உணவு விடுதியுடன் ஓர் மருத்துவமனை
உடம்பு சரியில்லை என்று வைத்தியரிடம் போனால், அவர் மருந்து எழுதி தருகிறார்.
மருந்துகள் வாங்க அங்கிங்கு அலைய வேண்டியதில்லை. மருத்துவமனை உள்ளேயே மருந்துக்கடை இருக்கிறது. அலைச்சல் இல்லாமல் வாங்கிக் கொண்டு வீடு வந்து சேர்ந்துவிடலாம். இதையே கொஞ்சம் மாற்றி யோசி பாணியில் சித்தா டாக்டர் கே.வீரபாபு அசத்தலாய் ஒரு விஷயம் செய்து வருகிறார்.
நோயாளியின் நாடிப் பிடித்து பார்த்துவிட்டு 'உள்ளே நம்ம ஹெர்பல் ரெஸ்டாரென்ட் இருக்கு. சூடா ஒரு ஹெர்பல் சூப் குடிச்சுட்டு வாங்க. அப்புறம் பேசலாம் ' என்றும், 'உடனடியா நீங்க சாப்பிட வேண்டியது ஆவாரம் பூ சாம்பாருடன் ஒரு மீல்ஸ். So, சாப்பிட்டுட்டு வாங்க நம்ம பேசலாம்' என்றும் கூறி தன்னை பார்க்க வரும் நோயாளிகளையும் குஷிப் படுத்திக் கொண்டிருக்கிறார் இந்த டாக்டர்.
சென்னை சாலிகிராமத்தில் இருக்கிறது இவருடைய Clinic with Resturent.
எப்படி உங்களுக்கு இந்த எண்ணம் வந்தது?
"நான் சென்னை அண்ணா மருத்துவக் கல்லூரியில் தான் சித்த மருத்துவம் படித்தேன். படித்து முடித்தவுடன், சித்த மருத்துவம் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் உருவாக்க வேண்டும் என்ற ஆர்வம் வந்தது. சித்த மருத்துவம் என்பதே உணவே மருந்து முறை தான். உணவு அதிலும் மூலிகை உணவு விடுதி எனும்போது ஜனங்களை இலகுவாக உள்ளே வரவழைத்து விடலாம் என்று நம்பிக்கை இருந்தது. மூலிகை சமையலை ருசியாகத் தந்து உணவே மருந்து முறையை புரியவைக்கலாம் என்கிற நோக்கில்தான் இதைத் தொடங்கினேன்.
டாக்டர்.கே.வீரபாபு
என் நம்பிக்கை வீண் போகவில்லை. மூலிகை உணவு தரும் வித்தியாசமான ருசியை
விரும்பி சாப்பிட்டுவிட்டு நோய் தீர்ந்த விஷயத்தை நம்பிக்கையுடன்
சொல்கிறார்கள். இப்போதெல்லாம் நோய் தடுக்கும் ஆற்றலை வளர்த்துக் கொள்ளவே
நிறைய பேர் இங்கு சாப்பிட வருகிறார்கள். இங்கு சாலி கிராமத்தில் நிறைய
சினிமா விஐபிக்கள் இருப்பதால் அவர்கள் பலர் எங்கள் மூலிகை உணவகத்துக்கு
சாப்பிட வருவார்கள். இளையராஜா சென்னையில் இருந்தால் தினம் இங்கு மூலிகை
சூப் வாங்கி வரச்சொல்லி சாப்பிடுவார்.டாக்டர் வீரபாபு சொல்லி முடிக்கும் போதே நமக்கும் மூலிகை சூப் சாப்பிட ஆசை வந்தது. சாப்பிட்டுப் பார்த்தால் அட.. காரசார சுவை! மூலிகை சமையல் அத்தனையும் டாக்டரின் மேற்பார்வையிலேயே நடக்கிறது. அதோடு சமையலுக்கான மூலிகைகள் திருநெல்வேலிப் பக்கத்தில் உள்ள டாக்டரின் சொந்த கிராமத்திலிருந்து வரவழைக்கப் படுகிறதாம்.
நிறைய சினிமாப் பிரபலங்கள் இந்த மூலிகை உணவக பிரியர்கள். நிறையத் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி வேண்டுமென்று, இந்த உணவகத்துக்கு சாப்பிட அழைத்து வருவார்கள். அந்தளவுக்கு இதற்கு கிராக்கியிருக்கிறது. மூலிகை சமையல் என்றாலும் அவ்வளவு ருசியாக இருப்பதால் தான் குழந்தைகளையும் அழைத்து வருகிறார்கள்.
உங்களின் எதிர்காலத் திட்டம் என்ன?
உடல் இளைக்க சிகிச்சை, அழகுக்கு ஸ்பா, என்று மிகக் குறைந்த செலவில் ஐடி பூங்கா சுவர்களுக்கு உள்ளேயே எனது கிளினிக் வித் ரெஸ்டாரென்ட் ஆரம்பிக்கும் எண்ணம் இருக்கிறது. சித்தாவின் உணவே மருந்து மூலம் குண்டான இளைஞர்களின் உடலை ஆரோக்கியமாக இளைக்க செய்யவும், அழகுக்கு மூலிகை ஸ்பா சிகிச்சை கொடுக்கவும் திட்டமிட்டு அதற்கான செயல் முறையில் இறங்கியிருக்கிறேன்.
4தமிழ்மீடியாவுக்காக: எழில்செல்வி
படங்கள் எழில்சூரியா
படங்கள் எழில்சூரியா
No comments:
Post a Comment