Thursday, June 21, 2012

அதிகரிக்கும் ஆண் மலடுகள் - மனிதப்பரிணாமம் முடியப்போகிறதா?


உங்கள் வீட்டிலோ, அல்லது உங்கள் நண்பர்கள் வட்டத்திலோ குழுந்தை பேரு இல்லாத நிலையில் நிச்சயம்
ஒருவராவது இருப்பார். உலகமுழுவதும் அதிகரிக்க தொடங்கி, தற்போது இந்தியாவிலும் குறிப்பாக தமிழகத்திலும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தமிழகத்தில் குழந்தையின்மைக்கான மருத்துவமனைகள் அங்கொன்றும்,இங்கொன்றும் இருந்த நிலைமாறி வருகிறது.இந்நிலையில் இன்னும் 50 ஆண்டுகளில் விந்தணுக்கள் உள்ள மனிதர்களை பார்ப்பது அபூர்வம் என்று அதிர்ச்சிகரமான தகவலை ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர். தாமதமான திருமணங்களும், குழந்தை பிறப்பை தள்ளிப் போடுவதும் விந்தணு குறைபாட்டிற்கு காரணம் என்கின்றனர் மருத்துவர்கள்.

உலகெங்கும் மருத்துவ துறையில் உள்ள மிக முக்கிய பிரச்னையாக உருவெடுத்திருப்பது குழந்தையின்மை பிரச்னை தான். குழந்தையின்மைக்கு பெண்கள் தரப்பில் பல காரணங்கள் இருந்தாலும் ஆண்கள் தரப்பில் முக்கிய காரணமாக விளங்குவது போதுமான விந்தணுக்கள் இல்லாததே.

சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வின் படி மனிதனின் விந்தணு எண்ணிக்கை ஆண்டுக்காண்டு குறைந்து கொண்டே வருவதையும் இது கட்டுப்படுத்தப்பட வில்லையானால் 50 ஆண்டுகளில் போதிய விந்தணுக்கள் உள்ள மனிதர்களே இருப்பதே கடினம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

விந்தணு வீழ்ச்சி

இது குறித்து ஆய்வு மேற்கொண்ட மருத்துவர் பார்கவா, சராசரியாக ஓராண்டுக்கு 2% ஆண்களுக்கு போதுமான விந்தணு குறைந்து கொண்டே வருகிறது என்றும் இப்படியே போனால் 50 ஆண்டுகளில் போதுமான விந்தணு கொண்ட ஆண்களை பார்ப்பதே அபூர்வம் என்கிறார். மேற்கத்திய நாடுகளில் விந்தணு வீழ்ச்சி 90களிலேயே உணரப்பட்டது என்றும் அவர் கூறியுள்ளார். இந்தியாவுக்கும் இது பொருந்தும் என்று கூறியுள்ள பார்கவா ஹைதரபாத்தை சேர்ந்த தலை சிறந்த மருத்துவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண் மலட்டுத்தன்மைக்கு காரணம் என்ன..

ஆண்மைக்குறைபாடு பற்றி பெரும்பாலான ஆண்களுக்கு சரியாக புரிவதில்லை. ஒரு பெண்ணை திருப்தி படுத்தும் அளவுக்கு உறவு கொள்ள முடிந்தாலே குழந்தை இல்லாமைக்குத் தான் காரணம் இல்லை என்று எண்ணுகிறார்கள். ஆனாலும் சிலருக்கு உறவின்போது வெளிப்படும் உயிரணுவில் குழந்தை பேறு கொடுக்கக்கூடிய அளவு தகுதியான அணுக்கள் இருக்காது. இந்த நிலை தான் ஆண் மலட்டுத் தன்மை எனப்படுகிறது.

பரபரப்பான வாழ்க்கையில் செக்ஸ் என்பதற்கு முக்கியத்துவம் கொடுக்க முடியாத அளவுக்கு இளையவர்கள் பல்வேறு மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். இதுவே ஆண்மைகுறைவுக்கு முக்கிய காரணமாக அமைகிறது.

