Lord Krishna with Yashoda
ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளர
தரிக்கிலானாகித் தான் தீங்கு நினைத்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே உன்னை
அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.
பொருள்: தேவகியின் மகனாகப் பிறந்து, ஒரே இரவில் யாருக்கும் தெரியாமல் மறைந்து வந்து யசோதையிடம் சேர்ந்தவனே. உன்னால் தனக்கு கேடு வரும் என்று நினைத்துப் பயந்த கம்சன் உன்னை அழிக்க நினைத்தான். ஆனால் நீயோ அதை தவிடுபொடியாக்கி, அவனது வயிற்றில் நெருப்பைப் போல பயத்தை உண்டாக்கி நின்றாய்.
அப்படிப்பட்ட திருமாலே உன்னைப் பாடி அர்ச்சிக்க வந்தோம். உன்னுடன் உறைந்திருக்கும் திருமகளின் அருளினால், எங்களுக்கு செல்வத்தையும், வீரத்தையும் தருவாயாக. வருத்தம் நீங்கி, உனது குண நலன்களைப் பாடி மகிழ்வோம்.
திருப்பள்ளி எழுச்சி 5. ஐம்பூதங்களில் உறைந்திருப்பவன்
பூதங்கள் தோறும்நின் றாயெனின் அல்லால்
போக்கிலன் வரவிலன் எனநினைப் புலவோர்
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்
கேட்டறி யோம்உனைக் கண்டறி வாரை
சீதங்கொள் வயல்திருப் பெருந்துறை மன்னா
சிந்தனைக் கும்அரி யாய்எங்கள் முன்வந்து
ஏதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே.
பொருள்: திருப்பெருந்துறையில் உறைந்திருக்கும் மன்னனே, ஐம்பூதங்களிலும் நீ நீக்கமற நிறைந்திருக்கிறாய். முதலும் நீயே, முடிவும் நீயே என்று கூறி உருகிப் பாடும் புலவர்கள் உன்னைப் புகழ்ந்து ஆடிப் பாடுவதைக் கேட்டிருக்கிறோம். ஆனால் உன்னை மெய்யாக நாங்கள் இதுவரை கண்டிரோம்.
உண்ணைக் கண்ணால் காண முடியாவிட்டாலும், கருத்தால், உணர்வால் உணர முடியும். எட்டாத உயரத்திற்கு அப்பால் நீ நிற்கிறாய். சிந்தனைக்கும் எட்டாத செல்வனே, காண்பதற்கு அரிதானவன் தான் நீ என்றாலும் கூட எங்கள் பால் அன்பு கொண்டு எளியவனாம் எங்கள் முன்பு வந்து நின்று எங்கள் மனதில் மண்டிக் கிடக்கும் மும்மலங்களை அகற்றி அருள் புரிவாயாக.
No comments:
Post a Comment