அதிகாலையில் எழுந்து பரபரப்பாக அலுவலகம் செல்லும் நகர வாழ்க்கையில் தினம் தினம் ஒரே மாதிரி செய்வது போராடித்து விடும். இதனால் உடலும், மனமும், சோம்பிவிடும். மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் புத்துணர்ச்சி பெற அன்றாடம் செய்யும் அலுவல்களை சற்றே மாற்றி செய்ய வேண்டும் என்கின்றனர் உளவியல் வல்லுநர்கள். இது நமது வாழ்க்கையையே மாற்றும் வல்லமை படைத்தது என்கின்றனர்.
ஜூஸ்க்கு வெல்கம், காபிக்கு பை
நகர்புறங்களில் மட்டுமல்லாது கிராமங்களிலும் அதிகாலையில் எழுந்து காபி குடிப்பது தினசரி பழக்கமாகிவிட்டது. தினம் தினம் காலையில் எழுந்து காபி குடிப்பது போரடிப்பதோடு உடல் நலத்திற்கும் உகந்ததல்ல எனவே காபிக்கு பதிலாக ஜூஸ் குடிப்பது நல்லது என்கின்றனர். இதனால் உற்சாகத்தோடு உடலும் நலமாகும் என்கின்றனர் உளவியலாளர்கள்.
எழுதுங்கள் நல்லது
கணினி மயமாகிவிட்ட இன்றைய வாழ்க்கையில் பேனா பிடித்து எழுதுவது என்பதே மறக்கடிக்கப்பட்டுவிட்டது. வீட்டிலும், அலுவகத்திலும் எழுதுவது என்பது மாறி, டைப் செய்வதே அவசியம் என்றாகிவிட்டது. எனவே ஒரு மாற்றத்திற்கு பேனா பிடித்து நோட்டு புத்தகங்களில் எழுதி பார்ப்பது நல்லது. ஒவியராக இருந்தால் அழகான ஓவியம் ஒன்றை வரைவது மனதிற்கு மாற்றத்தை தரும். தினசரி போரான வாழ்க்கையில் இருந்து ஒரு மாற்றத்தை உண்டாக்கும்.
பிறந்தநாளுக்கு ஒரு மரம்
ஒவ்வொரு பிறந்தநாளின் போது ஒரு மரம் நடுவதை திட்டமாக வைத்துக்கொள்ளவேண்டும். இது நமது வாழ்க்கைமுறையையில் நல்ல தொரு மாற்றத்தை ஏற்படுத்தும். இது சுற்றுச்சூழலுக்கு நன்மை தருவதோடு மனதிற்கும் மகிழ்ச்சியை அளிக்கும். மரம் வளர்ப்பது ஆத்ம திருப்தியை ஏற்படுத்தும்.
மனதிற்கு இதமான பயணம்
வாரம் ஒருமுறையாவது காரை விடுத்து பேருந்தில் பயணம் செய்யலாம். தனியாக சென்று பழகிய நமக்கு சக அலுவலக நண்பர்களுடன் சேர்ந்து பேருந்தில் பயணிப்பது மகிழ்ச்சியான மாற்றத்தை தரும். இதனால் பெட்ரோல் மிச்சப்படுவதோடு சுற்றுச்சுசூழலுக்கும் நன்மை செய்தது போலாகும்.
நமக்காக ஒருநாள்
தினம் 24 மணி நேரத்தையும், அலுவலகம், வாழ்க்கைத்துணை, கேர்ள்பிரண்ட், குடும்பம், செல்லப்பிராணிகள் என அனைவருக்காகவும் நேரத்தை செலவழிக்கிறோம். நமக்காக என்று சிலமணித் துளிகள் கூட செலவழிப்பது கிடையாது. எனவே நம்முடைய மனதை புத்துணர்ச்சியாக்க நமக்காக சில நிமிடங்களை தினசரி செலவழிக்க வேண்டும் என்கின்றனர் உளவியலாளர்கள்.
ஞாயிறை வீணாக்க வேண்டாம்
விடுமுறை நாளான ஞாயிறு என்பது வீணாக்க அல்ல. எந்த ஒரு இடையூறும் இன்றி அந்த நாளை கழிக்க வேண்டும். அப்பொழுதுதான் அடுத்த வாரத்திற்கான தினங்களை புத்துணர்ச்சியோடு கழிக்க முடியும்.
சிரிப்பு மருந்து
சிரிப்பு என்பது மிகச்சிறந்த மருந்து. தினமும் இறுக்கமாக இருப்பதை கலைக்கவும், மனஅழுத்தம், வலிகளை மறக்கவும், சிரிப்பு உதவுகிறது. மனது விட்டு சிரித்தால் கவலைகள் மறக்கப்படும். எனவேதான் வாய்விட்டு சிரிக்க உளவியல் வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர்.
புத்துணர்ச்சி தரும் இசை
இதமான இசையை கேட்பது மனதிற்கு புத்துணர்ச்சி தரும். அமைதியான முறையில் இசையை கேட்பது மன அழுத்தம் தரும் ஹார்மோன் சுரப்பை கட்டுப்படுத்தும், எனவேதான் அன்றாட அலுவல்களினால் ஏற்பட்ட சிக்கல்களை களைய இசையை கேட்க வலியுறுத்துகின்றனர் உளவியலாளர்கள்.
நடத்தல் அவசியம்
வாக்கிங் என்பது உடலுக்கு புத்துணர்ச்சி தரும். இது நோய் ஏற்படுவதில் இருந்து பாதுகாக்கும் என்பது மருத்துவர்களின் அறிவுரை. அதனால்தான் மருத்துவர்கள் நடப்பதின் அவசியம் குறித்து வலியுறுத்துகின்றனர். வீட்டிற்குள்ளேயே டிரட்மில் வைத்து வீட்டிற்குள் நடப்பதை விட திறந்த வெளியில் நடக்க வலியுறுத்துகின்றனர்.
தினம் ஒரு நற்செயல்
இன்று புதிதாய் பிறந்தோம் என்பதைப்போல தினம் ஏதாவது ஒரு நன்மை, யாருக்காவது ஒரு உதவி செய்யவேண்டும். அது மனதிற்கு புத்துணர்ச்சி தருவதோடு வாழும் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தை தரும்.
No comments:
Post a Comment