Friday, January 13, 2012

திருநெல்வேலி மாவட்டம்

திருநெல்வேலி மாவட்டம் திருநெல்வேலி நகரை தலைமையகமாக கொண்டுஇயங்குகிறது.
இந்தியாவின் பழமையான நகரங்களில் இதுவும் ஒன்றாகும். 3000ஆண்டு பழமையான இந்த
நகரம் தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. "திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி' என சம்பந்தரும், "தண் பொருநைப் புனல்நாடு' என சேக்கிழாரும், "பொன்திணிந்த புனல் பெருகும் பொருநைத் திருநதி' என்று கம்பரும் பாடிய பூமி,திருநெல்வேலி ஆகும்.

பெயர்க் காரணம்:
இந்து பழங்கதைகளின் படி சிவ பெருமான் நெல்லுக்கு வேலியிட்டுக் காத்ததால் இது திருநெல்வேலி எனப்படுகிறது என்ற கருத்து உள்ளது.
ஒரு ஏழை விவசாயி இறைவனுக்கு படைக்க நெல்லை காய வைத்திருந்ததாகவும், அவன் பார்க்காத சமயம், மழை திடீரென பெய்ய, சிவன்(நெல்லையப்பர்), நெல் மேல் நீர் படாமல் காத்தார் எனவும், அதனால், அவருக்கு நெல்லையப்பர், என்றும், அந்த இடத்துக்கு திரு + நெல் + வேலி என்றும் பெயர்.

திருநெல்வேலி பழமையான நகரம் என்பதற்கு அரிச்சநல்லூர் பகுதியில்தொல்பொருள்
ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த முதுமக்கள் தாழி சிறந்தசான்றாகும். இந்த
தாழியில் சில எலும்பு கூடுகளுடன் பழந்தமிழ் எழுத்துக்களும், உமி,அரிசி
ஆகியவையும் இருந்தன. இவற்றை ஆராய்ந்த தொல்பொருள்
ஆராய்ச்சியாளர்கள் 2800 ஆண்டு பழமையானது என உறுதியளித்தனர். இதன் மூலம் புதிய
கற்காலத்தில் இருந்து 3000 ஆண்டுகளுக்கு முன்னரே திருநெல்வேலியில்
மக்கள் வாழ்ந்துள்ளனர் என்பது தெரிய வந்தது. மேலும் ஆராய்வதற்காக
அரிச்சநல்லூர் தற்போது தொல்பொருள் ஆராய்ச்சி மையத்தின்
கட்டுப்பாட்டில்உள்ளது.

வரலாறு :
பாண்டியர்கள் காலத்தில் திருநெல்வேலி தென்பகுதியின் தலைநகரமாக விளங்கியது.
ஆற்காடு நவாப் மற்றும் நாயக்கர்கள் காலத்தில் இது முக்கிய வர்த்தக நகரமாக
இருந்தது. அவர்கள் திருநெல்வேலியை நெல்லை சீமை என்று அழைத்தனர்.பாண்டியர்கள்
ஆட்சிக்கு பின் கி.பி. 900 முதல் 1200 வரைசோழ பேரரசின் முக்கிய நகரமாக
திருநெல்வேலி இருந்தது. பின்னர் விஜயநகர
பேரரசின் கட்டுப்பாட்டிலும்,நாயக்கர்கள், நவாப்கள் கட்டுப்பாட்டிலும்
இருந்தது. 1781ம் ஆண்டு ஆற்காடு நவாப்கள் உள்ளூர் நிர்வாகத்தை
ஆங்கிலேயர்களிடம் ஒப்படைத்தனர். 1801ம் ஆண்டு திருநெல்வேலியை
ஆங்கிலேயர்கள் முழுமையாக கைப்பற்றினர். அதன் பின்னர் இந்தியா சுதந்திரம்
அடையும் வரை ஆங்கிலேயர்கள் இங்கு ஆட்சி புரிந்தனர்.

