Friday, April 1, 2011

இந்திய மக்கள் தொகை 121.2 கோடி!-கல்வியறிவு பெற்றோர் 74%

டெல்லி: இந்தியாவின் மக்கள் தொகை கடந்த 10 ஆண்டுகளில் 18.1 கோடி அதிகரித்துள்ளது.


ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் ஒருமுறை நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. 2001ம் ஆண்டுக்குப் பின் 2011ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

இதன் தோராயமான விவரங்களை இன்று மத்திய அரசு வெளியிட்டது. அதன்படி,

இப்போது நாட்டின் மக்கள் தொகை 121.2 கோடியாகும். இதில் ஆண்கள் 62.37 கோடி, பெண்கள் 58.65 கோடியாகும்.

2001ம் ஆண்டில் இந்திய மக்கள் தொகை வளர்ச்சி 21.15 சதவீதமாக இருந்தது. இப்போது இது 17.64 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது மாபெரும் சாதனையாகும். கடந்த 10 ஆண்டுகளில் மக்கள் தொகை வளர்ச்சி 3.90 சதவீகம் குறைந்துள்ளது. நாட்டின் மக்கள் தொகை வளர்ச்சி இதுவரை இவ்வளவு வேகமாகக் குறைவாக இருந்ததில்லை.

2001ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் கடந்த 10 ஆண்டுகளில் இந்திய மக்கள் தொகை 18.1 கோடி அதிகரித்துள்ளது.

இப்போதைய இந்திய மக்கள் தொகை அமெரிக்கா, இந்தோனேஷியா, பிரேசில், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளின் மொத்த மக்கள் தொகைகளைக் கூட்டினால் வரும் எண்ணிக்கையை விட அதிகமாகும்.

இந்தியாவிலேயே உத்தரப் பிரதேசத்தில் தான் மிக அதிகமான அளவில் மக்கள் வசிக்கின்றனர். அடுத்த நிலையில் மகாராஷ்டிரம் (11.23 கோடி), பிகார் (10.38 கோடி), மேற்கு வங்கம் (9.13 கோடி), ஆந்திரப் பிரதேசம் (8.46 கோடி) ஆகியவை உள்ளன.

உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிர மக்கள் தொகையைக் கூட்டினால் அது அமெரிக்காவின் மக்கள் தொகையை விட அதிகமாகும்.

நாட்டில் 1000 ஆண் குழந்தைகளுக்கு 914 பெண் குழந்தைகளே உள்ளனர். சுதந்திரத்துக்குப் பின்னர் இந்த விகிதாச்சாரம் இவ்வளவு மிக மிகக் குறைவான அளவைத் தொட்டது இதுவே முதல் முறை. இது பெரும் கவலை தரும் விஷயமாகும்.

கேரளத்தில் மட்டுமே 1,000 ஆண் குழந்தைகளுக்கு 1084 பெண் குழந்தைகள் என்ற நிலைமை உள்ளது. அதே போல புதுச்சேரியிலும் 1038 பெண் குழந்தைகள் என்ற நல்ல சூழல் நிலவுகிறது.

ஆனால் டைமன் டையு யூனியன் பிரதேசத்தில் 1000 ஆண் குழந்தைகளுக்கு வெறும் 618 பெண் குழந்தைகளே உள்ளனர். அதே நேரத்தல் தமிழகம், பஞ்சாப், ஹரியாணா, ஹிமாச்சலப் பிரதேசம், மிசோரம், அந்தமான், குஜராத் ஆகிய மாநிலங்களில் இந்த ஆண்-பெண் குழந்தைகள் விகிதாச்சாரம் நல்ல நிலையை எட்டி வருகிறது. மற்ற 27 மாநிலங்களிலும் பெண் குழந்தைகள் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

நாட்டிலேயே மிக அதிகமான மக்கள் தொகை நெருக்கம் டெல்லியின் வட கிழக்குக் பகுதியில் தான் பதிவாகியுள்ளது. இங்கு ஒரு சதுர கிலோ மீட்டருக்கு சராசரியாக 37,346 பேர் வசிக்கின்றனர்.

அருணாசலப் பிரதேசத்தின் திபாங் பள்ளத்தாக்கில் ஒரு சதுர கிலோ மீட்டருக்கு சராசரியாக ஒரே ஒருவர் தான் வசிக்கிறார். நாட்டிலேயே மிக மிகக் குறைவான மக்கள் நெருக்கம் உள்ள பகுதி இது தான். டெல்லிக்கு அடுத்தபடியாக சண்டீகரில் மக்கள் நெருக்கம் மிக அதிகமாக உள்ளது.

தாதர், நகர் ஹவேலி, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் தான் மக்கள் தொகை கடந்த 10 ஆண்டுகளில் மிக அதிக அளவாக 55 சதவீதம் அதிகரித்துள்ளது. நாகாலாந்தில் மிக மிகக் குறைவான அளவிலேயே மக்கள் தொகை பெருக்கம் ஏற்பட்டுள்ளது.

கல்வியறியைப் பொறுத்தவரை இந்தியாவில் கல்வியறிவு பெற்றோர் எண்ணிக்கை 74.04 சதவீதம் அதிகரித்துள்ளது. 2001ம் ஆண்டில் இது 64.83 சதவீதமாகவே இருந்தது. பத்தாண்டுகளில் கல்வியறிவு பெற்றோர் எண்ணிக்கை 9.21 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதில் ஆண்களிடையே கல்வியறிவு 82.14 சதவீதமாகவும், பெண்களிடையே கல்வியறிவு 65.46 சதவீதமாகவும் உள்ளது.

இன்றைய நிலையில் உலக மக்கள் தொகையில் 19.4 சதவீதம் பேர் சீனாவிலும் 17.5 சதவீதம் பேர் இந்தியாவிலும் வசிக்கின்றனர்.

1872ம் ஆண்டில் தான் நாட்டில் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பான சென்ஸஸ் நடத்தப்பட்டது. இப்போது நடத்தப்பட்டுள்ளது 15வது கணக்கெடுப்பாகும்.

No comments:

Post a Comment