Monday, May 14, 2012

பட்டாணிச்செடியும் இந்திய சினிமாவும்


பட்டாணிச்செடிக்கும், இந்திய சினிமாவுக்கும் என்ன சம்பந்தம்? அதிகப்படங்களை தயாரிப்பதில் உலகின்
முதலிடத்தை பிடித்திருப்பது இந்திய சினிமாதான். எல்லா இந்தியமொழிகளிலுமாக சேர்த்து வருடத்திற்கு 1000 க்கு மேற்பட்ட படங்கள் வெளிவருகின்றன. அதிகமாக பணம் புழங்குகிற மிகப்பெரிய வியாபாரமாக மாறியிருக்கிறது. இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கிற மிகமுக்கிய அடையாளமாக இத்திய சினிமா பரிணமித்திருக்கிறது. இப்படியாக வளர்ந்து வரும் இந்திய சினிமா கடந்த ஏப்ரல் மாதம் 21ம் நாளுடன் 99வது ஆண்டை நிறைவு செய்துவிட்டு தனது 100வது ஆண்டை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கிறது.100வது ஆண்டை நெருங்குகிற இந்திய சினிமா 1912ல் உருவான ''பட்டாணிச்செடியின் பிறப்பு'' என்ற இந்தியாவின் முதல் ஆவணப்படத்திலிருந்தே துவங்கியது.

நாடகம், நடனம், பாட்டு, இசை, நாட்டார்கூத்து போன்ற கலைகளின் தயாகமாக விளங்கிய இந்தியாவில் இவற்றையெல்லாம் தனதாக்கிக் கொண்டு இந்திய சினிமா வளர்ச்சி தொடங்கி 100 ஆண்டுகள் ஆகிவிட்டது.1913ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் நாள் பம்பாய் காரனேஷன் சினிமா திரையரங்கில் ''ராஜாஹரிச்சந்திரா'' வெளியானது. பொய்யே பேசாத அரசனின் கதையை பேசாப்படம் மூலமாக எடுத்திருந்தார் இந்திய சினிமாவின் பிதாமகர் தாதாசாகேப் பால்கே. வெள்ளைத்திரையில் புகைப்படம் அசைவதை,ஒடி,ஆடி நடிப்பதை, தங்களைப்போலவே எல்லாவிதத்திலும் சலனிப்தை முதன் முதலாக பார்த்த மக்கள் அதிசயத்து போயினர். பெரும் திரளாக கூடி படத்தின் வெளியீட்டு நிகழ்வையே ஒரு திருவிழா போல ஆக்கிவிட்டனர்.

''ராஜாஹரிச்சந்திரா'' என்ற படத்தின் மூலம் பால்கே இந்திய சினிமாவின் மிகப்பெரும் கலைப்பயணத்தை துவக்கி வைத்தார். பால்கே ஐதீக பிடிப்பு கொண்ட உயர்சாதியொன்றில் பிறந்தவர். ஒவியத்தின் மீதும், புகைப்படக்கலையின் மீதும் தீவிர நாட்டம் கொண்ட பால்கேவுக்கு இளம் வயது முதலே அவரின் குடும்பத் தொழிலான புரோகிதத்தின் மீது பற்றில்லாமல் போனது. கலைத்தாகத்தோடு வளர்ந்த பால்கே திருமணம் முடிந்த கையோடு தனது மனைவியின் நகைகள்,தனது சேமிப்புபையும் சேர்த்து காமிரா ஒன்றை வெளிநாட்டிலிருந்து விலைக்கு வாங்கினார். ஆனால் அதை எப்படி இயக்குவது எனத்தெரியவில்லை. தனது வீட்டின் அருகே ஒரு பட்டாணி விதையொன்றை மண்ணில் நட்டுவைக்கிறார் பால்கே. விதை சில நாட்களில் முளைவிட்டு மேலே வந்தது, அதனை புதிதாக வாங்கிய காமிராவைக்கொண்டு படமெடுத்தார். இப்படி அடுத்தடுத்து வந்த நாட்களில் செடியின் வளர்ச்சியை தொடந்து படமெடுத்து மாதக்கணக்கில் அந்த பட்டாணிச்செடியின் வளர்ச்சியை படமெடுத்தார் பால்கே. அது ஆவணப்படமாக தயாராகி வந்தது, அதற்கு ''பட்டாணிச்செடியின் பிறப்பு'' என்று பெயரிட்டார், இது தான் இந்தியாவின் முதல் ஆவணபடமாகவும், இந்தியா சினிமாவின் பரிணாமத்திற்கு முதல் விதையாகவும் இருந்தது.

பால்கே ஐதீக பிடிப்புகொண்ட குடும்பத்தில் பிறந்தாலும் தனது குலத்தொழிலை தூக்கி எரிந்தவர். தனது படங்களில் தேசிய உணர்வுகளை, சமூக விமர்சனத்தை பூடமாக வைத்தவர். அவரது படங்களில் விண்ணிலிருந்து வரும் கடவுளை பிராமணர்களும், ஒடுக்கப்பட்ட சாதியினரும் ஒன்றாக வரவேற்பதாக காட்சிகளை அமைத்தவர். இது அன்றைய நாளில் புதுமையாக மட்டுமல்லாமல் முற்போக்கான அம்சமாகும். பால்கே 1918ல் தொடங்கிய இந்துஸ்தான் பிலிம் கம்பெனி 93 படங்களை எடுத்தது. அவற்றில் 40க்கும் மேற்பட்டவை அவரே இயக்கியவை.

100 ஆண்டுகளுக்கு முன் பால்கே தொடங்கி வைத்த பயணம் இன்று மிகப்பிரமாண்டமாக வளர்ந்துள்ளது. இன்று இந்திய சினிமா அதித படங்களை தயாரிப்பது மட்டுமல்ல உலகளாவிய கவனத்தை ஈர்க்கும் இயக்குனர்களை கொண்டுள்ளது. சத்யஜித்ரே, மிருணாள்சென், ரித்விக் கட்டாக், கிரஷ்காசரவல்லி, சியாம்பெனகல், அடுர்கோபாலகிருஷ்ணன், ஜி.அரவிந்தன், தமிழகத்தை சேர்ந்த மணிரத்னம் போன்றவர்களின் மாறுபட்ட பங்களிப்பினால் இந்திய சினிமா தொட்டிருக்கும் உயரங்கள் அதிகம். உலகின் 100 சிறந்த திரைப்படங்களில் கமல்ஹாசன் நடித்து, மணிரத்னம் இயக்கிய படம் இடம் பிடித்துள்ளது. மேலும் உலகின் 25 விளையாட்டு திரைப்படங்களில் அமீர்கான் நடித்த லகான் இருப்பது இந்திய சினிமா தொட்ட சிகரங்களில் சில.

சினிமா என்பது வெறும் பொழுதுபோக்கு சாதனம்மட்டுமல்ல, சமூகமாற்றத்திற்கான கருவியும் கூட. பட்டாணிச்செடியிலிருந்து தனது பணயத்தை துவங்கிய இந்திய சினிமா தனது அடுத்த பயணத்தை தொடரட்டும். வாழ்த்துக்கள்.

 அ.தமிழ்ச்செல்வன்

No comments:

Post a Comment