நெல்லை நெல்லை-தென்காசி அகல ரயில் பாதையில் இன்று சோதனை ஓட்டம் நடந்தது. மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் கோயால் சிறப்பு ரயிலில் சென்று ஆய்வு நடத்தினார்.
நெல்லை-தென்காசி இடையேயான ரயில் பாதை மீட்டர்கேஜ் பாதையாக இருந்து வந்தது. இந்த ரயில் பாதையில் கடைதி மீட்டர்கேஜ் ரயில் கடந்த 2008ம் ஆண்டு டிச 31ம் தேதி இயக்கப்பட்டது. இதை தொடர்ந்து 2009ம் ஆண்டு ஜன 1ம் தேதி முதல் அகல ரயில் பாதை பணிகள் தொடங்கப்பட்டன.
நெல்லை-தென்காசி ரயில் பாதையில் 72கிமீ தூரத்திற்கு ரூ.220 கோடியில் அகல ரயில் பாதை பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இந்த வழித்தடத்தில் 13 பெரிய மேம்பாலங்கள், 100க்கும் மேற்பட்ட சிறிய மேம்பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
வழியோரங்களில் உள்ள ரயில் நிலையங்களின் பிளாட்பாரங்கள் அகல பாதைக்கு ஏற்றவாறு அகலப்படுத்தப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகளாக நடந்து வந்த அகல ரயில் பாதை பணிகள் முடிந்ததை அடுத்து அகல ரயில் பாதையில் ரயில் போக்குவரத்தை தொடங்குவதற்கான ஆயத்த பணிகளை தெற்கு ரயில்வே தொடங்கியுள்ளது.
இதற்காக ரயில்வே மதுரை கோட்ட மேலாளர் கோயால் இன்று நெல்லை வந்தார். இன்று காலை 11 மணிக்கு நெல்லையிலிருந்து தென்காசிக்கு இரண்டு பெட்டிகள் கொண்ட சிறப்பு ரயில் சோதனை ஓட்டமாக பயணம் செய்து அகல ரயில் பாதை பணிகளை ஆய்வு செய்தார்.
இந்த பயணத்தின் போது ரயில் செல்லக் கூடிய வேகம், தண்டவாளத்தின் உறுதி தன்மை, நெல்லை-தென்காசி வழித்தடத்தில் புதுப்பிக்கப்பட்ட, சீரமைக்கப்பட்ட ரயில் நிலையங்கள், பிளாட்பார வசதி, பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் உள்ளிட்டவை குறித்து கோயால் சோதனை நடத்தினார்.
No comments:
Post a Comment