின் ஷின்ஜியாங் மாகாணத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 20 பேர் பலியாயினர்.

- லிபியாவில் இருந்து அகதிகளை ஏற்றி வந்த படகின் என்ஜின் அறையில் 25 பேர் இறந்து கிடந்ததை இத்தாலிய கடற்படையினர் கண்டுபிடித்தனர்.

2 - பாகிஸ்தானின் அபோடாபாத் நகரில் தாக்குதல் நடத்தும் முன், ஒசாமா பின் லேடனின் வீடு போன்ற ஒரு காம்பவுண்ட்டையே அமெரிக்காவில் காட்டுப் பகுதியில் உருவாக்கி அதில் அமெரிக்கப் படையினர் பல நாட்கள் தாக்குதல் பயிற்சி எடுத்த விவரம் வெளியானது.

3 - அமெரிக்காவில் மாபெரும் மருத்துவ காப்பீட்டு மோசடியில் ஈடுபட்டதாக பாபுபாய் படேல் உள்ளிட்ட 19 இந்தியர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.

6 - அல் கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனை சுட்டுக் கொன்ற அமெரிக்க கடற்படையின் டீம் 6 என்ற சீல் பிரிவினர் பயணித்த ஹெலிகாப்டரை தலிபான்கள் சுட்டு வீழ்த்தினர். இதில் 31 சீல் படையினர் கொல்லப்பட்டதால் அமெரிக்கா பெரும் அதிர்ச்சி அடைந்தது.

7 - இலங்கை வான் பகுதிக்குள் அதிரடியாக புகுந்த அமெரிக்க கடற்படையைச் சேர்ந்த 10 போர் விமானங்கள் சிறிது நேரம் பறந்த பின்னர் அங்கிருந்து சென்றதால் இலங்கை பீதிக்குள்ளானது.

- போலீசாரால் வாலிபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து லண்டனில் மாபெரும் கலவரம் வெடித்தது. கலவரக்காரர்களின் கையில் சிக்கி லண்டன் மாநகரமே உருக்குலைந்து போனது.

8 - சோனியா காந்திக்கு நியூயார்க்கில் உள்ள கேட்டரிங் புற்றுநோய் மையம் என்ற தனியார் மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை நடந்தது. அவருக்கு கருப்பை வாய் புற்றுநோய் பாதிப்பு இருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகின.

9 - கடன் தர வரிசையில் அமெரிக்கா ஒன்றும் சறுக்கவில்லை. நாங்கள் இன்னும் AAA நிலையில்தான் இருக்கிறோம். இப்போதைய நெருக்கடியை தீர்க்கும் அரசியல் உறுதி எங்களுக்கு உள்ளது, என்று கூறினார் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா.

- இங்கிலாதில் கலவரக்காரர்களால் தாக்கப்பட்டு ஆசிய சகேதரர்களான ஷாசாத், ஹாரி ஹுசைன். அவர்களது நண்பர் முசாவர் அலி ஆகியோர் பிர்மிங்ஹாமில் கொல்லப்பட்டனர்.

10 - நேட்டோ படைத் தாக்குதலில் லிபிய அதிபர் கடாபியின் 7வது மகன் காமிஸ் கொல்லப்பட்டதாக செய்திகள் வந்தன. ஆனால் அவர் இன்று டிவியில் தோன்றி தான் உயிருடன் இருப்பதை நிரூபித்தார்.

13 -விண்வெளியில் மேலும் ஒரு புதிய கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ட்ரெஸ் 2 பி என்று இந்தக் கிரகத்துக்கு பெயர் சூட்டினர்.

14 - ஆப்கானிஸ்தானின் பர்வான் மாகாண ஆளுநர் மாளிக்கைக்குள் 6 தற்கொலைப்படை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 22 பேர் பலியாகினர்.

19 - ஜப்பானின் வட கிழக்கில் 6.8 ரிக்டர் அளவிலான கடும் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சுனாமி அபாய எச்சரிக்கை விடப்பட்டது.

20 - ஜெர்மனியின் வெஸ்ட்பாலன்ஸ்டேடியான் என்ற நாட்டிலேயே மிகப் பெரிய கால்பந்து ஸ்டேடியத்தில் நடந்த கால்பந்துப் போட்டிக்கு முன்னதான அணிவகுப்பின்போது இலங்கையின் தேசியக் கொடிக்கு இணையாக தமிழ் ஈழத் தேசியக் கொடியும் கொண்டு செல்லப்பட்டு கெளரவம் தரப்பட்டது.

21 - கொல்லப்பட்ட அல் கொய்தா தலைவர் பின்லேடனின் குடும்பத்தை சீரழித்ததற்காக பாகிஸ்தான் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்று லேடனின் மனைவி அமால் அல் சதாவின் சகோதரர் சகாரியா அல் சதா கூறினார்.

- லிபியா நாட்டுத் தலைநகர் திரிபோலி புரட்சிப் படையினரிடம் வீழ்ந்தது. கடாபியின் அரண்மனையை முற்றுகையிட்டு அவரது இரண்டு மகன்களை கைது செய்தனர். இன்னொரு மகனும் உளவுப் பிரிவித் தலைவரும் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டனர்.

24 - அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனை கடும்நிலநடுக்கம் தாக்கியது. இதனால் மக்கள் பெரும் பீதியடைந்தனர். நியூயார்க் வரை இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் காணப்பட்டதால் மக்கள் பெரும் அச்சமடைந்தனர்.

25 - இங்கிலாந்து துணை பிரதமர் நிக் கிளெக்கை கிளாஸ்கோ பல்கலைக்கழக மாணவர் ஒருவர் நீல நிற பெயிண்ட் நிரப்பிய முட்டையைக் கொண்டு தாக்கினார். இதையடுத்து அந்த மாணவர் கைது செய்யப்பட்டார்.

- லிபிய அதிபர் மும்மர் கடாபியின் வீட்டுக்குள் புகுந்து நடத்தப்பட்ட அதிரடி சோதனையின்போது சிக்கிய ஆல்பம் அனைவரையும் அதிர வைத்தது. அந்த ஆல்பத்தில் அமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சர் கான்டலீசா ரைஸ் புகைப்படங்களை தொகுத்து வைத்திருந்தார் கடாபி. மேலும் கான்டலீசா ரைஸ் மீது தான் காதல் கொண்டிருந்ததையும் அதன் மூலம் அவர் வெளிப்படுத்தியிருந்தார்.

27 - பிரேசில் நாட்டின் அமேசான் ஆற்றின் கீழே 4 கி.மீ., ஆழத்தில் மற்றொரு ஆறு ஒடுவதை, விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.

28 - சிங்கப்பூர் அதிபர் பதவிக்கு நடந்த தேர்தலில் தற்போதைய அதிபர் நாதன் மற்றும் ஆளுங்கட்சியின் ஆதரவு பெற்ற டோனி டேன் வெற்றி பெற்றார். இருப்பினும் வெறும் 7269 வாக்கு வித்தியாசத்தில்தான் இவர் வென்றார்.

30 - குடிபோதையில் கார் ஓட்டயதற்காக அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் தந்தையின் ஒன்றுவிட்ட சகோரர் அதாவது சித்தப்பா ஆன்யாங்கோ ஒபாமா கைது செய்யப்பட்டார்.

