Tuesday, April 5, 2011
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளின் சிறப்புகள்
சூரனை வதம் செய்வதற்காக சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து உதித்தவர் முருகப் பெருமான் என்கின்றன புராணங்கள்.
அக்னி ரூபமாய் தோன்றியவனை குளிர்விக்க சரவணப்பொய்கைக்கு கொண்டு சென்று விடவும் ஆறு குழந்தைகளாய் உருமாறினான் முருகன். அழகிய முதல்வனை கார்த்திகை பெண்கள் வளர்த்து கார்த்திக்கேயனாய் சிவன் பார்வதியிடம் ஒப்படைத்தனர்.
முருகப்பெருமான் தமிழ்கடவுள் என்று ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு உதாரணங்கள் பல உள்ளன. உயிரெழுத்துக்கள் பன்னிரெண்டும் தோள்களாய், மெய்யெழுத்து பதிணெட்டும் கண்களாய், இன எழுத்து ஆறும் முகங்களாய் ஆய்த எழுத்து ஒன்று இறைவனின் வேலாய் காணப்படுகிறது.
முருகப்பெருமானின் பல்வேறு பெயர்கள் :
ஆறுமுகன்,குகன்,குமரன், முருகன், குருபரன், காங்கேயன், கார்த்திக்கேயன், கந்தன், கடம்பன், சரவணபவன், ஸ்வாமி, சுரேசன், செவ்வேள், சேந்தன், சேயோன், விசாகன், வேலவன், வேலன்,முத்தையன், சோமஸ்கந்தன், சுப்ரமணியன், வள்ளற்பெருமான், ஆறுபடைவீடுடையோன், மயில்வாகனன், தமிழ்தெய்வம்.
அறுபடை வீடுகள் :
குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடமென்றாலும், அறுபடைவீடுகள் சிறப்பு வாய்ந்தவை.
திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகிய ஆறும் அறுபடைவீடுகளாக போற்றபடுவதாக தமிழ் புலவர் நக்கீரர் எழுதிய திருமுருகாற்றுப்படை நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம்
தமிழ்நாட்டிலுள்ள அறுபடை வீடுகளில் முதலாவது படை வீடாக முருகப்பெருமானின் பக்தர்கள் போற்றுவது திருப்பரங்குன்றம்தான். மதுரை மாநகருக்கு மிக அருகில் அமைந்திருக்கும் இந்தத் திருப்பரங்குன்றத்தில்தான் முருகப் பெருமான் தெய்வாணையை திருமணம் செய்து கொண்ட நிகழ்வு நடைபெற்றது என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.
பெயர்க் காரணம்
திரு + பரம் + குன்றம் எனப் பிரிக்கப்படுகிறது. பரம் என்றால் பரம் பொருளான சிவபெருமான் குன்றம் என்றால் குன்று (மலை). திரு என்பது அதன் சிறப்பை உணர்த்தும் அடைமொழியாகச் சேர்த்து திருப்பரங்குன்றம் என ஆயிற்று. இத்திருத்தலத்திற்கு இலக்கியங்களில் தண்பரங்குன்று, தென்பரங்குன்று, பரங்குன்று, பரங்கிரி, திருப்பரங்கிரி பரமசினம், சத்தியகிரி, கந்தமாதனம், கந்த மலை என வேறு சில பெயர்களும் உள்ளன.
கோயில் வரலாறு
முருகப்பெருமான் அவதாரத்தின் நோக்கமே சூரபத்மனையும், அவனது சேனைகளையும் அழித்து தேவர்களைக் காப்பதேயாகும். அதன்படி முருகப்பெருமான் சூரபத்மனை அழித்து, அவனை மயிலும் சேவலுமாக்கி, மயிலை வாகனமாகவும், சேவலைக் கொடியாகவும் ஏற்றுக் கொண்டருளினார்.
இதனால் மகிழ்ச்சியடைந்த தேவர்கள் துன்பத்திலிருந்து விடுபட்டார்கள். இதனால் தனது நன்றியைச் செலுத்தும் விதமாக இந்திரன் தன் மகளாகிய தெய்வயானையை திருமணம் செய்து கொடுக்க விரும்பினான். இதன்படி முருகன் - தெய்வானை திருமணம் திருப்பரங்குன்றத்தில் நடந்தது.
கோயில் அமைப்பு
இக்கோவில் கருவறை மற்ற கோவில்களைப் போன்று அல்லாமல் பெரிய அளவில் ஐந்து தெய்வத் திருவுருவங்களின் இருப்பிடமாக காணப்படுகிறது. மூலவரான முருகப்பெருமானுக்கு என தனியாக கருவறை இல்லை. பாறையில் இடது புறம் முருகப்பெருமான் தெய்வானையுடன் திருமணக் கோலத்தில் காட்சி அளிக்கிறார். பக்கத்தில் முருகப் பெருமானின் திருமணக் கோலத்தை அனைத்து தெய்வங்களும் காணுவது போல் இங்கு கருவறை அமைந்துள்ளது.