1790 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பனியால்(இங்கிலாந்து அரசாங்கம்) உருவாக்கப்பட்டது.அன்றைய தினத்தில் திருநெல்வேலி மாவட்டத்துடன் இன்றைய தூத்துக்குடி மாவட்டமும், விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தின் சில பகுதிகளும் இருந்தன. செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி திருநெல்வேலி தினமாக கொண்டாடப்படுகிறது.
ஆங்கிலேயர்களுக்கு திருநெல்வேலி என்பது உச்சரிக்க சிரமமாக இருந்ததால்ஆற்காடு
நவாப்கள் 1801ம் ஆண்டு தின்னவேலி என பெயரிட்டனர்.ஆங்கிலேயர்களின்
கிழக்கிந்திய கம்பெனியின் நிர்வாகத்தில் திருநெல்வேலி ராணுவ தலைமையகமாக
இருந்தது. இதன் மூலம் பாளையக்காரர்களை ஆங்கிலேயர்கள் ஒடுக்கினர். இதன்
பின்னர் திருநெல்வேலி மற்றும் பாளையங்கோட்டை இரண்டும்,இரட்டை நகரங்களாக வளர
துவங்கியது.

திருநெல்வேலி அல்வா நகரம் என்றும் அழைக்கப்பட்டது. திருநெல்வேலி அல்வாவை
பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது. திருநெல்வேலி, திருநெல்வேலி
டவுன்,பாளையங்கோட்டை, மேலப்பாளையம் என்று மூன்று நிர்வாக மையங்களாக
செயல்பட்டு வருகிறது.

திருநெல்வேலி மாவட்டம் மக்கள் தொகை, வருவாய் ஆகியவற்றை கொண்டு 1999ம் ஆண்டு
மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டது. திருநெல்வேலி பிறநகரங்களுடன் சாலைகளால்
இணைக்கப்பட்டுள்ளது. மதுரை, கன்னியாகுமரி, கொல்லம், கேரளாவுடன் தேசிய
நெடுஞ்சாலைகள் மூலம் இணைக்கப்பட்டுள்ளது.

சுதந்திர போராட்ட வீரர்களான வீரபாண்டிய
கட்டபொம்மன், வ.உ.சிதம்பரம் பிள்ளை,பாரதியார் (தூத்துக்குடி) போன்றவர்கள்
திருநெல்வேலியை சேர்ந்தவர்களாவர். 1990ம் ஆண்டிற்கு முன்
தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டத்திற்குள் இருந்தது.


நில அமைப்பு
திருநெல்வேலி கடல் மட்டத்தில் இருந்து 47 மீ உயரத்தில் அமைந்துள்ளது.

காலநிலை
மிதவெப்பமண்டல பகுதி. அதிகபட்ச வெப்பநிலை 36டிகிரி. குறைந்தபட்ச
வெப்பநிலை23 டிகிரி.

மழை அளவு : 68 செமீ

பருவகாற்று
வடகிழக்கு பருவகாற்று (அக்டோபர் முதல் டிசம்பர்)

முக்கிய ஆறுகள்: தாமிரபரணி, சிற்றாறு, நம்பியாறு, பச்சையாறு, கொடுமுடியாறு, கடனாந்ததி, இராமா நதி.

சுற்றுலாத் தலங்கள்

நெல்லயப்பர் காந்திமதி கோயில்: நெல்லையின் முக்கியச் சிறப்பே இக்கோயில்தான். அரிய வேலைப்பாடுகள் கொண்ட ஆபரணங்கள், தங்க அல்லிக்குளம், இசைத்தூண்கள், ஆயிரங்கால் மண்டபம் போன்றவை இக்கோயிலின் தனிச்சிறப்பு.

குற்றாலம்:
தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் குற்றாலம் நகரும் ஒன்று. குற்றாலம் குறிஞ்சி, முல்லை, மருதம் ஆகிய நிலங்களை தன்னுள் அடக்கிக் கொண்டுள்ளது. இங்கு குளித்து மகிழ மெயின் அருவி, ஐந்தருவி, பழத்தோட்ட அருவி, செண்பகாதேவி அருவி, பேரருவி, சிற்றருவி, புலி அருவி, பழைய குற்றால அருவி, தேனருவி என்று பல நீர்விழ்ச்சிகள் உள்ளன. தென்னிந்தியாவின் ஸ்பா' என்று அழைக்கபடுகிறது .

பாபநாசம்:
தமிழ் மொழியானது பொதிகை மலையில் தோன்றியதாகக் கருதப்படுகிறது. இது திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம் என்ற சிற்றூரில் உள்ளது. இங்கு பல நீர்வீழ்ச்சிகளும் அணைக்கட்டுகளும் அமைந்துள்ளது சிறப்பாகும் .