31 -நைஜீரியாவில் கிறிஸ்தவர்களுக்கும், முஸ்லீம்களுக்கும் இடையேயான மோதலில், துப்பாக்கி சூடு நடத்தியதில், 20 பேர் இறந்தனர்.

செப்டம்பர்

13 - பிரேசிலில் நடந்த மிஸ் யுனிவர்ஸ் போட்டியில், அங்கோலா அழகி லைலா
லோபஸ் முடி சூட்டப்பட்டார்.

25 - நேபாளத்தில் நடந்த விமான விபத்தில் திருச்சியைச் சேர்ந்த என்ஜீனியர்கள் 8 பேர் உள்பட 19 பேர் கொல்லப்பட்டனர். எவரெஸ்ட் சுற்றுப்பயணமாக சென்றபோது மலைச் சிகரத்தில் விமானம் மோதி விபத்துக்குள்ளானது.

அக்டோபர்

4 - குவைத்தில் நடந்த எண்ணெய் நிறுவன தீவிபத்தில் 4 தமிழர்கள் உயிரிழந்தனர்.

6 - ஆப்பிள் நிறுவன அதிபர் ஸ்டீவ் ஜாப்ஸ் புற்றுநோய்க்குப் பலியானார்.

7 - டெல்லி உயர்நீதிமன்ற வளாக வெடிகுண்டுச் சம்பவத்தின் முக்கியக் குற்றவாளியான வங்கதேச யுனானி மருத்துவ மாணவர் வாசிம் அக்ரம் வங்கதேசத்தில் கைது செய்யப்பட்டு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார்.

8 - இலங்கையில் ஆளுங்கட்சியினருக்குள் ஏற்பட்ட மோதலில் ராஜபக்சேவின் ஆலோசகர் உள்பட 4 பேர் கொல்லப்பட்டனர்.

20 - லிபியாவை கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்டிப்படைத்து வந்த அதிபர் மும்முர் கடாபியின் கதை முடிவுக்கு வந்தது. லிபியப் புரட்சிப் படையினரிடம் சிக்கிய அவர் கொடூரமாக கொல்லப்பட்டார். சொந்த ஊரான ஷிர்டேவில், சாக்கடைக் குழாய்க்குள் பதுங்கியிருந்த அவரை தெருவில் இழுத்து வந்து அடித்தும், துப்பாக்கியால் இடித்தும், பின்னர் கொடூரமாக சுட்டும் கொன்றனர் புரட்சிப் படையினர்.

22 - காத்மாண்டு அருகே நடந்த மரப்பாலம் அறுந்து விழுந்த விபத்தில் சென்னையைச் சேர்ந்த மாணவி பிளாரன்ஸ் உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

31 - உலக மக்கள் தொகை 700 கோடியாக உயர்ந்தது.

நவம்பர்

10 - சர்வதேச தீவிரவாதியாக அமெரிக்காவால் அறிவிக்கப்பட்ட தாவூத் இப்ராகிம் மரணத்துடன் போராடி வருவதாக தகவல்கள் வெளியாகின.

- மும்பையில் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதி கசாப்பை தூக்கிலிட வேண்டும் என்று பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் தெரிவித்தார்.

17 - முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை சோதனை என்ற பெயரில் அவமானப்படுத்திய நியூயார்க் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

18 - இந்தோனேசியாவில் நடந்த ஆசியான் மாநாட்டின்போது அமெரிக்க அதிபர் ஒபாமா, சீன பிரதர் வென் ஜியாபோ ஆகியோரை பிரதமர் மன்மோகன் சிங் சந்தித்துப் பேசினார்.

டிசம்பர்

1 - பெண்களை வாகனங்களை ஓட்ட அனுமதித்தால் சவூதி அரேபியாவில் கன்னித்தன்மையுள்ள பெண்களைப் பார்க்க முடியாது என்று அந்நாட்டு மத சபை எச்சரிக்கை விடுத்தது.

- அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினர் பாகிஸ்தான் ராணுவ நிலைகளைத் தாக்கினால், பதிலடி கொடுக்க மேலிடத்து உத்தரவுக்காக காத்திருக்கத் தேவையில்லை என்று பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி அஸ்பாக் பர்வேஸ் கயானி அதிரடி உத்தரவிட்டார்.

- விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் ஆண்டன் பாலசிங்கத்தை சமாதான நடவடிக்கைகளில் இருந்து ஓரங்கட்டவே விடுதலைப்புலிகள் முயற்சி செய்கின்றனர் என்று இலங்கை அமைச்சர் மிலிந்தா மொரகொடா தெரிவித்ததாக கடந்த 2002ம் ஆண்டு அக்டோபர் மாதம் அப்போதைய அமெரிக்க தூதர் அஸ்லிவில்ஸ் அனுப்பிய கேபிள் தகவலை விக்கிலீக்ஸ் வெளியிட்டது.

4 - அமெரிக்காவின் ட்ரோன் விமானத்தைக் கைப்பற்றியதாக ஈரான் ராணுவம் அறிவித்தது.

- பாகிஸ்தானின் எச்சரிக்கையைத் தொடர்ந்து ஷம்சி விமான தளத்தை அமெரிக்கப் படையினர் காலி செய்யத் தொடங்கினர்.

- 84 வயதான ஒரு பாட்டியை அவர் அணிந்திருந்த பாண்டீஸ் உள்ளிட்ட உடைகளை கழற்றி அமெரிக்க விமான நிலைய அதிகாரிகள் சோதனையிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

- ரஷ்ய நாடாளுமன்றத்தில் பிரதமர் விலாடிமிர் புதினின் கட்சிக்குப் பெரும் சரிவு ஏற்பட்டது.

5 - எல்லை தாண்டிய இந்திய குரங்கு ஒன்றை பாகிஸ்தான் சிறைபிடித்து அங்குள்ள மிருகக்காட்சி சாலையில் அடைத்தது.

6 - ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூல் மற்றும் மஸார் இ ஷெரீப் ஆகிய இரு நகரங்களில் நடந்த இரட்டை குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 50 பேர் கொல்லப்பட்டனர்.

- ரஷ்யாவில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் விளாடிமீர் புடினின் ஐக்கிய ரஷ்ய கட்சிக்கு பெரும் சரிவுடன் மீண்டும் ஆட்சியைப் பிடித்தது.

16 - ரஷ்யா சென்றார் பிரதமர் மன்மோகன் சிங். அங்கு ரஷ்ய அதிபர் மெத்வதேவை சந்தித்துப் பேசினர். அப்போது கூடங்குளம் அணு மின் நிலையம் மூடப்பட மாட்டாது. திட்டமிட்டபடி சில வாரங்களில் கூடங்குளம் அணு மின் நிலையம் இயங்கத் தொடங்கும் என்றும் அவர் அறிவித்தார்.

18 - பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட பயங்கர புயல் வெள்ளத்தில் சிக்கி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

- ரஷ்ய நாட்டின் வடமேற்குப் பகுதியில் எண்ணெய் கிணறு ஒன்றில் நிகழ்ந்த விபத்தில் 53 பேர் உயிரிழந்தனர்.

19 - வட கொரிய தலைவர் கிம் ஜாங் இல் மரணமடைந்தார்.

