Wednesday, April 20, 2011
3 செயற்கைக் கோள்களுடன் வெற்றிகரமாக பறந்தது பிஎஸ்எல்வி-சி-16 ராக்கெட்
ஸ்ரீஹரிகோட்டா, இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தின் தயாரிப்பில் உருவான, பதினெட்டாவது பி.எஸ்.எல்.வி., ராக்கெட், வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. விண்ணில் சீறப்பாய்ந்த சில நிமிடங்களில் திட்டமிட்டபடி செயற்கோள்கள் அதன் இலக்கை அடைந்தது. செயற்கோள்கள் சரியான சுற்றுப்பாதையில் செல்வதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். இந்த ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்ட முதல் செயற்கோள் இது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முதலாம் ஏவுதளத்தில் இருந்து, இன்று காலை, சரியாக 10:12க்கு, பி.எஸ்.எல்.வி -சி16 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. கரும்புகையை கக்கிக் கொண்டு அந்த ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. சுமார் 10 நிமிடங்களில் பி.எஸ்.எல்.வி. சி-16 ராக் கெட்டின் 3 பாகங்களும் திட்டமிட்டபடி பிரிந்தன.
முந்தைய ராக்கெட்டுகளை விட, மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக , "இஸ்ரோ' தெரிவித்துள்ளது. இதற்கான, ஐம்பத்து நான்கரை மணி நேர கவுன்ட் டவுண், 18ம் தேதி அதிகாலை 3.42 மணிக்கு துவங்கியது.
இந்தியாவில் உள்ள இயற்கை வளம், ஏரிகளில் உள்ள தண்ணீர் அளவு, சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை பேரழிவு தொடர்பாக ஆய்வு செய்ய ரிசோர்ஷ் சாட்-2 என்ற செயற்கை கோளை தயாரித்தனர். இந்த செயற்கை கோளை விண்ணில் ஏவும் பணி தொடங்கியது. இதற்காக பி.எஸ்.எல்.வி. சி-16 என்ற நவீன ராக்கெட் உருவாக்கப்பட்டது.
பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டில் ரிசோர்ஷ் சாட் செயற்கை கோளுடன் மேலும் 2 செயற்கை கோள்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்த 3 செயற்கைக் கோள்களும் திட்டமிட்டப்படி அவற்றின் சுற்றுப் பாதைகளில் விடப்பட்டன. 3 செயற்கைக் கோள்களும் தற்போது வெற்றிகரமாக இயங்கி வருகின்றன.
ரிசோர்ஷ் சாட்-2 செயற்கை கோள் இந்தியா தயாரிப்பாகும். இது மொத்தம் 1206 கிலோ எடைக் கொண்டது. இந்தியாவின் 18-வது செயற்கை கோளான இது சூரிய சக்தி மூலம் தானாக இயங்கும். ரிசோர்ஷ் சாட் செயற்கைக் கோளின் 3 நவீன கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அந்த கோமிராக்கள் மூலம் இந்தியா முழுவதும் உள்ள இயற்கை வளங்கள் படம் பிடிக்கப்பட்டு ஆய்வு செய்யப்படும்.
மற்றொரு செயற்கை கோளான யூத் சாட் செயற்கை இந்தியா-ரஷியாவின் கூட்டு தயாரிப்பாகும். பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆய்வு பணியை மேற்கொண்டுள்ள மாணவர்கள் இந்த செயற்கை கோளை உருவாக் கினார்கள். 92 கிலோ எடை உள்ள இந்த செயற்கை கோள் மூலம் சூரிய கதிர் வேறுபாடுக்கும், காற்று மண்டல உயர்தட்டு பகுதிக்கும் உள்ள தொடர்பு குறித்து ஆய்வு செய்யப்படும். 3-வது செயற்கைக்கோள் எக்ஸ் சாட் எனப்படும். இந்த செயற்கை 106 கிலோ எடை கொண்டது.
இது சிங்கப்பூர் நாட்டின் முதல் செயற்கை கோளாகும். இந்த செயற்கை கோள் தொழில்நுட்பம் மற்றும் விண்வெளி படம் பிடிப்பதற்கு உதவும் பணியை செய்ய உள்ளது. (டிஎன்எஸ்)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment