மூர் மார்க்கெட் பற்றிய வரலாற்று தகவல் !!!
அந்தக் கால மெட்ராசில் புத்தகப் பிரியர்களின் புதையல் சுரங்கமாய்
திகழ்ந்தது மூர் மார்க்கெட். புத்தகங்கள் மட்டுமின்றி பழமையான கலைப்
பொருட்கள் முதல் பல்பொடி வரை இங்கு கிடைக்காததே கிடையாது என்பார்கள்.
அப்பா, அம்மாவைத் தவிர அனைத்தும் கிடைக்கும் இடம் என்று மூர்
மார்க்கெட்டைப் பற்றி அன்றைய மெட்ராஸ்வாசிகள் பெருமை அடித்துக்
கொள்வார்கள்.
சென்டிரல் ரெயில் நிலையம் அருகில் கம்பீரமாக நின்று
கொண்டிருந்த சிவப்பு நிறக் கட்டிடத்தில் மூர் மார்க்கெட் இயங்கி வந்தது.
இந்த மார்க்கெட் உருவானதற்கு ஒரு வரலாறு உண்டு.அந்தக் காலத்தில் சென்னை
பிராட்வேயில் ஒரு மெயின் மார்க்கெட் இருந்தது. அந்தப்பகுதி சாக்கடைகள்
தேங்கி சுகாதார குறைவாகக் காணப்பட்டது. அப்போது முனிசிபாலிடி தலைவராக
இருந்த லெப்டினட் கர்னல் சர் ஜார்ஜ் மூர், சென்னை நகரத்தின்
மேம்பாட்டிலும், சுகாதாரத்திலும் மிகுந்த அக்கறை காட்டினார். அதனால்
பிராட்வேயில் உள்ள மெயின் மார்க்கெட்டை வேறு இடத்திற்கு மாற்ற மூர்
திட்டமிட்டார். எனவே சென்ட்ரல் ஸ்டேஷன் அருகில் குஜ்லி பஜார் இருந்த
இடத்தில் மூர் மார்க்கெட் கட்ட, 1898ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜார்ஜ் மூர்
அடிக்கல் நாட்டினார். 1900 நவம்பரில் கட்டி முடிக்கப்பட்டு, அப்போதைய
கவர்னர் ஆர்தர் ஹேவ்லாக்கால் மூர் மார்க்கெட் திறந்து வைக்கப்பட்டது.
கடைகள் வியாபாரிகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டு வாடகை வசூலிக்கப்பட்டு
வந்தது.
மெட்ராசில் வசிப்பவர்கள் மட்டுமின்றி வெளியூர்களில்
இருந்து வந்து போவோரும், தவறாமல் கால்பதிக்கும் இடமாக மூர் மார்க்கெட்
திகழ்ந்தது. இந்தோ சாரசானிக் பாணியில் கட்டப்பட்ட இந்த கட்டிடம்
பார்க்கும்போதே பரவசத்தில் ஆழ்த்தக் கூடியதாக இருந்தது. நுழைவாயில்களில்
கருங்கல்களாலான வளைவுகளும், கூரைக் கைப்பிடிச் சுவர்களில் இடம் விட்டு
இடமாய் கோயில் கலசங்களின் வடிவில் கல் கலசங்களும் காட்சியளித்தன. இன்று
அல்லிக் குளத்தின் மேல் எழுப்பப்பட்டுள்ள புதிய மூர்மார்கெட் அங்காடியின்
மாடிச் சுவர்களில் இந்த கல் வடிவங்கள் பத்திரப்படுத்தப்பட்டு
பொருத்தப்பட்டுள்ளன.
