
டெல்லி: அதிகாரப்பூர்வ பயன்பாட்டிற்கு அம்பாசடர் கார்களுக்கு பதில் டெல்லி போலீசாருக்கு மாருதி SX4 செடான் ரக கார்கள் வழங்கப்பட்டு வருகிறது.
அதிகாரப்பூர்வ பயன்பாடு மற்றும் பாதுகாப்பு பணிகளில் டெல்லி போலீசார் காலங்காலமாக அம்பாசடர் கார்களையே பயன்படுத்தி வருகின்றனர். நாட்டின் தலைநகரத்தில் பணியாற்றுவதால் பாதுகாப்பு பணிகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் போலீசாருக்கு நவீன வசதிகள் கொண்ட கார் அவசியமாக இருந்தது.
நவீன வசதிகள் கொண்ட காரை வாங்குவதற்கு அனுமதிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு டெல்லி போலீசார் கோரிக்கை வைத்தனர். நீண்ட காலமாக கிடப்பில் கிடந்த இந்த கோரிக்கைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் தற்போது செவி சாய்த்துள்ளது. இதையடுத்து, டெல்லி போலீசாருக்கு புதிய கார்கள் வழங்கப்பட்டு வருகிறது.
பழைய அம்பாசடர் கார்களுக்கு விடைகொடுக்கும் விதத்தில் முதல்கட்டமாக 12 மாருதி SX4 கார்கள் வாங்கப்பட்டுள்ளது. ரேடியோ தொலைதொடர்பு சாதனம் பொருத்தப்பட்டுள்ள கார்கள் பாதுகாப்பு பணிகளில் மிகவும் உறுதுணையாக இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.
முதல் மாருதி SX4 காரை பெற்றுள்ள போலீஸ் அதிகாரி குப்தா கூறுகையில்," குறைவான பராமரிப்பு செலவு, வேகம், பாதுகாப்பு, எரிபொருள் சிக்கனம் உள்ளிட்ட அனைத்திலும் சிறப்பாக இருந்ததால் மாருதி SX4 காரை தேர்வு செய்தோம். எங்களது பணிகளுக்கு அனைத்து விதத்திலும் புதிய கார் உறுதுணையாக இருக்கும்,"என்று கூறினார்.
No comments:
Post a Comment