Saturday, August 20, 2011

இன்போசிஸ் நிறுவனத்திலிருந்து ஓய்வு பெற்றார் நாராயணமூர்த்தி

டெல்லி: இன்போசிஸ் நிறுவனர் என்.ஆர்.நாராயணமூர்த்தி இன்றுடன் நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றார். ஆகஸ்ட் 20ம் தேதியான நாளை அவருக்கு 65 வயது பிறக்கிறது. இதையடுத்து இன்றுடன் அவர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றார்.

நாளை அவர் தலைவர் பதவியை கே.வி.காமத்திடம் ஒப்படைக்கிறார். நாராயணமூ்ர்த்தியின் ஓய்வின் மூலம் இன்போசிஸ் நிறுவன வரலாற்றில் ஒரு மாபெரும் அத்தியாயம் முடிவுக்கு வந்து புதிய அத்தியாயம் பிறந்துள்ளது.

இந்தியாவின் 2வது மிகப் பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமாக இன்று இன்போசிஸ் விளங்குவதற்கு நாராயணமூர்த்தியின் பங்குமிகப் பெரியது.

1981 ம் ஆண்டு வெறும் 10,000 ரூபாய் முலீட்டில்-அதிலும் கூட பெரும்பாலான தொகை மனைவி சுதாவிடமிருந்து நாராயணமூ்ர்த்தி கடனாக வாங்கியதுதான்-இன்போசிஸ் நிறுவனத்தை புனேவில் தொடங்கினார் நாராயணமூர்த்தி. அப்போது அந்த நிறஉவனத்தில் 6 என்ஜீனியர்கள் மட்டுமே நாராயணமூர்த்தியுடன் இணைந்தனர்.

21 ஆண்டு காலம் இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனராகவும், தலைமை செயலதிகாரியாகவும் செயல்பட்டார் நாராயணமூர்த்தி. 2002ம் ஆண்டு மார்ச் மாதம் நந்தன் நிலகேனி தலைவர் பொறுப்புக்கு வந்தார். இருப்பினும் பின்னர் அவர் மத்திய அரசின் பணிக்குச் சென்று விட்டார்.

உலக அளவில் மிகச் சிறந்த தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களில் ஒன்றாக இன்று இன்போசிஸ் விளங்குகிறது. முதல் முறையாக அமெரிக்காவின் நாஸ்டாக்கில் இன்போசிஸ் நிறுவனம் பதிவு செய்யப்பட்டபோது, நாஸ்டாக்கில் பதிவு செய்யப்பட்ட முதல் இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் என்ற பெருமையை அது பெற்றது.

இன்போசிஸுக்கு மட்டுமல்லாமல், இந்திய தகவல் தொழில்நுட்பத் துறைக்கும் மிகப் பெரிய பங்காற்றியவர் நாராயணமூர்த்தி. பெங்களூர் இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப தலைநகராக மாறியதில் இன்போசிஸின் பங்கும் மிக முக்கியமானது. அந்த வகையில் நாராயணமூர்த்தியின் பங்கு இந்திய தகவல் தொழில்நுட்பத்துறையில் மறக்க முடியாதது, வலுவானது.

இன்றுடன் தனது பணியிலிருந்து ஓய்வு பெறும் நாராயணமூர்த்திக்கு பெங்களூரில் உள்ள இன்போசிஸ் தலைமையகத்தில் சிறப்பான பிரிவுபச்சார விழா நடைபெறுகிறது. இதில் பத்திரிக்கையாளர்களுக்கு அனுமதி இல்லை. அதேசமயம், இன்போசிஸ் நிறுவனத்தை நாராயணமூர்த்தியுடன் இணைந்து தொடங்கிய 7 இணை நிறுவனங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியத் தகவல் தொழில்நுட்பத்துறையின் முக்கியப் புள்ளிகளும் இதற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

1946ம் ஆண்டு ஆகஸ்ட் 20ம் தேதி பிறந்த நாராயணமூர்த்தி, மைசூர் பல்கலைக்கழகத்தில் பிஇ பட்டம் பெற்றார். பின்னர் கான்பூர் ஐஐடியில் எம்.டெக் படிப்பை முடித்தார். 10,000 ரூபாய் முதலீட்டில் நிறுவனத்தை தொடங்கிய நாராயணமூர்த்தி இன்று ரூ. 27,000 வருவாயுடன் கூடிய இன்போசிஸ் நிறுவனத்தின் தலைவராக நிறுவனராக ஓய்வு பெறுகிறார்.

No comments:

Post a Comment