Wednesday, March 2, 2011

தொடங்கியது பிளஸ்டூ தேர்வு-பிட் அடித்தால் 5 ஆண்டு தடை

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்டூ பொதுத் தேர்வுகள் இன்று தொடங்கின. தேர்வில் பங்கேற்கும் மாணவ, மாணவியர் ஒழுங்கீனமாக நடக்கக் கூடாது என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை பிளஸ்டூ பொதுத் தேர்வு தொடங்கியது. இன்று தமிழ் முதல் தாள் தேர்வு நடக்கிறது. பத்து மணிக்கு தேர்வுகள் தொடங்கின. பத்தேகால் மணி வரை மாணவர்கள் வினாத்தாளை படித்துப் பார்க்க அவகாசம் தரப்பட்டது. பிற்பகல் 1.15 மணிக்கு தேர்வு முடிவடையும்.

இந்த ஆண்டு பிளஸ்டூ தேர்வை 7,80,631 மாணவ, மாணவியர் எழுதுகின்றனர். இவர்களில் மாணவிகளின் எண்ணிக்கை 3,87,102 பேர் ஆகும். மாணவர்களை விட 50 ஆயிரத்து 659 மாணவிகள் அதிகம் ஆவர்.

பிளஸ்டூ தேர்வுக்காக தமிழகம் மற்றும் புதுவையில், 1890 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. புதுவையில் மொத்தம் 11,517 மாணவ, மாணவியர் தேர்வு எழுதுகின்றனர்.

இவர்கள் போக தனித் தேர்வர்களின் எண்ணிக்கை 57,086 பேர் ஆவர்.

உடல் ஊனமுற்றோர், பார்வையற்றவர்கள், காது கேளாதவர்கள் உள்ளிட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு தேர்வு எழுத கூடுதலாக ஒரு மணி நேரம் ஒதுக்கப்படும்.

தேர்வில் மாணவர்கள் ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்கும்
வகையில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், தேர்வில் ஒழுங்கீனமாக நடந்தால் என்ன தண்டனை கிடைக்கும் என்பது குறித்து பிட் நோட்டீஸ்களும் தேர்வு மையங்களில் ஒட்டப்பட்டுள்ளன.

அதில்,

பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி., மெட்ரிகுலேசன் தேர்வுகளில் மாணவர்கள் தேர்வறைகளில் சோதனை செய்யப்படுவார்கள். தேர்வறையில் அனுமதிக்காத துண்டு சீட்டுகள், செல்போன் முதலியன வைத்திருந்தால் வினாத்தாள் அல்லது விடைத்தாள் பரிமாற்றம் செய்தல், ஆள்மாறாட்டம் போன்ற ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் ஓராண்டு முதல் 5 ஆண்டுகள் வரை அல்லது நிரந்தரமாக தொடர்ந்து படிக்க தடை, தேர்வெழுத தடை, மதிப்பெண் சான்றிதழ்கள் ரத்து செய்தல், நிறுத்தம் செய்தல் போன்ற தண்டனைகளுக்கு உள்ளாக நேரிடும்.

இதன் காரணமாக எதிர் காலமே பாதிக்கும். எனவே மாணவர்கள் முறைகேடுகளில் ஈடுபடவேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment