Monday, January 2, 2012

திருப்பாவை 17

Lord Kanna

அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும்
எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய்
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குல விளக்கே
எம்பெருமாட்டி யசோதா அறிவுறாய்
அம்பரம் ஊடு அறுத்து ஓங்கி உலகளந்த
உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய்
செம்பொற் கழலடிச் செல்வா பலதேவா
உம்பியும் நீயும் உறங்கேல் ஓர் எம்பாவாய்

பொருள்: ஆடைகளையும், அன்னத்தையும், குளிர் நீரையும் தானமாக தரும் நந்தகோபனே, எழுந்திராய். கொடியிடை கொண்ட பெண்களுக்கெல்லாம் முதன்மையானவளே, ஆயர் குல விளக்கே, எம்பெருமாட்டி யசோதையே, நீயும் கூட எழுவாயாக.

வானத்தை ஊடுருவி, தனது ஈரடியால் உலகை அளந்த உத்தமனே எழுந்திராய். செம்மையான உனது பாதத்தில் பொற் கழலை அணிந்த செல்வனே, பலராமா, நீயும் உன் தம்பி கண்ணனும் இனியும் உறங்க வேண்டாம், எழுதிருப்பீர்களாக.

திருவெம்பாவை - 17

செங்க ணவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்
எங்கும் இலாததோர் இன்பம்நம் பாலாதா
கொங்குஉண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி
இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளி
செங்கமல பொற்பாதம் தந்தருளும் சேவகனை
அங்கண் அரசை அடியோங்கட்கு ஆரமுதை
நங்கள் பெருமானைப் பாடிநலம் திகழ
பங்கயப் பூம்புனல்பாய்ந்து ஆடேல் ஓர் எம்பாவாய்!

பொருள்: நங்கள் சிவபெருமான் பரம கருணாமூர்த்தி! அவர் சிவந்த கண்களைக் கொண்ட திருமால், நான்முகன், மற்றுமுள்ள மற்ற தேவர்கள் ஆகியவர்களிடத்திலும், வேறு எங்கும் இல்லாத இன்பம் தனது அடியவர்களாகிய நம்மிடம் உள்ளதாக அருள் புரிந்தவர்.

நம்முடைய குற்றங்களையெல்லாம் நீக்கி குணம் மட்டும் கொண்டு கோதாட்டும் உத்தமர். எளி வந்த கருணையினால் நமக்காக இரங்கி இம்மண்ணுலகில் தேன் சிந்தும் மலர் சூடிய கருங்கூந்தலையுடைய உமையம்மையுடன் ரிஷபத்தில் இறங்கி நம்முடைய வீடுகளில் வந்து எழுந்தருளி தன் பொற்பாத தரிசனம் தந்தருளிய வள்ளல்.

பெண்ணே! அந்த அருள்கனிந்த திருக்கண்களையுடைய அரசனை, அடிமைகளாகிய நமக்கு தெவிட்டாத தெளிந்த அமுதமானவனை, நம்முடைய சிவபெருமானைப் பாடி மங்களம் பெருகி விளங்க தாமரை மலர்கள் நிறைந்த இந்த நீரில் பாய்ந்து நீராடுவோமாக!

No comments:

Post a Comment