Monday, June 25, 2012

ஆனித்திருநாளில் ஆனந்த நடராஜரின் தரிசனம்


ஆனித்திருநாளில் ஆனந்த நடராஜரின் தரிசனம்


"குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற்  குமின்சிரிப்பும்
பனித்தசடையும் பவளம் போல்மேனியிற் பால்வெண்ணீறும்
இனித்தமுடைய எடுத்த பொற்பாதமும் கானப்பெற்றால்
மனிததப் பிறவியும் வேண்டுவதேயிந்த மானிலத்தே"
நாவுக்கரசர் ஆடலரசன் எம்பிரான் நடராஜப்பெருமானின் ஆடலை வியந்து இவ்வாறு பாடியிருக்கிறார். பஞ்ச பூதங்களுக்கும் பரமனுக்கும் ஐந்தொழில்களுக்கும் ஒற்றுமை உண்டு. அவற்றை இயக்குபவர்களும் பரம சிவனிலிருந்து வந்தவர்களே. பஞ்சாட்சரம் என அழைக்கும் நமசிவாய என்பதின் தாத்பரியம் இதுதான். அதாவது அதன் பொருள் இதுதான்:

நகாரம் - பிருத்வி, மண், பிரம்மா
மகாரம் - அப்பு, நீர், விஸ்ணு,
சிகாரம் - தேயு, நெருப்பு, உருத்திரன் 
வகாரம் - வாயு, காற்று, மகேசன்
யகாரம் - ஆகாயம், விண், சதாசிவன்

இப்படி பஞ்சபூதங்களையும் தோற்றுவித்து ஐந்தொழில்களை இயக்க வைத்து உயிர்கள் அசைவடைய ஐந்து உருவாய் தோற்றுவித்து படைத்தல் பிரம்மா என்றும் காத்தல் விஸ்ணு என்றும் அழித்தல் உருத்திரன் என்றும் மறைத்தல் மகேசன் என்றும் அருளல் சதாசிவன் என்றும் உலகம் இயங்கச் செய்தவர் முழுமுதற் கடவுளான சிவபெருமான். அத்தகைய எம்பெருமான் பூவுலகில் வாழும் உயிர்களை நடமாடி இருந்து காத்திட நடராஜ வடிவம் எடுத்து ஆனந்த நடனம் ஆடினார்.
இச் சிவமானது இருநிலைகளைக் கொண்டிருக்கிறது. அவை எல்லாவாற்றையும் கடந்து நிற்பது ஒரு நிலை. எல்லாவற்றிலும் கலந்து நிற்பது மற்றொருநிலை. கடந்து நிற்பது நிர்க்குணம் அதேபோல் கலந்து நிற்பது சகுனம். உருவம் அருவம், அருவுருவம், ஐந்தொழில் இவை எதுவும், எல்லாவற்றையும் கடந்த சிவத்துக்கு இல்லை. சிவன் இயற்கையோடு இணைந்து நிற்கும் நிலையே எல்லாவற்றிலும் கலந்தநிலை. சிவம் அறிவுப்பொருளானவர். இயற்கை சடப்பொருளாகும். சிவம் இயற்கையுடன் இணைந்த நிலையில் இயக்கம்(அசைவு) உண்டாகிறது. சிவத்துக்கும் தனித்த இயற்கைக்கும் அசைவு கிடையாது. ஆகவே சிவம் தனித்தும் இயற்கையுடன் கலந்தும் நிற்கும். ஆனால் இயற்கை தனித்து நின்று இயங்காது. அது சிவத்துடன் கலந்தே இயங்கும் இயல்பு கொண்டது. சிவம் அசைவதால் அன்றோ அகிலமும் அசைவுறுகிறது பஞ்சபூதங்களும் அசைகிறது. இதனாலன்றோ இப்பூமியும் உயிர்களும் இயக்கம் பெறுகிறது.
சிவபிரான் பஞ்சபூத நாயகனாக விளங்குகிறார். அதாவது பஞ்சக்கிருத்தியங்களையும் அவரே செய்கிறார். திருக்காஞ்சியில் நிலமாகவும், திருவானைக்காவில் நீராகவும், திருவண்ணாமலையில் தீயாகவும், திருக்காளத்தியில் காற்றாகவும், திருத்தில்லையில் ஆகாசமாகவும் நின்று அருள் புரிகின்றார். அதேபோல் சூரியவிம்பத்தில் சூரியவடிவாகவும், சோமநாதத்தில் சந்திரவடிவமாகவும், எல்லா உயிர்களிடத்தும் பசுபதியாகவும் அமர்ந்து விளங்குகிறார்.