உடல் ஆரோக்கியம், உணவு பழக்கம் குறித்து ஆய்வு மேற்கொண்டதில் துரித உணவகங்களில் கிடைக்கும் உணவுகளும், ருசிக்காக அதிக கொழுப்புச் சத்துள்ள உ ணவுகளை உண்பதன் மூலமு ம் இளைஞர்களின் விந்தணு உற்பத்தியில் குறைபாடு ஏற்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல் அதிக புகைப் பழக்கம் மதுப்பழக்கம், மன அழு த்தம், போன்றவையும் ஆண்களின் விந்தணு குறைபாட்டில் முக்கிய பங்கு வகிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இறுக்கமான ஜீன்ஸ் போன்ற உள்ளாடைகள் ஆண்களின் ஆண்மைத் தன்மையை பாதிக்கிறது. செக்ஸ் செயல்பாடுகளையும் பாதிக்கிறது.

வெந்நீர் குளியல் மேற்கொள்பவர்களுக்கு உயிரணுக்கள் எண்ணிக்கை குறையாகவே இருக்கிறது. அதிக அளவில் காபி குடிக்கும் நபர்களின் உயிரணுக்கள் பாதிக்கப் பட்டிருப்பதாகத் தெரிய வந்திருக்கிறது. பிறவிலேயே x குரோமோசோம்களை கொண்டுள்ள ஆண்கள் இந்த குறைபாடுகளால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். அம்மை நோய்த் தொற்று ஏற்பட்டிருந்தால், விரைக்குள் பாதிப்பு உண்டாகி உயிரணு உற்பத்தி பாதிக்கப்படலாம்.உயிரணுக்கள் வெளிவரும் நாளங்களில் அடைப்பு இருக்கும் பட்சத்தில் பாதிப்பு உண்டாகும்.
பால்வினை நோய்களால் பாதிக்கப் பட்டிருந்தாலும், நோய்த் தொற்று ஏற்பட்டிருந்தாலும் விந்தணு குறைபாடு உருவாகலாம். இந்த குறைந்த அளவில் இருக்கும் உயிரணுவும் ஊர்ந்து செல்வதில் சிரமப்படுவதாகவே இருக்கும். உயிரணுக்களின் தலை மற்றும் வால் பகுதி குறைபாடுகளுடன் காணப்படும் பட்சத்திலும் குழந்தை பிறக்க வாய்ப்பில்லாமல் போய் விடுகிறது. ஆணின் விரையைச் சுற்றியுள்ள வெரிகோஸ வெயின் எனப்படும் நரம்புகள் முறுக்கேறி அதிக வெப்ப நிலையை அடையும் பட்சத்தில் உயிரணு உற்பத்தி பாதிக்கப்படுகிறது.

Vicky Donor

உயிரணுதானம் குறித்து (இந்தியில்) பாலிவுட்டில் சமீபத்தில் வந்து பிரமாண்ட வெற்றி பெற்ற படம் தான் விக்கி டோனர். விக்கி தற்கால பொறுப்பற்ற இளைஞன். அவன் மாமாவின் குடும்ப வியாபாரமான துணி வியாபாரத்திலும் சேர பிடிக்காமல், அம்மாவின் பியூட்டி பார்லரையும் பார்த்துக் கொள்ள பிடிக்காமல் தனக்கென ஒரு வேலையை தேடிக் கொள்ள வேண்டும் என்று சொல்லிக் கொண்டு, அதற்கான எந்த முயற்சியும் செய்யாமல், கிரிக்கெட் ஆடிக் கொண்டும், நண்பர்களோடு பப்புகளில் குடித்துக் கொண்டும் வாழ்க்கையை கொண்டாடிக் கொண்டிருப்பவன்.


