எல்லே! இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ?
சில் என்று அழையேன்மின்! நங்கைமீர்! போதர்கின்றேன்
வல்லை உன் கட்டுரைகள் பண்டேஉன் வாய்அறிதும்
வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக
ஒல்லைநீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்து எண்ணிக்கொள்
வல்ஆனைக் கொன்றானை மாற்றாரை மாற்று அழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்.
பொருள்:
எழுப்புவோர்: ஏண்டி! இளங்கிளி போல் மிழற்றும் குமரிப் பெண்ணே, இன்னமும் உறங்குகின்றாயே!
தூங்குபவள்: பெண்களே! 'சில்' என்று கத்தி கூப்பிடாதீர்கள்! இதோ வந்து விடுகின்றேன்.
எழுப்புவோர்: நீ மிகவும் கெட்டிக்காரி! பசப்பு வார்த்தைக்காரி! உன்னுடைய பேச்சுவன்மையை நாங்கள் முன்பே அறிவோம்! உன் வாயையும் நாங்கள் அறிவோம்!
தூங்குபவள்: கெட்டிக்காரிகள் நீங்களா? நானா? நானே ஆனாலும் சரி.
எழுப்புவோர்: சீக்கிரம் எழுந்து வா! இந்த கெட்டிக்காரத்தனத்தைத் தவிர வேறு என்ன வைத்திருக்கின்றாய்!
தூங்குபவள்: நம் தோழியர்கள் அனைவரும் வந்து விட்டனரா?
எழுப்புவோர்: வந்து விட்டார்கள்! சந்தேகம் இருந்தால் நீயே வந்து எண்ணிப் பார்த்துக் கொள். குவாலயாபீடம் என்ற யானையை கொன்ற கண்ணனை, பகைவரின் செருக்கை அழிக்க வல்லவனை(வல்லானை) மாயக்கண்ணனின் புகழைப் பாடலாம் சீக்கிரம் வாடி.
திருவெம்பாவை - 15
ஓரொருகால் எம்பெருமான் என்று என்றே நம்பெருமான்
சீர்ஒருகால் வாய் ஓவாள் சித்தங் களிகூர
நீர் ஒருகால் ஓவா நெடுந்தாரை கண்பனிப்பப்
பாரொருகால் வந்தணையாள் விண்ணோரைத் தான்பணியாள்
பேரரையற்கு இங்ஙனே பித்து ஒருவர் ஆமாறும்
ஆர் ஒருவர் இவ்வண்ணம் அட்கொள்ளும் வித்தகர்தாள்
வார் உருவர் பூண்முலையீர் வாயார நாம்பாடி
ஏர் உருவப் பூம்புனல் பாய்ந்து ஆடு ஏலோ எம்பாவாய்!
பொருள்: கச்சை உருவி விடுமாறு கூடிய அழகிய அணிகலன்களைப் பூண்ட மார்புகளை உடைய பெண்களே! இவள் ஒவ்வொரு சமயம் "எம்பெருமானே! எம்பெருமானே! என்று வாய் ஓயாது அரற்றுகின்றாள்; மற்றொரு சமயம் நமது மஹாதேவன் புகழைப் வாய் ஓயாமல் பேசுகின்றாள்;
அதனால் ஏற்பட்ட மன மகிழ்ச்சியால் இவள் கண்கள் அருவியைப் போல் கண்ணீரை சுரக்கின்றன. நிலத்தில் விழுந்து எம்பெருமானை வணங்கியவள் அப்படியே தனனை மறந்து அப்படியே கிடக்கின்றாள், சிவபெருமானைத் தவிர மற்ற எந்த தெய்வத்தையும் இவள் வனங்க மாட்டாள்; அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகனாம் பேரரசனாகிய சிவபெருமானுக்கு பித்தானவர்கள் தன்மை இப்படித்தான் போலும்!
இவ்வண்ணம் நம்மை ஆட்கொள்ளும் அந்த ஒருவர் யார்? அவர் ஞானமே வடிவான இறைவனே ஆவான்! அவரது திருவடிகளை வாயாரப்பாடி அழகிய மலர்கள் நிறைந்துள்ள இந்த குளத்து நீரில் பாய்ந்து மார்கழி நீராடுவோமாக.
No comments:
Post a Comment