கருவறையின் இடது புறத்தில் கிழக்கு நோக்கியவாறு மலையைக் குடைந்து சத்தியகிரீசுவரர் என்னும் பெயர் கொண்டவராக சிவபெருமான் லிங்கத் திருமேனியுடன் அருள் பாலிக்கிறார்.
முருகப் பெருமான் காலடியில் யானை ஒன்று காணப்படுகிறது. இந்திரனுடைய மகளான தேவயானையை வளர்த்த ஐராவதம் அவளைப் பிரிய மனமில்லாமல், அப்படியே தன் வளர்ப்பு மகளான தேவயானைக்கும், முருகனுக்கும் தொண்டாற்ற அங்கேயே இருந்து விட்டதாக பெரியவர்கள் சொல்கின்றனர்.
முருகப் பெருமானை வழிபட்டுவிட்டு, இடது புறம் உள்ள வாயில் வழியாக கீழே இறங்கினால் கீழ்ப் பகுதியில் குகைக்கோவில் ஒன்று அமைந்துள்ளது. அங்கே அன்னபூரணி, உலக உயிர்களை உணவு அளித்துக் காக்கும் தெய்வமாக காட்சித் தருகிறாள்.
தற்போதுள்ள கோயிலுக்கு நேராக மலையில் மற்றொரு சிறிய கோயில் ஒன்று உள்ளது. இதுதான் மூலக் கோயில் என்றும் சொல்கிறார்கள்.
சரவணப் பொய்கை
திருப்பரங்குன்றம் மலையடிவாரத்தில் கிழக்குப் பக்கம் சரவணப் பொய்கை அமைந்துள்ளது. இந்த தீர்த்தம் முருகனின் கையிலுள்ள வேலினால் உண்டாக்கப்பட்டது என்றும் இந்த தீர்த்தத்தைக் கண்டாலும், அதில் நீராடினாலும் பாவங்கள் நீங்கிவிடும் என்பதுடன் அவர்களது வேண்டுதலும் உடனடியாக நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
நக்கீரர் கோயில்
நக்கீரர் சிவபூசையின் போது வழுவியதால் பூதம் ஒன்று அவரைக் குகையில் கொண்டு போய் அடைத்து விட்டது. இதனால் அவர் அங்கிருந்தபடி திருமுருகாற்றுப்படையைப் பாட, முருகன் தோன்றி மலையைப் பிளந்து அவரை விடுவித்து அருளினார். நக்கீரர் அமர்ந்து பூசை செய்த இடத்தைப் பஞ்சாட்சரப் பாறை உள்ளது. சரவணப் பொய்கைக்கரையில் பஞ்சாட்சரப் பாறை எனுமிடத்தில் நக்கீரருக்குக் கோயில் இருக்கிறது.
சிறப்புக்கள்
இக்கோவில் மூலவரை, பாறையினை குடைந்து உருவாக்கி உள்ளதால், அதாவது தனியாக சிலை வடித்து வைக்காத காரணத்தால், இந்த மூலவருக்கு அபிஷேகம் செய்வது கிடையாது. எண்ணெய், புனுகு மட்டுமே சாத்தப்படுகிறது. அதேநேரம், இந்த வேலவனின் கையில் உள்ள வேலுக்கு மட்டுமே அபிஷேகம் உள்ளிட்ட மற்ற எல்லாவற்றையும் செய்கிறார்கள்.
இக்கோவிலில் மற்ற கோவில்களைப் போன்று சுற்றுப் பிரகாரங்கள் கிடையாது. மூலவரை தரிசிக்க வேண்டும் என்றால் படிக்கட்டுகள் வழியாகவே மேலே செல்ல வேண்டும். அத்துடன், கருவறை, மூலவர், உற்சவர் ஆகியோரை வலம் வருவதும் இங்கு இயலாது.
நக்கீரர் முருகன் மீது திருமுருகாற்றுப்படையைப் பாடியது இத்தலத்தில்தான்.
முருகப் பெருமானின் அறுபடை வீட்டு கோயில்களில் முதல்படைக் கோயில் என்பதுடன் இக்கோயில் அளவிலும் பெரியது என்பது குறிப்பிடத்தக்கது.
எப்படி செல்வது?
தமிழ்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான மதுரையின் அருகில் இருக்கும் திருப்பரங்குன்றத்திற்கு மதுரை ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், ஆரப்பாளையம் பேருந்து நிலையம் மற்றும் பெரியார் பேருந்து நிலையங்களில் இருந்து திருப்பரங்குன்றத்திற்கு நேரடியாக நகரப் பேருந்து வசதி உள்ளது. இந்தப் பேருந்து நிலையங்களிலிலிருந்து திருமங்கலம், திருநகர் செல்லும் அனைத்து நகரப் பேருந்துகளும் திருப்பரங்குன்றம் வழியாகத்தான் செல்கின்றன.
மதுரையிலிருந்து தூத்துக்குடி, திருநெல்வேலி, செங்கோட்டை செல்லும் ரயில் பாதையில் திருப்பரங்குன்றத்தில் ரயில் நிலையம் ஒன்றும் உள்ளது.
அறுபடைவீடுகளின் சிறப்புகளை இனிவரும் கட்டுரைகளில் தொடர்ந்து காண்போம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment