Thursday, January 13, 2011

180 விமானங்களுக்கு ஆர்டர்... போட்டியாளர்களுக்கு 'ஷாக்' தந்த இன்டிகோ!


மும்பை: குறைந்த கட்டண விமான நிறுவனமான இன்டிகோ புதிதாக 180 விமானங்களை வாங்க ஆர்டர் கொடுத்து, மற்ற நிறுவனங்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது.

குர்கானைச் சேர்ந்த இந்த நிறுவனம், இந்தியாவின் பல நகரங்களுக்கும் விமானங்களை இயக்கி வருகிறது. பயணிகள் இல்லை, லாபம் குறைவு என மற்ற விமான நிறுவனங்கள் கூறிவரும் நிலையில், இன்டிகோ ஏர்பஸ் 320 ரகத்தில் 180 விமானங்களுக்கு ஆர்டர் கொடுத்துள்ளது. இவற்றின் மதிப்பு 15.6 பில்லியன் டாலர்கள்.

இந்த விமானங்கள் அனைத்தும் மொத்தமாக ஒரே நேரத்தில் சர்வீஸில் ஈடுபடுத்தப்போகின்றன. இந்தியாவில் என்றல்ல... உலகிலே இவ்வளவு அதிக விமானங்களுக்கு ஒரே நேரத்தில் ஆர்டர் கொடுத்து, வாங்குவது இதுவே முதல்முறை. இதனால் உலகின் பிரபல விமான நிறுவனங்கள் பலவும் வியந்துபோயுள்ளன.

தற்போது 34 ஏ 320 ஏர்பஸ்களுடன் 25 இந்திய நகரங்களில் இயங்கும் இன்டிகோ வரும் ஆகஸ்டிலிருந்து சர்வதேச சேவைகளைத் தொடங்குகிறது.

சர்வதேச சேவையில் புதிய ஏர்பஸ்களை ஈடுபடுத்த வசதியாக வரும் ஜூன் மாதத்துக்குள் இந்த 180 விமானங்களும் வாங்கப்பட்டு விடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏர்பஸ் நிறுவனத்துடன் இதற்கான ஒப்பந்தத்திலும் இன்டிகோ கையெழுத்திட்டுள்ளது.

இப்போது இன்டிகோ ஆர்டர் செய்துள்ள ஏர்பஸ்களில் 30 ஏ 320 ரகத்தைச் சேர்ந்தவை. மீதி 150 விமானங்கள் ஏ 320 நியோ ரகத்தைச் சேர்ந்தவை. இவை அனைத்துமே எரிபொருள் சிக்கனம் மற்றும் குறைந்த அளவு கழிவை வெளியேற்றும் திறன் கொண்டவை என ஏர்பஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
English summary
Low-cost carrier IndiGo has placed firm orders for 180 Airbus 320 aircraft at an estimated cost of $ 15.6 billion. The order is the single largest for jets, in terms of volume, to be ever placed in the commercial aviation history. The airline signed a Memorandum of Understanding for 180 eco-efficient Airbus A320 aircraft of which 150 will be A320 NEO, said an Airbus spokesperson adding that the order was the largest in history.

No comments:

Post a Comment