23 - மியான்மர் ஜனநாயக தேசிய லீக் கட்சித் தலைவர் ஆங்சான் சூகி நோபிடாவில் உள்ள தேர்தல் அலுவலகத்திற்கு சென்று தனது கட்சியை பதிவு செய்தார். இதன் பின்னர் முதன்முறையாக நாடாளுமன்றத்திற்குள் சென்று அனைவரையும் சந்தித்து உரையாடினார்.

- நியூசிலாந்தின் இரண்டாவது பெரிய நகரமான கிரைஸ்ட்சர்ட் நகரில் அடுத்தடுத்து இரண்டு முறை கடும் நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.

25 -பாகிஸ்தான் தகவல் அமைச்சர் பிர்தௌஸ் ஆஷிக் அவான் எந்தவித காரணமும் கூறாமல் திடீர் என்று தனது பதவியை ராஜினாமா செய்தார். அமைச்சரவைக் கூட்டத்தின்போது அழுதபடியே தனது ராஜினாமா முடிவை பிரதமரிடம் அவர் தெரிவித்தார்.

- கிறிஸ்துமஸ் தினத்தன்று ஹவாய் தீவில் நடந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் ஒரு இளம் தம்பதி தங்களின் 8 மாதக் குழந்தையுடன் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தபோது அக்குழந்தை ஒபாமா வாயில் விரலை விட்டு ஆட்டியது கலகலப்பை ஏற்படுத்தியது.

28 - இந்துக்களின் புனித நூலான பகவத் கீதைக்கு தடைவிதிக்கக் கோரும் மனுவை தள்ளுபடி செய்வதாக ரஷ்யாவின் சைபீரிய நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

2011ல் இந்தியா

ஜனவரி

1- தபால் நிலையங்கள் மூலம் பிறப்பு இறப்பு சான்றிதழ், ஓய்வூதியம் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்படும் என தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் கபில் சிபல் அறிவித்தார்.

- உல்பா அமைப்பின் தலைவரான அரவிந்த ராஜ்கோவா விடுதலை செய்யப்பட்டார்.

- நித்தியானந்தாவை அவரது ஆசிரமத்தில் சந்தித்து தனித் தனியாக சந்தித்து ஆசி பெற்றனர் நடிகைகள் ஜூஹி சாவ்லா, ரஞ்சிதா, டிவி நடிகை மாளவிகா ஆகியோர்.

2 - சிறுமியைக் கற்பழித்து அவர் மீது பொய் வழக்கு போட்ட உ.பி., பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ. நரேஷ் திவிவேதி கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

- நாடாளுமன்ற பொதுக் கணக்குக் கமிட்டி முன்பு பிரதமர் மன்மோகன்சிங் ஆஜராகக் கூடாது. இதுதொடர்பாக அவர் எங்களிடம் ஆலோசனை கேட்கவில்லை என்று நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறினார்.

- சிவில் உரிமை ஆர்வலர் பினாயக் சென்னுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதைக் கண்டித்து ஒரு வார கால எதிர்ப்பு வாரத்தை சட்டிஸ்கரில் மாவோயிஸ்டுகள் தொடங்கினர்.

- இங்கிலாந்தின் டெய்லி டெலிகிராப் நடத்திய உலகின் 10 ஈகோ படைத்த விளையாட்டு வீரர்கள் பட்டியலில் இந்தியாவின் யுவராஜ் சிங் இடம் பிடித்தார்.

3 - சிட்டி வங்கி மேலாளர் சிவராஜ் பூரி வாடிக்கையாளர்களை மோசடியாக ஏமாற்றி ரூ. 400 கோடி அளவுக்கு சுருட்டிய மிகப் பெரிய ஊழல் வழக்கில் ஹீரோ குழும தலைமை நிதி அதிகாரி சஞ்சய் குப்தா கைது செய்யப்பட்டார்.

- ஆருஷி கொலை வழக்கை மறு விசாரணைக்கு விட காஸியாபாத் சிபிஐ கோர்ட் மறுத்தது.

- உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கேஜி பாலகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு புகார் குறித்து விசாரணை நடத்த கேரள முதல்வர் அச்சுதானந்தன் உத்தரவிட்டார்.

6 - குவாத்ரோச்சிக்கு எதிரான போபர்ஸ் வழக்கை கைவிடுவது என்ற முடிவில் மாற்றமில்லை என்று சிபிஐ கோர்ட்டில் சிபிஐ தெரிவித்தது.

14 - சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரஜோதி தரிசனத்தைக் கண்டு விட்டு திரும்பிய ஐயப்ப பக்தர்கள் புல்மேடு என்ற இடத்தில் ஏற்பட்ட பெரும் நெரிசலில் சிக்கினர். இதில் தமிழக பக்தர்கள் உள்பட 106 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

20 - புதுச்சேரி முன்னாள் முதல்வர் ரங்கசாமி தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.

21 - கர்நாடக முதல்வர் எதியூரப்பா மீது வழக்கு தொடர மாநில ஆளுநர் எச்.ஆர்.பரத்வாஜ் அனுமதி வழங்கி பரபரப்பை ஏற்படுத்தினார்.

24 - ஊழல் புகாரில் சிக்கிய காமன்வெல்த் போட்டி அமைப்புக் குழுவின் தலைவர் சுரேஷ் கல்மாடி அந்தப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார்.

25 - காமன்வெல்த் ஊழல் வழக்கில் சுரேஷ் கல்மாடி கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.

27 - கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் புதுப்பிக்கும் பணிகள் முடிவடையாததால் அங்கு நடைபெறுவதாக இருந்த உலகக்கோப்பைப் போட்டி ரத்து செய்யப்படுவதாக ஐசிசி அறிவித்தது.

- தூத்துக்குடி துறைமுகத்திற்கு கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் பெயரை சூட்ட மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

31 - எகிப்தில் வெடித்த கலவரத்தைத் தொடர்ந்து அங்கு சிக்கியிருந்த 300 இந்தியர்கள் விமானம் மூலம் இந்தியா அழைத்து வரப்பட்டனர்.

- 2 ஜி முறைகேடு குறித்த தனது விசாரணை அறிக்கையை நீதிபதி சிவராஜ் பாட்டீல் மத்திய அரசிடம் ஒப்படைத்தார்.

- 2ஜி விவகாரம் தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவிடம் 3 வது முறையாக 9 மணி நேரம் சிபிஐ விசாரணை நடத்தியது.

- காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் தொகுதிப் பங்கீடு குறித்து கருணாநிதி பேசினார். பிரதமர் மன்மோகன் சிங்கையும் சந்தித்துப் பேசினார்.

- சபரிமலையில் மகரஜோதியானது மனிதர்களால்தான் ஏற்றப்படுகிறது என்று திருவாங்கூர் தேவஸ்தானம் அறிவித்தது.

பிப்ரவரி

1 - ரஞ்சிதாவுடன் படுக்கை அறையில் இருப்பது போன்ற வீடியோவை வெளியிடாமல் இருக்க ரூ. 100 கோடி தர வேண்டும் என்னிடம் பேரம் பேசப்பட்டதாக நித்தியானந்தா கூறினார்.

2 - முன்னாள் மத்திய அமைச்சர் ராசா, 2ஜி ஊழல் வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்டார்.

