Sunday, May 20, 2012

மமதா ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு... கொடுத்ததும் நிறைவேற்றியதும் என்ன?

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் 34 ஆண்டுகால இடதுசாரி ஆட்சியை வீழ்த்திவிட்டு மமதா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றி ஓராண்டாகிவிட்டது. மேற்கு வங்கம் முழுவதும் இதற்கான கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடைபெற்று வருகின்றன.

மமதாவின் திரிணாமுல் காங்கிரஸைப் பொறுத்தவரையில், மேற்கு வங்க இளைஞர்களுக்கு மட்டுமல்ல.. ஒட்டுமொத்த மேற்கு வங்கத்துக்குமே கடந்த ஓராண்டில் பாராட்டும்படியான சேவையாற்றியிருக்கிறார் என்பது கருத்து.

மமாதாவும் கூட தாம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருவதாகவே கூறி வருகிறார். தமது தாயார் இறந்தபோதுகூட அலுவலகத்துக்கு வந்த நான் கடந்த ஓராண்டில் ஒருநாள் கூட ஓய்வு எடுத்ததே இல்லை என்கிறார்.

இருப்பினும் மமதாவைப் பொறுத்தவரையில் டாடாவுக்காக கையெழுத்திடப்பட்ட சிங்கூர் விளைநிலத்தை மீண்டும் ஒப்படைக்கப்படும் என்ற அவரது முதல் வாக்குறுதி இன்னமும் நிறைவேற்றப்படவில்லை என்பதுதான் முக்கியமானது. சட்ட ரீதியான சிக்கல்கள் இருப்பதால்தான் இந்த விவகாரம் இழுத்துக்கொண்டே போகிறது என்கிறார் மமதா. இதனால்தான் என்னவோ தமது அரசின் முதலாண்டு நிகழ்ச்சியில் இழப்பீடு கிடைக்காதோருக்கு மாதம் ரூ ஆயிரமும் ரூ2க்கு 1கிலோ அரிசியும் வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்.

இதேபோல் மேற்குவங்கத்தைப் பொறுத்தவரையில் மமதா முன்பு இருந்த மற்றொரு விவகாரம் டார்ஜிலிங் பிரச்சனை. டார்ஜிலிங் கவுன்சிலைக் கலைத்து புதிய கூடுதல் அதிகாரங்களைக் கொண்ட கவுன்சில் உருவாக்கப்படும் என்று அறிவித்திருந்தார். இன்னமும் மத்திய அரசு ஒப்புதல் கொடுக்காவிட்டாலும் அங்கு முழு அடைப்பு, போக்குவரத்து பாதிப்பு என்பதை ஓராண்டாக மூட்டை கட்ட வைத்திருக்கிறார் என்றே சொல்லலாம்.

ஆனால் மமதா பானர்ஜி, கேலிச் சித்திரங்களைக் கூட சகித்துக் கொள்ள முடியாமல் சிறைக்கு அனுப்பி வைக்கும் போக்கு அவரது சர்வாதிகாரத்தை வெளிப்படுத்தியது. ஆனால் மமதா அரசோ மக்களின் வரிப்பணத்தை பாழடிக்கிறது..ஆளும் கட்சியால் இடதுசாரித் தொண்டர்கள் குறிவைத்து தாக்கப்படுகின்றனர் என்று குற்றச்சாட்டுகளை அடுக்கிக் கொண்டே போகிறார் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் பிமன் போஸ்.

எளிமையானவராக தேசிய அரசியலில் தமக்கும் ஒரு இடம் இருக்கிறது என்பதை நிரூபித்துக் கொண்டவராக இருக்கும் மமதா பானர்ஜி நெகிழ்வுத் தன்மையோடு செயல்பட்டு தாம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதுதான் அவர் முன் உள்ள முதன்மையாக கடமையாக இருக்கிறது என்பதே அரசியல் பார்வையாளர்களின் கருத்து.

No comments:

Post a Comment