தமிழக சட்டப்பேரவையின் நடப்பு ஆண்டின் முதல் கூட்டம் இன்று காலை ஆளுநர் ரோசய்யாவின் உரையுடன் தொடங்கியது.
ஆளுநர் உரையின் முக்கிய அம்சங்களாவன:
* திடமான முடிவுகளைத் துணிச்சலுடன் மேற்கொள்ளவல்ல முதல்வர் ஜெயலலிதாவின் திறமைமிக்க தலைமையின் கீழ், மாநிலத்தின் நலனையும், வளர்ச்சியையும் குறிக்கோளாகக் கொண்டு எண்ணற்ற நலத்திட்டங்களையும், வளர்ச்சிப் பணிகளையும் துவக்கி, செயல்படும் இந்த அரசின் மூலம் மகத்தான செயலாக்கத்தை நமது மாநிலம் கண்டுள்ளது.
* கடுமையான நிதி நெருக்கடி இருப்பினும் இக்குறுகிய காலத்தில் பெரும்பாலான தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிட முதல்வர் எடுத்துள்ள உறுதியும், அர்ப்பணிப்பும் பாராட்டுதலுக்குரியது.
* இந்த அரசின் எண்ணற்ற முன்னோடித் திட்டங்களான ஏழைக் குடும்பங்களுக்குக் கறவைப் பசுக்கள், செம்மறி ஆடுகள், வெள்ளாடுகள் வழங்குதல்; பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அரிசி பெறத் தகுதியுடைய குடும்பங்களுக்கு மிக்சி, கிரைண்டர், மின்விசிறிகள் வழங்குதல்; மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குதல் போன்றவையும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த அரசு பதவியேற்றபோது இருந்த மோசமான நிதி நிலைமையிலும், முன் எப்போதும் இல்லாத அளவாக 8,000 கோடி ரூபாய் அளவிற்கு கூடுதல் நிதி பல்வேறு புதிய நலத் திட்டங்களுக்காக இந்த அரசால் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதைப் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.
முல்லைப் பெரியாறு...
* முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக அண்மையில் ஏற்பட்ட நிகழ்வுகளை நமது மாநிலம் மிகுந்த கட்டுப்பாட்டுடனும், திறமையுடனும் கையாண்டுள்ளது. அணையின் பாதுகாப்பு குறித்து பொது மக்களிடையே பீதியைக் கிளப்பும் நோக்குடன் கேரள மாநிலத்தால் பரப்பப்பட்ட தவறான பிரச்சாரங்களே இந்த நிகழ்வுகளுக்கு மூலகாரணமாக அமைந்துள்ளன.
நமது மாநிலத்தின் உரிமைக்கும், விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கும் எவ்விதத்திலும் குந்தகம் ஏற்படாத வகையில் நீதிமன்றங்கள் உள்பட அனைத்து மன்றங்களிலும் நமது உரிமையை இந்த அரசு நிலைநாட்டும் என்று திட்டவட்டமாக கூறிக்கொள்கிறேன்.
அணையின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அணை அமைந்திருக்கும் மாநிலத்தில் உள்ள அணைப் பாதுகாப்புக் குழுவின் கட்டுப்பாட்டின் கீழ் அணை இருப்பதை விட, அணையின் மீது உரிமையுள்ள மாநிலத்தில் உள்ள அணைப் பாதுகாப்புக் குழுவின் கட்டுப்பாட்டில் அணை இருக்க வேண்டும் என்பது 2010 ஆம் ஆண்டு அணைப் பாதுகாப்பு சட்ட முன்வடிவில் உறுதி செய்யப்பட வேண்டும்.
* சென்னை எழிலகம் தீ விபத்து போன்று வருங்காலங்களில்பேரிடர் நிகழாது தவிர்க்கும் வகையிலும், இத்தகைய இடங்களில் பணிபுரிபவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையிலும், அரசு அலுவலகங்கள் செயல்படும் அனைத்து தொன்மையான கட்டடங்களின் கட்டமைப்பு உறுதித் தன்மையை மதிப்பீடு செய்ய ஒரு வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
நில அபகரிப்பு: நடவடிக்கை தொடரும்..
* பலவந்தமாக அபகரிக்கப்பட்ட அப்பாவி மக்களின் நிலங்கள் இந்த அரசால் ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைக்கப்பட்ட நில அபகரிப்புத் தடுப்புப் பிரிவுகளால் மீட்டளிக்கப்பட்டு அதன் மூலம் அம்மக்கள் பயன் அடைந்துள்ளனர்.
ஏழை எளிய மக்களை அச்சுறுத்தி சுரண்டும் இத்தகைய நில அபகரிப்பாளர்களை சட்டத்தின்முன் கொண்டுவந்து உரிய நீதியை வழங்க இந்த அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும்.
* உள்கட்டமைப்புக்கும் சமூகப் பாதுகாப்புக்கும் எவ்வித குறைவுமின்றி போதிய நிதியை ஒதுக்கீடு செய்வதில் இந்த அரசு உறுதியுடன் செயல்பட்டு வருகிறது. வரும் பன்னிரெண்டாவது ஐந்தாண்டுத் திட்ட காலத்தில், இந்த அரசு 1,85,000 கோடி ரூபாயைத் திட்டப் பணிகளுக்குச் செலவிட திட்டமிட்டுள்ளது. இது பதினொன்றாவது ஐந்தாண்டுத் திட்ட காலத்தில் செலவிடப்பட்ட 85,000 கோடி ரூபாயை விட இரண்டு மடங்குக்கும் அதிகமானதாகும்.
மாநில அதிகாரங்கள் பறிக்கப்பட கூடாது..
மாநிலங்களின் அதிகாரங்களைப் பறிக்கும் வகையில் மத்திய அரசு சட்டங்களை இயற்ற தொடர்ந்து முயற்சி செய்து வருவதும், திட்டங்களை வடிவமைப்பதில் அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே மாதிரியான அணுகுமுறையைத் திணிப்பதும் மத்திய - மாநில உறவுகளில் ஆரோக்கியமான சூழ்நிலை ஏற்பட வழிவகுக்காது.
தேசிய திட்டங்களை வகுப்பதிலும், செயல்படுத்துவதிலும் இணக்கமான செயல்முறையைப்
பின்பற்றி, பரந்த குறிக்கோள்களை மட்டும் மத்திய அரசு நிர்ணயிக்க வேண்டும் என்றும், அத்தகைய திட்டங்களில் மத்திய நிதியுடன் மாநிலத்தின் நிதியையும் ஒருங்கிணைத்து, மாநிலங்களின் தேவைகளுக்கேற்ப, அந்தந்த மாநில அரசுகளுக்கே திட்டங்களை வடிவமைக்கும் சுதந்திரத்தை அளிக்கவேண்டும் என்றும் இந்த அரசு வலியுறுத்துகிறது.
தமிழ் வளர்ச்சிக்கு...
* முந்தைய ஆளுநர் உரையில் தெரிவித்தவாறே திருக்குறள், தெரிந்தெடுக்கப்பட்ட பாரதியார் மற்றும் பாரதிதாசன் படைப்புகளை சீன மற்றும் அரேபிய மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
சிறந்த தமிழ் அறிஞர்களின் படைப்புகளைப் பாதுகாத்து, அவற்றை அனைவரிடத்தும் கொண்டு செல்லும் வகையில் நாட்டுடைமையாக்கப்பட்ட 1,472 புத்தகங்கள் தமிழ் இணைய பல்கலைக்கழக இணையதளத்தில் இந்த அரசால் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
விரைவில் 'தொலைநோக்குத் திட்டம் 2025'
* சென்ற ஆண்டு இந்த அரசு பொறுப்பேற்றவுடன் 'தொலைநோக்குத் திட்டம் 2025' தயாரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டிற்கான இந்த அரசின் வருங்காலத் திட்டங்களையும் அவற்றைச் செயலாக்கும் வழிமுறைகளையும் விரித்துரைக்கும் இத்திட்ட அறிக்கையை முதல்வர் விரைவில் வெளியிட இருக்கிறார்.
திட்டச் செயலாக்கத்தில் அரசு மற்றும் தனியார் நிதி ஆதாரங்களை ஒருங்கிணைக்க 'அரசு - தனியார் பங்களிப்புக் கொள்கை' ஒன்றை இந்த அரசு விரைவில் வெளியிடும்.
'தானே' நிவாரணப் பணிகள்...
கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் புயலால் பாதிக்கப்பட்ட குடிசை வீடுகளுக்குப் பதிலாக, அக்குடும்பங்களுக்குப் பாதுகாப்பான வீடுகள் அளிக்கும் வகையில் 1,000 கோடி ரூபாய் செலவில், ஒரு லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டும் ஒரு மகத்தான திட்டம் இந்த அரசால் தொடங்கப்படும்.