6 - தனது பிரஜா ராஜ்ஜியம் கட்சியை காங்கிரஸுடன் இணைப்பதாக டெல்லியில் நடிகர் சிரஞ்சீவி அறிவித்தார்.

7- இஸ்ரோ நிறுவனம், தேவாஸ் நிறுவனத்திற்கு எஸ் பாண்ட் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றைகளை வழங்கியதில் ரூ. 2 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக சிஏஜி பரபரப்புக் குற்றச்சாட்டை சுமத்தியது.

- அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் என்ற புதிய கட்சியை ரங்கசாமி தொடங்கினார்.

9 - 2ஜி ஊழல் வழக்கில் ஸ்வான் நிறுவன அதிபர் சாஹித் உஸ்மான் பல்வா கைது செய்யப்பட்டார்.

- இந்தியாவில் மக்கள் தொகைக் கணக்கெடுடுக்கும் பணி தொடங்கியது.

10 - குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலை இழிவாகப் பேசிய குற்றச்சாட்டைத் தொடர்ந்து ராஜஸ்தான் அமைச்சர் அமீன் கான் பதவி விலகினார்.

13 - 2ஜி வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஷோரிக்கு சிபிஐ சம்மன் அனுப்பியது.

14 - கர்நாடக பாஜக அரசுக்கு அளித்து வந்த ஆதரவை, 5 சுயேச்சை எம்.எல்.ஏக்கள் திரும்பப் பெற்றுக் கொண்டதைத் தொடர்ந்து அவர்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தது சரியே என்று கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

15 - முன்னாள் அமைச்சர் ராசா மீது மேலும் 2 வழக்குகளை சிபிஐ பதிவு செய்தது.

17 - சிபிஐ விசாரணைக்குப் பின்னர் சிபிஐ கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் ராசா, திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.

21 - தமிழகத்தில் மேல்சபையை அமைப்பதற்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்தது.

- மும்பை தீவிரவாதத் தாக்குதல் வழக்கில் பாகிஸ்தான் தீவிரவாதி கசாப்புக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை மும்பை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.

22 - குஜராத் மாநிலம் கோத்ராவில் ரயில் எரிக்கப்பட்டு பல அயோத்தி பக்தர்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் 31 பேர் குற்றவாளிகள் என குஜராத் மாநில சிறப்பு கோர்ட் தீர்ப்பளித்தது.

28 - 2ஜி ஊழல் விவகாரம் தொடர்பான முக்கிய ஆவணங்களைக் காணவில்லை என்று சிபிஐ தெரிவித்தது.

மார்ச்

1 - குஜராத் கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில், 11 பேருக்கு விரைவு நீதிமன்றம் மரண தண்டனையும், 20 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்தது.

3 - ஊழல் கண்காணிப்பு ஆணையர் பி.ஜே.தாமஸ் நியமனத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.

4 - இத்தாலிய தொழிலதிபர் குவாத்ரோச்சி மீதான வழக்கை வாபஸ் பெறுவதாக சிபிஐ அளித்த அறிக்கையை டெல்லி கோர்ட் ஏற்று வழக்கை வாபஸ் பெற அனுமதித்தது.

- முன்னாள் மத்திய அமைச்சர் அர்ஜூன் சிங் மரணமடைந்தார்.

7 - மருத்துவக் கல்லூரிகளில் நுழைவுத் தேர்வு நடத்த உச்சநீதிமன்றம், இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு அனுமதி அளித்தது.

- ஊழல் கண்காணிப்பு ஆணையர் பி.ஜே.தாமஸ் நியமனம் தொடர்பாக நடந்த தவறுகளுக்கு தான் பொறுப்பேற்பதாக பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்தார்.

- வெளிநாட்டு வங்கிகளில் ரூ. 40,000 கோடி கருப்புப் பணத்தைப் பதுக்கிய தொழிலதிபர் ஹசன் அலி பிடிபட்டார்.

10 - அரசியல் நடவடிக்கைகளிலிருந்து தான் ஓய்வு பெறுவதாக தலாய் லாமா அறிவித்தார்.

11- எம்.பிக்களுக்கான நாடாளுமன்ற தொகுதி நிதி ரூ. 5 கோடியாக அதிகரிப்படுவதாக நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி அறிவித்தார்.

14 - இந்திய அணு உலைகளின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய பிரதமர் மன்மோகன் சிங் உத்தரவிட்டார்.

22 - ஜூன் 30ம் தேதி முதல் 25 பைசா நாணயம் செல்லாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்தது.

31 - இந்திய மக்கள் தொகை 121 கோடியை எட்டியது.

ஏப்ரல்

2 - மும்பையில் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டின் இறுதிப் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்று 2வது முறையாக உலகக் கோப்பையை வென்றது. இறுதிப் போட்டியில் இலங்கையை அது வீழ்த்தியது.

- ஸ்பெக்ட்ரம் வழக்கில் ராசா உள்ளிட்டோர் மீது 80,000 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிக்கையை சிபிஐ, சிறப்பு சிபிஐ கோர்ட்டில் தாக்கல் செய்தது.

3 - ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் தொடர்பாக நீரா ராடியாவிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதேபோல ரத்தன் டாடாவும் விசாரிக்கப்பட்டார்.

4 - இந்திய கிரிக்கெட் அணிக்கு வழங்கப்பட்ட உலகக் கோப்பை அசல் அல்ல, நகல் என்று சர்ச்சை கிளம்பியது. ஆனால் உண்மையான கோப்பைதான் வழங்கப்பட்டதாக ஐசிசி அறிவித்தது.

5- டெல்லி ஜந்தர் மந்தரில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை அன்னா ஹஸாரே தொடங்கினார்.

8 - ஐபிஎல் போட்டிகள் சென்னையில் கோலாகலமாக தொடங்கின. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸை வென்றது.

9 - மத்திய அரசின் உத்தரவாதத்தை ஏற்று அன்னா ஹஸாரே தனது உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டார்.

16 - கருப்புப் பண முதலை அசன் அலிக்கு போலி பாஸ்போர்ட் பெற்றுத் தந்த புகாரின் பேரில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் இக்பால் சிங்குக்கு அமலாக்கப் பிரிவு சம்மன் அனுப்பியது.

- லோக்பால் சட்டத்தை உருவாக்குவது பரிந்துரைக்க அமைக்கப்பட்ட உயர் நிலைக் குழுவின் முதல் கூட்டம் டெல்லியில் நடந்தது.

17 - அசன் அலிக்கு போலி பாஸ்போர்ட் பெற்றுத் தர உதவிய விவகாரத்தில் சிக்கிய புதுவை துணை நிலை ஆளுநர் இக்பால் சிங் பதவியை ராஜினாமா செய்தார்.

18 - மேற்கு வங்க மாநில சட்டசபைக்கு நடந்த முதல் கட்ட பொதுத்தேர்தலில் 75 சதவீத வாக்குகள் பதிவாகின.

19 - பேட்மிண்டன் வீராங்கனைகள் குட்டைப் பாவாடை அணிந்துதான் விளையாட வேண்டும் என்ற சர்வதேச பேட்மிண்டன் அமைப்பின் உத்தரவை சலசலப்பை ஏற்படுத்தியது.

- அஸ்ஸாமில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனிதா மற்றும் அவரது மகன் ரிஷி குமார் ஆகியோர் கொல்லப்பட்டனர்.

20 - மருத்துவக் கல்லூரி மாணவர் நாவரசு ராகிங்கில் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஜான் டேவிட்டுக்கு விதிக்கப்பட்ட இரட்டை ஆயுள் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. மேலும், இந்த தண்டனையை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றத்துக்கும் அது கடும் கண்டனம் தெரிவித்தது.

21 - கருப்புப் பண விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. இத்தனை ஆண்டுகளாக தூங்கிக் கொண்டிருந்தீர்களா என்றும் அது காட்டமாக கேட்டது.

24 - சத்ய சாய்பாபா உடல் நலக்குறைவு காரணமாக புட்டபர்த்தியில் உள்ள சத்யசாய் உயர் அறிவியல் மருத்துவ கழக மருத்துவமனையில் மரணமடைந்தார். அவரது உடலுக்கு பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

25 - காமன்வெல்த் போட்டி ஊழல் வழக்கில் சுரேஷ் கல்மாடி பெரும் தாமதத்திற்குப் பின்னர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவரை காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கினர்.

- 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சிபிஐ 2வது குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது. அதில் கனிமொழி, சரத்குமார் ரெட்டி உள்ளிட்டோரின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன.

26 - இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பதவியிலிருந்து சுரேஷ் கல்மாடி நீக்கப்பட்டார்.

27 - 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுவின் வரைவு அறிக்கை கசிந்தது. அதில் ராசா, பிரதமர் அலுவலகம் உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

- இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக டங்கன் பிளட்சர்
நியமிக்கப்பட்டார்.

- மறைந்த சாய்பாபாவின் உடல் முழு அரசு மரியாதையுடன் இன்று காலை புட்டபர்த்தியில் உள்ள பிரசாந்தி நிலையத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

30 - அருணாச்சல் பிரதேச முதல்வர் டோர்ஜி காண்டு சென்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி காண்டு மரணமடைந்தார்.

மே

3 - சுரேஷ் கல்மாடியை திஹார் சிறையில் அடைக்க டெல்லி கோர்ட் உத்தரவிட்டது.

6 - அருணாச்சல் பிரதேசத்தின் புதிய முதல்வராக காம்லின் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

- தனக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்ட ரவீந்திரநாத் தாகூர் அமைதி விருதை ஏற்க மறுத்து விட்டார் அன்னா ஹஸாரே.

9 - அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தை மூன்றாகப் பிரித்து இந்துக்கள் மற்றும் முஸ்லீ்ம்களுக்கு வழங்க உத்தரவிட்ட அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.

11 - அமலாக்கப் பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்காக கனிமொழி ஆஜரானார்.

13 - மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலி்ல மமதா பானர்ஜி தலைமையிலான திரினமூல் காங்கிரஸுக்கு மாபெரும் வெற்றி கிடைத்தது. மமதா பானர்ஜி ஆட்சியைப் பிடித்தார். கேரளாவில் இடதுசாரி ஆட்சி அகற்றப்பட்டது, காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைப் பிடித்தது.

- நாடு முழுவதும் என்டோசல்பானுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது.

14 - கர்நாடகத்தில் 16 எம்.எல்.ஏக்களை சட்டசபை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தது செல்லாது என்று உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்தது.

15 - கர்நாடக பாஜக அரசை டிஸ்மிஸ் செய்து குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு ஆளுநர் எச்.ஆர்.பரத்வாஜ் சிபாரிசு செய்து கடிதம் அனுப்பினார்.

16 - புதுச்சேரி முதல்வராக ரங்கசாமி பதவியேற்றார். அமைச்சர்கள் யாரும் பதவியேற்கவில்லை. அதிமுகவையும் கூட்டணியிலிருந்து அதிரடியாக கழற்றி விட்டார் ரங்கசாமி.

17 - தனது கட்சியின் 114 எம்.எல்.ஏக்களுடன் குடியரசுத் தலைவரை சந்தித்த கர்நாடக முதல்வர் எதியூரப்பா, தனது மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்ற ஆளுநரின் அறிக்கையை டிஸ்மிஸ் செய்யுமாறு கோரிக்கை விடுத்தார்.

18 - அஸ்ஸாம் முதல்வராக தருண் கோகாய் பதவியேற்றார். கேரள முதல்வராக உம்மன் சாண்டி பதவியேற்றார்.

20 - மேற்கு வங்க மாநில முதல்வராக முதல் முறையாக மமதா பானர்ஜி பதவியேற்றார். பதவியேற்பு விழாவுக்கு அவர் தொண்டர்களுடன் நடந்தே சென்றது அனைவரையும் பரபரப்பில் ஆழ்த்தியது.

23 - டெல்லி சென்ற திமுக தலைவர் கருணாநிதி திஹார் சிறையில் அடைக்கப்பட்ட தனது மகள் கனிமொழியை சந்தித்து கண்ணீர் மல்க ஆறுதல் கூறினார்.

ஜூன்

2 - கர்நாடக சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் எதியூரப்பா அரசு வெற்றி பெற்றது.

3 - புதுச்சேரியில் ரங்கசாமி உள்ளிட்ட புதிய எம்.எல்.ஏக்கள் பதவியேற்றுக் கொண்டனர்.

4 - தனது கோரிக்கைகள் அனைத்தையும் மத்திய அரசு ஏற்கும் வரை தனது உண்ணாவிரதப் போராட்டம் தொடரும் என பாபா ராம்தேவ் அறிவித்தார்.

5 - டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை டெல்லி போலீஸார் தடியடி நடத்தியும், கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியும் கலைத்தனர். ராம்தேவ் குண்டுக்கட்டாக தூக்கி அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டார். நாடு முழுவதும் இந்த செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

8 - கனிமொழிக்கு ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.

- பாபா ராம்தேவ் மீதான நடவடிக்கையைக் கண்டித்து டெல்லியில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தார் அன்னா ஹஸாரே. ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்றாவிட்டால் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிக்கப் போவதாகவும் அவர் எச்சரித்தார்.

10 - 7வது நாளாக தனது உண்ணாவிரதத்தைத் தொடர்ந்த பாபா ராம்தேவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

11 - தனது 9 நாள் உண்ணாவிரதத்தை பாபா ராம்தேவ் முடித்துக் கொண்டார்.

12 - ஊழலுக்கு எதிரான எனது போராட்டத்திற்கு அரசியல் சாயம் பூச வேண்டாம் என்று சோனியா காந்திக்கு எழுதிய கடிதத்தில் அன்னா ஹசாரே கேட்டுக்கொண்டார்.

20 - கனிமொழியின் ஜாமீன் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

27 - உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலின் பாதாள அறைகள் திறந்து பார்க்கப்பட்டன. மொத்தம் உள்ள 6 அறைகளில் ஐந்து அறைகளில் குவியல் குவியலாக வைரம் வைடூரியம், தங்க வெள்ளி நகைகள் குவிந்து கிடந்தது. இவற்றின் மதிப்பு ஒன்றரை லட்சம் கோடி இருக்கலாம் என்று வெளியான தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஜூலை

4 - தெலுங்கானா தனி மாநிலம் கோரி காங்கிரஸ், தெலுங்குதேசம் கட்சிகளைச் சேர்ந்த 87 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்தனர்.

