
டெல்லி: மெர்சிடிஸ் பென்ஸ் கார் வாங்கும் வாடிக்கையாளர்கள் இனி கடனை பற்றி கவலைப்பட தேவையில்லை. வரும் ஜூலை மாதத்தில் மெர்சிடிஸ் கார்களுக்கு கடன் வழங்கும் சேவையை துவங்க இருப்பதாக, அதன் சொந்த பைனான்ஸ் நிறுவனமான டெய்ம்லர் பைனான்சியல் சர்வீசஸ் (டி.எப்.எஸ்.,) தெரிவித்துள்ளது.
சொகுசு கார் தயாரிப்பில் புகழ்பெற்ற மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம், இந்தியாவின் சொகுசு கார் சந்தையில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. இருப்பினும், சந்தையில் ஏற்பட்டுள்ள போட்டியை சமாளிக்க தீவிர முயற்சிகளை மேற்கொள்ளவேண்டிய கட்டாயத்தில் உள்ளது மெர்சிடிஸ்.
இந்நிலையில், கார் விற்பனையை அதிகரிக்கவும், வாடிக்கையாளர்களுக்கு எளிய நடைமுறைகளில் கடன் கிடைக்கும் விதத்திலும், தனது சொந்த பைனான்ஸ் நிறுவனமான டி.எப்.எஸ்., மூலம் கடன் வழங்கும் சேவையை விரைவில் இந்தியாவில் துவங்குகிறது மெர்சிடிஸ் பென்ஸ்.
இதுகுறித்து டி.எப்.எஸ்., நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கூறியதாவது:
"வரும் ஜூலை மாதம் முதல் மெர்சிடிஸ் கார்களுக்கு கடன் வழங்கும் சேவையை இந்தியாவில் துவங்க இருக்கிறோம். இதன் மூலம், மெர்சிடிஸ் வாடிக்கையாளர்கள் எளிய நடைமுறைகள் கொண்ட கடன் வசதியை உடனுக்குடன் பெற முடியும். டீலர்கள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு கடன் வசதி செய்து தரப்படும்.
உலகம் முழுவதும் 40 நாடுகளில் மெர்சிடிஸ் கார்களுக்கு கடன் வசதியை அளித்து வருகிறோம். இந்தியாவில் சேவையை துவங்குவதன் மூலம், வாடிக்கையாளர்கள் எளிதான கடன் திட்டங்களை பெறுவதோடு இல்லாமல், மெர்சிடிஸ் கார் விற்பனையும் அதிகரிக்கும்," என்று கூறினார்.
No comments:
Post a Comment