அந்தக் காலத்து அசல் மூர் மார்க்கெட்டின்
(இன்றைய சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையம்) உள்ளே, மத்தியில்
மரங்களுக்கிடையில் அழகிய நீரூற்று ஒன்றும் அமைக்கப்பட்டிருந்தது. மூர்
மார்க்கெட்டில் பழைய பொருளும் கிடைக்கும், புதிய பொருளும் கிடைக்கும். பழைய
புத்தகங்கள், புதிய புத்ககங்கள், எல்லா மொழிகளிலும் புத்தகங்கள்,
பத்திரிகைகள் என புத்தகப் பிரியர்களின் சொர்க்க லோகமாகவே இந்த மார்க்கெட்
திகழ்ந்தது. அந்தக் கால மஞ்சள் பத்திரிகைகள் கூட இங்கு கிடைக்கும்.
மூர் மார்க்கெட்டில் கிடைத்த மற்றொரு முக்கியமான பொருள் கிராமஃபோன்
இசைத்தட்டுக்கள். எல்லா மொழிகளிலும் வெளிவந்த சாதாரண இசைத் தட்டுக்கள்
முதல் எல்.பி ரெக்கார்டுகள் வரை இங்கு வாங்கலாம். கர்னாடக இசை, இந்துஸ்தானி
இசை, தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாள சினிமாக்களின் இசைத்தட்டுக்கள் என
அனைத்து இசைகளையும் வசப்படுத்தி வைத்திருந்தது இந்த கலை மார்க்கெட்.
ஆங்கிலோ - இந்தியர்கள் மேனாட்டு இசைத் தட்டுக்களை விற்கவும், வாங்கவும்,
ஒன்றைக் கொடுத்துவிட்டு இன்னொன்றை பரிமாறிக் கொள்ளவும் எப்போதும் இங்கே
அலைந்து கொண்டிருப்பார்கள். இங்கு நம்மிடமுள்ள இசைத் தட்டுக்களை
கொடுத்துவிட்டு, அதற்குப் பதில் சொற்பக் காசை மட்டும் கொடுத்து வேறு இசைத்
தட்டை பேரம் பேசி எடுத்துச் செல்லலாம்.
மூர் மார்க்கெட்டில்
பொருட்களை பேரம் பேசி வாங்குவதே ஒரு தனிக்கலை. ஆயிரங்களில் தொடங்கி
அணாக்களில் முடியும் அதிர்ச்சி தரும் பேரங்கள் எல்லாம் இங்கு சர்வசாதாரணம்.
மார்க்கெட் வாசலிலேயே இசைத் தட்டுகளுக்கான தரகர்கள் காத்திருப்பார்கள்.
இப்போது சென்ட்ரல் ஸ்டேஷன் வாசலில் ஆட்டோகாரர்கள் செய்யும் வேலையை அப்போது
அவர்கள் செய்து கொண்டிருந்தனர். என் கடைக்கு வா, உன் கடைக்கு வா.. என
கையைப் பிடித்து இழுப்பார்கள்.
மூர் மார்கெட் வளாகத்தில்
நிரந்தரக் கடைகள், தற்காலிகக் கடைகள் என இருவகை கடைகள் இருக்கும். நிரந்தர
கடைகளில் பழைய பர்மா தேக்கில் நேர்த்தியாய்ச் செய்து கண்ணாடிச் சட்டமிட்ட
கதவுகளைக் கொண்ட பிரம்மாண்டமான பீரோக்களில் அரிதான வெளிநாட்டு - உள்நாட்டு
நூல்களை அடுக்கி வைத்திருப்பார்கள். அச்சுக்கலை கண்டுபிடிக்கப்பட்ட ஆரம்ப
நாட்களில் பதிப்பிக்கப்பட்ட புத்தகங்களைக் கூட இங்கு வாங்கிவிட முடியும்.
