புத்தாண்டில் கம்ப்யூட்டர் மற்றும் இணையப் பயன்பாட்டில் நிறைய மாற்றங்கள் ஏற்படப் போகின்றன என்று எல்லாரும் கணித்துள்ளனர். பலர் தொழில் நுட்பத்தில் ஏற்படப்போகும் மாற்றங்கள் குறித்தும் பல எதிர்பார்ப்புகளைச் சொல்லி வருகின்றனர்.
நாம் இத்துறையில் இயங்கும் நிறுவனங்கள் வாரியாக, அவை என்ன திட்டமிட்டுள்ளன, அவற்றிடமிருந்து என்ன எதிர்பார்க்கலாம் என்று இங்கு பார்க்கலாம்.
ஆப்பிள்:
2010 ஆம் ஆண்டில் மிகவும் வெற்றிகரமாக, புத்தம் புதிய மல்ட்டி டச் டேப்ளட் பிசியினை அறிமுகப்படுத்தி, பல லட்சக் கணக்கில் அதனை விற்று சாதனை படைத்தது ஆப்பிள் நிறுவனம். இனி அந்த வெற்றியைத் தொடர்ந்து தக்க வைக்க வேண்டியது இந்த நிறுவனத்திற்கு அவசியமாகிறது.
மேலும் இதே டேப்ளட் பிசி சந்தையில் பல புதிய நிறுவனங்கள் வந்து மொய்க்க இருப்பதால், போட்டியும் மிகக் கடுமையானதாக இருக்கும். ஐ-பேட் சாதனத்தின் இரண்டாவது பதிப்பை புதிய வசதிகளுடன் கொண்டு வர வேண்டிய கட்டாயம் இதற்கு உள்ளது.
தன் ஐ-போனை மேலும் சில நிறுவனங்களுடன் இணைந்து விற்பனைக்குக் கொண்டு வரலாம். கம்ப்யூட்டரைப் பொறுத்தவரை, தன் புதிய மேக் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை ஆப்பிள் லயன் (Lion) என்ற பெயரில் கொண்டு வரும். இதனால் மேக் கம்ப்யூட்டரின் விலை அதிகமாகும். இதில் ஐ-பேடில் உள்ள சில வசதிகளை இணைக்க ஆப்பிள் முயற்சித்து வருகிறது.
அடுத்து ஆப்பிள் இன்னும் வலுவாக ஊன்றாத இரு பிரிவுகளில், இந்த ஆண்டில் செயல்படும் எனத் தெரிகிறது. அவை - கிளவ்ட் கம்ப்யூட்டிங் மற்றும் சோஷியல் நெட்வொர்க்கிங். இவற்றை அடுத்து வெளி நாடுகளில் விற்பனை செய்து வரும் ஆப்பிள் டிவியை, இன்னும் மலிவான விலையில் அதிக எண்ணிக்கையில் மக்களிடம் கொண்டு செல்ல, ஆப்பிள் முயற்சிக்கும்.
கூகுள்:
தேடல் பிரிவில் தனக்கு நிகர் இல்லை என இயங்கும் கூகுள், தற்போது பல திட்டங்களை மேற்கொண்டுள்ளது. இதன் முக்கிய போட்டியாளரான, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பிங் சர்ச் இஞ்சினுக்குத் தன் வாடிக்கையாளர்கள் சென்றுவிடாமல் இருக்க, பல புதிய வசதிகளைத் தர வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
இதனுடைய ஆண்ட்ராய்ட் சிஸ்டம் பெரிய வெற்றியை அடைந்தாலும், ஐபோன் சாப்ட்வேர் போல நகாசு வேலைகளைத் தருவதாய் இல்லை. டேப்ளட் பிசிக்கான ஆண்ட்ராய்ட் பதிப்பு ஐ-பேட் சாதனத்திற்குச் சவால் விடுவதாய் அமையலாம்.
2011ல் கூகுள், பெர்சனல் கம்ப்யூட்டர் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பிரிவில் தன் நிலையை உறுதிப்படுத்தலாம். கிளவ்ட் கம்ப்யூட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் படி ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஒரு பிரவுசராக வலுப்பெறலாம்.
பயனாளர்கள் இதன் மூலம் இணைய சர்வரில் உள்ள அப்ளிகேஷன் புரோகிராம்களைப் பயன்படுத்துவார்கள். தங்கள் பைல்களைக் கூட, கிளவ்ட் கம்ப்யூட்டிங் முறையில், இணையத்தில் சர்வரில் சேமித்து வைத்துத் தேவைப்படும் போது எடுத்துப் பயன்படுத்துவார்கள். இந்தப் பணிகளுக்கெல்லாம் உதவிடும் வகையில், கூகுள் நிறுவனம் பெர்சனல் கம்ப்யூட்டர் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் மாற்றத்தினைக் கொண்டு வரும்.
இதே போல இதுவரை தீவிரமாக இறங்காத, சோஷியல் நெட்வொர்க்கிங் பிரிவிலும், கூகுள் இந்த ஆண்டில் தடம் பதிக்கலாம். கூகுள் டிவியிலும் கவனத்தைச் செலுத்தி, இன்டர்நெட்டினை, டிவியில் நம் வீட்டு ஹாலுக்குக் கொண்டு வரலாம்.
மைக்ரோசாப்ட்:
சாப்ட்வேர் பிரிவில் சக்கரவர்த்தியாகத் திகழும் மைக்ரோசாப்ட், இன்னும் வாடிக்கையாளர் களை எல்லாப் பிரிவுகளிலும் தன் வசம் வைத்துள்ளது. விண்டோஸ், ஆபீஸ் மற்றும் எக்ஸ் பாக்ஸ் இதற்கு எடுத்துக் காட்டுக்களாகும். ஆனால் இரண்டு பிரிவுகளில், ஸ்மார்ட் போன் மற்றும் டேப்ளட் பிசி, மற்ற நிறுவனங்களிடமிருந்து சவால்களை எதிர் கொண்டுள்ளது.
விண்டோஸ் போன் 7 சிறப்பான சிஸ்டமாக இருந்தாலும், போட்டியைச் சமாளிக்கும் அளவிற்கு விரிவாக இல்லை.
பேஸ்புக் மற்றும் ட்விட்டர்:
சோஷியல் நெட்வொர்க்கிங் பிரிவில் இந்த இரட்டையர்கள், 2010 ஆம் ஆண்டில் சிறப்பான முன்னேற்றத்தினைப் பெற்றனர். இந்த ஆண்டிலும் சவால்களைச் சந்தித்துப் பல புதிய பரிமாணங்களைத் தங்கள் சேவையில் கொள்வார்கள் என எதிர்பார்க்கலாம்.
Read more: http://therinjikko.blogspot.com/2011/01/2011.html#ixzz1C86HM0WJ
No comments:
Post a Comment