6 - டெல்லியில் முதல்வர் ஜெயலலிதா, திட்டக் கமிஷன்துணைத் தலைவர் எம்.எஸ்.அலுவாலியா ஆகியோர் இடையிலான ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் தமிழகத்திற்கு ரூ 23,535 கோடி திட்ட ஒதுக்கீடு செய்து அறிவிக்கப்பட்டது.

- ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் சிபிஐ வளையத்தின் கீழ் இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் சிபிஐ அறிக்கை தாக்கல் செய்தது.

7 - சிபிஐ விசாரணை வளையத்தின் கீழ் இருப்பதாக தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் பதவியிலிருந்து தயாநிதி மாறன் விலகினார்.

- திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலின் 6வது ரகசிய அறையைத் திறக்க உச்சநீதி்மன்றம் இடைக்காலத் தடை விதித்தது.

10 - உ.பியில் கல்கா ரயில் தடம்புரண்டதில் 37 பயணிகள் கொல்லப்பட்டனர்.

12 - மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யபப்பட்டது. புதிய அமைச்சர்களாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெயந்தி நடராஜன் உள்ளிட்ட 8 பேர் பதவியேற்றனர். தயாநிதி மாறன், எம்.எஸ்.கில், முரளி தியோரா உள்பட 7 பேர் நீக்கப்பட்டனர்.

13 - மும்பை நகரில் 3 இடங்களில் அடுத்தடுத்து நடந்த வெடிகுண்டு சம்பவங்களில் 22 பேர் கொல்லப்பட்டனர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

- ஜெகன்மோகன் ரெட்டியி்ன் சொத்துக்கள் குறித்து சிபிஐ விசாரணைக்கு ஆந்திர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

14 - மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக பிரதீப்குமார் பதவியேற்றார்.

20 - சமச்சீர் கல்வி தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்தது.

26 - ஸ்பெக்ட்ரம் வழக்கில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தையும் சாட்சியாக சேர்க்க வேண்டும் என்று சிபிஐ கோர்ட்டில் முன்னாள் அமைச்சர் ராசா கோரிக்கை விடுத்தார்.

29 - டெல்லியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அன்னா ஹஸாரேவுக்கு அனுமதி தர முடியாது என்று டெல்லி காவல்துரை மறுத்தது.

31 - ஊழல் புகார்களால் பெரும் நெருக்கடிக்குள்ளான கர்நாடக முதல்வர் எதியூரப்பா, கட்சியுடன் நடைபெற்ற கடைசிக்கட்ட மோதலுக்குப் பின்னர் பணிந்து தனது பதவியிலிருந்து விலகினார். ஆதரவாளர்களுடன் ஆளுநர் மாளிகைக்கு ஊர்வலமாகப் போய் ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.

ஆகஸ்ட்

8 - திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில் பாதாள அறைகளில் பொற்குவியல் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து மன்னர் குடும்பத்தின் உத்தரவின் பேரில் தேவ பிரஸ்னம் பார்க்கப்பட்டது. அதில் அபசகுனம் நடந்ததற்கான அறிகுறிகள் தென்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

16 - காலவரையற்ற உண்ணாவிரதம் இருப்பதற்காக டெல்லி வந்து அடுக்குமாடிக் குடியிருப்பில் தங்கியிருந்த அன்னா ஹஸாரேவை டெல்லி போலீஸார் அதிரடியாக அதிகாலையில் வந்து கைது செய்து திஹார் சிறையில் போய் அடைத்து விட்டனர். இது பெரும் அதிர்ச்சி அலைகளையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. இதையடுத்து இரவு அவர் விடுதலை செய்யப்பட்டார்.

19 - டெல்லி ராம்லீலா மைதானத்தில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை அன்னா ஹஸாரே தொடங்கினார்.

27 -லோக்பால் மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்போது அன்னா ஹஸாரே குழுவினரின் மூன்று பரிந்துரைகள் சேர்க்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து ஹஸாரே தனது உண்ணாவிரதத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தார்.

செப்டம்பர்

1 - கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி செளமித்ரா சென் மீதான இம்பீச்மென்ட் தீர்மானம் ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

5 - சுரங்க ஊழலில் ரெட்டி சகோதரர்களில் ஒருவரான ஜனார்த்தன ரெட்டி சிபிஐயால் கைது செய்யப்பட்டு ஆந்திர சிறையில் அடைக்கப்பட்டார்.

6 - நம்பிக்கை வாக்கெடுப்பின்போது எம்.பிக்கள் வாக்களிக்க லஞ்சம் கொடுத்த வழக்கில் முன்னாள் சமாஜ்வாடி கட்சி தலைவர் அமர்சிங்கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.

7 - டெல்லி உயர்நீதிமன்ற வளாகத்தில் நடந்த பயங்கர குண்டுவெடிப்பில் 11 பேர் கொல்லப்பட்டனர்.

8 - அமெரிக்க சிகிச்சைக்குப் பின்னர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி டெல்லி திரும்பினார்.

11 - உத்தரகாண்ட் முதல்வர் ரமேஷ் பொக்ரியால் ஊழல் புகார் காரணமாக பதவி விலகினார். புதிய முதல்வராக பி.சி.கந்தூரி பதவியேற்றார்.

12 - சொத்துக் குவிப்பு வழக்கில், முதல்வர் ஜெயலலிதா பெங்களூர் கோர்ட்டில் ஆஜராகியே தீர வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

13 - லண்டனில் நடந்த ஐசிசி விருதுகள் விழாவை, இந்திய கிரிக்கெட் அணியினர் ஒட்டுமொத்தமாக புறக்கணித்தனர்.

16 - முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் அசாருதீனின் மகன் அயாசுதீன், மோட்டார் சைக்கிளை படு வேகமாக ஓட்டிச் சென்று விபத்துக்குள்ளாகி உயிரிழந்தார்.

- இந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் ஒரு நாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். கடைசியாக நடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியி்ல அவர் 69 ரன்கள் குவித்தார்.

17 - சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி குஜராத் முதல்வர் நரேந்திர மோடி 3 நாள் உண்ணாவிரதத்தை அகமதாபாத்தில் தொடங்கினார்.

18 - டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சிக்கி இந்தியாவில் 90 பேரும், நேபாளத்தில் 6 பேரும் பலியானார்கள்.

26 - முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் வீட்டில் முறைகேடாக 300க்கும் மேற்பட்ட தொலைபேசி இணைப்புகள் கொடுக்கப்பட்டது குறித்து விசாரிக்கப்படும் என சிபிஐ தெரிவித்தது.

அக்டோபர்

4 - 5 மாநில தேர்தலில் காங்கிரஸுக்கு எதிராக பிரசாரம் செய்யப் போவதாக அன்னா ஹஸாரே அறிவித்தார்.

6 - ரூ. 2276 விலை மதிப்புள்ள இந்தியாவின் விலை மலிவு கம்ப்யூட்டரை மத்திய அமைச்சர் கபில் சிபல் வெளியிட்டார்.

10 - கசாப்புக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை நிறுத்தி வைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

11 - கருப்புப் பணத்தை ஒழிக்க வலியுறுத்தி பாஜக மூத்த தலைவர் அத்வானி பீகாரில் விழிப்புணர்வு ரத யாத்திரையைத் தொடங்கினார்.

