Tuesday, April 5, 2011

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளின் சிறப்புகள்-திருச்செந்தூர்


திருச்செந்தூர் : முருகப்பெருமானின் அறுபடை வீடகளில் இரண்டாம் படை வீடாகக் போற்றப்படுவது திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில். மற்ற ஐந்து படை வீடுகளை விட இந்த ஆலயம் முற்றிலும் மாறுபட்டது. குன்றின் மீது அமர்ந்த தலங்கள் மற்றவை. ஆனால் செந்துரிலோ முருகன் கடற்கரையில் அலைகள் தாலாட்ட அருள் பாலிக்கின்றான்.


சீரலை வாயில் என்று அழைக்கப்பட்ட இந்த ஆலயம் மிகவும் பழமையான திருத்தலமாகும். புறநானூற்றில் இது வெண்டலைப்புனரி அலைக்குடம் செந்தில் நெடுவேள் துறை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சூரனை சம்ஹரித்த பின்பு முருகன் இத்தலத்தில் வந்து சிவபெருமானை வழிபட்டார் என்று கந்த புராணம் தெரிவிக்கிறது.

தல வரலாறு

வீரமஹேந்திரபூரி என்ற நகரத்தை சூரபத்மன் என்ற அரக்கனுக்கு பெருமாள் திவ்ய சக்தியை வரமாக கொடுத்து அருள் புரிந்தார். இந்த சக்தியின் உதவியால் சூரபத்மன் மூன்று லோகத்தையும் ஆண்டு வந்தான். இதனால் அவனுடைய ஆணவம் அதிகரித்து மக்களை துன்புறுத்தத் தொடங்கினான். இந்த அழிவுச்செயல்களை அழித்திட சுப்ரமணியர் தனது படை பரிவாரங்களுடன் சூரபத்மனுடன் போருக்குச் சென்றார்.

முதலில், சுப்ரமணியர் சூரபத்மனின் இளைய சகோதரனையும், மற்ற அரக்கர்களையும் அழித்தார். கடைசியில் சூரபத்மனுடன் போர் செய்தார். அவன் , பல வேடங்களில் தோன்றி சுப்ரமணியருக்கு விளையாட்டு காட்டினான். அந்த சூரனை வதம் செய்து இறைவன் ஜெயந்திநாதராக நின்ற இடமே திருச்செந்தூர் என்று புராணங்கள் தெரிவிக்கின்றது.

கோவில் அமைப்பு

இந்தக் கோவிலின் அமைப்பு ஓங்கார வடிவமுடையது. பிள்ளையார் சன்னதி, வள்ளிதேவசேனா சன்னதி, திருமால் சன்னதி, கம்பத்தடி இவைகளை எல்லாம் சேர்த்து ஒரு கோடு வரைந்தால் ஓம் என்கிற எழுத்து வரும் என்கிற பெரும் சிறப்புடையது இக்கோவில்.

இங்கு கோயிலுக்கு வரும் பக்தர்கள் முதலில் கடலில் நீராடிவிட்டு வருவது வழக்கமாகும். அதன் பிறகு பக்தர்கள் அருகிலுள்ள நாழிக்கிணற்றுத் தண்ணீரிலும் நீராடுகிறார்கள். கடலோரத்தில் இருக்கும் இந்தக் கிணற்றுத் தண்ணீர் மட்டும் உப்பு சுவையில்லாமல் குடிப்பதற்கேற்ற சுவையான நீராக இருப்பது இங்குள்ள அதிசயமாகும். கடலில் குளித்து விட்டு இந்த நாழிக்கிணற்றில்குளித்தால் தீராத வியாதியும் குணமடையும் என்று இங்கு வரும் பக்தர்கள் நம்புகிறார்கள். பக்தர்கள் இந்தக் கிணற்றை " ஸ்கந்த புஷ்கரணி" என்று அழைக்கிறார்கள்.

கோயிலின் பிரதான சன்னதியில் சுப்ரமணியர், பிரம்மச்சாரியாக நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். நான்கு புஜங்களுடன் நின்ற கோலத்தில் காட்சி கொடுக்கும் சுப்ரமணியரின் அழகை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. இடப்புறத்திலுள்ள ஒருகை இடுப்பிலும், மற்றொரு கையில் ஜபமாலையும், வலப்புறத்திலுள்ள ஒருகையில் வேலும், இன்னொரு கையில் புஷ்பமும் கொண்டு சுப்ரமணியர் காட்சி தருகிறார்.

இந்த சன்னதிக்கு அடுத்து இடது புறத்தில் சின்ன வாசலைக் கொண்ட துவாரபாலகா வீரமஹேந்திர சன்னதி இருக்கிறது. இந்தச் சன்னதியில் சற்று குனிந்து பார்த்தால் ஐந்து லிங்கங்களைக் காணலாம். இங்கு வரும் பக்தர்கள் தங்களுடைய பாவங்களை அழிக்கும் சக்தியைக் கொண்ட இந்த ஐந்து லிங்கங்களை வணங்கிச் செல்கிறார்கள்.

இந்த ஐந்து லிங்கங்களும் ஆகாயம், பூமி, தண்ணீர், காற்று, அக்னி ஆகிய ஐந்து சக்திகளைக் குறிக்கிறது. ஆறு முகங்கள், பன்னிரெண்டு கரங்களோடு இருபுறங்களிலும் ஸ்ரீவள்ளி, ஸ்ரீதேவயானையுடன் காட்சி தரும் ஷண்முகநாதரின் சன்னதியும் இத்திருத்தலத்தில் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

சண்முகநாதரின் பின்புறத்தில் இடம் பெற்றுள்ள ஜகன்நாதர் லிங்கம் சூரியனையும், இடப்புறத்திலுள்ள ஜயந்திநாதர் லிங்கம் சந்திரனையும், வலப்புறத்தில்இடம்பெற்றுள்ள லிங்கம் ஆத்மாவைக் குறிப்பது இந்தக் கோயிலின் சிறப்பு அம்சமாகும். இந்த எட்டு லிங்கங்களை தரிசனம் செய்தவர்கள் எட்டு திக்குகளின் அபூர்வ சக்திகளைக் கொண்ட சிவபெருமானை தரிசனம் செய்ததற்கு சமமாகக் கருதப்படுகிறது.

சிறப்புப் பூசைகள்

கந்த சஷ்டி விழா ஆறுநாட்கள் கொண்டாடப்படுகிறது. ஐப்பசி மாதத்தில் வரும் வளர்பிறை சஷ்டி அன்றுதான் சுப்ரமணியர் சூரபத்மனை அழித்த நாள். எனவே ஐப்பசி மாதம் வளர்பிறைச் சஷ்டியைக் கடைசி நாளாகக் கொண்டு விழா நடைபெறுகிறது. மேலும் ஆவணி, மற்றும் மாசி மாதங்களில் நடைபெறும் திருவிழாக்கள் பிரசித்தி பெற்றது.

சிறப்புக்கள்

இக்கோவிலில் பன்னீர் இலையில்தான் விபூதி வழங்கப்படுகிறது. இதற்கு, சூரபத்மனை வதம் செய்த பின்பு தம்மை சூழ்ந்து நின்ற பரிவாரங்களுக்கு சுப்ரமணிய சுவாமி தன் பன்னிரு கைகளாலேயே விபூதி பிரசாதம் வழங்கினார். இந்தப் பன்னிரு கைகளின் நிலைதான் பன்னீர் இலைகள். இந்த இலை விபூதிகளின் மகத்துவம் குறித்து ஆதிசங்கரரின் புஜங்க ஸ்தோத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

நவகிரஹ தலங்களில் திருச்செந்தூரும் ஒரு தலமாக கருதப்படுகிறது. இங்கு சூரபத்மனைக் கொன்றதால் தேவர்கள் பிரஸ்பதி (குரு பகவான்) சுப்ரமணியரின் திறமையை பாராட்டி மகிழ்ந்தார்கள். எனவே இந்தத் திருத்தலத்திற்கு வரும் பக்தர்கள் குரு பகவானின் அருளையும் கூடுதலாகப் பெற்றுச் செல்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

இந்தத் திருச்செந்தூர் சுப்ரமணியரிடம் பக்தி கொண்டவர்களில் ஆதிசங்கரர், நக்கீரர், கச்சியப்ப சிவாச்சாரியார், அருணகிரிநாதர், குமரகுருபரர், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள், பகழிக்கூத்தர், வென்றிமாலைக் கவிராயர், கந்தசாமிப் புலவர், பாம்பன் சுவாமிகள், சேரந்தையப் புலவர் போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.

வீரபாண்டிய கட்டபொம்மன் திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமியின் தீவிரமான பக்தர்களில் ஒருவர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

இக்கோவில் சுவரில் அமைக்கப்பட்டுள்ள ஒரு துவாரத்தில் காது வைத்துக் கேட்டால் கடல் அலைகளின் சப்தம் ஓம் என்பது போல் கேட்கிறது.

கோவிலின் அருகே கடற்பாறைகளைக் குடைந்து உருவாக்கப்பட்டுள்ள வள்ளி குகையில் வள்ளியை வழிபட நல்ல வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

இந்தப்பகுதியில் அதிகமாகக் காணப்படும் பனைமரங்களின் பதநீரில் தயாரிக்கப்படும் சுக்குக் கருப்பட்டி (சில்லுக் கருப்பட்டி) சிறப்புப் பொருளாக இங்குள்ள கடைகளில் கிடைக்கிறது.

பயண வசதி

தூத்துக்குடி மாவட்டத்திலிருக்கும் இந்த திருச்செந்தூர் சுப்ரமணியர் கோவிலுக்கு மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி , நாகர்கோவில் போன்ற ஊர்களிலிருந்து அதிகமான பேருந்து வசதிகளும், தென் மாவட்டத்திலிருக்கும் முக்கிய ஊர்களிலிருந்து குறிப்பிட்ட நேரங்களிலும் பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது. சென்னை மற்றும் திருநெல்வேலியிலிருந்து தருச்செந்தூருக்கு ரயில் வசதியும் உண்டு.

No comments:

Post a Comment