Friday, June 8, 2012


திண்டுக்கல் கோட்டை பற்றிய வரலாற்று தகவல்கள் !!! ( Dindigul Fort )

திண்டுக்கல் பூட்டுக்கு மட்டும் பெயர் பெற்றது கிடையாது திண்டுக்கல் கோட்டைக்கும் தான் புகழ் பெற்றது இப்போது இந்த கோட்டை திண்டுக்கல் மாவட்டத்தின் முக்கிய இடமாக விளங்குகிறது. இந்த கோட்டை மதுரையைச் சேர்ந்த முத்துகிருஷ்ண நாயக்கரால் கி.பி. 1605 ஆம் கட்டத் தொடங்கி பின்னர் திருமலை நாயக்கரால் கி.பி 1659ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.

ஒரு காலத்தில் ஹைதர் அலி தன் மனைவியையும், மகன் திப்பு சுல்தானையும் ஆங்கிலேயரிடம் இருந்து பாதுகாக்க இங்கு தான் மறைத்து வைத்திருந்தார். பின்னர் திப்பு சுல்தான் ஆட்சிக்காலத்தில் கோட்டை சீரமைக்கப்பட்டு , பல அறைகள் கட்டப்பட்டதாகவும் கூறுவர். மைசூர் போரில் திப்பு சுல்தானை தோற்கடித்து ஆங்கிலேயர்கள் இந்தக் கோட்டையைக் கைப்பற்றினர்.

இந்தக் கோட்டை தலையனைத் திண்டு போல் இருப்பதாலேயே இந்த ஊருக்கு திண்டுக்கல் என பெயர் வந்தது. இந்தக் கோட்டை கட்டப்பட்டு சில ஆண்டுகளுக்குப் பின்னர் மலை உச்சியில் அபிராமி அம்மன் கோவில் கட்டப்பட்டு ராணி மங்கம்மாள் ஆட்சியில் இந்தக் கோவிலுக்கு செல்ல படிகள் உருவாக்கப்பட்டது. பின்னர் நடந்த முஸ்லீம் மன்னர்களின் படையெடுப்பால் கோவில் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டது. அந்த இடத்தில் தான் தற்போது அபிராமி அம்மன் கோவில் உள்ளது.

இந்த மலைக்கோட்டை 900 அடி உயரத்துடனும் 2.75 கி.மீ சுற்றளவும் கொண்டது. பீரங்கிகள் இந்தக் கோட்டைக்கு பதினேழாம் நூற்றாண்டில் காலடி வைத்தன. இந்தக் கோட்டையின் மதில் சுவர் பீரங்கிகளை தாங்குவதற்காக இரண்டு சுற்றுகளைக் கொண்டு கட்டப்பட்டது. இன்று வரை இந்த பீரங்கிகள் கோட்டையில் அழகாய் காட்சிதருகின்றன. இந்தக் கோட்டையில் இருந்த வெடிபொருட்கள் வைக்கும் இடம் மிகவும் பாதுகாப்பானதாக கட்டப்பட்டுள்ளது. இந்த இடத்தின் மூலம் போரின்போது வீரர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதோடு மட்டுமல்லாமல் இவர்கள் அவசர காலங்களில் தப்பிக்கவும் வழிவகை செய்கிறது. இந்த இடத்தில் மொத்தம் 48 அறைகள் உள்ளன, இதில் சிறைச்சாலையும் அடக்கம். எல்லாத்திற்கும் மேல் இந்தக் கோட்டையில் மழை நீர் அந்தக் காலம் முதல் சேமிக்கப்பட்டு வருகிறது.

இந்தக் கோட்டையைப் பார்க்க நீங்கள் சில அடி உயரம் படிகளில் ஏற வேண்டும். ஏறி விட்டால் உங்களை பிரமிப்படையச்செய்ய கோட்டையின் கம்பீரமும், அழகும் காத்துக்கொண்டிருக்கும். ஏறக் கடினமாக இருப்பதால் பல பேர் இங்கு வருவதில்லை. நீங்களாவது ஏறத் தயராகுங்கள்.

இங்கு எப்படி செல்வது?

1) தமிழகத்தின் பல இடங்களில் இருந்து திண்டுக்கலுக்கு பேருந்து வசதி உண்டு.

2)திண்டுக்கலில் ரயில் நிலையம் உள்ளது.

3)அருகில் உள்ள விமான நிலையம் - மதுரை 66 கி.மீ தொலைவில்.

இந்தக் கோட்டை archaeological survey of India வால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. முன்னர் இந்தக் கோட்டையை பல பேர் இடித்து கற்களை எடுத்துச் சென்றதால் இப்போது வேலி போட்டு பாதுகாக்கப்படுகிறது.


நன்றி
தமிழக சுற்றுல்லா துறை


No comments:

Post a Comment