20 - சொத்துக் குவிப்பு வழக்கில் முதல் முறையாக பெங்களூர் தனி நீதிமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா ஆஜராகி நீதிபதியின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். ஜெயலலிதாவுக்காக சிறப்பு கோர்ட் தற்காலிகமாக பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்திற்கு மாற்றியமைக்கப்பட்டது.

22 - திமுக தலைவர் கருணாநிதி டெல்லி சென்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினார். சோனியா காந்தியையும் சந்தித்துப் பேசினார். மகள் கனிமொழி குறித்து இவர்களுடன் விவாதித்தார்.

28 - ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ஷியாமளா என்ற பெண் மூணாறில் உள்ள விடுதியில் கொல்லப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். அவருடன் தங்கியிருந்த அவரது காதல் கணவர், ஷியாமாளவைக் கொலை செய்த பின்னர் ஈரோடு திரும்பி தனது சொந்த ஊரானன கோபிச்செட்டிப்பாளையம் அருகே தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தனது மனைவி குறித்து அவர் தெரிவித்த பரபரப்புக் குற்றச்சாட்டுக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

நவம்பர்

3 - டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கனிமொழியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது.

5 - டெல்லி உயர்நீதிமன்றத்தில் கனிமொழியின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

7 - தனது குழுவை மாற்றியமைக்கப் போவதாக அன்னா ஹஸாரே தெரிவித்தார்.

- காஷ்மீர் மற்றும் வட மாநிலங்களில் 6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

8 - ஹரித்வாரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 16 பக்தர்கள் பலியானார்கள்.

9 - ஊழலை ஒழிக்க வெறும் வாய்ப்பேச்சு பயன்படாது என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அன்னா ஹஸாரே குழுவினரை சாடினார்.

11 - 2ஜி வழக்கில் சிபிஐ விசாரணை முடிந்ததா என்பதை தெளிவாக்கும் வரை சாட்சிகள் குறுக்கு விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என்ற முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவின் கோரிக்கையை சிபிஐ சிறப்பு கோர்ட் நிராகரித்தது.

- ஓடும் ரயிலிலிருந்து இளம் பெண்ணை கீழே தள்ளி பின்னர் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்த தமிழக வாலிபர் கோவிந்தசாமிக்கு திருச்சூர் கோர்ட் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

12 - கூடங்குளம் அணு மின் நிலைய எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு எப்படி நிதி வருகிறது என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

13 - முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை அமெரிக்க விமான நிலையத்தில் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அவமரியாதை செய்த செயலுக்கு இந்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்தது. இதையடுத்து அமெரிக்க அரசு மன்னிப்பு கேட்டது.

- இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வின் தனது பள்ளித் தோழி ப்ரீத்தியை சென்னையில் மணந்து கொண்டார்.

15- இந்தியாவில் இதுவரை முடிவு எடுக்கப்படாமல் உள்ள தூக்குத் தண்டனைக் கைதிகளின் கருணை மனு விவரங்களை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

- அக்னி-4 ஏவுகணை வெற்றிகரமாக ஏவி பரிசோதிக்கப்பட்டது.

- உ.பி. மாநிலத்தை நான்காக பிரிக்கும் தீர்மானம் உ.பி. மாநில சட்டசபையில் முதல்வர் மாயாவதியால் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

15 - 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நாட்டுக்கு ஏற்பட்ட இழப்பு ரூ. 1.76 லட்சம் கோடிதான் என்று சிஏஜி வினோத் ராய் திட்டவட்டமாக தெரிவித்தார்.

- உ.பி மாநிலத்தை நான்காக பிரிக்கும் தீர்மானத்தை உ.பி. சட்டசபையில் முதல்வர் மாயாவதி கொண்டு வந்து ஓரிரு விநாடிகளில் அது குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது.

18 - தொலைத் தொடர்புத்துறை ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் சுக்ராமுக்கு சிபிஐ கோர்ட் 5 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. இதையடுத்து சுக்ராம் திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.

22 - சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர் தனி கோர்ட்டில் முதல்வர் ஜெயலலிதா ஆஜரானார்.

- டெல்லியில் மத்திய அமைச்சர் சரத்பவாரை ஹர்வீந்தர் சிங் என்ற இளைஞர் கன்னத்தில் பளார் என்று அறைந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

28 - ஸ்பெக்ட்ரம் வழக்கில் கனிமொழிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஜாமீன் அளித்தது.

29 - நீக்கப்பட்ட மக்கள் நலப் பணியாளர்களை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

30 - சில்லறை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவைக் கண்டித்து நாடு தழுவிய கடையடைப்புப் போராட்டத்தில் வர்த்தர்கள் ஈடுபட்டனர்.

டிசம்பர்

1 - முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக உள்ளளதாக கேரள அரசு பொய்ப் பிரசாரம் செய்து வருவதாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு புகார் தெரிவித்தது.

- இஷ்ரத் ஜகான் போலி எண்கெளன்டர் வழக்கை சிபிஐக்கு மாற்றி குஜராத் உயர் நீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இந்த வழக்கில் குஜராத் போலீசாரை நம்ப முடியவில்லை என்றும் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.

2 - முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக கேரள எம்.பிக்கள் பல நாட்களாக டெல்லியில் பிரச்சினை எழுப்பி வரும் நிலையில், இன்று அதிமுக எம்.பிக்கள் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினர்.

- கேரள முதல்வர் உம்மன் சாண்டி பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தி்த்து முல்லைப் பெரியாறு அணை அருகே புதிய அணை கட்ட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

- கிழிந்து போன ஷூவுக்குப் பதில் புதிய ஷூ வாங்க போதிய பணம் இல்லாததால், இந்தூர் கிரிக்கெட் ஸ்டேடியத்தை சுத்தம் செய்து ஊதியம் வாங்கி அதில் ஷூ வாங்கி உள்ளூர் கால்பந்து வீரர்கள் என்ற செய்தி வெளியானது.

3 - முல்லைப் பெரியாறு அணையை இடித்து விட்டு புதிய அணை கட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தி பெரியாறு அணைப் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட கேரள காங்கிரஸார் தமிழகப் பகுதியின் மதகை இடித்துப் போராட்டம் நடத்த முயன்று ரகளை செய்தனர்.

- மறைந்த முதல்வர் என்.டி.ராமாராவுக்குச் சொந்தமான வீட்டில் குடியிருந்து வந்த தனது சித்தி லட்சுமி பார்வதியை, என்.டி.ஆரின் மகன் ராமகிருஷ்ணா அதிரடியாக வெளியேற்றினார்.

4- கர்நாடக மாநிலம் பெல்லாரி சட்டசபைத் தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலில் பாஜக வேட்பாளரை எதிர்த்து சுயேச்சையாகப் போட்டியிட்ட ரெட்டி சகோதரர்களின் தீவிர ஆதரவாளரான ஸ்ரீராமுலு மிகப் பெரிய வெற்றியைப் பெற்றார். பாஜக வேட்பாளர் காதிலிங்கப்பா 3வது இடத்திற்குத் தள்ளப்பட்டு டெபாசிட்டையும் பறி கொடுத்தார்.

