Tuesday, March 15, 2011

சிறிய கார்களை அறிமுகப்படுத்த ஹூண்டாய் தீவிரம்


சென்னை: அடுத்தடுத்து சிறிய கார்களை அறிமுகப்படுத்தும் நடவடிக்கைகளை ஹூண்டாய் மோட்டார்ஸ் தீவிரப்படுத்தியுள்ளது.


இந்திய கார் உற்பத்தியில் இரண்டாம் இடம் வகிக்கும் ஹூண்டாய் மோட்டார்ஸ், தனது மார்க்கெட்டை தக்கவைத்துக்கொள்ள பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இந்திய கார் சந்தையின் விற்பனையில் முதலிடம் வகிக்கும் ஆல்ட்டோ கார் இடத்தை குறி வைத்து ஹூண்டாய் தற்போது காய் நகர்த்தி வருகிறது.

ஆல்ட்டோ மார்க்கெட்டை உடைக்கும் விதத்தில் ஹூண்டாய் HA என்ற 800சிசி திறன் கொண்ட காரை ஹூண்டாய் களமிறக்க உள்ளது. ரூ.2 லட்ச விலை கொண்ட இந்த கார் இந்த ஆண்டு இறுதியில் மார்க்கெட்டில் அறிமுகப்படுத்த ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது.

சான்ட்ரோவின் பேஸ் மாடலை அடிப்படையாக கொண்டு ஹூண்டாய் HA உருவாக்கப்பட்டுள்ளது. ஆல்ட்டோவுக்கு மட்டுமின்றி சான்ட்ரோவின் விற்பனையிலும் ஹூண்டாய் HA பாதிப்பை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. இந்நிலையில், ஹூண்டாய் HA மாடலை தொடர்ந்து ஹூண்டாய் BA என்ற புதிய காம்பேக்ட் காரையும் அறிமுகப்படுத்த ஹூண்டாய் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹூண்டாயின் வெற்றிகரமான மாடல்களில் ஒன்றான ஐ10 காரின் பேஸ் மாடலை அடிப்படையாக கொண்டு ஹூண்டாய் BA உருவாக்கப்பட்டுள்ளதாகவும், பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஐ10 டீசல் மாடலும், இந்த புதிய மாடலும் ஒரே நேரத்தில் அறிமுகப்படுத்த ஹூண்டாய் திட்டமிட்டு இருப்பதாகவும் தெரிகிறது.

குறைந்த பரப்பளவில் திருப்பும் வசதிகொண்ட ஸ்டீயரிங், அதிக செயல்திறன் கொண்ட எஞ்சின், விசாலமான முகப்பு கண்ணாடிகள் மற்றும் அதிக மைலேஜ் என நகர்ப்புறத்திற்கேற்ற அம்சங்களுடன் ஹூண்டாய் BA வரவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. மேலும், வரும் 2013ம் ஆண்டில் ஹூண்டாய் BA மாடலை அறிமுகப்படுத்த ஹூண்டாய் திட்டமிட்டுள்ளதாகவும் விஷயம் அறிந்த ஆட்டோமொபைல் துறையினர் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment