Friday, February 24, 2012

தூங்கும் போது கொர்… கொர்… ஆ ! உடனே கவனிங்க !!

உடல் பருமன் காரணமாக தற்போது குறட்டை விடும் பெண்களின் எண்ணிக்கை அதகரித்து வருவது அதிகரித்துள்ளதாக சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. குறட்டையால் தூக்கத்தை தொலைப்பதோடு பல்வேறு நோய்களோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

இரவு நேரங்களில் படுக்கையறையில் கேட்கும் கொர் கொர் ஓசை பெரும்பாலான மக்களை அச்சுறுத்தி வருகிறது. குறட்டை ஒலி இரவு நேரத்தில் படுக்கையறையின் நான்கு சுவருக்குள்ளே அடங்கிப்போவதால், விடிந்ததும் அதைப்பற்றி பலரும் நினைத்துப்பார்ப்பதில்லை. ஆனால், அலட்சியப்படுத்தப்படும் இந்த குறட்டைக்கு சரியான சிகிச்சை பெறா விட்டால் அது ஆபத்தை உருவாக்கிவிடும் என்கின்றனர் மருத்துவர்கள்.

தற்போதைய ஆய்வு விவரங்கள்படி குறட்டை விடும் பெண்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டி ருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் உடல் பருமன். குண்டான பெண்களில் ஏராள மானவர்கள் குறட்டையால் தூக்கத்தை தொலைத்து, நோய்களோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இளம் தலைமுறையினர்

இன்றைக்கு சிறுவர் சிறுமியர்கள் பலரும் மைதானங்களுக்கு சென்று விளையாடுவ தில்லை. பள்ளி சென்று வந்த உடன் வீட்டிலே அடைந்து கிடப்பது. ஒரே இடத்தில் அமர்ந்து டி.வி. பார்ப்பது, கம்ப்யூட்டரில் விளையாடுவது- வறுத்த, பொரித்த உணவுகளை உண்பது போன்றவைகளால் இளைய தலைமுறையினரும் உடல் பருமனாகி வருகின்றனர். எதிர்காலத்தில் அவர்களும் குறட்டையால் பாதிக்கப்படும் சூழல் உருவாகிறது.

உயிருக்கு ஆபத்து

ஆரோக்கியமான மனிதர் ஒருவர் 8 மணி நேரம் தூங்குகிறார் என்றால், அவருக்கு பத்து வினாடிகள் வரை மூச்சு விடுவதில் லேசான தடை ஏற்படும். அப்போது அவரது மூளைக்கு செல்லும் ஆக்சிஜனின் அளவு குறையும். அவர் ஆரோக்கியமான மனிதராக இருந்தால், உடனே உடலில் இருக்கும் இயற்கையான விழிப்புணர்வு மெக்கானிசம், அதை சரிக்கட்டும் விதத்தில் அவருக்கு விழிப்பை கொடுத்து, சுவாசத்தை சரிசெய்துவிடும். இது இயற்கையான நிகழ்வு. ஆனால் குறட்டை விடுபவர்களுக்கு இந்த இயற்கை விழிப்புணர்வு மெக்கானிசம் சரியாக செயல்படாது. அப்படியிருக்க, அவர்கள் குடித்துவிட்டு தூங்கினாலோ, அதிக அளவில் தூக்க மாத்திரைகளை பயன்படுத்தி தூங்கினாலோ இயற்கை மெக்கானிசத்தின் விழிப்பு நிலை மிகவும் குறைந்துவிடும். அப்போது அவர்களுக்கு குறட்டையால் தூக்கத்தில் மூச்சுவிட சிரமம் ஏற்பட்டால், விழிப்பு ஏற்படாமல் தூக்கத்திலே உயிர் பிரியும் சூழல் ஏற்படலாம்.

தூக்கம் பாதிப்பு

தூங்கும்போது சுவாசப்பாதையில் அடைப்பு ஏற்பட்டு, மூச்சுவிடுவதில் ஏற்படும் சிரமம்தான் குறட்டை சத்தமாக வெளிவருகிறது. மூக்கின் பின்புறம் `அடினாய்ட்’ தசையும், தொண்டைக்குள் `டான்சிலும்` இருக்கிறது. பல்வேறு காரணங்களால் இவை பெரிதாகும் போது, நாம் சுவாசிக்கும் காற்று எளிதாக உள்ளே போய் வெளியே வர முடியாத நெருக்கடி ஏற்படும். அந்த நெருக்கடியால் அழுத்தம் கொடுத்து மூச்சு இழுக்கும்போது காற்று பக்கத்து தசைகளிலும் அதிர்வை ஏற்படுத்தும். அந்த அதிர்வே குறட்டை சத்தமாக வெளிவருகிறது.

குறட்டைவிடுபவர்கள் இரவில் தூங்கும்போது 30 முதல் 40 தடவை மூச்சுவிட திணறுவார்கள். அதனால் அவர்கள் தூக்கம் அவ்வப்போது தடைபட்டு அவர்கள் தூங்கும் நேரம் குறையும். மறுநாள் சோர்வுடன் இருப்பார்கள்.

இரவில் தூக்கம் இல்லாமல் பகலில் தூங்குவது, தலைவலியோடு விழிப்பது ஆகியவை களால் `ஸ்லீப் அப்னீயா சின்ட்ரோம்` என்ற பாதிப்பு ஏற்படும். இந்த பாதிப்பு வந்துவிட்டால் மூளைக்கு செல்லும் ஆக்சிஜன் அளவு குறையும். கார்பன்டை ஆக்சைடு அளவு அதிகரிக்கும். அதனால் மூளை மட்டுமின்றி, இதயம், சிறுநீரகம் ஆகியவற்றின் செயல் பாடுகளும் பாதிக்கும். ஞாபக மறதி, ரத்த அழுத்த நோய்கள், ஆண்மைக்குறைவு போன்ற பிரச்சினைகளும் தோன்றக்கூடும் என்கின்றனர் மருத்துவர்கள்.

உடல் பருமன்

சிலர் குறட்டையின் பாதிப்பிற்கு சிகிச்சை பெற முடியாத அளவிற்கு உடல் பருமன், வயது முதிர்வு, குள்ளமான கழுத்து, மூக்கு- வாய் பகுதியில் தசை வளர்ச்சி போன்றவைகளால் பாதிக்கப்பட்டிருப்பார்கள். அவர்கள் மூச்சு திணறல் இல்லாமல் இரவில் தூங்குவதற்காக `சி.பி.ஏ.பி’ என்ற கருவி உள்ளது. இதனை பொருத்திக்கொண்டு தூங்கினால் மூச்சு திணறலோ, குறட்டை தொந்தரவோ ஏற்படாது. குறட்டைக்கு சிகிச்சை மட்டும் போதாது. அவர்கள் உடல் பருமனை கட்டுக்குள்கொண்டு வர வேண்டும். அதற்காக உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு போன்றவைகளில் கவனம் செலுத்தவேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

உறங்கும் முறை

குறட்டை பாதிப்பு உள்ளவர்கள் தலையணையை சற்று உயரமாக வைத்து அவர்கள் தூங்க வேண்டும். மல்லாந்து படுக்காமல் ஒருக்களித்து அவர்கள் தூங்கவேண்டும். நாம் மூக்கின் வழியாகத்தான் சுவாசித்து உயிர்வாழ்கிறோம். எனவே மூக்கில் ஏற்படும் நோய்களையும், குறட்டையையும் அலட்சியம் செய்யாமல் அவ்வப்போது அதற்குரிய சிகிச்சைகளை பெற்றால் மட்டுமே நோய் வரும் முன்பு உடலை பாதுகாக்க முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.

No comments:

Post a Comment