அவனின் தாய் டோலி. தனியொருத்தியாய் விக்கியையும், தன் மாமியாரையும் பார்லரில் வரும் வருமானத்தை வைத்து ஓட்டிக் கொண்டிருப்பவள்.. விக்கியை பணம் சம்பாதிக்கச் சொல்லி விரட்டுபவள்.டாக்டர் சந்தா. சந்தா பெர்டிலிட்டி க்ளினிக் நடத்தும் டாக்டர்.  அவரிடம் வரும் பேஷண்டுகளில் டிமாண்டிற்கு ஏற்றார் போல, நல்ல விந்தணு தானம் கொடுப்பவர் இல்லாமல் அல்லாடுபவர். அவர் கண்ணில் மாட்டுகிறான் விக்கி. அபாரமான விந்தணு கவுண்டுகளை கொண்ட "ஆர்ய புத்திரன்" என்று விக்கியை கண்டு பிடித்து அவனை விந்தணு தானம் செய்யச் சொல்லி வற்புறுத்துகிறார். இந்த மாதிரி நான் வெஜ் டைப் வேலை செய்ய மாட்டேன் என்று சொல்லி விக்கி மறுத்தாலும் அதில் கிடைக்கும் பணத்தின் காரணமாய் ஓகே சொல்லி பெரிய அளவில் செட்டில் ஆகிறான்.
இதன் நடுவில் பெங்காலிப் பெண்ணான அஷிமாவுடன் காதல் கல்யாணம், என்று எல்லாமே சந்தோஷமாய்த்தான்  போகிறது. அவன் ஒரு ஸ்பேர்ம் டோனர் என்று தெரியும் வரை. அவன் மனைவிக்கு குழந்தை பாக்கியம் கிடையாது என்று தெரியும் வரை.இருவருக்குள்ளும் பிரச்சனை வருகிறது. விக்கியை விட்டு அவனது மனைவி விலகிப்போகிறாள், இவர்களை இணைத்து வைக்க டாக்டர் சந்தா விக்கி உயிரணுமூலம் பிறந்த அத்தனை குழந்தைகளையும் ஒரிடத்தில் வரவழைக்கிறார்.தன் கணவனின் சாயலில் இருக்கும் குழந்தைகளையும், அந்த குழந்தைகளின் பொற்றோர்களின் மகிழ்ச்சியையும் பார்த்து பிரமித்து போகும் அவள் தனது கணவன் உயிரணுதானத்தின் மகிமையை புரிந்து கொண்டு, தனது கணவனை கட்டிக்கொள்கிறாள் என்பதே கதை சுருக்கம்.

மிகப்பெரிய வியாபாரமாக மாறிவரும் உயிரணு தானம்

உயிரணு விற்பனை அமெரிக்காவில் மிகப்பெரிய வியாபாரமாக ஆகியுள்ளது. உலகின் மிகப்பெரிய உயிரணு வங்கியான ''கலிபோர்னியா க்ரையோபேங்க்'' உட்பட அங்கு 675 உயிரணு வங்கிகள் இருக்கின்றன.60 நாடுகளுக்கு அமெரிக்காவிலிருந்து உயிரணு ஏற்றுமதி ஆகியாகிறது. உயிரணுதானத்தில் 65 சதவீதத்தை அமெரிக்கா செய்கிறது. இதில் அமெரிக்காவுக்கு ஆண்டுக்கு ரூ.550 கோடி வருவாய் கிடைக்கிறது. பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் இருப்பதால் அங்கு எந்த நாட்டை சேர்ந்தவரிடமும் உயிரணுதானம் பெறமுடியும்.

இங்கிலாந்தை பொறுத்தவரை 1940 களிலேயே உயிரணுதானம் நடைமுறைக்கு வந்துவிட்டது.லண்டனைச் சேர்ந்த டாக்டர் பெர்டோல்டு வியஸ்னர் நடத்திய கருத்தரிப்பு மையத்தில் 1500க்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறந்துள்ளன. அவற்றில் 600க்கும் மேற்பட்ட குழந்தைகள் இவரின் உயிரணுமூலமே பிறந்தவர்கள். 1940களில் அதிக ஆண்கள் உயிரணுதானம் செய்ய முன் வரததால் அவரே நிறைய பேருக்கு கொடுத்திருக்கிறார்.

மறைந்த பாடகர் மைக்கேல் ஜாக்சனின் இளையமகன் பிரின்ஸ்மைக்கேலின் உண்மையான அப்பா நான்தான் என இங்கிலாந்தை சேர்ந்த ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி மாட்பிடெஸ் உரிமை கொண்டாடி வருகிறார். பிரச்சனை கோர்ட் வரை போய்விட்டது.

இந்தியாவை பொறுத்தவரை துவக்கத்தில் அங்கீகரிக்கப்படாமல் இருந்த உயிரணுதானம், தற்போது மகப்பேறு மருத்துவத்தில் உலக அளவில் இந்தியா தான் நம்பர் 1 என்ற அளவிற்கு மாறியுள்ளது.. ஆரம்பத்தில் புனிதமாக கருத்ப்பட்ட உயிரணுதானம் தற்போது தேவை அதிகரித்திருப்பதால் தொழிலாக மாறிவிட்டது. உயிரணுதானம் செய்தால் ரூ.5 முதல் ரூ.10 ஆயிரம் வரை கிடைக்கிறது.

தென்னிந்தியாவின் முதல் டெஸ்ட்டியூப்பேபியை உருவாக்கிய டாக்டர் கமலா செல்வராஜ் ( நடிகர் ஜெமினிகணேசனின் மகள்) ,மற்றும் டாக்டர் நாராயண ரெட்டியும் உயிரணுதானம் என்பது தாய்மை உணர்வோடு செய்ய வேண்டி பணி அதை வியாபாரமாக மாற்றக்கூடாது என்கிறார்கள். மேலும்  பிறரின் உயிரணு மூலம் குழந்தை பொற்றுக்கொள்வதை விட ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்ப்பது மேலான செயல் என்கிறார்கள். ஏனென்றால் உயிரணு முலம் பெற்றுக்கொள்ளும் குழந்தைகளால் பல்வேறுவிதமான பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியது வரும் என்கிறார்கள்.

இந்த பிரச்சனைகள் ஒருபுறம் இருந்தாலும் கூட இன்னும் 50 ஆண்டுகளில் ஏற்பட போகும் ஆண் மலட்டு தன்மை மனித பரிணாமத்தையே முடிவுக்குகொண்டுவந்த விடுமா என்ற கவலையை ஏற்படுத்துகிறது. இதற்கு முன் அழிந்து போன டைனோசர்களில் இருந்து அனைத்து விலங்குகளும் பறவைகளும் புறச்சுழல் மாற்றங்களினால் இனபெருக்க சக்தியை இழந்ததால் அழிந்து விட்டன. மனிதர்களை பொருத்தவரை சுற்றுசுழலை தங்களே கெடுத்து தங்களையும் அழித்துக்கொள்கிறார்கள்.

எப்படி சரி செய்வது

குழந்தை பேரு மருத்துவர் மல்பானி. கூறும் போது விந்தணுக்கள் பழைய படி மனிதனிடத்தில் வளமாய் இருக்க வேண்டுமெனில் மனிதன் இயற்கையான வாழ்வுக்கு திரும்ப வேண்டும் என்கிறார். இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் கூறியதைப்போல மண்ணில் அளவிற்கு அதிகமான ரசாயன உரங்களைப் போட்டு மண்ணை மலடாக்குவதாக கூறியுள்ளார். மண் மலடானால், மனிதர்களும் மலடாவார்கள் என்று கூறி நாடுமுழுவதும் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இன்றைய இளம் தலைமுறையினர் இதை புரிந்து இயற்கையோடு இசைந்து வாழ்ந்தால் மட்டுமே எதிர்காலத்தில் சந்ததிகள் உருவாக முடியும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாகும்.


 அ.தமிழ்ச்செல்வன்

No comments:

Post a Comment