Monday, January 9, 2012

திருப்பாவை - 23

Krishna


மாரி மலைமுழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து
வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு
போதருமா போலேநீ, பூவைப் பூவண்ணா உன்
கோயில் நின்று இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய
சீரிய சிங்கா சனத்திருந்து யாம் வந்த
காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.

பொருள்: மழைக்காலத்தில் பெண் சிங்கத்துடன் அனைத்தையும் மறந்து உறங்கும் ஆண் சிங்கம், தூக்கம் கலைந்து, தன் எல்லைக்குள் யாரும் புகுந்துள்ளனரா என்பதை அறிவது போல, கண்ணில் அணல் பறக்க, பிடரியை சிலுப்பியபடி எழுந்து வருவதைப் போல, கண்ணா, நீயும் புறப்பட்டு வருவாயாக.

மணிவண்ணனே, உனது கோவிலிலிருந்து இங்கே வந்து, வேலைப்பாடுகள் அமைந்த அழகான சிம்மாசனத்தில் எழுந்தருளி, எங்களது கோரிக்கைகளைக் கேட்டு அதை ஆராய்ந்து எங்களுக்கு அருள் புரிவாயாக.

திருப்பள்ளியெழுச்சி

3. கூவின பூங்குயில் கூவின கோழி
குருகுகள் இயம்பின இயம்பின சங்கம்
ஓவின தாரகை யொளிஒளி உதயத்து
ஒருப்படு கின்றது விருப்பொடு நமக்குத்
தேவநற் செறிகழல் தாளிணை காட்டாய்
திருப்பெருந் துறையுறை சிவபெருமானே
யாவரும் அறிரியாய் எமக் கெளியாய்
எம்பெரு மான்பள்ளி எழுந்தருளாயே.

பொருள்: வெளியில் திரியும் பறவையான கரிய நிற குயில் இனிய குரலில் கூவியது. வீட்டுக்குள் இருக்கும் பறவையான கோழியோ கொக்கரக்கோ என குரல் எழுத்துக் கூவுகிறது. அதேபோல குருகுகள் எனக் கூறப்படும் பறவைகளும் ஒலித்தன.

தேவனே, திருப்பெருந்துறையில் உறைந்துள்ள சிவபெருமானே, யாராலும் அறிய முடியாத அரும்பொருளே, எளியவனே, இறையடியார்கள் சங்குகளை முழங்குகின்றனர். நட்சத்திரத்தின் ஒளி மறைந்து போய் விட்டது. சூரியனின் ஒளி எழுந்து விட்டது. எங்களுக்கு கருணை காட்டி, வீரக்கழல் செறிந்த உனது திருவடிகளை எங்களுக்குக் காட்டி அருள் புரிவாயாக.

No comments:

Post a Comment