மற்றொரு வகை விற்பனையாளர் ''கேர் ஆஃப் பிளாட்பாரம்'' தினுசு. இவர் மூர்
மார்க்கெட் வெராண்டாக்களில் நிரந்தர கடைக்காரர்களின் தயவில் கடை
விரித்திருப்பார். பெரும்பாலும் பேப்பர் பேக் நூல்களும் பழைய
பத்திரிகைகளுமாயிருக்கும். விற்காமல் தேங்கிப் போகும் நூல்களையும்
பத்திரிகைகளையும் அவற்றின் தகுதியறிந்து கூறு,கூறாகப் பிரித்து
அம்பாரமாக்கிக் குவித்து, ''இதெல்லாம் பத்து ரூபாய் இதெல்லாம் ஐந்து ரூபாய்
அதெல்லாம் எது எடுத்தாலும் ஒரு ரூபாய் எது எடுத்தாலும் எட்டணா'' என்று
எழுதிய அட்டைகளைக் குத்தி வைப்பார்கள்.
புத்தகக் கடைகள்
மட்டுமின்றி ரெடிமேடு துணிக்கடைகள், பொம்மைக் கடைகள், என அனைத்து வகையான
கடைகளும் இங்கிருக்கும். வண்ண மீன்கள், கிளிகள், முயல்கள் போன்ற
உயிரினங்களும், அவற்றை வளர்ப்பதற்கான தொட்டி, கூண்டு என சகலமும்
கிடைக்கும். கடைசி பகுதிக்கு சென்றால் ஆட்டுக்கறி, கோழிக்கறி கடைகள்
இருக்கும். சுருங்கச் சொன்னால் அந்தக் கால மெட்ராசின் ஒரு பிரம்மாண்ட
ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ்தான் மூர் மார்க்கெட்.
சென்ட்ரல் ரயில்
நிலைய விரிவாக்கத்திற்காக மூர் மார்க்கெட் முழுவதையுமே வேறு இடத்துக்கு
மாற்ற அரசாங்கம் திட்டமிட்டது. ஆனால் இதற்கு வியாபாரிகள் மற்றும்
பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில்தான் 1985ஆம் ஆண்டு
ஒரு நள்ளிரவில் மூர் மார்க்கெட் மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்தது.
இரவு நேரம் என்பதால் தீ பிடித்த விவரம் யாருக்கும் தெரியவில்லை. கட்டிடம்
முழுவதும் கொழுந்துவிட்டு எரியும் போதுதான் தெரியவந்தது. தீயணைப்பு
படையினர் 20 தீயணைப்பு வண்டிகளுடன் வந்து ராட்சத ஏணி கொண்ட இயந்திரங்களை
பயன்படுத்தி 11 மணி நேரம் போராடி தீயை அணைத்தார்கள்.
ஆனால் அதற்குள்
தீயின் நாக்குகள் அந்த பிரம்மாண்ட மார்க்கெட்டை அப்படியே சுருட்டி வாயில்
போட்டுக் கொண்டன. விரல் விட்டு எண்ணக்கூடிய அளவுக்கு ஓரிரு கடைகளே தப்பின.
கடைகள் எல்லாம் இடிந்த நிலையில் மூர் மார்க்கெட்டின் உள் பகுதியில்
வியாபாரிகள் சோகமே உருவாக உட்கார்ந்து இருந்தனர். படையெடுப்பிற்குப் பிறகு
அழிந்து போன நகரம் போல மூர் மார்க்கெட் காட்சி அளித்தது. இப்படி 85
ஆண்டுகாலம் மிகவும் பரபரப்பாக இயங்கி, தங்கள் வாழ்வோடு இரண்டறக்
கலந்துவிட்ட மூர் மார்க்கெட் திடீரென தீயில் மாயமானதை நம்ப முடியாமல்
மெட்ராஸ்வாசிகள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
இந்த தீ விபத்தினால்
ஏற்பட்ட சேதம் ரூ.10 கோடி என்று அப்போதைய அரசு தெரிவித்தது. ஆனால், கடைசி
வரை தீ விபத்துக்கான உண்மைக் காரணம் வெளிச்சத்துக்கு வராமலேயே போய்விட்டது.
நன்றி
நண்பன் போதி
No comments:
Post a Comment