Friday, September 9, 2011

பதினாறு வகை காயுடன் பாயச விருந்து



கேரள மக்களின் பாரம்பரிய பண்டிகையான ஓணம் பண்டிகை தமிழ்நாட்டிலும் மலையாள மொழிபேசும் மக்கள் வாழும் ஊர்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

திருவோணம் தினத்தன்று பாதாள உலகத்தில் இருந்து மகாபலி மன்னன் மலையாள மக்களைக் காண வருகிறார் என்பது ஐதீகம். இதற்காக ஆவணி மாதம் ஹஸ்தம் நட்சத்திரம் தொடங்கி திருவோணம் வரை பத்து நாட்களும் வீடுகளில் அத்தப்பூ கோலமிட்டு விளக்கேற்றி மகாபலி மன்னரை வரவேற்க தயாராகின்றனர் மலையாள மக்கள்.

இன்றைக்கு திருவோணத்தை ஒட்டி சென்னையில் மலையாள மக்கள் வசிக்கும் பகுதிகளில் அதிகாலை முதலே ஓணம் பண்டிகை களை கட்டியது. வீடுகளை அலங்கரித்த மக்கள் அத்தப் பூ கோலமிட்டு அதன் மீது விளக்கேற்றி வழிபட்டனர். புத்தாடை அணிந்து கொண்டு உறவினர்களையும், நண்பர்களையும் அழைத்து சிறப்பு வாய்ந்த ஒணசத்ய எனப்படும் விருந்தளித்தனர்.

ஓணவிருந்து

தலைவாழை இலை பரப்பி அவியல், எரிசேரி, கூட்டு, வாழைக்காய் சிப்ஸ் உள்ளிட்ட காய்கறிகளும், இஞ்சிப்புளி, உப்பு, பப்படம் வைத்து பின்னர் சோறுடன் பருப்பும் நெய்யும் ஊற்றி முதல் ஈடு சாப்பிட பரிமாறினர். இதனையடுத்து கேரளாவின் சிறப்பு வாய்ந்த பூசனிக்காய் சாம்பார், தேங்காய் ரசம், ஆகியவையும் உண்டபின் பிரதமன் எனப்படும் பாயசம் பரிமாறினர். இதுவே திருப்தியாக இருக்கையில் மோர்க்குழம்பும் உண்டு விருப்பப்பட்டால் அதனையும் சாப்பிடலாம். அதுதான் உண்ட உணவு செரிமானம் ஆக இஞ்சிப்புளி வைக்கின்றனரே இதனுடன் இனிப்பும் கொடுத்து ஓணத்தை உற்சாகமாக பண்டிகையை கொண்டாடினர்.

கோவையில் கொண்டாட்டம்

மலையாள மக்கள் அதிகம் வசிக்கும் கோவையிலும் ஓணம் கொண்டாட்டம் களை கட்டியது. அதிகாலையிலேயே எழுந்து தங்களை காண வரும் மகாபலி மன்னரை வரவேற்கும் விதமாக வீடுகளில் அத்தப் பூ கோலமிட்டு அதன் மீது விளக்கேற்றி வழிபட்டனர். புத்தாடை அணிந்து கொண்டு கோலத்தைச் சுற்றி திருவாதிரை நடனமாடியும், ஊஞ்சல் கட்டி ஆடியும் உற்சாகமாக கொண்டாடினர்.

மக்களை காண வந்த மகாபலி

கேரளமாநிலத்தின் எல்லையில் உள்ள கன்னியாகுமரி, நாகர்கோவிலில் ஓணம் பண்டிகையை ஒட்டி பதினாறு வகை காய்களுடன் கூடிய விருந்து சமைத்து உறவினர்களுடன் உண்டு மகிழ்ந்தனர். பாரம்பரியம் மிக்க நடனம் ஆடியும் உற்றார் உறவினர்களுக்கு இனிப்புகளை கொடுத்தும் ஓணம் வாழ்த்துக்களை தெரிவித்தனர். மகாபலி மன்னரைப்போல வேடமணிந்தவர் வீடுதோறும் சென்று மகிழ்ச்சியுடன் வசிக்கும் மக்களுக்கு ஆசிர்வாதம் கூறியது சிறப்பம்சமாகும். ஓணம் பண்டிகையை ஒட்டி சென்னை, கோவை, குமரி, திருப்பூர் உள்ளிட்ட மலையாள மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் பத்து நாட்களும் ஓணம் பண்டிகை வசந்த விழாவாகவும் கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment