
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவிசுன் முக்கிய நிகழ்ச்சியாக இன்று கள்ளழகர் வைகையாற்றில் இறங்கினார். இன்று அதிகாலை 6.45 மணிக்கு கள்ளழகர் தங்க குதிரையில் இறங்கினார். லட்சக்கணக்கான பக்தர்கள் கள்ளழகரை தரிசித்தனர்.
மதுரையில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்று சித்திரை திருவிழா. இவ்விழா உலக புகழ் பெற்றதாகும். இவ்விழாவை காண பல்வேறு மாவட்ட, மாநிலங்களில் மட்டும் அல்லாமல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் திரளாக வருவது உண்டு. கடந்த 7ஆம் தேதி மீனாட்சி அம்மன் கோவிலில் கொடி ஏற்றத்துடன் இவ்விழா தொடங்கியது.
ஒவ்வொரு நாளும் சுவாமி-அம்மனுக்கு பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டது. 14ஆம் தேதி மீனாட்சிக்கு பட்டாபிஷேக மும், 15ஆம் தேதி திக் விஜயமும், நேற்று முன்தினம் (16-ந்தேதி) மீனாட்சி-சுந்தரேசுவரருக்கு திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடைபெற்றது. இவ்விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். சித்திரை திருவிழாக்களில் முத்திரை பதிக்கும் விழாவாக கருதப்படுவது கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியாகும். இதற்கான விழா அழகர் கோவிலில் கடந்த 14-ந் தேதி தொடங்கியது. அன்று மாலை சுவாமி கோவிலை வலம் வந்து கோவிலுக்குள் சென்றார்.
பின்னர் 16ஆம் தேதியன்று அதிர்வேட்டு முழங்க, மேளதாளத்துடன் அழகர், கள்ளழகர் திருக்கோலம் பூண்டு தங்கப் பல்லக்கில் மதுரைக்கு புறப்பட்டார். அன்று மாலை திருக்கோவில் கல்யாண மண்டபத்தில் இருந்து புறப்பட்டு கொண்டப்பநாயக்கன் மண்டபம், பொய்கைகரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன்திருப்பதி ஆகிய மண்டகப்படிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். நேற்று அதிகாலை 2 மணி அளவில் மறவர் மண்டபத்தில் எழுந்தருளினார். அதன் பிறகு அங்கிருந்து புறப்பட்டு கடச்சனேந்தல் வந்தார். அங்கு பக்தர்களுக்கு காட்சி அளித்து விட்டு மூன்று மாவடிக்கு காலை 6.30 மணிக்கு வந்தார். அங்கு கள்ளழகருக்கு எதிர் சேவை நடந்தது.
அங்கு பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் திரண்டு அவரை வரவேற்று தரிசனம் செய்தனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்ட கள்ளழகர் புதூர், மாரியம்மன் கோவில், ஆயுதப்படை குடியிருப்பு, மாரியம்மன் கோவில், அம்பலக்கார மண்டபம் வந்தடைந்தார். அதன்பிறகு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோவிலில் கள்ளழகர் எழுந்தருளினார். அங்கு இரவு 10.30 மணி முதல் நள்ளிரவு ஒரு மணி வரை பெருமாள் திருமஞ்சனமாகி குதிரை வாகனத்தில் சாத்துப்படி ஆனது.
பிறகு ஸ்ரீவில்லிபுத்தூரில் சூடி கொடுத்த நாச்சியார் ஆண்டாளுடைய திருமாலையை அணிந்து கள்ளழகர் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பின்னர் இன்று அதிகாலை 2.30 மணி அளவில் கருப்பணசாமி திருக்கோவிலில் ஆயிரம் பொன் சப்பரத்தில் கள்ளழகர் எழுந்தருளி, ரூ.1 1/2 கோடி செலவில் புதியதாக உருவாக்கப்பட்ட தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றை நோக்கி புறப்பட்டார். காலை சரியாக 6.46 மணிக்கு கள்ளழகர் பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார். அப்போது அங்கு கூடி நின்ற லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து தீபாராதனை காட்டி கோவிந்தா... கோவிந்தா... என கோஷமிட்டனர்.
பின்னர் அங்கிருந்து ராம ராயர் மண்டபத்திற்கு புறப்பட்டு சென்றார். அங்கு அங்கபிரதட்சண நிகழ்ச்சி நடந்த பின் இரவு 1 மணிக்கு வண்டியூர் வீரராக பெருமாள் கோவிலில் எழுந்தருளுகிறார். நாளை (ஏப்.19) காலை 5 மணிக்கு வண்டியூரில் இருந்து சேஷ வாகனத்தில் தேனூர் மண்டபத்திற்கு புறப்படுகிறார். காலை 10 மணிக்கு மண்டூக முனி வருக்கு சாபம் தீர்த்து காட்சி யளிக்கிறார். பிற்பகல் 2 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு அனுமார் கோவிலுக்கு வருகிறார். 3 மணிக்கு அங்கப் பிரதட்சணம் நடக்கிறது. இந்நிகழ்ச்சி முடிந்ததும் ராமராய மண்டபத்திற்கு கள்ளழகர் வருகிறார். அங்கு விடிய விடிய தசாவதார நிகழ்ச்சி நடைபெறுகிறது.
20ஆம் தேதி காலை 11 மணிக்கு புறப்பட்டு ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் ராசாங்க திருக்கோலத்தில் எழுந்தருளுகிறார். மறுநாள் 21ஆம் தேதி பூப்பல்லக்கில் புறப்பட்டு மாரியம்மன் கோவில், அம்பலக்காரர் மண்டபம், மூன்று மாவடி மறவர் மண்டபத்தில் எழுந் தருளுகிறார். 22ஆம் தேதி அப்பன்திருப்பதி, கள்ளந்திரி வழியாக அழகர்கோவிலுக்கு சென்றடைகிறார். 23ஆம் தேதி சுவாமிக்கு உற்சவ சாந்தி நிகழ்ச்சி நடைபெறுகிறது.
No comments:
Post a Comment