புயலினால் ஏற்பட்ட பாதிப்புகளின் விவரங்களை எடுத்துக்கூறி தேசிய பேரிடர் தணிப்பு நிதியிலிருந்து 5,248 கோடி ரூபாய் சிறப்பு நிதியுதவி கோரும் விரிவான கோரிக்கை மத்திய அரசிடம் அளிக்கப்பட்டுள்ளது.
* கடந்த காலங்களில் நகர்ப்புற வறுமை ஒழிப்பு குறித்து உரிய கவனம் செலுத்தப் பெறாத நிலையில் நகர்ப்புறங்களில் நிலவும் அதிக வறுமை நிலையைப் போக்குவதற்கான ஒருங்கிணைந்த திட்டம் ஒன்று வரும் வரவு-செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்படும்.
விலையிலா ஆடு, மாடுகள்...
* விலையில்லா கறவைப் பசுக்கள், ஆடுகள் வழங்கும் இந்த அரசின் சிறப்புத் திட்டங்கள் கிராமப்புற ஏழை மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன. சுமார் 1.12 லட்சம் குடும்பங்கள் 2011-2012 ஆம் ஆண்டில் இந்தத் திட்டங்களால் பயன்பெறும்.
தமிழக மீனவர் பிரச்னை...
* இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதும் துன்புறுத்தப்படுவதும் இவ்வரசுக்கு ஆழ்ந்த கவலையளிப்பதாக உள்ளது. பாக் வளைகுடாப் பகுதியில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களின் பாரம்பரிய உரிமையைப் பாதுகாக்கவும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்க வேண்டும் என்று, இந்த அரசு கேட்டுக்கொள்கிறது.
கச்சத் தீவைத் திரும்பப் பெறுவதன் மூலமே தமிழக மீனவர்கள் இழந்த உரிமையை மீளப் பெற இயலும் என்ற இந்த அரசின் உறுதியான முடிவினை இத்தருணத்தில் நான் மீண்டும் வலியுறுத்துகிறேன்.
உணவுப் பாதுகாப்பு மசோதாவுக்கு எதிர்ப்பு..
மத்திய அரசு கொண்டுவர உத்தேசித்துள்ள உணவுப் பாதுகாப்பு சட்டமுன்வடிவு, தற்போது அனைவரும் பெற்றுள்ள உணவுப் பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படுத்துவதுடன், மத்திய தொகுப்பிலிருந்து தமிழக அரசு பெறும் உணவு தானிய ஒதுக்கீட்டையும் குறைக்க வழிசெய்கிறது. எனவே, மத்திய அரசு முன்மொழிந்துள்ள இந்த உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் தற்போதைய வடிவை இந்த அரசு எதிர்க்கிறது.
பொது விநியோகத் திட்டம் முறையாகச் செயல்படாத மாநிலங்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ள இச்சட்ட முன்வடிவு அனைவருக்கும் பயனளிக்கும் பொது விநியோகத் திட்டத்தை முறையாகச் செயல்படுத்தி வரும் தமிழகத்துக்கு எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும்.
* மென்பொருள் ஏற்றுமதியில் முன்னிலை வகிப்பதைப்போலவே, வன்பொருள் உற்பத்தியிலும்
இந்தியாவின் முன்னணி மையமாக தமிழகத்தை உருவாக்க வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது. இதன் பொருட்டு, வன்பொருள் உற்பத்தியில் அதிக முதலீடுகளை ஈர்ப்பது குறித்த சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து அரசுக்கு ஆலோசனை அளிக்க தொழில்துறை பிரதிநிதிகளை உள்ளடக்கிய வல்லுநர் குழு ஒன்று இந்த அரசால் அமைக்கப்படும்.
* முந்தைய அரசு புதிய உற்பத்தியினை ஏற்படுத்தத் தவறியதாலும், மத்திய தொகுப்பிலிருந்து கூடுதல் மின்சார ஒதுக்கீடு செய்வது பற்றிய நமது கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவிசாய்க்காத காரணத்தாலும் தமிழக மக்கள் மின் பற்றாக்குறையினால் நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர்.
அடுத்த இரண்டாண்டுகளில் 4,704 மெகாவாட் அளவிற்குக் கூடுதல் மின்சாரம் கிடைக்கும் வகையில் புதிய திட்டங்கள் செயல்படத் தொடங்கும்.