இப்படி விளங்கும் சிவபிரான் ஐந்தொழில்களையும் செய்ய ஏழுவகைத்தாண்டவங்களை ஆடினார். நடராஜ வடிவத்தை பார்த்தோமேயானால் அதில் மூன்று கண்களும், சாந்த குணமும், நான்கு தோள்களும், சிவப்பு நிறமும், புன்முறுவல் செய்யும் முகமும் கொண்டிருக்கும். அதோடு சடைமுடியிற் கங்கை, பிறை, கொக்கிறகு, ஊமத்தை, எருக்கு, சிறுமணி, மண்டையோடு, பாம்பு ஆகியனவும் காணப்படும்.
மேலும் இடது காதில் பத்திர குண்டலமும், வலது காதில் மகர குண்டலமும் விளங்கும். வலதுபாதம் அபஸ்மாரபுருஷன் எனப்படும் முயலகன் மீது ஊன்றிய நிலையிலும், இடதுபாதம் தூக்கிய நிலையிலும் (குஞ்சித பாதம்) அமைந்திருப்பதும் ஒரு தனி அழகு. நான்கு கைகளுடன் விளங்கும் நடராஜப்பெருமானுடைய பின்வலக்கையில் உடுக்கையும், பின் இடக்கையில் தீயும் உள்ளன. முன் வலக்கரம் அபயகரமாகவும், முன் இடக்கரம் வீசுகரமாகவும் அமைந்திருப்பதே நடராஜ பெருமானின் வடிவின் விளக்கம்.
ஐந்து வகைத்தொழிலைக் குறிப்பதாக எமது பாரதத்தில் நடன சபைகளில் ஏழுவகைத் தாண்டவங்களை சிவபிரான் திருநடனம் புரிந்ததாக வரலாறுகள் சான்று பகர்கின்றன. அதாவது காளி காதாண்டவம் - படைத்தலைக் குறித்து தாமிரசபை என்று திருநெல்வேலியிலும், கெளரி தாண்டவம் - காத்தலைக் குறித்து சிற்சபை என்று திருப்புத்தூரிலும், காத்தலைக் குறித்து மற்றொரு இடமாக சந்தியா தாண்டவம் நிலை நிறுத்துதலில் இராஜசபை என்று மதுரையிலும் ஆடல் புரிந்துள்ளான் சிவன்.
மேலும் சங்கார தாண்டவம் - அழித்தலைக் குறித்து பிரபஞ்சத்தில் நடுச்சாமத்தில் ஆடப்படுவதாகவும், திரிபுரதாண்டவம் - மறைத்தலைக் குறித்து சித்திர சபை என்று திருக்குற்றாலத்திலும், ஊர்த்துவதாண்டவம் - அருளலைக் குறித்து இரத்தினசபை என்று திருவாலங்காட்டிலும், ஆனந்தத்தாண்டவம் - பஞ்ச கிருத்தியங்களையும் குறித்து பொற்சபை என்று போற்றப்படும் தில்லைச்சிதம்பரத்திலும் ஆடல் புரிந்து உயிர்களைக் காக்கிறான்.

தில்லையம்பலவன் ஆடும் திருநடனம் கண்டு பூலோகமும், புவர்லோகமும், தனுர்லோகமும் அங்குள்ள அனைத்து உயிர்களும் அசைந்தாடி இயங்கிக்கொண்டு இருக்கின்றனர். "சிவதைன்யம்" அனைத்திலும் ஊடுருவிப்பாய்ந்திருப்பதே சிவதாண்டவம் என்பர். ஆடவல்ல எம்பிரான் கூத்து இல்லையேல் அனைத்தும் அசைவற்று நின்றுவிடும். நடராஜப் பெருமான் திருநடனம் செய்யும் இந்த ஆனி உத்தரத் திருநாளில் அவன் அருளாலே அவன் தாள் பணிவோம். நன்றி!
- 4தமிழ்மீடியாவிற்காக அருந்தா

No comments:

Post a Comment