Vamanan
அன்றிவ் வுலக மளந்தாய் அடிபோற்றி
சென்றுஅங்குத் தென் இலங்கை செற்றாய் திறல் போற்றி
பொன்றச் சகட முதைத்தாய் புகழ்போற்றி
கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையா வெடுத்தாய் குணம்போற்றி
வென்று பகை கெடுக்கும் நின்கையில் வேல் போற்றி
என்றென்றுன் சேவகமே யேத்திப் பறைகொள்வான்
இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்.
பொருள்: அன்று மகாபலி மன்னனிடம் தானம் வாங்கியபோது இரண்டு அடிகளால் உலகளந்த பெருமானே, உன்னுடைய திருவடிகளைப் போற்றுகிறோம். சீதையை மீட்பதற்காக தெற்கே கடல் கடந்து சென்று இலங்கையை அழித்த பெருமானே, உன் வீரத்தைப் போற்றுகிறோம்.
கன்றின உருவில் வந்த அசுரனையும், பழ உருவில் வந்த அசுரனையும் அழித்த உன் திருவடிகளை வணங்குகிறோம். கோவர்த்தனகிரியைக் குடையாகப் பிடித்து பசுக்களையும், கோகுலத்து மக்களையும் காத்த உன் கருணை குணத்துக்கு எங்களது போற்றுதல்கள். பகைவரையும் வென்று அழிக்கும் உன் கர வேலுக்கும் போற்றி. இப்படிப் பாடி உன் திருவடிகளுக்கு சேவை செய்ய வந்திருக்கும் எங்களுக்கு அருள் பாலித்து இரக்கம் காட்டுவாயாக.
திருப்பள்ளி எழுச்சி 4 - ஆட்கொண்டு அருள்புரிவாய்
இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்
துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால்
தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்
திருப்பெருந் துறையுறை சிவபெருமானே
என்னையும் ஆண்டுகொண்டு இன்னருள் புரியும்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.
பொருள்: திருப்பெருந்துறையில் இறையடியார்கள் கூட்டி சிவபெருமானை போற்றிப் பாடுகிறார்கள். ஒருபக்கம் வீணை இசை, ஒரு பக்கம் யாழ் இசை, இன்னொரு பக்கம் வேத கீதம் இசைக்கிறார்கள். நறுமலர்ப் பூக்களை கைகளில் ஏந்தி நிற்கிறார்கள்.
இன்னொரு பக்கமோ மனம் உருக இறைவனின் புகழ் பாடி நிற்கிறார்கள். பெருமானின் புகழ் பாடுவதால் கிடைக்கும் பேரின்பத்தால் உடல் துவண்டு காணப்படுகிறார்கள். தலைக்கு மேல் கை தூக்கி கூப்பி, சிவ சிவா என்று கூறி தொழுகிறார்கள். அப்படிப்பட்ட பெருமானே, என்னையும் நீ ஆட் கொண்டு அருள் புரிவாயாக, பள்ளி எழுவாயாக
No comments:
Post a Comment