முத்தான மூலிகைகள் பற்றி அறிவோமா?
மனிதர்களைப் பொறுத்தவரை உயிர்
இயக்கத்தால்தான் அவர்களுடைய உடல்கள் இயங்குகின்றன. உலகத்திலுள்ள உயிர்
இனங்களும் பொருட்களும் பஞ்ச பூதங்கள் எனப்படும் நிலம், நீர், நெருப்பு,
காற்று, ஆகாயம் ஆகியவற்றின் சேர்க்கையால் உருவானவையே. பஞ்சபூதச் சேர்க்கை இல்லாத பொருள் இவ்வுலகில் எதுவும் கிடையாது.
பஞ்ச பூதங்களில் நிலமும் ஆகாயமும் நிரந்தரமானவை. ஆனால் மற்ற 3 பூதங்களான
நீர், நெருப்பு, காற்று ஆகிய மூன்றும் மாறக்கூடியவை. இவை குறையும்போதும்
அதிகமாகும்போதும் தான் நோய்கள் ஏற்படுகின்றன.ஆகவே இந்த 3 பூதங்களுக்கும்
முக்கியத்துவம் கொடுத்து சிகிச்சை அளித்தால் மனித உயிரைக் காப்பாற்றி
விடலாம்.
காற்றை வாதம் என்றும் நெருப்பைப் பித்தம் என்றும் நீரைக் கபம் என்றும் நம் முன்னோர்கள் குறிப்பிட்டார்கள்.
வாதம்
வாதம் என்பதை வாயு அல்லது காற்று எனக் குறிப்பிட்டாலும் உண்மையில் அது
காற்றின் சக்தியே. பூமியின் உள்ளேயும் வெளியேயும் ஏற்படும் எல்லாவகையான
மாற்றங்களுக்கும் அடிப்படைக் காரணமாக விளங்குவது காற்றின் சக்தியே.
வாயு தான் பித்தத்திற்கும் கபத்திற்கும் சக்தியைக் கொடுக்கிறது;உயிர்
இயக்கத்திற்கு வாயு இன்றியமையாதது. இதுவே மூச்சை உள்ளே இழுத்து வெளியே
விடுவதை ஒழுங்குபடுத்துகிறது; அதுவே மனம், வாக்கு, காயம் ஆகிய மூன்றையும்
சீராக நடாத்துகிறது.
பித்தம்
மனித உடலில் பல்வேறு பொருட்கள் இரசாயன மாறுதல்களை அடைகின்றன. அதன் விளைவாகத் தோன்றும் அக்னி(நெருப்பு) தான் பித்தம் ஆகும்.
அது கல்லீரலிலும் மண்ணீரலிலும் தங்கி இரத்தத்திற்கு நிறத்தைக் கொடுக்கிறது
; இதயத்தில் தங்கி அறிவையும் நினைவாற்றலையும் வழங்குகிறது; வயிற்றுக்கு
ஜீரண சக்தியை அளிக்கிறது; கண்களில் உள்ள கருவிழிகள் மூலம் பார்க்கும்
சக்தியைக் கொடுக்கிறது ; உடலை மூடிக்கொண்டிருக்கும் தோலுக்கு மினுமினுப்பை
அளிக்கிறது ;
பித்தத்தை நெருப்பு சக்தி, உஷ்ண சக்தி, சூரிய சக்தி ஆகியவற்றிற்கு ஒப்பிடலாம்.
மனித உடலில் பித்தம் இயல்பாக இருக்க வேண்டிய அளவு குறைந்தால் இரத்தத்தின்
நிறம் மாறும் ; ஜீரண சக்தி குறையும் ; மனம், மூளை ஆகியவற்றின் சக்தி சீராக
இருக்காது ; பார்வை மங்கும் ; ஒளி குன்றும். அதே வேளை பித்தத்தின் அளவு
அதிகமானால் உடல் நிறம் வெளுத்துப் போகும் ; சோகை உண்டாகும்.
கபம்
மனித உடலில் எலும்பு மூட்டுகள் விறைத்துப் போகாமலும் வறட்சி அடையாமலும்
சிக்கல் அடையாமலும் பாதுகாப்பது கபம் தான். அது வயிற்றுக்குச் செல்லும்
உணவைக் கரைசல் ஆக்குகிறது ; இதயம் அதிகமாக சுடேறுவதையும் தேய்வதையும்
தடுக்கிறது ; நாவிற்கு ஈரத்தையும் ருசியையும் கொடுக்கிறது ; மூளை
தொடர்புடைய உணவுப் பொறிகளையும் அவற்றுடன் தொடர்புள்ள நரம்புகளையும்
உராய்தல் ஏற்படாத வகையில் வழுவழுப்பாக வைத்திருக்கிறது ; மூட்டுகளை
உறுதியாகவும் கெட்டியாகவும் இருக்க வேண்டிய இடங்களில் இருந்து எளிதாக
இயக்கம் செய்கிறது.
மனித உடலை எடுத்துக் கொண்டால் மூளை, ஜீவசத்து
ஆகியவற்றில் தங்கச் சத்தும் நரம்புகளில் வெள்ளிச் சத்தும் இரத்தத்தில்
இரும்புச் சத்தும் உரோமம், தோல் என்பவற்றில் தாமிரச் சத்தும் உள்ளன.
நோயாளிகளுக்கு இத்தகைய உலோகச் சத்துக்கள் தேவைப்படும்போது அந்த உலோகங்களின்
இயல்பான நச்சுத் தன்மையைப் போக்கி மனித உடல் ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு
துண்மைப்படுத்தி மருந்துகளாகத் தயாரித்துக் கொடுக்கிறார்கள்.
இவ்வாறு தயாரிப்பதற்கு மூலிகைச் சாறுகள் பயன்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு
மூலிகைக்கும் ஒரு சத்து, சுவை, குணம், பூத அம்சம் ஆகியவை உள்ளன.
மனித உடலில் உள்ள உறுப்புகளுக்கு சக்தியை அளிப்பவையே மூலிகைகள். மூலிகைகள்
அனைத்துமே தாவர இனத்தைச் சேர்ந்தவை. தாவரங்களின் வேர், பட்டை, தண்டு, இலை,
தழை, மலர், காய், கனி, விதை, பட்டை, புறணி, கொட்டை, பருப்பு ஆகியவைக்கு
நோய்களைக் குணப்படுத்தும் மருத்துவ குணம் உண்டு.
இன்றைய அவசர
உலகில் செயற்கை உணவுகளையும் மருந்துகளையும் பாவித்து ஆண்டவனால் எமக்கு
அளிக்கப்பட்ட இயற்கை உறுப்புகளை கெடுத்துக் கொள்வதோடு செயற்கை
உறுப்புகளையும் உடலில் சுமந்தே வாழ்கிறோம்.
அதனைத் தவிற்பதற்காக
மூலிகைத் தாவரங்களைப் பற்றி அறிந்து அவற்றை எமது அன்றாட வாழ்வில்
பயன்படுத்தி பயன்பெறுங்கள். காத்திருங்கள் மூலிகை பற்றி அறிவதற்கு……
No comments:
Post a Comment