* மருத்துவம், பொறியியல் போன்ற தொழிற்கல்விகளுக்கு, மத்திய அரசு கொண்டுவர உத்தேசித்துள்ள பொது நுழைவுத் தேர்வுமுறை நமது மாணவர்களின் நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதனால் அதை நாம் தொடர்ந்து எதிர்ப்போம்.
மோனோ ரயில்...
* சென்னையில் ஒருங்கிணைந்த பன்முறை நகர்ப் போக்குவரத்து வசதியினை ஏற்படுத்தும் நோக்கத்தில், 'மோனோ ரயில்' திட்டத்தை செயல்படுத்த ஒப்பந்தப்புள்ளி கோரும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது.
* அரசின் சேவைகளை, மக்களை மையப்படுத்தி சிறப்பாகச் செயல்படுத்திட, தனியார் பங்களிப்புடன் மாவட்டப் புதுமை நிதியையும் இணைத்து அனைத்து மாவட்டங்களிலும் பயன்படுத்தப்படும்.
பிளாஸ்டிக் கழிவுகளால் சாலைகள்...
* பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுவதை மாநிலம் தழுவிய மக்கள் இயக்கமாக மேற்கொள்ள ஐந்து கோடி ரூபாயையும், பிளாஸ்டிக் கழிவுகளைக் கொண்டு பரிசோதனை அடிப்படையில் தார் சாலைகளை அமைப்பதற்கு 50 கோடி ரூபாயையும் இந்த அரசு கடந்த நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கியிருந்தது. இம்முயற்சியின் விளைவாக, பிளாஸ்டிக் கழிவுகளைக் கொண்டு 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 146 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைகள் தற்போது அமைக்கப்பட்டு வருகின்றன.
பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் சுற்றுச் சூழல் சீர்கேட்டைத் தடுத்து, நீடித்த பயன்தரும் இதுபோன்ற சாலைகளை பெருமளவில் அமைக்க விரிவானதொரு திட்டம் செயல்படுத்தப்படும்.
* ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதி உதவியில் ஒருங்கிணைந்த சுற்றுலா உள்கட்டமைப்புத் திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. அரசு - தனியார் பங்களிப்புடன் தமிழகத்தில் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான கொள்கை வரும் ஆண்டுகளில் தீவிரமாக செயல்படுத்தப்படும்.
மாநகராட்சி எல்லைகள் விரிவு...
* நகர்ப்புரக் கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக, ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புரப் புனரமைப்பு இயக்கம், தமிழ்நாடு நகர்ப்புர வளர்ச்சித் திட்டம்-ஐஐஐ போன்ற பல்வேறு திட்டங்களை ஒன்றிணைத்து செயல்படுத்தப்படுகிறது.
* புறநகர்ப் பகுதிகள் இணைக்கப்பட்டு, சென்னை மாநகராட்சி தற்போது விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதுபோலவே, ஏழு பிற மாநகராட்சிகள் மற்றும் எட்டு நகராட்சிகளின் எல்லைகளும் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.
ஆண்டுதோறும் 60,000 பசுமை வீடுகள்...
* கிராமங்களில் இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டம் தவிர முதலமைச்சரின் பசுமை வீடு கட்டும் திட்டத்தின் கீழும் ஒவ்வொரு ஆண்டும் சூரிய மின்சக்தி வசதி கொண்ட 60,000 பசுமை வீடுகள் கட்டும் பணியும் நடைபெற்று வருகிறது.
நம்பிக்கை...
தொடர்ந்து காணப்பட்ட ஊழலுக்கும் திறமையின்மைக்கும் மாற்றாக, வெளிப்படையான, திறமையான நிருவாகத்திற்காக ஏங்கிக்கொண்டிருந்த மக்களின் எண்ணம் உள்ளாட்சித் தேர்தல்களில் மீண்டும் வெளிப்பட்டுள்ளது. இக்குறுகிய காலத்திலேயே, முதல்வர் தனது செயல்பாடுகளினால், அவர் மீதும், அவரது அரசின் மீதும், தமிழக மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை மெய்ப்பித்துள்ளார்.
மோசமான நிதிநிலை, பொருளாதார மந்தநிலை, உதவிட மறுக்கும் மத்திய அரசு போன்ற பல்வேறு தடைகளையும் தாண்டி இவ்வரசு இம் மாநிலத்தையும், மக்களையும் உயர்த்தும் தனது குறிக்கோளை நோக்கி தொடர்ந்து பீடுநடைபோடும்.
No comments:
Post a Comment