Saturday, January 28, 2012

பூமிக்கு மிக அழகிய 'பெயிண்ட்' அடித்த சூரியப் புயல்!!

ஓஸ்லோ: பூமியைத் தாக்கிய சூரியப் புயல் நார்வே, ஸ்காட்லாந்து, வடக்கு இங்கிலாந்து, கனடா மற்றும் ரஷ்யாவின் சைபீரிய பனிப் பிரதேசத்தில் மிக அழகிய ஒளி வெள்ளத்தை ஏற்படுத்தியது.

சூரியனில் நிகழும் அணு இணைவு, அதி பயங்கர வெப்பம் காரணமாக மின் காந்த கதிர் வீச்சு (electro magnetic waves) ஏற்படுகிறது. சதா காலமும் உருவாகி வரும் இந்த மின் காந்த வீச்சுக்கள் சில நேரங்களில் மாபெரும் வெடிப்புடன் பல பில்லியன் கி.மீ. தூரம் பயணிப்பது வழக்கம்.

சூரியனின் மையமான கரோனாவில் இருந்து பீறிட்டுக் கிளம்பும் இந்த சூரியப் புயல் (solar storm) அண்ட வெளியில் நாம் நினைத்தும் பார்க்க முடியாத தூரத்தை படு வேகத்தில் எட்டும்.

பூமியில் பருவ காலங்கள் இருப்பது மாதிரி சூரியனிலும் பருவ காலம் உள்ளது. 11 ஆண்டுகளுக்கு ஒரு முறை சூரியன் மிக அதிகமான கதிர்வீச்சை உருவாக்கி அதை வெளியே தள்ளுவதும், அடுத்த 11 ஆண்டுகளுக்கு குறைந்த கதிர்வீச்சை உருவாக்குவதும் வழக்கம். இப்போது அதிக கதிர்வீச்சு காலத்தை நோக்கி நகர்ந்து கொண்டுள்ளது சூரியன்.

அந்த வகையில் ஒரு மாபெரும் வெடிப்பு (coronal mass ejection) இந்த வாரத்தில் சூரியனில் நிகழ்ந்துள்ளது. அதிலிருந்து புறப்பட்ட மின் காந்தக் கதிர்கள் பூமியைத் தாக்க ஆரம்பித்துள்ளன. சமீபத்தில் அடுத்தடுத்து 3 மாபெரும் வெடிப்புகள் சூரியனில் நடந்துள்ளன. இதில் மூன்றவதாக நடந்தது தான் பெரு வெடிப்பு.

இதிலிருந்து கிளம்பிய மின் காந்த அலைகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை பூமியைத் தாக்கின. இதனால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏதும் ஏற்பட்டுவிட்டவில்லை. சில செயற்கைக் கோள்களில் சிறிய அளவிலான மின்சார கோளாறுகள் ஏற்பட்டதோடு சரி.

வழக்கமாக இந்த மின் காந்த அலைகள் நமது பூமியின் வளி மண்டலத்தில் உள்ள வாயுக்களை உரசுகையில், மிக அழகிய பசுமை கலந்த, பல வண்ண ஒளி உருவாகும்.

பூமியின் வட பகுதியில் உருவானால் அதை 'நார்த்தர்ன் லைட்ஸ்' என்கிறோம். தென் துருவத்தில் உருவானால் அதை 'சதர்ன் லைட்ஸ்' என்கிறோம்.

இந்த முறை இந்த மின் காந்த வீச்சுக்கள் உருவாக்கிய நார்த்தர்ன் லைட்ஸ், நார்வே, ஸ்காட்லாந்து, வடக்கு இங்கிலாந்து, கனடா மற்றும் ரஷ்யாவின் சைபீரிய பனிப் பிரதேசத்திலும் மிக அழகாகத் தெரிந்தது.

No comments:

Post a Comment