Lord Krishna
கூடாரை வெல்லும் சீர்கோவிந்தா உன்றன்னைப்
பாடிப் பறைகொண்டு யாம்பெறும் சன்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாக
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பல்கலனும் யாமணிவோம்
ஆடை யுடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவார
கூடியிருந்து குளிர்ந் தேலோர் எம்பாவாய்.
பொருள்: பகைவரை வென்று சீருடன் விளங்கும் கோவிந்தா, உன்னை வாயாரப் பாடி, மனதார நினைத்து, வேண்டும் பறையைப் பெற்று நாடு புகழும்படியான ஆடை, ஆபரணங்களையும், அணிமணிகளையும் சன்மானமாகக் கேட்பதே நாங்கள் பெறும் பயன்களாகும்.
ஆடைகளையம், வளைகளையும், செவிப்பூக்களையும், பலவித அணிகளன்களையும் அணிந்து மகிழ்வோம். சர்க்கரைப் பொங்கலாக தித்திக்கும் பால் சோறு மறையும் அளவுக்கு அதில் நெய் ஊற்றி சேர்த்து உண்போம். அனைவரும் கூடி அதை சாப்பிடும்போது எங்கள் முழங்கை வரை நெய் ஒழுகும். அதை நீ கண்டு மனம் குளிர வேண்டும்.
திருப்பள்ளி எழுச்சி – 7 பிரிக்க இயலாத பரம்பொருள்
அதுபழச் சுவையென அமுதென அறிதற்கு
அரிதென எளிதென அமரரும் அறியார்
இதுஅவன் திருவுரு இவனவன் எனவே
எங்களை ஆண்டுகொண் டிங்கெழுந்தருளும்
மதுவளர் பொழில்திரு வுத்தரகோச
மங்கையுள் ளாய்திருப் பெருந்துறை மன்னா
எதுஎமைப் பணிகொளும் ஆறது கேட்போம்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே.
பொருள்: தேன் சோலைகள் நிறைந்திருக்கும் திரு உத்தரகோச மங்கை திருத்தலத்தில் கோவில் கொண்டுள்ள பெருமானே, திருப்பெருந்துறை உறை மன்னனே, சிவானந்தம் என்பது பழத்தின் சுவை போன்றது, அமுதத்தை ஒத்தது, அறிவதற்கு அரியது என சிவனடியார்கள் கூறுகிறார்கள்.
சிவானந்தத்தை இதுதான் என்று காட்ட முடியாது. அதை அனுபவித்து, உணரத்தான் முடியும். ஆனால் எங்களது பரம்பொருளாகிய உன்னை நீ இப்படித்தான் இருப்பாய், இதுதான் நீ என்று சொல்லும் அளவுக்கு அதை எங்களுக்கு உணர்த்தினாய். அப்படி நீ உணர்த்துவதற்கு உரிய வகையில், உன்னை உணரும் வகையில், உன் கட்டளைப்படி நாங்கள் நடக்கிறோம். எழுந்து வா பெருமானே.
No comments:
Post a Comment