களக்காட்டில் புலிகள் சரணாலயமும் கூந்தன்குளம் மற்றும் மூன்றடைப்பு பறவைகள் சரணாலயமும் இந்த மாவட்டத்தில் உள்ளது .

மக்கள் தொகை
பரப்பளவு : 6 , 838 சதுர கி.மீ
மக்கள்தொகை : 28,01,194
ஆண்கள் : 13,72,082
பெண்கள் : 14,29,112
மக்கள் நெருக்கம் : 400
ஆண்-பெண்: 1000 : 1,042
எழுத்தறிவு விகிதம் 68%

போக்குவரத்து
திருநெல்வேலியில் பிறநகரங்களை இணைக்கும் சாலை வசதி
உள்ளது. மதுரை,கன்னியாகுமரி, கொல்லம், கேரளாவுடன் தேசிய நெடுஞ்சாலைகள் மூலம்
இணைக்கப்பட்டுள்ளது. வெய்ந்தாங்குளத்தில் அமைந்துள்ள பஸ் நிலையத்தில்
வெளியூர் பஸ்கள் கிடைக்கும். இந்த பஸ் நிலையம் 2003ம் ஆண்டு முதல் செயல்பட்டு
வருகிறது. இங்கு வெளியூர் மற்றும் மாநிலத்தின் பிற நகரங்களுக்கும் பஸ்
கிடைக்கிறது. உள்ளூர் பஸ் போக்குவரத்திற்கு பொளை பஸ்நிலையம்,திருநெல்வேலி
ஜங்ஷன் பஸ் நிலையத்தில் பஸ் கிடைக்கும்.

தமிழகத்தின் முக்கிய ரயில் நிலையங்களில் திருநெல்வேலி ஜங்ஷனும் ஒன்றாகும்.
ரயில் நிலையத்தில் 6 பிளாட்பாரங்கள் உள்ளன. அதில் 3 அகல ரயில் பாதையாகவும்,
3 குறுகிய ரயில் பாதையாகவும் உள்ளது. தமிழகத்தின் பிற
நகரங்களுக்கும், கொல்கத்தா, கேரளா, கர்நாடகா போன்ற பிற மாநிலங்களுக்கும்
இங்கிருந்து செல்ல ரயில் வசதி உள்ளது.

திருநெல்வேலியில் இருந்து 24 கி.மீ தூரத்தில் உள்ள தூத்துக்குடி
மாவட்டத்தில்,வாகை குளம் என்ற இடத்தில் விமான நிலையம் உள்ளது. மேலும் மதுரை
மற்றும் திருவனந்தபுரம் விமான நிலையங்கள் அருகிலுள்ள விமான நிலையங்களாகும்.
திருநெல்வேலி மாவட்டம் கயத்தாறில் உபயோகிக்கப்படாத ரன்வே உள்ளது.
தூத்துக்குடியில் இருந்து ஏர்டெக்கான் நிறுவனம் மட்டும் சென்னை செல்வதற்கான
விமான சேவையை தினமும் ஒரு முறை வழங்கி வருகிறது.

கல்வி
நெல்லையின் முக்கிய கல்வி மையமாக மனோன்மணியம் சுந்தரனார்பல்கலைகழகம்
விளங்குகிறது. இந்த பல்கலைகழகம் நெல்லை ஜங்ஷனில் இருந்து11கி.மீ தொலைவில்
உள்ளது. தமிழகத்தின் தென்மாவட்டங்களில் கல்வித்தரத்தை மேம்படுத்துவதற்காக
அண்ணா பல்கலைகழகத்தின் கிளை இங்கு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் நெல்லையில் அரசு
மற்றும் தனியார் பொறியியல், மருத்துவ, கலை அறிவியல் கல்லூரிகள் உள்ளன.
திருநெல்வேலி மருத்துவ கல்லூரி, அரசு பொறியியல் கல்லூரி ஆகியவை தமிழக
அரசினால் நடத்தப்படுபவையாகும். செயின்ட் சேவியர், செயின்ட்
ஜான்ஸ், சாராடெக்கர், எம்.டி.டி. இந்து கல்லூரி மற்றும் சதகதுல்லா அப்பா
கல்லூரி ஆகியவை அனைவராலும் அறியப்பட்ட கல்லூரிகளாகும்.