5 - முல்லைப் பெரியாறு அணையைப் பாதுகாக்க உடனடியாக மத்திய பாதுகாப்புப் படையை அனுப்பி வைக்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு செய்தது.

- முல்லைப் பெரியாறு அணை உடைக்கப்பட்டால் சோவியத் யூனியன் போல இந்தியாவும் உடையும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எச்சரிக்கை விடுத்தார்.

- நிலநடுக்கம் குறித்த கேரளாவின் புகார் உண்மையா என்பதை அறிய முல்லைப் பெரியாறு அணையில் நேரடி ஆய்வு நடத்த உச்சநீதிமன்ற நிபுணர் குழு முடிவு செய்தது.

- தமிழகம், கேரளா இடையே முல்லைப் பெரியாறு அணை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், இரு மாநிலங்களுக்கும் தொடர்புள்ள பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டப் பாதைகளையும் அணைகளையும் தகர்க்கும் சதித் திட்டத்துடன் ஒரு கும்பல் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிக்குள் ஊடுறுவியுள்ளதாக பரபரப்புத் தகவல்கள் வெளியாகின.

- ராஜஸ்தானில் நடந்த ராணுவப் பயிற்சி நிகழ்ச்சியின்போது டி-90 பீரங்கியில் பயணித்து புதிய சாதனை படைத்தார் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல்.

6 - முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக கேரளாவிலும், தமிழகத்திலும் எல்லைப் பகுதியில் நிலவி வரும் போராட்டங்கள், போக்குவரத்துத் தடையால் ஐயப்ப பக்தர்கள்தான் கடும் பாதிப்பை சந்தித்தனர். இதனால் பல பக்தர்கள் சபரிமலைக்குப் போக விரும்பாமல் பாதியிலேயே திரும்பத் தொடங்கினர்.

8 - ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு எதிராக சாட்சியம் அளிக்கலாம் என்று சுப்பிரமணியம் சாமிக்கு டெல்லி சிபிஐ சிறப்பு கோர்ட் அனுமதி அளித்தது.

- சுரங்க முறைகேடு தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா மீது கர்நாடக லோக் ஆயுக்தா கோர்ட் வழக்குப் பதிவு செய்தது.

9- கொல்கத்தாவில் உள்ள அம்ரி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 93 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

11 - ஜன் லோக்பால் மசோதாவை வலியுறுத்தி டெல்லியில் அன்னா ஹஸாரே ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். பாஜக, இடதுசாரி தலைவர்கள் நேரில் வந்து ஆதரவு தெரிவித்தனர்.

12 - ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் 3வது குற்றப்பத்திரிக்கையை சிபிஐ தாக்கல் செய்தது.

13 - முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 120 அடியாக குறைக்க வேண்டும் என்ற கேரளாவின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.

14 - மேற்கு வங்க மாநிலம் ராம்புர் கிராமத்தில் கள்ளச்சாராயம் குடித்து 180 பேர் பரிதாபமாக பலியானார்கள்.

- முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக இடுக்கி மாவட்டத்தில் வசித்து வரும் தமிழர்கள் மீது மலையாளிகள் வெறித்தனமான தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து அங்கிருந்து நூற்றுக்கணக்கான தமிழர்கள் நடந்தே தமிழகத்திற்கு வந்து சேர்ந்தனர்.

18 - பெங்களூரில் நேற்று நடந்த தென் மாநில முதல்வர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட கேரள முதல்வர் உம்மன் சாண்டி, தமிழகத்தின் சார்பில் கலந்து கொண்ட நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து சிறிது நேரம் பேசினார்.

21 - இந்தியா அணுசக்தி கமிஷனின் முன்னாள் தலைவரும் மிகச்சிறந்த அணு விஞ்ஞானிகளில் ஒருவருமான பி.கே. ஐயங்கார் உடல்நலக்குறைவால் மும்பையில் காலமானார்.

22 - லோக்சபாவில் லோக்பால் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

23 - முல்லைப் பெரியாறு அணையில் நிலநடுக்கம் அபாயம் இருப்பதாக கேரள அரசு கூறி வருவது சரியானதா, இல்லையா என்பதை ஆராய்வதற்காக உச்ச நீதிமன்றம் அமைத்த உயர் அதிகாரி குழுவின் நிபுணர்கள் இரண்டு பேர் இன்று நேரடி ஆய்வை தொடங்கினர்.

26 - முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் நியமித்த அவசர கால குழுவை நிறுத்தி வைத்திருப்பதாக தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியது.

- கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ். பங்காரப்பா சிறுநீரக செயலிழப்பால் இன்று அதிகாலை மரணம் அடைந்தார்.

27 - முல்லைப் பெரியாறு அணையை இடித்து விட்டு புதிய அணை கட்டத் தேவையில்லை என்று கூறிய கேரள முல்லைப் பெரியாறு அணை எதிர்ப்புப் போராட்டக் குழுத் தலைவர் சி.பி.ராயை அந்தக் குழுவினர் தலைவர் பதவியிலிருந்து நீக்கினர்.

- மக்களவையில் நாள் முழுவதும் நடந்த சூடான விவாதத்துக்கு பின், நள்ளிரவில் கடும் கூச்சல் குழப்பத்துக்கும், எதிர்க்கட்சிகளின் வெளிநடப்புக்கும் இடையே குரல் ஓட்டெடுப்பு மூலம் லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட்டது.

- ஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் மசோதா வேண்டி சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே இன்று 3 நாள் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். ஆனால் கூட்டம் வரவில்லை.இதனால் அன்னா தரபப்ு அதிர்ச்சி அடைந்தது.

- அன்னா ஹசாரே நாடாளுமன்றத்தை அவமதிப்பதாகக் கூறி மகாராஷ்டிராவைச் சேர்ந்த சம்தா தள் என்னும் கட்சி அவருக்கு மும்பையில் கருப்புக் கொடி காட்டியது.

28 - மக்களவையில் நிறைவேற்றப்பட்ட லோக்பால் மசோதா குறித்து கடும் அதிருப்தியைத் தெரிவித்த அன்னா ஹஸாரே, மக்கள் ஆதரவு குறைந்ததாலும், உடல்நிலை மிகவும் மோசமடைந்ததாலும் இன்றே தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்.

- திருபாய் அம்பானியின் 80-வது பிறந்ததினத்தையொட்டி குஜராத் மாநிலம் சொந்த கிராமமான சோர்வாட் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முகேஷ் மற்றும் அனில் அம்பானிகள் இணைந்து பங்கேற்றனர். கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் இந்த நிகழ்ச்சியின் மூலம் சந்தித்துக் கொண்டனர்.

29 - லோக்சபாவில் தப்பிப் பிழைத்த லோக்பால் மசோதா இன்று ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டு நாள் முழுவதும் நடத்தப்பட்ட சூடான விவாதத்திற்குப் பின்னர் பல்வேறு குழப்பங்களுடன் நிறைவேற்றப்படாமல் போனது.

30 - தமிழகத்திற்கும், புதுச்சேரிக்கும் இடையே புதுச்சேரி அருகே தானே புயல் கரையைக் கடந்தது. இந்த புயலில் சிக்கி புதுச்சேரி மாநிலம் உருக்குலைந்தது. கடலூர் மாவட்டத்திலும் பெரும் சேதம் ஏற்பட்டது.