Thursday, August 30, 2012

வெள்ளிக்கிழமை வானில் அரிதாக தோன்றவுள்ள நீல நிலா : காணத் தயாராகுங்கள்!


நாளை மறுதினம், ஆகஸ்ட் 31 வெள்ளிக்கிழமை வானில் தோன்றவுள்ள பூரண சந்திரன் 'Blue Moon' என அழைக்கப் படுகின்றது.
இதற்காக, வானில் நீல நிறத்தில் சந்திரன் தோன்றப்போகிறது, காண்பதற்கு தயாராக இருப்போம் என எதிர்பார்த்தால் நீங்கள் ஏமாறலாம்.

ஒரு மாதத்தில் இரண்டு தடவை பூரண சந்திரன் வானில் தோன்றினால் இரண்டாவது தடவை ஏற்படும் பூரண சந்திரன் Blue Moonன் எனப்படுவது மரபு. அதாவது சந்திர நாள் காட்டியில் ஒரு சுற்று முடிந்து பூரண நிலவு அடுத்த முறை தோன்ற 29 நாட்கள் இடைவெளி உண்டு. ஆனால் ஒரு மாதத்தில் 30 அல்லது 31 நாள் இருப்பதனால் சில சமயங்களில் பெப்ரவரி தவிர்த்து (28 நாட்கள்) ஏனைய மாதங்களில் இரண்டு தடவை பௌர்ணமி அதாவது பூரண் நிலா வானில் தோன்றும் சந்தர்ப்பங்கள் வரும். அப்படி ஒரு நிகழ்வே இந்த ஆகஸ்ட் 31 இல் நிகழவுள்ளது.

ஏனெனில் ஆகஸ்ட் 2 ஆம் திகதி ஏற்கனவே ஒரு பூரண சந்திரன் வானில் தோன்றியிருந்தது. இப்படி ஒரே மாதத்தில் இரண்டு பௌர்ணமி ஏற்படும் நிகழ்வு சராசரியாக 2 1/2 வருடங்களுக்கு ஒரு முறையே ஏற்படும். இந்த அரிதான நிகழ்வே 'நீல நிலா' எனப்படும் Blue Moon என அழைக்கப் பட்ட போதும் நிஜமாகவே நீல நிறத்தில் சந்திரன் தோன்றும் சந்தர்ப்பங்கள் உண்டு. ஆனால் இவை பௌர்ணமியில் மட்டும் தான் நிகழும் என்ற கட்டாயமில்லை.

அதாவது எரிமலை வெடிப்பு, காட்டுத்தீ போன்ற அனர்த்தங்களால் காற்றில் தூசு துணிக்கைகள் நிறைந்து அதனால் சந்திரன் நிறம் மாறி நீல நிறத்தில் தென்படுவதும் உண்டு.
உதாரணமாக 1883 இல் இந்தோனேசியாவின் கிரகடோவா எரிமலை 100 மெகாடொன் அணுகுண்டுகளுக்கு இணையாக வெடித்து வளிமண்டலத்தை மூடிய புகை காரணமாக சூரியன் சிவப்பு நிறத்திலும் சந்திரன் நீல நிறத்திலும் தென்பட்டதை மக்கள் அவதானித்துள்ளனர்.

அண்மைக்காலத்தில் நீல நிற சந்திரன் தென்பட்ட சந்தர்ப்பங்களாக 1983 இல் மெக்ஸிக்கோவின் எல் சிச்சொன் எரிமலை வெடிப்பையும் 1980 இல் சென்ட் ஹெலென்ஸ் வெடிப்பையும், 1991 இல் பினாட்டுபோ வெடிப்பையும் கூறலாம்.

No comments:

Post a Comment