தொழில் வளர்ச்சி
நெல்லையில் சிமென்ட் தொழிற்சாலை, பஞ்சாலை, நூற்பாலை போன்ற தொழிற்சாலைகள்
உள்ளன. மேலும் பீடி கம்பெனிகள், ஸ்டீல் தயாரிக்கும் நிறுவனங்களும் உள்ளன.
சிறிய அளவிலான தொழிற்சாலைகள் இங்கு நிறைந்து காணப்படுகிறது.

பிரச்னைகள்
தமிழகத்தின் முக்கிய நகரமான நெல்லையில் போதிய தொழில்வளர்ச்சியின்மையால்
இங்குள்ள மக்கள் சென்னை கோவை, திருப்பூர் போன்றநகரங்களுக்கு இடம்
பெயர்கின்றனர். மேலும் உயர்கல்வி நிறுவனங்கள் இங்குபோதிய அளவில் இல்லை.
இதனால் இங்கு தொழில் வளர்ச்சி குறிப்பிடும் படியாக இல்லை.
இதன் காரணமாக இங்குள்ள இளைஞர்கள் வேலை தேடி பல வருடங்களாக வெளிநாடு
செல்லும் அவல நிலை உள்ளது. மேலும் இங்குள்ள பெருமளவு மக்கள் பீடித் தொழிலையே
சார்ந்து வாழும் நிலை உள்ளது. இந்த நிலை மாற அரசு முயற்சி செய்தால் உண்டு.
பல்வேறு வேலைவாய்ப்பினை இந்த நகரத்து மக்களுக்கு வழங்க அரசு முன்வர வேண்டும்.

மேலும் கல்வி வளர்ச்சியிலும் இந்த நகரம் பின்தங்கியே உள்ளது. மக்களிடம் போதிய
விழிப்புணர்ச்சி இல்லை. நகர அந்தஸ்திற்கு ஏற்ப எந்த வசதியும் இல்லை.

திருநெல்வேலியின் மற்றொரு நகரம் பாளையங்கோட்டை ஆகும். தாமிரபரணி ஆற்றின்
கிழக்கு கரையில் இந்த நகரம் அமைந்துள்ளது. பாளையங்கோட்டை,அங்குள்ள கல்வி
நிலையங்களால் பெயர் பெற்றுள்ளது. தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு என இந்த நகரம்
அழைக்கப்படுகிறது. சுதந்திரத்திற்கு முன்பே இங்கு பல கல்வி நிலையங்கள்
இருந்தன. திருநெல்வேலி மாவட்டத்தின் முக்கிய பள்ளிகள்,கல்லூரிகள்
இங்குதான் உள்ளன. அரசு மருத்துவ கல்லூரி, அரசு சித்தமருத்துவ
கல்லூரி, அரசு பொறியியல் கல்லூரி, பிரான்சிஸ் சேவியர் பொறியியல்
கல்லூரி,செயின்ட் சேவியர் கல்லூரி, செயின்ட் ஜான்ஸ் கல்லூரி, சாராடெக்கர்
கல்லூரி ஆகியவை பாளையங்கோட்டையில் உள்ளது.

மேலும் பாளையங்கோட்டையில் அண்ணா மைதானம், வ.உ.சி மைதானம் ஆகியவை
மாவட்ட, மாநில அளவிலான கபடி, ஹாக்கி விளையாட்டுகள் நடைபெறும் இடமாகும்.
சுதந்திர தின, குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் இங்கு நடைபெறும்.
மேலும்மத்திய சிறைசாலை பாளையங்கோட்டையில் உள்ளது. சுதந்திரத்திற்கு முன்னர்
அமைக்கப்பட்ட இந்த சிறையில் பாரதியார் போன்ற சுதந்திர போராட்ட தியாகிகள் பலர்
அடைக்கப்பட்டிருந்தனர்.

தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி
மத்திய, மாநில அரசுகள் தகவல் தொழில் நுட்ப பூங்காக்களை அமைப்பதற்காக
முயற்சிகள் எடுத்து வருகின்றன. விரைவில் பல்வேறு தகவல் தொழில் நுட்ப
நிறுவனங்கள் திருநெல்வேலியில் அமைய உள்ளது.

No comments:

Post a Comment